இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 8

மீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உடல்நலம் பாதித்த தன்னுடைய தந்தையை மருத்துவமனையில் சேர்த்தார் சரவணன். சில டெஸ்ட்கள் செய்து அவருக்குத் தொற்றுநோய் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இரண்டு நாட்கள் ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சை அளித்தது, பல்வேறு டெஸ்ட் எடுத்தது என அவரது கையில் 60 ஆயிரம் ரூபாய்க்கான பில்லைக் கொடுத்தனர். மருத்துவக் காப்பீடு இருந்ததால், அவர் தப்பினார்.

மழைக் காலம் முடிந்துவிட்டது. மழையைத் தொடர்ந்து பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஆங்காங்கே ஏற்படுகின்றன. `இவற்றுக்கு எல்லாம் காப்பீட்டில் தீர்வு உள்ளதா... தனியாக ஏதேனும் காப்பீடு எடுக்க வேண்டுமா?’ எனப் பலரும் கேட்கின்றனர்.

இதுபோன்ற குறிப்பிட்ட பாதிப்புக்கு எனத் தனியாக மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க வேண்டும் என்பது இல்லை. நாம் வாங்கும் தனிநபர் அல்லது ஃபுளோட்டர் பாலிசியிலேயே, இவை அனைத்துக்கும் கவரேஜ் கிடைத்துவிடும்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்கால நோய்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு இந்தப் பருவகாலத்தில் தொற்றுநோய் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.

மழைக்காலத்தில் டைஃபாய்டு, மஞ்சள்காமாலை, டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள்  ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால், சாதாரண ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளெய்ம் பெற முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்படும் செலவுகளையும் இந்த பாலிசிகளில் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். அதாவது, நோயைக் கண்டறிந்து உறுதிசெய்வதற்காக ஏதாவது டெஸ்ட் எடுத்திருந்தால், அந்தத் தொகையையும் க்ளெய்ம் செய்ய முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 8

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், டைஃபாய்டு, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கவேண்டிய தேவை இருக்காது. டெங்கு காய்ச்சலிலும் பெரும்பாலானவர்களுக்கு தீவிர பாதிப்பு இருக்காது. சாதாரணமாக மருத்துவரை அணுகி, அவர் அளிக்கும் மாத்திரை, மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துவந்தாலே போதுமானது. சிலருக்குத்தான், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவிடும். இதனால், பல் ஈறுகள், மூச்சுக்குழாய் என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்குத்தான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதேபோல, எலிக்காய்ச்சலுக்கும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இப்படி, 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றால் மட்டுமே க்ளெய்ம் பெற முடியும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். பலரும், க்ளெய்ம் பெறுவதற்காக, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொள்வது உண்டு. உங்கள் உடல்நலம் பற்றி மருத்துவக் காப்பீடு அளிக்கும் நிறுவனம் அல்லது அதன் டி.பி.ஏ ஆய்வு மேற்கொள்ளும். அப்போது, உங்கள் க்ளெய்ம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, பிரத்யேக பாலிசியை அப்போலோ ம்யூனிக் வழங்குகிறது. (இது தொடர்பான அலசலை டாக்டர் விகடன் 16-10-2015 இதழில் காணலாம்). டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள், இந்த பாலிசியை மட்டுமேகூட எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய பாலிசியிலேயே இதற்கு க்ளெய்ம் கிடைக்கும். இருப்பினும், டெங்கு காய்ச்சல் வந்தால், தோராயமாக 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். நம்முடைய பிரதான பாலிசியில் எந்த க்ளெய்மும் பெறவில்லை எனில், போனஸாக ஒன்றரை லட்சம் முதல் கிடைக்கும். 10 ஆயிரம் ரூபாய் க்ளெய்முக்காக இந்த போனஸை விட வேண்டாம் என நினைப்பவர்கள், தனியாக டெங்கு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். 444 முதல் 650 ரூபாய்க்குள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம் என்பதால், பயனுள்ளதாக இருக்கும்.

எல்லாவற்றையும்விட வரும் முன் காப்பதுதான் சிறந்தது. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசுக்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது, வீடு திரும்பியதும், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அல்லது கை,கால்களைக் கழுவுவது, ஃப்ரெஷ்ஷாக சமைத்து உண்பது, நன்கு கொதிக்கவைத்து, ஆறிய நீரை, வடிகட்டி அருந்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்வது நல்லது.

- தொடரும்

படம்: ப.சரவண குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism