Published:Updated:

மெயில் சர்வர்… அலாரம்…ஃபேஸ்புக்… கொலையாளியைக் காட்டிக்கொடுத்த டெக்னாலஜி! #GadgetTippedCrimes அத்தியாயம் 9

மெயில் சர்வர்… அலாரம்…ஃபேஸ்புக்… கொலையாளியைக் காட்டிக்கொடுத்த டெக்னாலஜி! #GadgetTippedCrimes அத்தியாயம் 9
மெயில் சர்வர்… அலாரம்…ஃபேஸ்புக்… கொலையாளியைக் காட்டிக்கொடுத்த டெக்னாலஜி! #GadgetTippedCrimes அத்தியாயம் 9

மெயில் சர்வர்… அலாரம்…ஃபேஸ்புக்… கொலையாளியைக் காட்டிக்கொடுத்த டெக்னாலஜி! #GadgetTippedCrimes அத்தியாயம் 9

அது 2015-ம் ஆண்டு. டிசம்பர் மாதம் 23-ம் தேதி. கனெக்டிகட்டில் இருக்கும் அந்தத் தெரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தது. அன்று காலை 10 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் ரிச்சர்டின் (Richard Dabate) வீட்டுக்கு வந்து விட்டார்கள். புகை கசிந்த அந்த வீட்டுக்குள் ரிச்சர்டை அவர்கள் பார்த்தபோது அவர் பாதி மயக்கத்தில் இருந்தார் அவரது ஒரு காலும் ஒரு கையும் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டிருந்தது. ரிச்சர்டைத் தீயணைப்பு வீரர்கள் எழுப்ப முயன்றபோது “அவங்க இன்னும் வீட்டுக்குள்ளதான் இருக்காங்க” என்றபடி மயங்கிப்போனார்.

அடுத்த அறைக்குள் வீரர்கள் நுழைந்தார்கள். வீடு முழுவதும் தேடினார்கள். பேஸ்மென்ட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் ரிச்சர்டின் மனைவி கானி (Connie). ரிச்சர்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நலம் பெற்றதும் போலீஸ் நடந்தது என்னவென்று அவரிடம் விசாரித்தார்கள். ரிச்சர்ட் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

23-ம் தேதி காலை 8.30க்கு ரிச்சர்ட் தனது இரண்டு மகன்களையும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டிருக்கிறார். அதன்பின் தனது அலுவலகம் நோக்கி காரில் சென்றிருக்கிறார் நெட்வொர்க் இன்ஜினீயரான ரிச்சர்ட். அப்போது, அவர் வீட்டில் இருந்த பாதுகாப்பு அலாரம் ஆக்டிவேட் ஆகி அவரது மொபைலுக்கு அலெர்ட் வந்திருக்கிறது. ஏதோ பிரச்னை என நினைத்தவர் அவரது பாஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டை நோக்கி வந்திருக்கிறார். அப்போது நேரம் 8.53. வீட்டுக்குள் போனதும் படுக்கையறையில் யாரோ இருப்பதுபோல் தெரிந்திருக்கிறது. அங்கே இருந்த உருவம் ரிச்சர்டைப் பார்த்ததும் கத்தியைக் காட்டி அவரது பர்ஸைக் கேட்டிருக்கிறது. அந்த நேரம் பார்த்து கானி வீட்டுக்குள் நுழைந்துவிட, அவரை தப்பித்து ஓடும்படி கத்தியிருக்கிறார் ரிச்சர்ட். அந்த 6 அடி உருவம் கானியைத் துரத்திக்கொண்டு சென்றது. பாதுகாப்புக்காக ரிச்சர்டின் துப்பாக்கியை கானி வெளியே எடுக்க, அதை அந்த உருவம் பிடுங்கிக்கொண்டது. பின், கானியை துப்பாக்கியால் சுட்டுவிட்டது. இதைப் பார்த்த ரிச்சர்ட் அந்த உருவத்தின் மீது பாய அவரையும் அடித்திருக்கிறது. அவரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு தப்பிச்சென்றது அந்த உருவம். 

மோப்ப நாயை சம்பவம் நடந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணையை ஆரம்பித்தது போலீஸ். ஆனால், நாய் எங்கேயும் செல்லாமல் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தது. சம்பவத்தில் இருந்தது 3 பேர். ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் தப்பித்துவிட்டார். போலீஸின் பிடியில் இருந்தது ரிச்சர்ட் மட்டுமே என்பதால், அவர்மீது சந்தேகம் திரும்பியது. ஆனால், அவருக்கு எதிராக எந்த துப்பும் இல்லை. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ``அவங்க ஜோடி நெ.1 பாஸ்” என சான்றிதழ் வேறு தந்துவிட்டார்கள். ரிச்சர்டிடம் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது எனக் கேட்டபோது ”அப்பப்ப சண்டை வரும்” என்ற ரேஞ்சுக்கே பதில் சொன்னார். மனைவியை கண்முன்னால் இழந்துவிட்ட ஒருவரை வெறும் சந்தேகத்தை மட்டுமே வைத்துக்கொண்டு காயப்படுத்த வேண்டாமென போலீஸ் நினைத்தது.

ஒரு வருடம் ஓடியது. போலீஸ் விசாரணையில் கூடுதலாக சில தகவல்கள் மட்டுமே சேர்ந்தன. அதன்படி, ரிச்சர்டுக்கு ஒரு தோழி இருந்தார். அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனால், அந்தக் கர்ப்பம் ரிச்சர்டின் மனைவிக்கு தெரிந்தே நடந்த ஒன்று. அதாவது, ரிச்சர்டுக்கும் கானிக்கும் ஒரு பெண் குழந்தை வேண்டுமென ஆசை. ஆனால், கானியின் உடல்நிலை இன்னொரு குழந்தைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால், ரிச்சர்டின் மூலம் அவர் தோழி கர்ப்பம் அடைய, அந்தக் குழந்தையை மூவரும் சேர்ந்து வளர்ப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். எங்கேயோ இடிப்பதாக மட்டும் போலீஸூக்கு புரிகிறது. அது என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில்தான் டெக்னிக்கலாக எந்த சாட்சியையும் இந்த வழக்கில் சேர்க்கவில்லை என்பது போலிஸூக்கு உறைத்தது. கானிக்குச் சொந்தமான பொருள்களைத் தேடியபோது முதலில் கிடைத்தது ஃபிட்பிட். அதன் தகவல்களை முதலில் கைப்பற்றினர். அது சொன்ன தகவல்கள் கொஞ்சம் ரிச்சர்ட் சொன்ன கதைக்கு பொருந்திப் போனது. ஆனால், சின்னச் சின்ன நேர வித்தியாசம் இருந்தது. அது ஏற்கக்கூடியதுதான்.

அடுத்தபடியாக வீட்டின் அலாரம் சிஸ்டமை அலசியது போலீஸ். ரிச்சர்டின் மொபைலுக்கு வந்த அலெர்ட்டுக்கு முன்னால் அதே காலையில் இரண்டு முறை அவர் மேனுவலாக ஆன் செய்ததாக சொன்னது அலாரம் டேட்டா. அலாரம் ரிச்சர்டுக்கு அனுப்பிய மெயில் நினைவுக்கு வர, அவரது மெயில்பாக்ஸை மேய்ந்தது போலீஸ். ரிச்சர்ட் அவர் பாஸூக்கு காரிலிருந்து மெயில் அனுப்பியதாகச் சொன்னார். ஆனால், அந்த மெயிலை அனுப்பிய ஐபி முகவரி ரிச்சர்ட் வீட்டின் இணையத்துக்கான முகவரி. 

கானியின் மொபைலை முன்னரே செக் செய்திருந்தாலும் அனைத்து ஆப்களையும் போலீஸ் மேயவில்லை. இந்த முறை அவரது மொபைலை முழுவதுமாக சோதனை செய்தார்கள். அதன்படி, கானி 9.30க்கு தனது டாக்டரிடம் அப்பாயின்மென்ட் கேட்டு மெஸெஞ்சரில் தகவல் அனுப்பியிருந்தார். அதாவது, ரிச்சர்ட் சொன்ன கதையின்படி கானி இறந்த சில நிமிடங்கள் கழித்தே. மேலும், அவரது நோட்ஸ் ஆப்பில் “Why I want a divorce” என பல பாயிண்ட்ஸ் எழுதி வைத்திருந்தார். அதன்படி, ரிச்சர்ட் ஒரு பொறுப்பற்ற தந்தை; பண விஷயத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து வைத்தவர். இவை எதுவுமே ரிச்சர்ட் போலீஸ் விசாரணையில் சொல்லாத தகவல்கள்.

கர்ப்பமான தோழி ரிச்சர்டை மணம் முடிக்கச் சொல்லி பிரச்னை செய்திருக்கிறார். அவரிடம், கானி விரைவில் விவாகரத்து தந்துவிடுவார் என நம்ப வைத்திருக்கிறார் ரிச்சர்ட். ஆனால், அதுவரை பொறுமையில்லாமல் கானியைக் கொன்றால் வேலை தீர்ந்தது என இப்படியொரு சம்பவத்தைச் செய்திருக்கிறார் ரிச்சர்ட். கிடைத்த அத்தனை டெக்னிக்கல் சாட்சிகளும் ரிச்சர்டை எளிதாக குற்றவாளி என நிரூபித்துவிடும்.

குற்றவாளி எப்படியும் ஒரு தடயமாவது விட்டுச்செல்வான் என்பது போலீஸின் நம்பிக்கை. ஆனால், இனிவரும் காலங்களில் பல டிஜிட்டல் தடயங்களை விட்டுச்செல்வான் என்பதுதான் உண்மை.

அடுத்த கட்டுரைக்கு