Election bannerElection banner
Published:Updated:

வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்! #GoodParenting

வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்! #GoodParenting
வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்! #GoodParenting

வளரும் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்கள்! #GoodParenting

பெற்றோர்களாக நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும், சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. சில சமயங்களில் நல்லதைச் சொல்கிறோம் பேர்வழி என நாம் சில விஷயங்களைத் தவறான முறையில் கூறிவிடுவோம். அப்படிச் சொன்னவை அந்தப் பிஞ்சு மனதைப் பாதித்துவிடுகிறது. இந்தப் பாதிப்பு, அவர்கள் பெரியவர்களான பிறகும் தொடர்கிறது. இதனைத் தவிர்க்க, குழந்தைகளிடம் சொல்லக்கூடாத ஐந்து விஷயங்களைக் கொஞ்சம் கவனியுங்கள் பெற்றோர்களே... 

1. ''இப்போ நீ அழுறதை உடனே நிறுத்தறியா இல்லையா!'

பெரியவர்களாகிய நமக்கு கவலை, கோபத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கும் அளவுக்குக் குழந்தைகளுக்கும் இருக்கிறது. அவர்கள், தங்கள் உணர்வுகளைப் பெரும்பாலும் அழுகை மூலமே வெளிப்படுத்துவார்கள். நமக்கு இருக்கும் வேலை நெருக்கடியாலோ, அல்லது அதட்டினால் அடங்கிவிடுவார்கள் என்ற மனோபாவத்தினாலோ அவர்களின் அழுகையை இப்படி அதிரடியாக நிறுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களைக் கட்டியணைத்து, 'ஏன் சோகம், எதற்கு அழுகை?' அழாமல் சொல்லு, நான் உன் பிரச்னையைக் கேட்கிறேன்?' என்று பரிவாகப் பேசுங்கள். 

2. ''இதைச் செய்யறதுக்கா இவ்வளவு சிரமப்படுறே?'' 

இப்படி குழந்தைகளிடம் கேட்பது தவறு. 'ஒரு சின்ன விஷயத்தையும் செய்ய நாம் தகுதி இல்லையோ?' என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்துவிடுகிறோம். அவர்களின் தன்னபிக்கையைக் குறைக்க நாமே வழி வகுத்துவிடுகிறோம். மாறாக, அவர்கள் அந்த விஷயத்தைச் செய்ய ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, எப்படி எளிதாகச் செய்யமுடியும் என்பதைக் கற்றுக்கொடுங்கள். ‘அவர்களால் செய்ய முடியும்’ என்று நீங்கள் நம்புவதை அவர்களிடம் பதிவுசெய்யுங்கள். 

3. ''பெரியவர்களுக்கு பயமே இருக்காது தெரியுமா?''

இந்த வாக்கியம் நமக்கே பொய் என்று தெரியும். பெரியவர்களாகிய நாமும் சில விஷயங்களுக்குப் பயப்படுவோம். சில குழந்தைகள் துறுதுறுவென எதற்கும் பயமின்றி நடந்துகொள்ளும். சில குழந்தைகளுக்கு இருட்டைக் கண்டால் பயம்; தனியறையில் பயம், கூட்டத்தைக் கண்டால் பயம் போன்ற சுபாவங்கள் இருக்கும். அவர்களிடம் பொத்தாம்பொதுவாக, ‘பெரியவர்களுக்கு பயமே இருக்காது’ என்று சொல்லக் கூடாது. ‘நாம்தான் வித்தியாசமாக இருக்கிறோமா’ என்று மனதில் தோன்றி, மேலும் பாதுகாப்பின்மையை உண்டாக்கிவிடும். அதற்குப் பதிலாக, அவர்கள் எதற்குப் பயப்படுகிறார்கள் எனத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த பயத்தை நீக்கி, எப்போதும் உங்களின் துணை இருக்கும் என்பதை உறுதிசெய்யுங்கள். 

4. ''இதை நீயா செஞ்சே? என்னால் நம்பவே முடியலை!'' 

தவறு செய்வது மனித இயல்பு. பெரியவர்களாகிய நாமும் தவறு செய்வோம். அவர்கள் செய்த ஒரு தவற்றை சுட்டிக்காட்டலாமே தவிர, அதற்காகக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள். என்ன தவறு செய்தார்கள், எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். குறிப்பாக, ஒரு தவற்றை செய்துவிடும்போது, அவர்கள் இதற்கு முன்பு செய்த தவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தி குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள். 

5. ''நான் நினைக்கிற அளவுக்கு நீ ஸ்மார்ட் இல்லை!'' 

உங்கள் குழந்தைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அதனால், அவர்களைப் பற்றின மதிப்பீடுகள் உயர்வாக இருக்கட்டும். 'நீ அவ்வளவு ஸ்மார்ட் இல்லை' எனக் குறையாக கூறாமல், அவர்களிடம் இருக்கும் திறமையை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள். எல்லாக் குழந்தைகளும் எல்லா விஷயங்களும் சிறப்பாகச் செயல்பட முடியாது. தங்களிடம் இருக்கும் குறைகளைத் தவிர்த்து, தங்களையே நேசிக்கும் மனப்பக்குவத்தைக் கற்றுக்கொடுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு