Published:Updated:

”பாகுபாலி காளை அள்ளு கிளப்புறாண்டோய்!” - கொங்கு மண்ணில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

”பாகுபாலி காளை அள்ளு கிளப்புறாண்டோய்!” - கொங்கு மண்ணில் களைகட்டிய ஜல்லிக்கட்டு
”பாகுபாலி காளை அள்ளு கிளப்புறாண்டோய்!” - கொங்கு மண்ணில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

”பாகுபாலி காளை அள்ளு கிளப்புறாண்டோய்!” - கொங்கு மண்ணில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

"வெளிநாட்டுக்காரன் பணத்தை வெச்சும், பொருள்களை வெச்சும்தான் போட்டி நடத்துவான். ஆனா, நம்ம உசிர பணயம் வெச்சு, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துறோம். தமிழன்னாலே வீரம்யா… தமிழன்னாலே கெத்துயா" என்று வர்ணனையாளர் மைக்கில் முழங்க, கோவை மக்களின் ஆரவாரத்தில் சத்தம் விண்ணைப் பிளந்தது.

ஏராளமான தொழிற்சாலைகள், 'ஸ்மார்ட் சிட்டி' என்று பல்வேறு முகங்களைக் கொண்ட கோவை மாநகரின் பாரம்பர்ய முகத்தை, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது அனைவரும் அறிந்தனர். ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதிலுமே போராட்டங்கள் நடந்தாலும் தைப்புரட்சியில் கடைசிவரை களத்தில் இருந்து, காக்கிகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட கொங்கு இளைஞர்களின் பங்கும் முக்கியமானது. அதன் பலனாக 39 ஆண்டுகளுக்குப் பிறகு, கோவை மண்ணில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடந்த 1979-ம் ஆண்டு கோவை வ.உ.சி மைதானத்தில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்தது. அதே மண்ணில் நடைபெற்ற புரட்சிப் போராட்டத்தால், தற்போது கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. கோவைக்கு இது இரண்டாவது ஜல்லிக்கட்டாக இருந்தாலும், இளைய தலைமுறைக்கு இதுதான் முதல் ஜல்லிக்கட்டு.

தமிழக அரசுடன், தனியார் அமைப்புகளும் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி முடித்துள்ளன. அனல்பறக்க நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் நேரடி ரிப்போர்ட் இதோ...

காலை 9.40 மணியளவில் பூஜை மற்றும் உறுதி மொழியுடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு. இப்போட்டியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 17 மாவட்டங்களிலிருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். சுமார் 400 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செட்டிப்பாளையத்தை நோக்கி, ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் அதிகளவில் படையெடுத்தனர். இதனால், 500-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று முன்னரே திட்டமிட்டு, பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளாவிலிருந்தும் மக்கள் செட்டிப்பாளையம் வாடிவாசலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். அதிக மக்கள் கூட்டத்தால், பிரமாண்ட கேலரிகள் அமைத்தும் அனைத்து மக்களும் அமர இடம் கிடைக்கவில்லை.  

எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்பட்டது. வாடிவாசலிலிருந்து காளைகள் துள்ளிக்குதித்து வரும்போதெல்லாம், மக்கள் தங்களது இருக்கைகளிலிருந்து துள்ளிக்குதித்து, உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். போதாக்குறைக்கு, "தொட்டுப்பாரு...", "இது சூப்பர் காளை...", "இதுதான்யா காளை", "இது பாகுபலி காளை...", "ஆஹா, அடடா...", "இது சிங்கம்யா..." "தமிழன்யா..." என்று வர்ணனையாளர் மதுரை பாஷையில், உசுப்பேத்தும் போதெல்லாம், கோவை மக்கள், தங்களின் கொங்கு பாஷையில், விண்ணைப்பிளக்க ஆரவாரம் செய்து ரிப்ளை கொடுத்தனர்.

காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு 2 கிராம் தங்கம், 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது. இது தவிர, சில காளைகளுக்கு நிலம், பணம் என்று சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. முதல் இடம் பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு தலா ஒரு மாருதி ஆல்டோ கார் மற்றும் 2 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டி முடியும்வரை மக்கள் கூட்டம் குறையாமல் இருந்ததால், உற்சாகத்துக்கு குறைவே இல்லை.

பாதுகாப்புக்கு வந்திருந்த சில போலீஸாரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆரவாரத்துடன் ரசித்துப் பார்த்தனர். காலை முதல் மாலை வரை நான்ஸ்டாப் என்டர்டெய்ன்மென்ட்தான். சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக், சிறந்த காளை காரி (ராஜசேகரனின் காளை) இரண்டுமே மதுரை மண்ணைச் சேர்ந்தது. அவர்களுக்கு தலா ஒரு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படாமல் போட்டியைச் சிறப்பாக முடித்தனர்.

குறைகளின் லிஸ்ட் இங்கே...

கோவை நகரிலிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற செட்டிப்பாளையம், 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்து வசதிகள் குறைவு. அப்படியிருந்தும் மக்கள் தங்களின் சொந்த வண்டிகளில் பல கி.மீ. தூரம் பயணித்துப் போட்டியைக் காண வந்தனர். ஆனால், நகருக்கு சற்று அருகிலோ அல்லது போக்குவரத்து வசதி அதிகம் இருக்கும் பகுதியிலோ இந்தப் போட்டியை நடத்தியிருந்தால், மக்களுக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும்.

பாதுகாப்புப் பணிகளுக்காக, சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். ஆனால், அதிகப்படியான கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். அதேபோல, இருக்கைகள் வசதியும் முறையாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலான மக்களால தெரிவிக்கப்பட்டது. கேலரிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டாலும், மக்கள் கூட்டம் நொடிக்குநொடி அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில், வி.ஐ.பி-க்கள், மருத்துவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் மக்கள் புகுந்துவிட்டனர். அனுமதி இலவசம் என்றாலும், கேலரிக்குச் சென்று ஜல்லிக்கட்டைப் பார்க்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் செல்போன் நெட்வொர்க் இல்லை. இதனால், அந்தப் பகுதியில் இருந்தவரை, அனைவரது எண்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தன. இது ஒருபுறமிருக்க, ஜல்லிக்கட்டுக்கு வந்த காளைகளின் உரிமையாளர்களின் வேதனைகளையும் காணமுடிந்தது. 

“எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்கறப்ப பரிசுங்க கொட்டும். இந்த ஜல்லிக்கட்டுக்காக, ஊர்ல இருந்து டெம்போ வெச்சுட்டு வந்துருக்கோம். அதுக்கே 6,000 ரூபா செலவாயிடும். இதுதவிர எங்ககூட மினிமம் ஐந்துபேர் வருவாங்க. அவங்களுக்குச் சாப்பாட்டுச் செலவெல்லாம் வேற இருக்கு. ஆனா, இதுல பரிசா 2 கிராம் தங்கம், 2,000 ரூபா ரொக்கம் மட்டும்தான் தந்தாங்க. சில காளைகளுக்கு மட்டுமே சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பரிசு எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? தலைவர் ராஜசேகரன் சொன்னாருங்கிற ஒரே காரணத்துக்காகத்தான், நாங்க இவ்வளவு செலவு செஞ்சு வந்துருக்கோம். இப்படிப் பண்ணா, அடுத்த வருஷம்லாம் கண்டிப்பா வரமாட்டோம்” என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

'கோவைக்கு ஜல்லிக்கட்டு புதிது' என்பதால், குறைகள் இருப்பது இயல்புதான். ஆனால், அடிப்படை விஷயங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதை மட்டும் செய்தால் போதும். கோவை ஜல்லிக்கட்டுப் போட்டி அதிரிபுதிரி ஹிட் அடிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு