Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : பிரகாஷ்ராஜ்நா.கதிர்வேலன், படங்கள் : ஜெ. முருகன்ஓவியம் : பாரதிராஜா

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது எனக்கு வயது 29. நான் என்ன ஆவேன் என்று எனக்கே தெரியாமல் இருந்த நேரம். கர்நாடகாவில் நாடக இயக்கத்தில் இருந்தேன். அங்கே நிறைய எழுத்தாளர்கள் என் நண்பர்களாக இருந்தாங்க. நெருக்கமான நட்புகளை விட்டுட்டு திடீர்னு சென்னைக்கு வந்துட்டேன். பயமுறுத்தும் தனிமை. பாலசந்தர் சார், அவர் கம்பெனினு சில மனிதர்கள், சில இடங்கள் மட்டுமே தெரியும். தொழில்ரீதியாகப் பேச முடியும். ஆனால், அதற்கு மேலேயும் வாழ்க்கை இருக்கே? புத்தகம், இசைனு நம் தனிமையைக் கரைக்கிற விஷயங்களுக்கு எங்கே போவது? இப்படியான காலத்தில், எனக்குப் பெரிய நண்பர்கள் வட்டாரத்தைக் கொடுத்தது விகடன். அவ்வளவு அருமையான கண்ணன்னு எனக்கு ஒரு நண்பன் கிடைச்சான். எத்தனை மழை இரவுகள், தவளைகள் சாட்சியாகப் பேசிக்கொண்டு இருந்து இருப்போம். பேச நினைத்ததை எல்லாம் பேசித் தீர்த்த நாள் உண்டா? எவ்வளவு களைப்பாக... ஆனால், நிறை வாகத் தூங்கப்போயிருப்போம்! ஒரு பத்திரிகையாளன் நண்பனாக இருக்க முடியாதுனு சொல்வாங்க. ஆனால், எனக்குப் பத்திரிகையாளர்கள்தான் மனசுக்கு நெருக்கமான நண்பர்கள் ஆனாங்க.

நானும் விகடனும்!

பெங்களூரில் இருந்து வந்து இங்கே நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது விகடனின் தரம் புரிஞ்சது. உண்மையை உண்மையாகவே எழுதிக் கிட்டு இருந்தாங்க. யாரும் முயற்சி செய்து பார்க்காத ஒரு கலரில் நான் நடிக்கமுயன்ற போது, என்னை முதலில் பாராட்டியது விகடன்தான். விகடன் ஐ.எஸ்.ஐ. முத்திரை மாதிரி. அதில் கிடைக்கும் பாராட்டு பெரிய அங்கீகாரம். அந்தத் தரத்தை இவ்வளவு காலம் தன் கைவசம் வைத்து இருப்பதுதான் பெரிய விஷயம். என்னோட வாழ்க்கையின் பெரிய திருப்பம் விகடனில் 'சொல்லாததும் உண்மை’ தொடரை எழுதியது. கண்ணன் என்கூடவே இருந்தார். எப்படி இந்தத் தொடர் எழுதினால், அது வெற்றி அடையும்கிற ரகசியம் அவருக்குத் தெரிஞ்சது. எல்லாமே ஒரு சூத்திரம்தான். நான் வெளிப்படையாகப் பேசுகிறவன். சொன்னதில் விடாப்பிடியாக நிற்கிறவன். அது அப்படியே வந்தால், நல்லதாக, உண்மையாக இருக்கும்னு அவருக்குத்தான் தோன்றியது. ஞானவேல் அந்தப் பதிவை முன்னெடுத்துப் போனார்.

எனக்குப் பெரிய மேடை அமைத்துத் தந்தது விகடன். அவங்களுக்கு அவங்க மேடையிலயே நன்றி சொல்றது பாக்கியம். இதோ அதுவும் கிடைச்சிருக்கு. வாராவாரம் தொடரின் ஒவ்வோர் அத்தியாயம் வெளியாகும்போதும் தமிழகமே என்னைக் கொண்டா டியது. பெண்கள் கை குலுக்கினாங்க. ஆண்கள் 'நண்பா’னு தோளில் தட்டிக்கொடுத்தாங்க. சிலர் கோபத்தோடு சண்டை போட்டாங்க. 'இப்படிப் புட்டுப்புட்டு வைக்கிறியேடா பாவி, நாங்க எங்கே போறது’னு தவிச்சாங்க. அந்தத் தொடரில் உண்மையாக வாழ்ந்ததில் நிறைவடைந்தேன். என் வாழ்க்கையில சில தீர்மானங்களை விகடனில் முன்வைத்துத் தெளிந்தேன். என்னில் இருக்கிற நல்லவன், கெட்டவன் எல்லோரையும் எல்லார் முன்னிலையிலும் போட்டு உடைச்சேன். எனக்கு விகடன் பெரிய விடுதலை கொடுத்தது.  

எனக்கு விகடன் பல விஷயங்களைத் திருப்பிக் கொடுத்தது. ஏர்போர்ட்டில், ஷூட்டிங்கில் என்று பல இடங்களில் பலர் என்னிடம் 'சொல்லாததும் உண்மை’ பற்றிப் பேசினார்கள்; பேசிக்கொண்டே இருந்தார்கள். 'எனக்கு இப்படி இருக்கே நண்பா, என்ன செய்யட்டும்?’ எனக் கேள்வியை முன்வைத்தார்கள். குழப்பத்தைப் பகிர்ந்துகொண்ட என்னிடமே விசித்திரமாகக் குழப்பம் தெளிய மருந்து கேட்டார்கள். விகடனின் திசை நோக்கி வணங்குகிறேன். எல்லோருக்கும் என் சாஷ்டாங்கமான வணக்கம். இதோ என் கண்ணீரில் தெறிக்கிற சிறு துளியோடு வந்தனம்.

நானும் விகடனும்!

எனக்கு விகடனில் எப்போதும் பிடிச்சது அதன் அழகான கலவை. எல்லோருக்குமான விஷயங்கள் இருக்கும். ஆனால், அதைத் தெரியாத மாதிரி பார்த்துக்கிற திறமை. ஃபுல் மீல்ஸ்னு சொல்வாங்க. அதுதான் விகடன். அதனோட பெரிய பலம் அழகா அமைஞ்சிருக்கிற, புரிஞ்சுக் கிற வாசகர்கள். வியாழன் வெளியூருக்கு வரும், வெள்ளிக் கிழமை சென்னையில் இருக்கணும். தெரிஞ்சுக்க வேண்டிய, பேசியே ஆக வேண்டிய முக்கியமான விஷயம்னா 'படிச்சுக்காட்டேன்’னு போனில் நண்பர்களிடம் கெஞ்சுவேன். வெள்ளிக் கிழமை 10 மணிக்கு எல்லாம் எங்களின் சந்திப்பில் அவசியம் விகடன் இடம்பெறும். படிச்சிருந்தா 'ஓ.கே.’ 'படிக்கலை’னு சொன்னால், 'முதல்ல அதைப் படிக்கிற வழியைப் பாரு’னு எத்தனை வசவுகள் என் நண்பர்களுக்குக் கிடைச் சிருக்கு!

என் பேட்டிகள் விகடனில்தான் அதிகமாக வந்திருக்கு. மத்தவங்க அதைத் தப்பாக எடுத்துக்கிறதில் அர்த்தம் இல்லை. நான் பேசினதைத் திரிச்சு எழுத மாட்டாங்கனு ஓர் அசுர நம்பிக்கை. எனக்கு விகடனில் எப்போதும் சௌகரியமான இடம் இருக்கு. மனசை இன்னும் அதிகமாகத் திறந்திட்டால், அவங்களே 'போதும் பேசாதீங்க’னு சொல்வாங்க. தவறி வந்தால், 'இந்த வார்த்தை சுடும்’னு சொல்லி, விலக்கி வைப்பாங்க.

எல்லோரும் விகடனின் விமர்சனத்தைப் பத்திப் பேசியிருக்காங்க. என்னுடைய படங்களுக்கான மார்க் பத்தி எனக்குச் சில அபிப்ராய பேதம் இருக்குங்கிறது உண்மைதான். இரண்டு மார்க் கூடும்; குறையும். மனசுகூட கஷ்டமாகும். ஆனால், அதற்கான ஒரு குழு கரெக்டா இருக்கே? பல பேர், பல அபிப்ராயம் இருக்கே? எப்படி எல்லாம் சரியாக ஒரு கோட்டில் வரும்? ஒரு சினிமா வைப் பத்தி பல எண்ணங்கள் இருக்கிறதுதானே உண்மை? அதுதானே அழகு?! நான் எப்பவும் அவங்களிடம் என் செல்வாக் கைப் பயன்படுத்தியது கிடையாது. அந்தச் சமயம் நாங்க பேசிக்கிறதுகூடக் கிடையாது. விகடனின் ரொம்ப முக்கியமான அம்சம், நெருங்கி இருந்தும் ஒட்டாமல் இருப்பது. நம்ம ஆளுனு சொல்ற மாதிரியே இருக்கும். ஆனால், படம் வெளிவரும்போது, கொஞ்சம் எட்டியே இருப்பாங்க. யாரும் யாரையும் பயன்படுத்திக்க முடியாது. நமக்கும் வெட்கமா இருக்கும். அவங்களும் விரும்ப மாட்டாங்க.

எனக்கு ஸ்பெஷல் விகடன்தான். ஆனால், விகடன் எனக்காகத் தனிக் கவனம் கொடுக்க முடியாது. விகடனில் எல்லா இடத்திலும் நுழைஞ்சிட முடியாது. விகடன் மனசில் இடம் பிடிக்கலாம். மார்க்கில் இடம் பிடிக்க முடியாது. அதுதான் இப்போது விகடனின் பெரிய அழகு. அதிகபட்சம் நம்ம தரப்பை முன்வைக்கலாம். விகடனின் நேர்காணலில் நம்மை வெளிப்படுத்திட்டு, அழகா போய்க்கிட்டே இருக்கலாம். அப்படித்தான் விகடனிடம் நீண்ட காலத்துக்கு உறவாட முடியும். மார்க் கேட்டால் மானம் போகும். நல்ல படம் தரணும்னு, எல்லோருக்கும் பயம் இருக்கணும் இல்லையா, அதையும் விகடன் கற்றுக்கொடுத்திருக்கு.

விகடனில் ஓவியர்களுக்குக் கொடுத்து இருக்கிற விசாலமான இடம் அருமையானது. சமீப காலங்களில் இளையராஜா, பாரதிராஜா, ஹாசிப்கான், ராஜ்குமார் ஸ்தபதி மாதிரியான ஓவியர்களிடம் பெரும் கால மாற்றத்தை நான் பார்க்கிறேன். வெறும் அழகு மட்டும் இல்லாமல் சூழல்களை, தலைமுறைகளைக் கண்டுபிடிப்பதுதான் பெரிய வேலை. அதை விகடன் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு மிளிர்கிறது. கவிதைகளுக்கு விகடன் கொடுத்திருக்கும் இடம் வேறு எங்கேயும் காண முடியாது. பிரபலமானவர்களின் கவிதை மட்டும் அல்ல, வாசகர்களிடமும் முத்துக்கள் கிடைக்கின்றன. ஓடிக்கொண்டும் பறந்துகொண்டும் இருக்கிற அவசர வாழ்க்கையில் நின்று நிதானிக்க, நம் இடம்பற்றி புரிய கற்றுத் தருகிறார்கள் விகடனில். கவிதையில் அழகைக் காண முடிகிறது.

நானும் விகடனும்!

அரசியலில் உண்மைகள் புரியவைக்கப்படுகின்றன. இதை எல்லாமும் விகடன் தர அவர்களது வாசகர்களே பலம்.

விகடனின் மற்றுமொரு உன்னதம் இலக்கியத்தை வடிவமைக்கிற விதம். எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன்னு அவ்வளவு கருத்துச் செறிவான தொடர்கள். நல்லது எதுவும் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்கிற பெரிய அக்கறை. அவங் களை மாதிரி அரசியலைக் கையாள முடியாது. நம்ம மனசு நினைக்கிறதை இன்னொருத்தர் சொன்னால், 'அட, இவருக்கு எப்படித் தெரிஞ்சுது’னு ஆச்சர்யப் படுவோமே, அதுதான் விகடன் நமக்குத் தருகிற ஆச்சர்யம்.

விகடன் நம் வாழ்க் கையின் சகல பரப்பு களையும் நம் முன் வைக்கிறது. விகடனின் அக்கறைதான் தமிழனின் வாழ்வு!''