Published:Updated:

ஆச்சர்ய ‘மீஸு’... ஹார்ன்பில் திருவிழா..! வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு விசிட்

ஆச்சர்ய ‘மீஸு’... ஹார்ன்பில் திருவிழா..! வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு விசிட்
ஆச்சர்ய ‘மீஸு’... ஹார்ன்பில் திருவிழா..! வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு விசிட்

ஆச்சர்ய ‘மீஸு’... ஹார்ன்பில் திருவிழா..! வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு விசிட்

ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ சென்று, 10, 15 லட்சங்கள் மேல் செலவு செய்துவிட்டு, வலைதளங்களில் புகைப்படங்களை ஏற்றியும், அந்த நாட்டு மக்களின் `பரந்த' மனப்பான்மையையும், சுற்றுலாவாசிகளை நட்புடன் அணுகுவதைப் பார்த்து வியந்து பெருமைப் பேசும் நபர்கள் நம் நாட்டில் அதிகம். ``நம்ம நாட்டில் இப்படியெல்லாம் இருப்பாங்களா? கிடைச்சா மொட்டை அடிச்சுடுவாங்க" என்ற கமென்ட்ஸ் நிறைய வரும். பல சுற்றுலா இடங்களில் இதுதான் நிதர்சனமும் கூட. லோக்கல்ஸ் எனப்படும் உள்ளூர்வாசிகளின் அணுகுமுறையால்தான் நம் பயணத்தின் தரம் அமையும், பரவலாக.

ஆனால் இந்தியாவில், இந்த சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு சில இடங்கள் உள்ளன. ’இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ எனப்படும் மேகாலாயாவும், வன விலங்குகளின் காப்பகமாக இருக்கும் அஸ்ஸாமும், ரம்மியமான நீர் நிலைகளும் குன்றுகளும் இருக்கும் மணிப்பூரும், கலையம்சம் மிக்க கோயில்களைக் கொண்ட திரிபுராவும், மலைக்குகைகளின் மாநிலம் ஆன மிசோராமும், பெருமை மிக்க பூர்வீகக் குடிகளின் மாநிலமான நாகாலாந்தும் வடகிழக்கு இந்தியாவின் ஆறு கண்மணிகள். கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள், நட்புடன் நம்மிடம் பழகும் உள்ளூர் வாசிகள், குறைவான பயணக் கட்டணங்கள், தங்குவதற்குப் பாதுகாப்பாக நிறைய வீட்டு விடுதிகள் எனப் பயணிப்பதற்கு மிகச் சிறந்த இடம், இந்த வடகிழக்கு.

சென்னையில் வாழ்ந்த நான், வட கிழக்குக்கு ஒரு முறையாவது வருவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நம்மூரில் இருந்தவரை எனக்கு, இம்மக்கள் "சைனீஸ்" மற்றும் "சிங்கிகள்" தான்.

செவிட்டில் அறைந்தார் போல, அஸ்ஸாமில் என் கணவருக்கு நான்கு வருடம் `போஸ்டிங்'. 3 வயது எங்கள் தேவதைக்கு. 1.5 வயதிலிருந்தபோதே காரில் எடுத்துக்கொண்டு பயணம் செய்வோம். நிறைய இடங்கள் வட கிழக்கு இந்தியாவில் பார்த்தாயிற்று. திரும்பத் திரும்ப நெகிழச் செய்யும் அனுபவங்கள். எங்கும் உதவும் குணமுடைய மக்கள்.

இந்தியா - பங்களாதேஷ் எல்லையில் 4000 அடி உயரத்திலும், என் பிள்ளைக்கு ஆட்டுப் பால் கறந்துகொடுத்துள்ளனர்... சின்னக் கண்களுடைய அந்த மஞ்சள் நிறப் பெண் தெய்வங்கள். எது கிடைக்க வேண்டும் என்றாலும், பணம் கொடுத்தால்தான் ஆகும் என்ற மனப்பான்மையுடன் இருந்த நான், செய்த உதவிக்குப் புன்னகையை மட்டும் விலையாக எதிர்ப்பார்த்த நல்ல மனிதர்களை இங்கு கண்டுள்ளேன். சில சமயம், இப்படிக்கூட மனிதர்கள் இருப்பார்களா என்று வியந்ததுண்டு. சாலைவழியாக காரில் பயணம் செய்யும்போது, குழந்தையுடன் கழிப்பிடம் தேடி அலைந்துகொண்டிருந்த என்னை, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் உண்டு. நான் வேலை முடித்து வெளியில் வரும்போது, அவர்கள் குழந்தைகளுடன் என் பிள்ளை `வாத்து முட்டை ஆம்லெட்' தின்றுகொண்டிருந்த நாள்கள் அதிகம்.

நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழா:

"மீஸூ" ஒரு வருடத்துக்கும் மேலாக அறிமுகம், இணையம் வழியாக. அவர்களின் வீட்டு விடுதிக்கு ஒரு முறை பதிவுசெய்து, போக முடியாமல் போயிற்று. 2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் `ஹார்ன்பில்' திருவிழாக்குப் பதிவு செய்தோம். 'தடக் தடக்' என்று மோசமான ரோட்டில், 8 மணி நேர கார் பயணம். மூளையைக் கூட உறைய வைக்கும் குளிர்.  மீஸூவின் வீட்டுக்குச் சென்றடைந்தோம். மலர்ந்த முகங்களோடு அவர்கள் குடும்பத்தார் அனைவரும் எங்களை வரவேற்றனர். எங்கள் மகள் அவர்களோடு நன்கு ஒட்டிக்கொண்டாள். 15 அறைகள்.  மூன்றாம் மாடியில் அடுக்களை. நாங்கள் இருந்த அறையைப் பூட்ட வேண்டாமா என்று கேட்டோம். எதற்கு பூட்டு என்று சிரித்துக்கொண்டே ஓடிவிட்டான் ஒரு சிறுவன். எனக்கு ஏன் என்று சிறிது நேரத்தில் புரிந்தது.

பாரம்பர்ய  உணவுகள்:

அடுக்களைக்கு ஒட்டினாற்போல் உணவருந்தும் இடம். நல்ல குளிர். பசி நற நறவென்று வயிற்றைக் கடித்தது. சாதத்துடன் மசூர் பருப்பு கடைசலும், மூங்கில் பூ சூப், பன்றிக்கறி குழம்பு, வாழைப்பூப் பொறியல், பாகற்காய் வருவல், இரண்டு வகை சாலட் என்று ஒரு விருந்தே இருந்தது. அவர்கள் தோட்டத்துக் காய்கறிகள். சைவத்தை மட்டும் வயிறுப் புடைக்கத் தின்றுவிட்டு, வெளியில் தீ வார்த்துக் குளிர்காய்ந்தோம். வேக வைத்த உணவுகள் நிறைய. தாளிப்புகள் ரொம்பக் குறைவு. பன்றிக் கறி நான்கு மணி நேரம் வேகும். சூடான, குழைவான சாதம்தான் மதியமும் இரவும். தீயிலும் இறைச்சியை வாட்டுவார்கள், ஆனால், அது விசேஷ நேர உணவு. நிறைய காட்டு காய்கறிகள், பழங்கள். ஒட்டும் அரிசி உணவு (sticky rice) , maize  எனப்படும் ஒருவகையான சோளம் சார்ந்த உணவுகள், விஷமில்லா தேனிக்களின் கூட்டுடன் உரிய தேன் (Non stinging bee honeycomb) , இதெல்லாம் காலை உணவு. சாம்பார், சட்னி இல்லாமல் நம் வயிறு திருப்தி ஆவதில்லை.

வித விதமான பயணக்குழுக்கள் எங்களுடன். இந்தியாவின் எல்லா மூலையிலிருந்தும் வந்திருந்தனர். இருவர் வெளி நாட்டவர்.

நாகாலாந்து தலைநகரான கொஹிமாவை ஒட்டியுள்ள,  `கிஸாமா' கிராமத்தில், அரசே ஒரு பெரிய திறந்தவெளி மைதானம் அமைத்து, பல வணிகக் கட்டடங்கள் அமைத்து, ஹார்ன்பில் விழாவை நடத்துகிறது. நிறைய நடந்து செல்ல வேண்டி வரும். செங்குத்தான இடம். ஒவ்வொரு நாள் காலையிலும் பல கல்லூரி மாணவர்கள் வாயிலில் நிற்கின்றனர். வரும் கார்களுக்கு வழி செய்தல், சுற்றுலாவாசிகளுக்கு உதவுதல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகள் என்று பல வேலைகள் செய்கின்றனர் இம்மாணவர்கள். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருந்தது. பத்து நாள் திருவிழாவில், தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளின் அட்டவணை, வரவேற்புக் கூடத்தில் கிடைக்கும். இப்படியாகப் பத்து நாளும் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு "கிங்க் சில்லி" (King Chilly) சாப்பிடும் போட்டி, நாகாலாந்தின் புகழ்பெற்ற அன்னாசிப்பழம் சாப்பிடும் போட்டி என்று தினமும் களைக் கட்டுகிறது திருவிழா.

நாகா சமூகம்:

நாகாலாந்து முழுக்கவே பழங்குடிகளால் நிரம்பியது. மீஸுவின் குடும்பத்தார் `அங்காமி' இனக்குழுவைச் சார்ந்தவர்கள். அங்கு இரண்டாம் முறையாக வந்திருந்த ஒரு சக பயணி சொன்னார், 

"இவங்க குடும்பம், ரொம்ப வசதி. ஆனா காமிச்சுக்க மாட்டாங்க. இந்த விடுதிலாம் இவங்க நடத்தி வாழணும்ன்னு எந்த அவசியமும் இல்ல, எல்லா சமூகத்தாரோடு ஒரு உரையாடல் வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடத்துறாங்க" என்றார். ஆச்சர்யமாக இருந்தது எங்களுக்கு! 

நான்தான் கேட்டுத் தொலைத்தேன். "மீஸு உங்களுக்கு எவ்வளவு இடம் சொந்தம்?" என்று. 

நின்றுகொண்டிருந்த பால்கனியிலிருந்து கை நீட்டினாள். ``அதோ அந்த மலையின் அடுத்தப் பக்கம் வரை எங்கள் இடம்தான். அரசுக்குக் கொடுத்துவிட்டோம், திருவிழா நடத்த..." என்றாள்.  

அப்போது மீஸூவின் தங்கை, நான் உண்ட தட்டைக் கழுவிக்கொண்டிருந்தாள். படக்கென்று பிடிங்கி,  ``நான் செய்கிறேன்" என்றேன் அல்பத்தனமாக. "நீங்கள் எங்கள் விருந்தாளிகள், நான்தான் செய்ய வேண்டும்" என்றது அந்தச் சின்னப் பெண். பதினாறு வயது இருக்கும் அவளுக்கு.

மீஸு குடும்பத்தோடு...

என்னை மிகவும் கவர்ந்தது `அஃபா' என்ற மீஸுவின் கடைக்குட்டித் தம்பி. அஃபா எல்லோருக்கு முன் எழுவான். வீடு துடைத்து, டீ போட்டு விடுவான். யாரும் எந்திரிக்காவிட்டால், காலை உணவு சமைத்து வைத்து விட்டுப் பள்ளி சென்று விடுவான். அவனுக்குப் பத்து வயது. அஃபாவுக்கு எல்லாம் சிரிப்புதான். அம்மா அப்பாவுக்குப் பணி செய்துகொடுப்பது, அவனுக்கே அவனுக்கான கடமை என்று நினைக்கிறேன். இந்தப் பையன் ஒரு பழைய புத்தகத்திலிருந்து குதித்து வெளியில் வந்த ஒரு கதாபாத்திரம். பேச்சு ரொம்ப கம்மி, எல்லாக் கேள்விக்கும் சிரிப்புதான் பதில். என் பெண்ணிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். நாகாமிஸ் மொழியில். இவளும் கேட்டுக்கொண்டிருந்தாள். குழந்தைகளுக்கு எல்லா மொழியும் புரியும்போல!

நாகாலாந்தின் கைவினைப் பொருள்கள் அவ்வளவு அழகு. அவற்றை விற்கும் இளம்பெண்களும், அம்மாக்களும், பாட்டிகளும் கொள்ளை அழகு.

 நாகாலாந்தில் தந்தைவழி மரபோ, தாய்வழி மரபுகளோ இல்லை. ஆண் பெண் இருவரும் சமம் என்ற தத்துவத்தை இச்சமூகம் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கறது. அதைப்போல `சமூக அந்தஸ்து' என்ற ஒரு கருத்துருக்குப் பெருமளவு இவர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இருவரும் காட்டு வேலை செய்வார்கள், வீட்டு வேலையும் செய்வார்கள். எல்லா வணிகங்களிலும் பெண்கள் பங்கேற்று நடத்துகிறார்கள். தலைமை தாங்குகிறார்கள். பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஆலோசனை பெற ஒரு  `சட்டக் குழு' அரசே செலவு செய்து அமைத்துள்ளது. திருவிழாவிலும் ஒரு தனி வளாகம் இருந்தது. அதில் பெண்கள் இலவச சட்ட ஆலோசனையும் பெறலாம். இதில் நிறைய வழக்கறிஞர்களும், சட்டம் பயிலும் மாணவர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்பளம் எதுவும் வாங்காமல். இதைக் கண்டதும், இணையத்தில் மட்டும் பெண்ணியம் பேசிக்கொண்டே காலம் கடத்துபவர்கள் நண்பர்கள் நினைவுக்கு வந்தனர்.

இம்மக்கள் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்துள்ளனர். நம்மூர் பொறியியல் கல்லூரிகள் இவர்களது ஊர்களில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள் வைத்திருப்பதைக் காண முடிந்தது. 

மீஸு அஞ்சலகத்துறை அதிகாரி. அவள் தம்பி தங்கைகளில் இருவர், மருத்துவர், ஒரு பொறியாளர். மீஸுவின் கணவர், அம்மாநில உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர்.

சுற்றுலாப் பயணிகளில் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் சிலர் இக்குடும்பத்தாரை நட்சத்திர விடுதிப் பணியாளர்கள்போல் நடத்தினர். பல் விளக்க சுடுதண்ணி குடு என்று கேட்டார் ஒரு அம்மணி. வரிக்கு வரி நான் ஒரு கர்னலின் மனைவி என்று கூறிக்கொண்டே இருந்தார். இந்த மேடத்துக்கு எப்படிப் புரிய வைப்பது, அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று. ``மேடம் இவர்கள் எல்லாரும் ஒரு குடும்பத்தார்தான், சின்னஞ்சிறு குழந்தைகள் நமக்காக வேலை செய்கிறார்கள்" என்றேன். நான் பணம் கொடுத்துள்ளேன் என்றார் அவர். இதுக்கு மேல் பேச வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டேன்.

மொழி:

இவர்களது மொழிகளைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். வட கிழக்கில் எண்ணற்ற பூர்வ குடிகள். ஒவ்வொரு குடிக்கும் ஒரு மொழி. அதே நிலப்பகுதியில் வசிக்கும் பிற குடியினருக்கு மற்றொரு பேச்சு வழக்கு. நாகாலாந்தில் மட்டும் 19-க்கு மேற்பட்ட பூர்வகுடிகள். 19 மொழிகள். இதில் எண்ணற்ற பேச்சு வழக்குகள். ஆனால், ஒன்றுக்குகூட எழுத்து வடிவம் இல்லை. இப்போதுதான் நாகாமீஸ் என்ற ஒரு பொதுவழக்கை பள்ளிக் கல்லூரிகளில் கொண்டு வந்துள்ளது அரசு. ஆங்கிலம்தான் ஆட்சிமொழி.

``எப்படி நீங்கள் உங்கள் மொழியை அழிய விடாமல் காக்கின்றீர்கள்" என்றேன். 

``பேசி பேசியேதான்". ``உங்களில் ஒருவர் பிற மாநிலத்தாரை, அயல் நாட்டினரை மணந்தால்? இயற்கை சீரழிவினால், உங்களில் ஒரு சாரார் இடம் பெயர்ந்தால் ?" என்று கேட்டேன். 

"அப்பொழுதும் எங்கள் மொழியைப் பேசுவோம். எம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.''  ''ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் காத்துள்ளோம், அடுத்த தலைமுறைக்கு எப்படியாவது இதன் மகத்துவத்தைப் புரிய வைத்துவிடுவோம்" என்றனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே துல்லியமான எழுத்துவடிவம் பெற்ற செம்மொழியை, இரண்டாம் பாடமாகப் படிக்கவே யோசிக்கும் இளைய தலைமுறை, நம்மூரில்.

சுற்றுச்சூழல்:

செல்லும் இடமெல்லாம் சுத்தம் அதிகம். மீள் சுழற்சி முறையை எல்லா வீடுகளிலும், அலுவலகத்திலும் காணலாம். அவர்கள் வாழ்வில் இது ஒரு அங்கமாகவே உள்ளது. நிலத்தையும் சுற்றுச்சூழலையும் காக்கும் முறைகள் அவர்கள் பண்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கையுடன் வளரும் மக்கள். சிக்கிம் மாநிலத்தில் எல்லா விவசாயமும் ஆர்கானிக்தான். உலக அரங்கில், விளைச்சலில் தரம் வாய்ந்த மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது இன்று.  

ஒரு வார்த்தை:

இவர்களது சமூகம், அரை நூற்றாண்டுகளாய் பிரிவினைவாத அரசியலில் சிக்கி சின்னாப்பின்னமாகி, இன்னும் பல அரசியல் சிக்கல்கள்... போர், போராட்டம் என உழன்று, இப்போதுதான் ஓரளவு வன்முறைச் சம்பவங்களின்றி வாழ்கிறார்கள். இந்தியப் பெரு நிலத்தோடு ஒன்றி வாழ வேண்டும் என்று பெருபான்மையோர் நினைக்கின்றனர். படிக்கவும், வேலை தேடியும் இம்மாகாண மக்கள் நம்மோடு கலக்க முயல்கையில் இவர்களை அந்நியராக எண்ணி, நாம் இவர்கள்மீது தொடுக்கும் சமூக வன்முறை, கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்த இனவெறித் தாக்குதல்களுக்கு ஒப்பானது.

நாம் வாழும் தேசத்தில்தான் இம்மக்களும் உள்ளனர். நம்மைப் போன்றும் இவர்களும் இந்தியர்கள்தாம். தேசப்பற்று, இனப்பற்று, மொழிப் பற்று எல்லாம் இவர்களுக்கும் உண்டு. இந்திய ராணுவத்தின் `குர்கா ரெஜிமென்ட்' வீரத்துக்குப் பேர் பெற்றது. தன் நிலத்தின், மக்களின் பெருமைகளை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆசை இவருக்கும் உண்டு. இந்தியா கேட்கத் தயாராக உள்ளதா?

பி.கு: நாங்கள் இப்பிரதேசத்தில் இரண்டாண்டாக இருந்துவருகிறோம். இந்த இரண்டாண்டுகளில் நாங்கள் சென்ற இடங்கள், சந்தித்த மனிதர்கள், பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்தே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். 


- சுனந்தா விஜய்குமார். 

(அஸ்ஸாமில் வசிக்கும் தமிழர்)
 

அடுத்த கட்டுரைக்கு