Published:Updated:

''தெரிந்ததை முதலிலும் தெரியாததை அடுத்ததும் ரிவைஸ் செய்யுங்கள்!'' - பொதுத்தேர்வு டிப்ஸ் #PublicExamTips

ஆ.சாந்தி கணேஷ்
''தெரிந்ததை முதலிலும் தெரியாததை அடுத்ததும் ரிவைஸ் செய்யுங்கள்!'' - பொதுத்தேர்வு டிப்ஸ் #PublicExamTips
''தெரிந்ததை முதலிலும் தெரியாததை அடுத்ததும் ரிவைஸ் செய்யுங்கள்!'' - பொதுத்தேர்வு டிப்ஸ் #PublicExamTips

ழக்கமாக வருடந்தோறும் இந்த நேரத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பிள்ளைகள் பொதுத்தேர்வு டென்ஷனில் படபடத்துக்கொண்டிருப்பார்கள். இந்த வருடம் பிளஸ் ஒன் பிள்ளைகளும் இதில் சேர்ந்துவிட்டார்கள். உங்கள் பிள்ளைகள் இந்த பப்ளிக் எக்ஸாமை மன உளைச்சல் இல்லாமல், சக்ஸஸ்ஃபுல்லாக கடப்பது எப்படி? அதற்கான வழிகளைச் சொல்கிறார், பிரபாகரன். இவர், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 30 வருடங்களாக வேதியியல் பாடம் நடத்தும் மாநகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர். 

1. பிள்ளைகள் பதற்றமாக இருக்கும்போது, 'பரீட்சையைப் பார்த்து பயப்படாதே, டென்ஷன் ஆகாதே' என்று சொல்வதெல்லாம் நியாயமேயில்லை. அதற்குப் பதில், ஆசிரியர்களும் பெற்றோர்களும், 'இந்த நேரத்தில் டென்ஷன் நார்மலான விஷயம்தான். அதைப்பற்றி அலட்டிக்காமல் உன் பெஸ்ட்டை படிப்பில் காட்டு' என அவர்களின் பயத்தை தணிக்கப் பாருங்கள். 

2. டென்த், பிளஸ் ஒன், பிளஸ் டூ என மூன்று வருடங்களும் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் பண்ண, பாடத்தைப் புரிந்து படித்தாலே போதும். இந்த வழக்கத்தை ஃபாலோ செய்யாத பள்ளிகள், எட்டாவது, ஒன்பதாவது படிக்கும்போதாவது மாணவர்களிடம் ஆரம்பிக்க வேண்டும். பரீட்சை ஆரம்பிக்க ஒரு மாதம் இருக்கும்போது, பாதி புரிந்ததை ஆசிரியர்களிடமோ, நண்பர்களிடமோ கேட்டு கிளியர் செய்துகொள்ளுங்கள். கட்டாயம் வரும்; ஆனால், உள்வாங்கிப் படிக்க முடியவில்லை என்கிற விடைகளை மனப்பாடம் செய்துவிடுங்கள். இந்த விஷயம், கணிதம் மற்றும் வேதியியலுக்கும் நன்கு பொருந்தும். 

3. இதற்கு முன்பு பிளஸ் டூ எக்ஸாமில் 1 மார்க், 3 மார்க், 5 மார்க் என இருந்த கேள்வி பேட்டர்ன், இந்த வருடத்திலிருந்து 1 மார்க், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் என வரப்போகிறது. இதில், ஒரு மார்க் கேள்விகளுக்கு முழு புத்தகத்தையும் படித்தால்தான் பதில் அளிக்க முடியும். கவனியுங்கள், நான் புத்தகம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். கைடு என்று சொல்லவில்லை. 2 மார்க் கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரிந்திருந்தால், அந்தக் கேள்வி 3 மார்க் பகுதியில் வந்தாலும் பதில் எழுத முடியும். தனித்தனியாகப் படிக்க தேவையில்லை. மிச்சம் இருக்கிற நேரத்தை 5 மார்க் கேள்வி பதிலுக்குச் செலவழியுங்கள். என் மாணவர்களுக்கு நான் இதைச் சொல்லித்தான் பயிற்சி அளிக்கிறேன். இந்த வழிமுறையை முதல்முறையாக பிளஸ் ஒன் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போகும் மாணவர்கள் ஃபாலோ பண்ணினால், குறைந்த நேரத்தில் நிறைய சிலபஸ் கவர் பண்ணலாம். 

4. சில மாணவர்கள் செலக்டிவாகத்தான் படிப்பார்கள். இவர்கள், கட்டாயம் வருகிற கேள்விகள், வருவதற்கு வாய்ப்பிருக்கும் கேள்விகள் என இரண்டாகப் பிரித்துப் படித்தால், கூடுதல் மார்க் எடுக்கலாம். 

5. நிறைய மாணவர்கள் இப்போதே ரிவைஸ் பண்ண ஆரம்பித்திருப்பார்கள். அவர்களிடம் தெரிந்தவற்றை முதலில் கடகடவென ரிவைஸ் செய்துவிட்டு, தடுமாறுகிற பாடங்களை பிறகு படிக்கச் சொல்லுங்கள். தெரிந்தவற்றை முதலில் ரிவைஸ் பண்ணும்போது, நன்றாகப் படித்திருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை வரும். பிறகு மற்ற பாடங்களைப் படிக்க அதிக நேரமும் கிடைக்கும். 

6. படிக்க உட்காரும்போது, முதல் நாள் இரவு படித்ததை ஒரு தடவை பார்க்காமல் சொல்லி பார்த்துவிட்டு, அடுத்த பாடங்களுக்குச் செல்ல வேண்டும். இப்படி ரீகால் செய்வது, 'எல்லாம் படித்ததுதான் ஆனால், சட்டென்று ஞாபகம் வரவில்லையே' என்கிற மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழிமுறையை, எல்லா ஆசிரியர்களும் இந்த ஒரு மாத காலத்துக்கு வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் செய்தாலும் நல்ல ரிசல்ட் கொடுக்கும். இதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். 

7. நகர்ப்புற மாணவர்கள் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். கிராமப்புறங்களில் இரவுகளில்தான் சுடச்சுட சமைப்பார்கள். அதனால், மாணவர்களும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிடுவார்கள். கண் நிறைய தூக்கம் வந்துவிடும். அப்புறம் நைட் ஸ்டடி எங்கிருந்து செய்வது? இப்படிப்பட்ட மாணவர்கள், விடியற்காலையில் படிக்கலாம். மற்றபடி, எல்லா மாணவர்களுக்கும் சொல்ல விரும்புவது, கம்ஃப்ர்டபிளான நேரத்தில், அமைதியான இடத்தில் அமர்ந்து படியுங்கள் என்பதே. இதற்கான சூழலை பெற்றோர் உருவாக்கிக் கொடுங்கள். 

8. பப்ளிக் எக்ஸாம் மட்டுமல்ல, காதல் வருகிற வயதும் இதுதான். போர்டு எக்ஸாம் எழுதப்போகிற மாணவர்களுக்கு வீட்டில் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களைச் சேர்ந்தது; பள்ளிக்கூடத்தில் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியர்கள் பொறுப்பு. மற்றபடி, இதுபோன்ற கவர்ச்சிகளில் விழாமல் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்றிக்கொள்வது முக்கியம். அதைப் பக்குவமாகப் புரியவைத்துவிட்டால் போதும்.