Published:Updated:

மாணவர்களுக்கு இலவச மேம்பாட்டுப் பயிற்சி... அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி!

SAKTHIVEL MURUGAN G
மாணவர்களுக்கு இலவச மேம்பாட்டுப் பயிற்சி... அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி!
மாணவர்களுக்கு இலவச மேம்பாட்டுப் பயிற்சி... அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதி!

அண்மையில் வெளியான கல்வி ஆய்வு அறிக்கையில், `மதுரை மாவட்டத்தில் 14-18 வயதுள்ள இளைஞர்கள் அதிகளவில் செல்போனை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவர்களில் 60 சதவிகிதம் பேர் இதுவரை இன்டர்நெட்டைப் பயன்படுத்தியதே இல்லை' என்கிறது. இதற்கு மாற்றாக மதுரையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நவீனத் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியினர். 

மதுரை மாவட்டம், மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார். மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆர். ரேணுகா ஆகியோர்தாம் இந்த ஆசிரிய தம்பதியினர். 

இதுவரை ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ள இவர்கள், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றி வருகின்றனர். வாடிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மொபைல்போன், லேப்டாப் சகிதம் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர்களிடம் பேசினோம். 

``மாணவர்கள், நவீனத் தொழில்நுட்ப சாதனங்களைப் பொழுதுபோக்காக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த தெரிவதில்லை. மொபைல்போனையும், இலவச கணினியையும் முறையாகப் பயன்படுத்தி, சம்பாதிக்கவும், சிறந்த முறையில் மேற்படிப்பு படிக்கவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துகிறோம். பயனுள்ள ‘செல்போன் ஆப்ஸ்’ அடையாளம் கண்டு, அதனை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். ‘ஆப்ஸ்’ மூலம் அலைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது, மின்சாரக் கட்டணம் செலுத்துவது, ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்வது போன்றவற்றைச் சொல்லித்தருகிறோம். 

மொபைல் ஆப் பயன்படுத்தும் மாணவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு ரிசார்ஜ் செய்வது, ரிசர்வேஷன் செய்வது போன்ற சேவைகளைச் செய்ய முடியும். இதன்மூலம், தங்கள் படிப்புக்கு ஆகும் கூடுதல் செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ளலாம்.

மாணவிகளுக்கு மருதாணியிடுதல் (மெகந்தி டிசைனிங்) பயிற்சி வழங்குகிறோம். விசேஷ காலங்களில் உற்றார் உறவினர்களுக்கு மருதாணியிடுதல் மூலமாக மாணவிகள் சம்பாதிக்க முடியும்" என்கிறார் ஆசிரியை ரேணுகா. 

``இப்படியொரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எப்படி?" 

``பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு இலவசமாக லேப்டாப் வழங்குகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த மடிக்கணினியைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிவதில்லை. இதனால், கிராமப்புற மாணவர்களின் வீட்டில் இந்த மடிக்கணினி பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிப்பதன் மூலம் அரசு வழங்கும் மடிக்கணினியை ஒரு நல்ல ஆக்கப்பூர்வமான ரிசோர்ஸாக (வளமாக) மாற்ற முடியும். 

மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு மேற்படிப்புக்கும், நுழைவுத் தேர்வுக்கும் `ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. `கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல' மாணவர்கள் தங்களிடம் உள்ள லேப்டாப்பை பயன்படுத்தி விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, கம்ப்யூட்டர் சென்டர்களில் மணிக்கணக்காக காத்துக் கிடக்கின்றனர்.

தகுந்த பயிற்சி மூலம், சுயமாகவே மாணவர்கள் தங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பணமும் மிச்சப்படும். மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்கு பொருளாதாரம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்பது எங்கள் பயிற்சியின் முக்கிய நோக்கம். மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி அவர்கள் லட்சியத்தை அடைய வைக்கவே இந்த முயற்சியும், பயிற்சியும்..." என்றார் சூரியகுமார். 

கொஞ்சம் நேரம் ஓய்வு கிடைத்தால் கூட ஏதேனும் ஓர் அரசுப்பள்ளிக்குத் தன்னார்வமாகச் சென்று பயிற்சி அளிக்கும் ஆசிரிய தம்பதியின் பணி பாராட்டுதலுக்குரியது!