Published:Updated:

தமிழகத்தின் புராதனச் சின்னங்களை மத்திய அரசுப் புறக்கணிக்கிறது..! உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கம்

அருண் சின்னதுரை
தமிழகத்தின் புராதனச் சின்னங்களை மத்திய அரசுப் புறக்கணிக்கிறது..! உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கம்
தமிழகத்தின் புராதனச் சின்னங்களை மத்திய அரசுப் புறக்கணிக்கிறது..! உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கம்

தூத்துக்குடி, முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 'ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருள்களைக் காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும்' என பொதுநல மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஆதிச்சநல்லூர் அகழாய்வு 2005-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது வரை அறிக்கைத் தாக்கல் செய்யப்படவில்லை. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கால அவகாசம் கோரி வருகின்றனர்' என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மத்திய அரசு தமிழக புராதனச் சின்னங்களைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு சரியே.

தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில் மட்டுமே பழைமையையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பிற மாநிலங்களிலிருந்து கழிவுகளைக் கொட்ட அனுமதிப்பதும் இங்குதான் நடைபெறுகிறது என தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தொல்லியல் துறை இடங்கள் எத்தனை? அவற்றில் எத்தனை இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன? என்பதுகுறித்து மத்திய தொல்லியல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் அகழாய்வு நடைபெறும் இடத்தில் மணல் குவாரிகள் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதைக் கண்டிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அதுகுறித்த அனைத்து விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.