Published:Updated:

உலக மகா சீரியல்கள்!

உலக மகா சீரியல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உலக மகா சீரியல்கள்!

கார்த்தி

உலக மகா சீரியல்கள்!

கார்த்தி

Published:Updated:
உலக மகா சீரியல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உலக மகா சீரியல்கள்!

லக சினிமாக்களுக்கு இணையானவை உலக சீரியல்கள். பிரமாண்ட பட்ஜெட், புகழ்பெற்ற நடிகர்கள், மிரளவைக்கும் கதைக்களம்... என அவர்கள் ரேஞ்சே வேறு. ஹாலிவுட் நடிகர்கள், மேடை நாடகங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் விட்டுவைப்பது இல்லை. பல டி.வி சீரியல்கள், சினிமாக்களைவிடவும் புகழ்பெற்றவை. இப்போது கலக்கிவரும் டாப் சீரியல்கள் பற்றிய ஒரு கலர்ஃபுல் கலெக்‌ஷன்...

உலக மகா சீரியல்கள்!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)

`GoT' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்', ஒரு கலக்கல் கின்னஸ் ரிக்கார்டு படைத்திருக்கிறது. அதிகப் பேரால் சட்டத்துக்குப் புறம்பாக டெளன்லோடு செய்யப்பட்ட சீரியல் இது. இருப்பினும் இதன் டி.ஆர்.பி இன்னும் தாறுமாறு. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை வாரத்துக்கு ஒரு எபிசோடு என 10 எபிசோடுகள் ஹெச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக மகா சீரியல்கள்!

`வெஸ்ட்டரோஸ்' என்கிற ஏழு நிலப் பரப்புகளை ஆள, பல்வேறு குழு மனிதர்களுக்கும், பனியில் புதைந்து இருக்கும் `வொயிட் வாக்கர்ஸ்' எனப்படும் ஜீவராசிகளுக்கும் நடக்கும் யுத்தம்தான் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இதே வெஸ்ட்டரோஸை அழிக்க டிராகன்களின் துணையோடு தனியாகப் போராடுகிறாள் டனேரியஸ் டார்கேரியன். இந்த சீரியலின் ஹைலைட்டே, யாருமே நல்லவர் கிடையாது என்பதுதான். எந்த நேரமும் யார் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதால் நகம் கடித்தபடியேதான் ரசிக்கிறார்கள்.

ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் எழுதிய `எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்' நாவல்தான் மூலம். 2011-ம் ஆண்டு வரை மார்ட்டின் எழுதிய ஐந்து பாக புத்தகங்களே பணமழையில் நனைக்க, ஹெச்.பி.ஓ தொடரால் அடித்தது சர்ப்ரைஸ் ஜாக்பாட். புத்தகம், தொலைக் காட்சித் தொடர், கேம்ஸ், பொம்மைகள் என, தொட்டதெல்லாம் மிடாஸ் டச். பிரைம் டைம் எம்மி விருதுகளை இதுவரை 26 முறை வென்றிருக்கும் இந்த நாடகத்தின் ஆறாவது சீஸனுக்காக, ஏப்ரல் 2016-ம் ஆண்டை நோக்கி ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

 ஜெஸ்ஸிகா ஜோன்ஸ் (Jessica Jones)

டி.சி காமிக்ஸுக்குப் போட்டி உண்டு. அது மார்வெல் காமிக்ஸ். அதில் புகழ்பெற்ற கேரக்டர்களான டேர்டெவில், ஜெஸ்ஸிகா ஜோன்ஸ், ல்யூக் கேஜ் ஆகியவற்றை வைத்து தனித்தனி தொடர்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது `நெட் ஃபிலிக்ஸ்’ நிறுவனம். இதில் அதிக லைக்ஸ் வாங்கிய கேரக்டர்தான் `ஜெஸ்ஸிகா ஜோன்ஸ்’. சூப்பர் ஹீரோவான ஜெஸ்ஸிகா ஜோன்ஸ், தனியாகப் பிரிந்து உளவு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவர் சந்திக்கும் சம்பவங்கள்தான் தொடரின் கதை.

உலக மகா சீரியல்கள்!

முதல் சீஸனின் 13 எபிசோடுகளையும் கடந்த நவம்பர் 20-ம் தேதி வெளியிட்டது நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம். ஒரே நாளில் வெளியிடுவதால் ரசிகர்கள் அடுத்த எபிசோடுக்காகக் காத்திருக்கத் தேவை இல்லை என்பது நிறுவனத்தின் எண்ணம். 2016-ம் ஆண்டு பல மார்வெல் தொடர்களை வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டு இருப்பதால், மார்வெல் ரசிகர்களுக்கு ஏக குஷி.

ஃபார்கோ (Fargo)

உலக மகா சீரியல்கள்!

1996-ம் ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாட் ஹிட் படம் `ஃபார்கோ'. அதைத் தழுவி அதே பெயரில் சீரியல் எடுத்திருக்கிறார்கள். க்ரைம், த்ரில்லர், காமெடி என ஒரு காக்டெயிலாக வரும் `ஃபார்கோ', முதல் எபிசோடில் இருந்தே ரசிகர்களைக் குஷியாக்கிவருகிறது. `ஃபார்கோ' படத்தை எழுதி, இயக்கிய கோயன் சகோதரர்கள் இதை இணைந்து தயாரிக்க, நோ ஹாலி இதற்கு என எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் கதாபாத்திரங்களை உருவாக்கி யுள்ளார். முதல் சீஸன் இரண்டு `கோல்டன் குளோப் விருது'களையும், மூன்று `எம்மி விருது'களையும் அள்ளியது. இப்போது இரண்டாவது சீஸனிலும் பல விருதுகளுக்குப் போட்டிபோடுகிறது. `ஃபார்கோ', ரசிகர்களை ஈர்க்கக் காரணம் தொடரின் நடிகர்கள்தான். ஹாபிட் ஹீரோ மார்டின் ஃப்ரீமேன், ஸ்பைடர் மேன் படங்களில் நடித்த கிறிஸ்டன் டன்ஸ்ட் என பல சினிமா பிரபலங்கள் `ஃபார்கோ'வில் கலக்கிவருகிறார்கள்.

மிஸ்டர் ரோபோ (Mr.Robot)

அமெரிக்க டி.வி சீரியல்களில் 2015-ம் ஆண்டின் மெகா ஹிட் `மிஸ்டர் ரோபோ'தான்.  நியூயார்க் நகரத்தில் இருக்கும் `ஆல் சேஃப்’ என்கிற பாதுகாப்பு நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு
(Cyber security)ப் பிரிவில் வேலைபார்க்கிறான் எலியட் ஆல்டர்சன். இணையத்தில் பல பிரபலங்களின் கணக்குகளை ஹேக்செய்யும் வேலைதான் எலியட்டுக்கு. மிஸ்டர்.ரோபோ, அங்கு இருக்கும்  இ-கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கணக்கை ஹேக்செய்து மக்களது கடன்களை அழிக்க நினைக்கிறான். அதற்காக எலியட்டை வேலைக்கு எடுக்கிறான். ட்வீட் பாணியில் சுருங்கச் சொன்னால், அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளைப் பழிவாங்கும் ராபின்ஹுட் கதை.

உலக மகா சீரியல்கள்!

எலியட்டாக ரமி மாலெக்கும், மிஸ்டர் ரோபோவாக கிறிஸ்டியன் ஸ்லேட்டரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்திருக் கிறார்கள். சமகால விஷயங்களை ஸ்கிரீன் ப்ளேயில் சேர்ப்பதுதான் சுவாரஸ்யத் துக்குக் காரணம் என்கிறார்கள் மிஸ்டர்.ரோபோ ஃபேன்ஸ். இந்த ஆண்டின் `கோல்டன் குளோப் விருது'களில் சிறந்த தொடர், சிறந்த துணை நடிகர் (கிறிஸ்டியன் ஸ்லேட்டர்) என விருதுகளை அள்ளியது `மிஸ்டர் ரோபோ’.

ட்ரூ டிடெக்டிவ் (True Detective)

உலக மகா சீரியல்கள்!

2014-ம் ஆண்டு `ட்ரூ டிடெக்டிவ்'-ன் முதல் சீஸன் ஹெச்.பி.ஓ-வில் வெளியானது. மரண ஹிட். முதல் சீஸனின் கதாநாயகன் `இன்ட்டர்ஸ்டெல்லர்' பட ஹீரோ மாத்யூ மெக்கன்னே, அடுத்த சீஸனுக்கு `டோட்டல் ரீகால்' புகழ் காலின் ஃபாரெல். அமெரிக்க நாவல் ஆசிரியரான நிக் பிசோலட்டோதான் இந்தத் தொடரின் அனைத்து எபிசோடுகளையும் எழுதியவர். ஒவ்வொரு சீஸனுக்கும் புது கதாபாத்திரங்கள், புது வில்லன், புதுக்களம் என நிக் அடிப்பது எல்லாம் சிக்ஸர்தான். முதல் சீஸனில் கொலையாளியை வேட்டையாடுவது, இரண்டாவது சீஸன் ஊழலுக்காக நடக்கும் அரசியல் கொலைகள் என வெரைட்டி படையல்.ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 20 லட்சம் பேர் பார்க்கிறார்கள். `வாட் நெக்ஸ்ட்?’ என யூகிக்க முடியாத  திரைக்கதைதான் இதன் ட்ரம்ப் கார்டு. சீரியல் என்பதால், நீட்டி முழக்குவது எல்லாம் கிடையாது. ஒரு சீன்கூட தேவை இல்லாமல் வைக்கப்படுவது இல்லை.  மூன்றாவது சீஸனுக்கு ஹேஷ்டேக் போட்டு, ஆரவாரமாகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

 தி ஃப்ளாஷ் (The Flash )

தெறி ஃபேமஸ் டி.சி காமிக்ஸின் முக்கிய கேரக்டர் பேரி ஆலன். அதை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்தான் `தி ஃப்ளாஷ்’. சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் காவல் துறை அலுவலகத்தில் தடயவியல் நிபுணராகப் பணிபுரிகிறான் பேரி. ஸ்டார் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு கோளாறால், சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். பேரியும் பாதிக்கப்பட, ஒன்பது மாதங்கள் கோமாவில் இருக்கிறான். அதில் இருந்து மீளும் பேரிக்கு, அதிவேகமாகப் பயணிக்கும் பவர் கிடைக்கிறது. அதைவைத்து எப்படி சென்ட்ரல் சிட்டியைக் காக்கிறான் என்பதுதான் கதை.

உலக மகா சீரியல்கள்!

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது வில்லனை இறக்கி டி.ஆர்.பி-யை ஏற்றிக்கொள்வது இவர்கள் ஸ்டைல். 2014-ம் ஆண்டு வெளியான இந்த சீரியலின் 23 எபிசோடுகளுமே தெறி ஹிட்!
சி.டபுள்யூ (CW) சேனலில் 2012-ம் ஆண்டில் இருந்து வெளியாகும் `ஏரோ'வின் (Arrow) கிளைக்கதைதான் `தி ஃப்ளாஷ்'. `ஏரோ' கதை ஸ்டார்லிங் சிட்டியில் இருக்கும் தீயவர்களை அழிப்பது என்றால், `தி ஃப்ளாஷ்' சூப்பர் வில்லன்களை அழிக்கும் சூப்பர் ஹீரோ பற்றியது. இந்த இரண்டு சீரியல்களின் கேரக்டர்களோடு வேறு சிலரையும் சேர்த்து, `லெஜென்ட்ஸ் ஆஃப் டுமாரோ’ (Legends of Tomorrow) என்ற தொடரும் ஜனவரி 21-ம் தேதி முதல் வெளியாக இருப்பது, டி.சி காமிக்ஸ் ரசிகர்களை வைரல் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உலக மகா சீரியல்கள்!

ந்தியாவில் பிரமாண்ட சீரியல்கள் உருவாக்கும் முயற்சியில் பாலிவுட் ஸ்டார்கள்தான் முதலில் இறங்கினார்கள். அமிதாப் பச்சன் நடிப்பில், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் `யுத்' என்ற ஒரு சீரியல் சோனி சேனலில் ஒளிப்பரப்பானது. தென் இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் `பாட்ஷா’, `பாகுபலி’யையும் தொலைக்காட்சித் தொடராக எடுக்க இருக்கிறார்கள். படத்துக்காக உருவாக்கிய செட்களும் பொருட்களும் அப்படியே இருப்பதால், பட்ஜெட்டைக் குறைக்க உதவும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism