Published:Updated:

சரிகமபதநி டைரி 2015

சரிகமபதநி டைரி 2015
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, மா.நிவேதன்

சரிகமபதநி டைரி 2015

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, மா.நிவேதன்

Published:Updated:
சரிகமபதநி டைரி 2015
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி 2015

டிசம்பர் சீஸனுக்காக மியூஸிக் அகாடமி வெளியிட்ட முதல் பட்டியலில் `சூப்பர் சிங்கர்’ ஆஸ்தான நீதிபதி பி.உன்னிகிருஷ்ணன் பெயர் ஏனோ இடம்பெற்றிருக்கவில்லை. சீஸன் ஆரம்பமாகும் சமயம் 30-ம் தேதி மாலை 4 மணி ஸ்லாட்டில் இங்கே பாட ஒப்புக்கொண்டிருந்தவர் ரத்துசெய்துவிட, காலியான இடத்தை நிரப்ப உன்னிகிருஷ்ணனை அணுகியிருக்கிறார்கள். ‘தேதி இல்லை...' எனச் சொல்லி பின்வாங்கிவிட்டாராம் அவர். கேன்டீனில் காபி குடித்துக்கொண்டிருந்த போது காதில் விழுந்த தகவல் இது!

வயலினில் மாயாமாளவகௌள ராகம் வாசிப்பது கேட்க சுகம். குறிப்பாக, அந்த ராகத்தில் ஸ்வரங்கள் வாசிக்கக் கேட்பது சுகமோ சுகம். தியாக பிரம்ம கான சபாவில் இதனை அனுபவிக்கச் செய்தார் சாருமதி ரகுராமன். அன்று மாலை மயங்கும் நேரம், உன்னிகிருஷ்ணனுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்த சாருமதியின் Tonal quality எப்போதுமே அசத்தல். கே.வி.பிரசாத் மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஷ்ணன் கடம்.

தொடர் கச்சேரிகள், பயணங்கள் காரணமாக பாடகர்களுக்குத் தொண்டை மக்கர்செய்வது இயல்பு. ஆனால், மேடை அனுபவம் துணை நின்றால், தொண்டைக்கட்டலையும் மீறி, சுருதி குறைத்துப் பாடி சமாளித்துவிட முடியும். உன்னிகிருஷ்ணன் சமாளித்தார். அதுவும், பூர்விகல்யாணியில் ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்' என அவர் கேட்டுக்கொண்டது, வில்லங்கம் செய்த இந்தத் தொண்டையைத்தானோ!
கௌரி மனோகரிக்கும் கர்ணரஞ்சனிக்கும் `ஹலோ’ சொல்லிவிட்டு, தோடியை விரிவாக அலசி ஆராய்ந்தார் உன்னிகிருஷ்ணன். மேல் ஸ்தாயிக்கு முயற்சித்து, தடுக்கிவிழாமல் சங்கதிகளை ஒரு மாதிரி நடுவாந்திரமாகப் பாடிக் கவர்ந்தார். பாபநாசம் சிவனின் பிரபலமான ‘கார்த்திகேய காங்கேய...' பாடலை எடுத்துக்கொண்டு, ‘குறுநகை தவழ் ஆறுமுகா... விரைவு கொள் மயூரபரி...' வரிகளில் உச்சரிப்புக் கெடாமல் உன்னிகிருஷ்ணன் செய்த நிரவல் நிறைவு.

சரிகமபதநி டைரி 2015

நிற்க, வரப்போகும் சீஸன் முதல், இவர் ஐந்தாறு கச்சேரிகளுக்கு மேல் ஒப்புக்கொள்ளப்போவது இல்லையாம். ரிலாக்ஸ்டாக மார்கழியைக் கழிக்கப்போகிறாராம். குரலுக்குக் குறை ஒன்றும் ஏற்படாது தடுத்திட இதுவே சிறந்த முடிவு.

`கொக்குக்கு ஒன்றே மதி’ என்பதுபோல், மியூஸிக் அகாடமி மேடையில் பாடும்போது மட்டும் கே.காயத்ரிக்குக் கரடுமுரடான பல்லவி பாடி, தங்கப்பதக்கம் ஜெயிப்பது ஒன்றே குறி! போன வருடத்துக்கு முந்தைய வருடம் இவர் பாடிய பல்லவிக்கு கோல்டு மெடல் கிடைத்தது. மறுபடியும் இந்த வருடம் ஒன்று.

அகாடமி கச்சேரியில் கல்யாணி வர்ணம் பாடி அதே ராகத்தை பல்லவிக்கும் காயத்ரி எடுத்துக் கொண்டது அந்தக் கால மரபு. இயல்பாகவே இனிமையான குரல்வளம் கொண்ட இவர், கல்யாணி ஆலாபனையை ஸ்வீட்டாகப் பாடிவிட்டு, பாடப்போகும் பல்லவி பற்றி கொஞ்சம் பேசினார். `ஆங்கிலத்தில் அது, சரபந்தனம் தாளத்தில் அமையப்பெற்றது’ என்றார். `படைத்தது சியாமா சாஸ்திரி’ என்றார். `79 அட்சரங்கள் கொண்டது’ என்றும், `60 அங்கங்கள் கொண்டது’ என்றும் வகுப்பெடுத்துவிட்டு தாளம் போட்டு பாடிக்காட்டினார். மைனாரிட்டிக்கு மட்டுமே புரிந்திருக்கக்கூடிய இதை எடை போட்ட நீதிபதிகள், எடைக்கு எடை மாதிரி தங்கம் (பதக்கம்) கொடுத்துவிட்டார்கள்!

முக்கியமான இந்தப் பல்லவி, கணக்குவழக்குத் தப்பாமல் ஒழுங்காக அமைய வேண்டும் என காயத்ரிக்கு இருந்த பதற்றம், முன்னால் அவர் பாடிய பேகடா, மத்யமாவதி ராகப் பாடல்களில் நன்றாகவே தெரிந்தது.

வருங்காலத்தில் காயத்ரியை ‘பல்லவி கே.காயத்ரி' என அழைக்கப்போவது திண்ணம்!

வயலின் டூயட் கச்சேரிதான் அது. ஆனால், எடுத்த எடுப்பில் ராகமாலிகையில் ஒரு ஸ்லோகம் பாடிவிட்டு, வயலினைக் கையில் எடுத்தார் மூத்தவர்... வழக்கம்போல் குறும்பு கலந்த புன்னகையுடன் அவரையே நோக்கிக் கொண்டிருந்தார் இளவல்... நாரத கான சபாவில் கணேஷ், குமரேஷ்.

கன்னட ராகத்தில் தீட்சிதரின் ‘ஸ்ரீமாத்ருபூதம்' கீர்த்தனையை சகோதரர்கள் வாசிக்க, திரிசிரகிரி எனும் திருச்சிராப்பள்ளி க்ஷேத்திரத்தின் நாயகரான ஸ்ரீமாத்ருபூதேச்வரரை இதயத்தில் தியானம்செய்ய இயன்றது.

பின்னர் கரகரப்ரியா. கணேஷ் பாட, குமரேஷ் வயலினில் பின்தொடர... தொடர்ந்து வந்தார் பாபநாசம் சிவன். அன்னாரின் ‘ஜானகீ பதே ஜய காருண்ய ஜலதே...' பாடலை அழகு உணர்ந்து, பொருள் உணர்ந்து வாசித்தார்கள் இருவரும். ஸ்வரங்களை ஆரம்பித்தபோது அண்ணன், தம்பிக்கு உற்சாகம் பீறிட்டது. இருபது வயலின்கள் ஒன்றுசேர்ந்து இசைப்பது மாதிரியான சூழலை அது ஏற்படுத்த... கடந்தகால வருத்தங்களும் எதிர்காலக் கவலைகளும் மறந்து நிகழ்காலத்துடன் ஒன்றிவிட முடிந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரிகமபதநி டைரி 2015

குமரேஷ் குஷியானார். ‘`ராகம், தானம், பல்லவிக்கு எந்த ராகத்தில் வேண்டும்?’’ என்று இவர் கேட்க, ‘`ரீதிகௌள, துவஜாவந்தி, மோகனம், சிம்மேந்திரமத்யமம்...’’ என்றெல்லாம் அரங்கில் இருந்து குரல்கள்! கூக்குரலிட்டவர்களை ஆளுக்கொரு ஸ்வரம் சொல்லக் கேட்டார் குமரேஷ். `ச, ரி, க, ம, ப, த, நி, ச’ என சப்த ஸ்வரங் களையும் ஆடியன்ஸில் சிலர் அடுக்கிக்கொண்டே போக, அவற்றை `ச, ரி2, க3, ம2, ப1, த1, நி1, ச...’ என குமரேஷ் துண்டுக் காகிதத்தில் குறித்துக்கொள்ள, அவற்றை பிரதர்ஸ் வாசித்தபோது பிறந்தது காந்தாமணி ராகம்!

‘`ஏன் சார்... இப்படி கரெக்ட்டா ஸ்வரம் சொன்னவங்க, ஏற்கெனவே செட்-அப் செஞ்சு உட்காரவைக்கப்பட்டவங்களா இருக்குமோ?’’ என்று என்னிடம் கேட்டார் பக்கத்து இருக்கைக்காரர்.
யாருக்குத் தெரியும்?!

மூன்றாவதாக ஸ்ரீ ராகத்தைக் கொஞ்சமாக ஆலாபனை செய்துவிட்டு, ‘எந்தரோ மகானுபாவுலந்தரிகி வந்தநமு...' என ஸ்ரீவல்சன் மேனன் (மியூஸிக் அகாடமி) தொடங்கியபோது எந்த ரோவிலும் மகானுபாவுலுகள் நிறைந்திருக்க வில்லை. ம்... அதிகம் அறியப்படாதவர்களை சென்னை அத்தனை எளிதில் அணைத்துக் கொள்வது இல்லை.

முழு வெளிச்சம் கிடைக்கும் வரை ஊர் ஊராகச் சென்று நமக்கு நாமே பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சற்றுத் தொலைவில் இருந்து பார்க்கும்போதுஸ்ரீவல்சன் மேனனுக்கு பாடகர் ஹரிஹரன் சாயல். ஹேர்ஸ்டைல் காரணமாக இருக்கலாம். கவர்ச்சிமிகு ஹஸ்கி குரலில் சுருதி விலகாமல் பாடுகிறார். தெலுங்கு உச்சரிப்புகளில் மலையாளம் கலந்துவிடுவதை உஷாராகத் தவிர்க்கிறார். பக்கவாத்தியக் கலைஞர்களை கைதட்டிப் பாராட்டுகிறார். நேர்மையாகப் பாடுகிறார்.

தியாகராஜருக்கு இணையாக ராமரைப் போற்றிப் புகழ்ந்து தீட்சிதர் பாடியிருக்கும் நாராயணகௌள ராகப் பாடலான ‘ஸ்ரீராமம் ரவிகுலாப்தி ஸோமம்...'; முன்னதாக, ஹரிகாம் போதியில் தியாகராஜரின் ‘தினமணிவம்ச...' என்ற இரண்டு பாடல்களின் வழியே ராமன் புகழ் பாடினார் மேனன்.

மிகவும் நெருக்கமான நண்பனை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும்போது ஏற்படக்கூடிய பூரிப்பு, பூர்விகல்யாணியில் ‘ஞானமுசகராதா'வை மேனன் பாடியபோது ஏற்பட்டது. ‘பரமாத்முடு ஜீவாத்முடு...' வரிகளில் நிரவல்செய்து, ஸ்வரங்கள் பாடி முடித்தபோது நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசிவிட்டு, நண்பனுக்கு கைக்குலுக்கி பிரியா விடைபெற வேண்டியதாயிற்று!

சரிகமபதநி டைரி 2015

தியாக பிரம்ம கான சபாவுக்காக வாணிமகாலில் எஸ்.மஹதி. பக்கா வாத்தியத்துக்கு பி.யு.கணேஷ் பிரசாத் (வயலின்), பதரி சதீஷ்குமார் (மிருதங்கம்), சாய் சுப்ரமணியன் (மோர்சிங்).

மஹதியின் கச்சேரி எப்போதுமே டல்லடிக்காது; விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது; ஆலாபனையின்போது கிரகபேதம் நிச்சயம் இருக்கும். அதிகம் புழக்கத்தில் இல்லாத ஏதேனும் ஒரு மேளகர்த்தா ராகம் இடம்பெறும். அன்று, நாடகப்ரியா. 10-வது மேளம்.

‘பாட வேண்டுமே... இசைப்பாவின் பொருள் உணர்ந்து பாட வேண்டுமே...' என்ற தண்டபாணி தேசிகரின் பாடலை மஹதி அன்று பாடியது, தனக்கே அட்வைஸ் கொடுத்துக்கொள்வது மாதிரியும் இருந்தது.

தைரியமாக கையில் எடுத்து, விரிவாக்கம் செய்யத் தோதான ராகங்களில் ஒன்று சங்கராபரணம். முலாம் பூசப்பட்டாலும் ஒரிஜினல் பளபளப்பு மறையாது. மூன்று ஸ்தாபிகளிலும் ஆபரணத்தை அலங்கரித்தார் மஹதி. ஆலாபனையை முடிக்கும் சமயம் எதையோ மறந்துவிட்டதுபோல் மறுபடியும் மேலேறிச் சென்று, கிரகபேதம் செய்து தோடியை சற்று சீராட்டிவிட்டு கீழ் இறங்கினார். அதே மாதிரி, பல்லவிக்குக் கையாண்ட சுநாதவிநோதினி ஆலாபனையிலும் பேதம் ஆஜர். இந்த முறை சிவரஞ்சனி!

நிறைய சபாக்களில் மெயின் ஸ்லாட்டுக்கு பதவி உயர்வு பெற்றுவிட்ட மஹதிக்கு, 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மியூஸிக் அகாடமி கதவு திறக்கவில்லையாமே!

இடது கையில் ‘பிரம்ஹாம்ஸி' என வடமொழியில் பச்சைக் குத்திக்கொண்டிருக்கும் பாடகர் பரத் சுந்தர், பகல் வேளையில் மியூஸிக் அகாடமியில் பாடினார். வித்வானுக்கு உரிய ‘கெத்'தான சரீரமும் சாரீரமும் கிடைக்கப்பெற்றவர் இவர். வரமாகக் கிடைத்துள்ள குரலை மெருகேற்றியவண்ணம் இருக்கிறார். வரிசையை பைபாஸ்செய்து முன்னேறவும் ஆர்வம் மிக்கவராகத் தெரிகிறார்.

நடந்து முடிந்த சீஸனில் தடுக்கி விழுந்தால் கல்யாணியின் காலடியில்தான் விழவேண்டியதாக இருந்தது. அகாடமியில் கல்யாணியை பரத் ஆரம்பித்ததும், ‘இது நான் கேட்கும் 378-வது கல்யாணி...' என குறுஞ்செய்தி அனுப்பினார், அரங்கின் மறுமூலையில் உட்கார்ந்திருந்த நண்பர்!

கல்யாணியை மெயினாகப் பாடி, பட்டணம் சுப்ரமணிய ஐயரின் ‘நிஜதாஸ...' கீர்த்தனையை பரத் சுந்தர் பாடியது மாறுதலாக இருந்தது.

முன்னால், சாவேரி வர்ணம். தொடர்ந்து ‘குருலேக யெடுவண்டி...', கௌரி மனோகரி ராகத்தில் இவர் பாடிய மறுகணம் நினைவுக்கு வந்தது ‘பாட்டும் நானே... பாவமும் நானே..!'

- நிறைவு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism