சினிமா
Published:Updated:

உயிர் பிழை - 23

உயிர் பிழை - 23
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை - 23

மருத்துவர் கு.சிவராமன்

புது வருடத்தில் மூன்று முக்கியமான புற்றுக்காரணிகளை மேலைநாடுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அவை, மது (Alcohol of all varieties), வெள்ளைச் சர்க்கரை (White sugar), பக்குவப்படுத்தப்பட்ட புலால் (Processed red meat). `கொஞ்சூண்டு குடித்தாலும்கூட, மது புற்றைத் தரும்' எனக் கடைசி கடைசியாக, போன வருடக் கடைசியில் மருத்துவ உலகம் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டது. கடந்த வருட டிசம்பர் மாத இறுதியில், `Committee on Carcinogenicity’ எனும் மனிதன் அன்றாடம் புழங்கும் உணவு, ரசாயனங்களில் எல்லாம் ஆய்வுசெய்துவரும் இங்கிலாந்து நாட்டு மருத்துவ அமைப்பு, தன் நீண்ட ஆய்வுக்குப் பின்னர் இந்தச் செய்தியை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டது. `சிவப்பு ஒயின் நல்லதாமே... தினமும் சின்னதாக `கட்டிங்’ சாப்பிட்டால் இதய நோய் வராதாமே... நோய் எல்லாம் மொடாக் குடியருக்குத்தான்’ என இத்தனை நாள் பேசப் பட்டுவந்த அத்தனை `சரக்கு’ சித்தாந்தங்களுக்கும் தெளிவான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது அந்த அறிக்கை.

ஒரே நேரத்தில் அதிகமாகக் குடிப்பவருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக (வெகுஜன மொழியில்... `லிமிட்டாக’) குடிப்பவருக்கும் ஒரே அளவில்தான் புற்று வரும் வாய்ப்பு என்பதையும், குடியை நிறுத்துவோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு, படிப்படியாகக் குறைவதையும் அந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது. அதேபோல், நிறையப் பேர் நினைப்பது மாதிரி, மது என்பது ஈரல் புற்றை மட்டும் அல்ல, பல புற்றுக்குத் தொடக்கப்புள்ளி என்பதையும் அந்த ஆய்வு முடிவுகள் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டன. ஒரு பொருள் புற்றுக்காரணியாக இருக்க வேண்டும் என்றால், அது Cytotoxic, Genotoxic, Mutagenic and Clastogenic என நான்கு வகை நச்சுத்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நான்கையும் கொண்டிருப்பது `டாஸ்மாக்’ சரக்குகள் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

உயிர் பிழை - 23

`கொஞ்சமாக எப்போதேனும் குடிப்பவருக்கு வாய், தொண்டை, உணவுக்குழல் பகுதியில் புற்றுக்கட்டியும், பெண்களுக்கு மார்பகப் புற்றும், மிதமாகக் குடிப்போருக்கு குரல்வளை, மலக்குடல் - பெருங்குடல் புற்றும், அதிகம் மது அருந்துவோருக்கு ஈரல், கணையப் புற்றும் வரும்’ என அந்த அறிக்கை சொல்லியுள்ளது. மொத்தத்தில் அந்த ஆய்வறிக்கை சொல்வதெல்லாம் `சொந்தச் செலவில் வெச்ச சூனியம் எந்த இடத்தில் செருகப்போகிறது என்பதுதான் வேறுபடுமே ஒழிய, விளைவில் வித்தியாசம் இல்லை’.

 ஒரு முக்கியமான விஷயம், இதைப்போன்ற ஆய்வறிக்கைகளை தமிழ் சினிமா கதை மாதிரியோ அல்லது அந்த சினிமாவைப் பார்க்கும் முன்னர் தியேட்டரில் கட்டாயமாகப் போடப்படும் ஆளும் அரசாங்கத்தின் ஆரவாரக் கும்மி மாதிரியோ பார்த்து நகைத்துவிட்டு, பஸ் ஏறிவிட முடியாது. வீட்டின் `அழைப்பு மணி’ அபாய மணியின் ஓசையாக மாறாமல் இருக்க, அறம்சார் ஆய்வுகள் விடுக்கும் எச்சரிக்கை மணி இது.

கடந்த வருடத்தின் இறுதி, `சரக்குக்கு’ அடுத்தபடியாக எச்சரிக்கை மணியைச் சத்தமாக அடித்தது சர்க்கரையை நோக்கித்தான். `வெள்ளைச் சர்க்கரையைவிட்டு விலகி ஓடி வாருங்கள்’ என உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்க உணவியல் கழகமும் தொடர்ந்து கூச்சலிட்டுச் சொல்கின்றன. `ஒரு நாளைய கலோரி தேவையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாக மட்டுமே நேரடி வெள்ளைச் சர்க்கரை இருக்க வேண்டும்’ என அவர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆசிய இனக் குழுவாக மரபிலேயே சர்க்கரை வியாதி இருக்கும் நமக்கு, இந்த அளவிலும் பாதிதான் இருக்கலாம். வெள்ளைச் சர்க்கரை என்றவுடன் காபிக்குப் போடும் சர்க்கரை மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரியும். `அது என்ன... வெறும் இரண்டு டீஸ்பூன்’ என சால்ஜாப்பு சொல்வோர் அதிகம். `இணைய வாசிப்பு விழுங்கிய புத்தக வாசிப்பு’ மாதிரி உணவில் நடந்த மாற்றம் சட்னியை விழுங்கிய `சாஸ்’ (Sauce) பழக்கம். `இட்லிக்கும் உப்புமாவுக்கும்கூட தக்காளி சாஸ் தொட்டுத்தான் சாப்பிடுவேன்’ என அடம்பிடிக்கும் நவீன குழந்தைகளுக்கோ, `எப்படியோ சாப்பிட்டால் சரி’ என நகரும் நவீன அம்மாவுக்கோ தெரியாது... ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸில் ஒன்றரை டீஸ்பூன் சர்க்கரை ஒளிந்திருப்பது. சந்தையில் விற்கப்படும் 360 மி.லி அளவு பழச்சாறாக இருக்கட்டும் அல்லது பன்னாட்டு `பாழ் சாறு’ பாட்டிலாக இருக்கட்டும், அத்தனையிலும் 15 டீஸ்பூன் சர்க்கரை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. சர்க்கரைக்கும் புற்றுக்குமான நேரடி சம்பந்தம் குறித்து `ஆம் - இல்லை’ என விவாதம் தொடர்ந்துகொண்டிருந்தாலும், அத்தனை வாழ்வியல் நோய்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெள்ளைச் சர்க்கரை சிவப்பு கம்பளம் விரிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

உயிர் பிழை - 23

உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அடுத்த எச்சரிக்கை, புலால் பயன்பாட்டைப் பார்த்துத்தான். இறைச்சிக் கடையிலோ, காசிமேடு மீன்  சந்தையிலோ வாங்கும் புலாலை அளவாக, சரியாகச் சமைத்துச் சாப்பிட்டால் எந்தச் சிக்கலும் தராது நம் மரபு உணவுகள். அதே இறைச்சியைப் `பக்குவப்படுத்தி’ விற்கப்படும்போது பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். `Processed meat’ எனும் இறைச்சியின் உள்ளே இயல்பாக உருவாகும் Polycyclic aromatic hydrocarbons-ல் இருந்து இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்க, அதில் சத்தம் இல்லாமல் சங்கமித்திருக்கும் பல்வேறு உப்பும் சர்க்கரையும், மலக்குடல் புற்றின் வருகையை 18 சதவிகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். இன்றைக்கு பல பிரபல பன்னாட்டுப் புலால் நிறுவனங்கள் முழுவதுமாகப் பயன்படுத்துவது பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியைத்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

புலால் சமைத்தலுக்கும் புற்றுநோய் வருகைக்கும்கூட பல தொடர்புகள் இருப்பதை நவீன அறிவியல் ஆய்ந்து சொல்லியுள்ளது. புலாலை அதிக வெப்பத்தில் வேகவைப்பது மிக முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, எண்ணெயில் பொரித்து எடுப்பது, தீயில் நேரடியாக வாட்டுவது... அதாவது, Grilling, Pan-frying, BAR B Queing மாதிரியான அதிகச் சூட்டில் (300 டிகிரிக்கு மேலாக) சமைக்கும்போது புலாலில் Polycyclic aromatic hydorcarbons மற்றும் Heterocyclic amines ஆகிய புற்றுக்காரணிகள் உருவாகுமாம். இந்த இரண்டு ரசாயனங்களும் புற்றுநோயை நேரடியாக வரவைக்கும் புற்றுக்காரணிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவை. சங்க இலக்கிய சமையல் குறிப்பிலும் சரி, ஆத்தங்குடி ஆச்சியின் சமையல் குறிப்பிலும் சரி... யானைக்கறி சாப்பிட்டபோதுகூட இப்படி வறுத்து, சுட்டு சமைத்ததாக வரலாறு இல்லை. அந்தக் கால ஆவியில் வேகவைத்த ஊன் சோறு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறது.

`யானைக்கறி’ என எழுதியதும், சமீபத்தில் படித்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. இன்று நாம் பயந்து மிரளும் புற்றுநோய்க் கூட்டம் யானையைப் பாதிப்பது ரொம்ப ரொம்பக் குறைவுதானாம். `மரம், செடி, கொடியில் இருந்து எலி, பூனை, நாய் வரை அத்தனைக்கும் புற்றுநோய் உண்டு என்கிறபோது, யானைக்கு மட்டும் எப்படி இந்தக் காப்பு? அதுவும் 6 அடியில் 65 கிலோ எடைக்குள் இருந்து திரியும் நமக்கே இப்படி வகைவகையான புற்றுப் பிரச்னைகள் என்றால், 4 - 5 டன் எடையில் திரியும் யானைக்கு இன்னும் நிறையப் புற்று வர வேண்டுமே! அவர் எப்படி அதிகம் புற்றுநோய் இல்லாமல் காட்டில் திரிகிறார் என யோசித்த அறிவியல் உலகம் ஆராய்ந்ததில் கிடைத்த முடிவுகள், நமக்கு பல நம்பிக்கைகளைக் கொடுத்திருக்கின்றன. கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் பிரச்னையின்போது முதலில் சொல்லும் வார்த்தை `பிள்ளையாரப்பா காப்பாத்து’ என்பதுதான். யானையில் நடத்திய ஆய்வின் முடிவுகளைப் பார்க்கும்போது கோரஸாக இப்போது கூப்பிட்டதில் ஒருவேளை `பிள்ளையார் புறப்பட்டுவிட்டாரா?’ என்றுகூடத் தோன்றுகிறது.

யானையில் அப்படி என்ன விசேஷம்? பிழைபட்ட செல்களைத் திருத்தும் `டிபி 53’ எனும் ஜீன், யானைக்கு 20 வகை இருக்க, மனிதனுக்கு ஒன்றே ஒன்று இருப்பதைக் கண்டறிந்தார்கள். அட... விஷயம் அதோடு முடியவில்லை. `கல்லூரிக் காதலியின் படத்தை, வீட்டுக் கணினியில் பத்திரமாக காப்பி எடுத்து, அதே கம்ப்யூட்டரில் கவனமாக இரண்டு மூன்று இடத்தில் யார் கண்களிலும் பட்டுவிடாமல் Backup files ஆக வைத்திருப்பதுபோல, யானை தன் பிழை தீர்க்கும் `டிபி 53' மரபணுக்களைப் பத்திரமாகப் படியெடுத்து, வேறு RNA-க்களில் பத்திரமாக Backup files ஆக வைத்திருக்குமாம்.

உயிர் பிழை - 23

மரபணுவில் ஏதாவது பிழை வரும்போது அந்தப் பிழையை, தன் பழைய Backup files-ல் உள்ள சரியான தகவல்களைக்கொண்டு சரிசெய்து கொள்ளும் அபார மூளை யானைக்கு உண்டு’ எனப் பட்டவர்த்தனமாக அறிவியல் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கண்டுபிடித்த இந்த ஜீனை எப்படி மனிதனுக்குள் நுழைக்கலாம் என உடனே யோசிக்கும் அறிஞர் கூட்டத்தைப் பார்த்து `மெல் க்ரீச்ஸ்' எனும் புற்று ஆய்வாளர் ‘கொஞ்சம் நிதானமாப் போங்க பாஸ்... ஒருவேளை அந்த யானை தண்ணியைப் போட்டு, தம் கட்டி கிரில் சிக்கன் சாப்பிட்டால் அதுக்கு புற்று வராமல் அந்த Backup files காப்பாற்றுமானு தெரியாது. யானை வேற... நாம வேற' என எச்சரிக்கிறார். கொஞ்சம் விசாலமாக, கவனமாகச் சிந்தித்தால், சூழலைச் சிதைத்து வாழ்வதை நிறுத்தினாலே, யானைக்குள் ஒளிந்திருக்கும் காப்புபோல, மனிதனுக்குள் ஊற்றெடுக்கும் பல புதிய காப்பு பற்றிய உண்மை நிச்சயம் தன்னால் புலப்படும் என்றே தோன்றுகிறது. `ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்’ எனும் புளுகுமூட்டையை இனியாவது நிறுத்திவிட்டு, அந்த அப்பாவி விலங்கின் வாழ்வாதார நகர்வுக்குக் காரணமான, `சுயநல மனிதர்கள் காட்டுக்குள் புகுந்து அட்டகாசம்’ என்ற உண்மையை உரக்கச் சொல்வோம்.

உயிர் பிழை - 23

புற்றுநோய்க் காரணி பட்டியல் ரொம்ப நீளமானது. தினமும் நீண்டுகொண்டேயும் போகிறது. நவீன வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நச்சுக்கள் நம்மை ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, இப்போதைக்கு இருக்கும் ஒரே காப்பு `சூழலுக்கு இசைவான வாழ்வியல்; மரபுக்குப் பழக்கமான உணவு; பண்பாடு பழக்கிவிட்ட அறம்சார் மனம்.’ பல பில்லியன் டாலர் செலவில் ஆய்ந்து சொல்லும் இந்த விஷயங்களில் பலவற்றை நம் ஊர் குறளும் நாலடியாரும் நிறையவே சொல்லியுள்ளன. என்ன... சம்மணமிட்டு உட்காரவைத்து, நறுக்கென தலையில் குட்டி சொல்லித்தர தமிழ் ஆசிரியர், தமிழ்ப் பெற்றோர், தமிழ்க் கோபம், தமிழர் அறம் ஆகியோரைத்தான் தேடவேண்டியுள்ளது!

(உயிர்ப்போம்...)