Published:Updated:

இந்திய வானம் - 23

India Vaanam - S.Ramakrishnan
பிரீமியம் ஸ்டோரி
News
India Vaanam - S.Ramakrishnan ( India Vaanam - S.Ramakrishnan )

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியம்: ரமேஷ் ஆச்சார்யா

என்ன செய்யப்போகிறோம்?

ய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஆதங்கத்துடன் ஒரு ஃபைலைத் தந்து, ``இதைப் பாருங்க’’ என்றார். அதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்தித்தாள்களில் வெளியாகி யிருந்த ஆசிரியர்கள் மீதான பல்வேறு குற்றச் செய்திகள் தொகுக்கப்பட்டிருந்தன.

அவற்றில் சிலவற்றை நானும் நாளிதழ்களில் படித்திருக்கிறேன். ஆனால், ஒருசேர அவற்றை வாசிக்கும்போது திடுக்கிட்டுப்போனேன்.

அவர் வருத்தமான குரலில் சொன்னார்... ``வாத்தியார்கள் இப்படி இருந்தா, நாடு எப்படி உருப்படும்? கல்வி ஏன் இவ்வளவு சீரழிஞ்சு  போயிருக்கு? ஒழுக்கமா இருக்கவேண்டிய வாத்தியார் தப்பு பண்ணினா, பசங்க எப்படி நல்ல முறையில் வளருவாங்க? இதை எல்லாம் படிக்கப் படிக்க ரத்தக்கண்ணீர் வருது. கல்வி நிலையங்கள், ஆசிரியர்கள் சார்ந்த குற்றங்கள், புகார்களை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு அமைக்கணும்; இவங்களைக் கடுமையாத் தண்டிக்கணும்.’’

``எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல. யாரோ சிலர் தவறான செயல்களில் ஈடுபடு கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர் களையும் குற்றம் சொல்ல முடியாதே’’ என்றேன்.
``நடக்கிற தவறுகளைக் கண்டித்து ஆசிரியர்கள் என்ன செய்திருக்காங்க? `நமக்கு எதுக்கு வம்பு?’னு கண்டுக்கிடாம ஒதுங்கிப் போயிடுறாங்க. பேப்பர்ல வந்திருக்கிற விஷயம் வெறும் ஒரு சதவிகிதம். வெளிவராமல் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு. மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறா நடந்துக்கிறது இப்போ பெருகிப்போச்சு. இதுல பெண் ஆசிரியர்களும் பாதிக்கப்படுறாங்க. எத்தனையோ பள்ளிகள்ல பெண் ஆசிரியர்களுக்கு, கூட வேலைபார்க்கிற ஆண் ஆசிரியர்கள் பாலியல் தொல்லை தர்றாங்க. அது எல்லாம் போலீஸ் கேஸ் ஆகிறது இல்லை’’ என்றார்.

அவர் சொன்னது நிஜம். சில ஆசிரியர்கள் இதைப் பற்றி என்னிடம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். இதுபோலவே சில தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்களைத் தரக் குறைவாகப் பேசுவதும், பெண் ஆசிரியர்களுக்குப் பாலியல் தொல்லை தருவதும் நடந்துவருகின்றன. அவற்றை எல்லாம் யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை என்பதும் உண்மையே.

இந்திய வானம் - 23

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மனநெகிழ்ச்சியுடன் சொன்னார்...

``என் முதல் போஸ்ட்டிங்... அரூர் பக்கத்துல சின்னக் கிராமம். அங்கே குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காது. கிராமத்துல யாரு வாடகைக்கு வீடு விடப்போறாங்க? நான் ஸ்கூல் வாத்தியாரா வந்திருக்கேன்னு கிராமத்துல இருந்த ஒருத்தர் தன் வீட்டைக் காலிபண்ணி எனக்குக் கொடுத்துட்டு, அவர் தன் மகள் வீட்ல போய் தங்கிக்கிட்டார்.

வாத்தியார்கள் மேல அந்த அளவுக்கு மரியாதை மக்களுக்கு இருந்தது. அந்தக் கிராமத்துல ஹோட்டல் கிடையாது. வொய்ஃப் ஊர்ல இல்லாத நாட்கள்ல ஸ்கூல் பசங்க வீட்ல இருந்து சாப்பாடு செஞ்சு தருவாங்க.

லெட்டர் எழுதித்தர்றது, கல்யாணம் பேசி முடிக்கிறது, புருஷன் பொண்டாட்டி சண்டை... எல்லாத்துக்கும் என்கிட்ட வருவாங்க. ஒருநாள் ஓர் ஆள் குடிச்சுட்டு, ஸ்கூல் வராண்டாவில் படுத்துக்கிடந்தான். அவனைத் திட்டி துரத்திவிட்டேன். இதைப் பற்றி கேள்விப்பட்ட ஊர்க்காரங்க ஒண்ணுசேர்ந்து வந்து மன்னிப்புக் கேட்டதோடு, அந்த ஆளைத் திட்டி என்கிட்ட மன்னிப்புக் கேட்கவெச்சாங்க. அதோட சரி, விவசாயிகள் யாராவது குடிச்சிருந்தாக்கூட என் எதிர்ல வர மாட்டாங்க. ஒரு கெட்டவார்த்தை பேச மாட்டாங்க. இப்போ வாத்தியார் குடிச்சுட்டு ஸ்கூல்ல வந்து படிக்கிற பொம்பளைப் பிள்ளைங்ககிட்ட ஆபாசமா பேசினா, எங்கே போய் சொல்றது? இதுதான் பெரிய கவலையா இருக்கு. நான் பொய் சொல்லலை. இந்த நியூஸ் எல்லாம் நீங்களே படிச்சுப் பாருங்க’’ என்றார்.

செய்தித்தாள்களில் வந்துள்ள இந்தச் செய்திகள், தமிழகக் கல்வியின் சீரழிந்த நிலைக்கு சாட்சியம் கூறுகின்றன.

பழநி அருகே ஒரு பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன், மாணவிகள் சிலரை அந்த அறைக்கு வரவழைத்து கை, கால்களைப் பிடித்துவிடச் சொல்வது, உடலில் மசாஜ்செய்யச் சொல்வது, ஆபாசமாகப் பேசுவது என நடந்துள்ளார். அதைத் தாங்க முடியாத மாணவிகள் பெற்றோர்களிடம் முறையிட, பொதுமக்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். தற்போது அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில், பள்ளி மாணவியிடம் தேர்வு அறையில் சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் தனியார் பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர், 6-ம் வகுப்பு மாணவியிடம் கழிவறையில் சில்மிஷம் செய்தார் என்பதற்காக காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை, அரும்பாக்கத்தில் பிரபலமான தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர், 3-ம் வகுப்பு மாணவியிடம் யோகா சொல்லித் தருவதாகக் கூறி வன்புணர்ச்சி செய்ய முயன்றிருக்கிறார். `இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்’ என அந்த மாணவியை மிரட்டியதால், அவளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீது புகார் அளிக்கப்படவே ஆசிரியரை காவல் துறை கைதுசெய்துள்ளது.

இதுபோலவே சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஒரு பள்ளியில், அதன் தலைமை ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளை தனது அறைக்கு அழைத்து வந்து, லேப்டாப்பில் ஆபாசப் படம் காட்டியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் கூற, திரண்டு வந்து தலைமை ஆசிரியரை சரமாரியாகத் தாக்கி காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

பாளையங்கோட்டை அருகே ஒரு தனியார் பள்ளியில், தலைமை ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து, போதையில் மாணவிகளிடம் டிரெஸ் அணியாமல் நடனமாடும்படி அசிங்கமாக நடந்திருக்கிறார். அவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து, உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

கடலூர் மாவட்டம்... ஒரு தனியார் பள்ளி முதல்வர் 10–ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அவரை காவல் துறை கைதுசெய்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 10–ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாகக் கூறி பாலியல் தொல்லை தந்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ள முயன்றதால், அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை கணித ஆசிரியர் வகுப்பில் மாணவிகளிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசி வருவதை அறிந்த பெற்றோர்கள், அவரை அடித்து, உதைத்து, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

இந்தச் செய்திகளைப் படித்த பிறகும் நாம் ஏன் சொரணையற்றுப்போய் இருக்கிறோம்?

இந்தச் செய்திகள், சில உண்மைகளை நமக்கு முன்வைக்கின்றன. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்களில் பலரும் 40, 50 வயதைச் சேர்ந்தவர்கள். இந்தக் குற்றங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலேயே நடந்திருக்கின்றன. இதை அறிந்து பொதுமக்கள் அடித்து, உதைத்தது அந்தந்த ஊர்களிலும் நடந்திருக்கின்றன.

பாலியல் குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்களில் எத்தனை பேர் தண்டிக்கப் பட்டார்கள், என்ன தண்டனை கொடுக்கப் பட்டது, அவர்களின் குடும்பத்தினர் இந்தச் செயலை எப்படி எதிர்கொண்டார்கள், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன, ஆசிரியரைத் தற்காலிகப் பணி நீக்கம்செய்வது மட்டும்தான் தண்டனையா?
கல்வியில் புரையோடிப்போன இந்த வக்கிரங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்குமா?

யோசிக்க யோசிக்க ரத்தம் கொதித்துப்போனது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சொன்னார்...

``ஆசிரியர் இப்படி நடந்துகொள்வது ஒரு பக்கம் என்றால், இதன் மறுபக்கத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் குடித்துவிட்டு வந்த மாணவனைக் கண்டித்த ஆசிரியரை, மாணவன் வகுப்பறையிலே தாக்கியிருக்கிறான். அதைக் கண்டித்த தலைமை ஆசிரியரை, மாணவனின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியிருக்கிறார்கள்.

கோவையில் ஒரு பள்ளியில் மாணவி வகுப்பறையில் செல்போன் வைத்திருக்க, அதைப் பறித்த ஆசிரியரை, மாணவியின் அண்ணன் அடித்து, கையை உடைத்திருக்கிறான். இன்னும் சில இடங்களில் ஆசிரியர்களின் சாதியைச் சொல்லி மாணவர்கள் திட்டுவதும், பெண் ஆசிரியர்களை மிக மோசமாக மாணவர்கள் நடத்துவதும் தொடர்ந்துவருகின்றன.

குடியும் செல்போன்களும் கல்விச்சூழலில் பெரிய பிரச்னைகளை உண்டாக்கியிருக்கின்றன. இதன் மோசமான விளைவுகளே குற்றத்துக்கான முக்கியக் காரணங்கள். ஆசிரியர் - மாணவர் என இரண்டு பக்கங்களிலும் கோளாறுகள் அதிகரித்துவருகின்றன. இதை கல்வித் துறை கண்டுகொள்வதே இல்லை. 100 சதவிகிதத் தேர்ச்சி மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

ஓய்வுபெற்ற அந்தத் தலைமை ஆசிரியரின் வருத்தம், ஒரு தனிநபரின் கவலை அல்ல; கல்வியில் ஏற்பட்டுள்ள சீரழிவுகளைக் கண்ட பலரது கவலையும் அதுவே. இதைப் பற்றி ஆசிரியர்களாகப் பணியாற்றும் எனது வாசகர்கள், நண்பர்களிடம் விவாதித்தேன்.

அவர்கள் சொன்னது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திராவுக்கு கூலிகளாகப் போய் செத்த தமிழர்களைத்தான் உலகம் அறியும். அவர்களைவிடவும் அடிமைகளாக ஆந்திராவிலும் பீகாரிலும் அசாமிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகிறார்கள்.

ஆந்திராவில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியராக வேலைசெய்வது என்பது கொத்தடிமை பணிபோல. சர்ட்டிஃபிகேட்களை பிடுங்கிவைத்துக்கொண்டு `மூன்று வருஷம் கட்டாயம் வேலைசெய்ய வேண்டும்’ என எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இதை மீறும் ஆசிரியர்கள் மீது பொய்யாகப் புகார் கொடுத்து, போலீஸில் மாட்டிவிடுகிறார்கள். ஒரு வருஷம் சம்பளம் இல்லாமல் வேலைசெய்தால், பள்ளியைவிட்டு விலகிப்போக அனுமதிப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிச்சுமை அதிகம், போதுமான வருமானம் இல்லை என வேறு மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஆசிரியர்கள், அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு `ஆளைவிட்டால் போதும்’ என இப்படி ஓடிவருகிறார்கள்.

இதைவிட அதிர்ச்சி, இன்னோர் ஆசிரியர் சொன்ன தகவல்...

``எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவியை, வகுப்பு ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்து மயக்கி கூட்டிக்கொண்டு ஓடிவிட்டார். இவ்வளவுக்கும் அந்த ஆசிரியரின் மகளும் அதே எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தகராறு செய்தார்கள்.

போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு போலீஸ் டீம் ஆசிரியரைக் கைதுசெய்தார்கள். அப்போது அந்த மாணவி தான் ஆசிரியரை உயிருக்கு உயிராக லவ் பண்ணுவதாகச் சொல்லி அழுதிருக்கிறாள். அவள் இப்போது கர்ப்பிணி. இதுதான் லவ்வா... எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு என்ன தெரியும்? இப்படி நடந்துகொள்ள ஒரு வாத்தியாருக்கு எப்படி மனது வந்தது?’’
கல்விச் சீர்கேடுகளைப் பற்றி கேட்கக் கேட்க மனம் கொந்தளிக்கிறது.

மிகுந்த அர்ப்பணிப்புடன் தன் வாழ்நாளை கல்விக்காகவே செலவிட்ட எத்தனையோ ஆசிரியர்களை நான் அறிவேன்.   இன்றும் அதுபோன்ற நல்லாசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், புல்லுருவிகள் போன்ற மோசமான ஆசிரியர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருவது வேதனை அளிக்கிறது.

டேராடூனில் உள்ள `ஷார்ப் பார்வையற்றோர் கல்வி வளாக’த்துக்கு ஒருமுறை சென்றிருந்தேன். இந்தியாவில் பார்வையற்றவர்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளி அதுவே. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆனி ஷார்ப், அந்தப் பள்ளியை 1887-ம் ஆண்டு அமிர்தசரஸில் தொடங்கியிருக்கிறார். அங்கு இருந்து இமயத்தின் அடிவாரத்தில் உள்ள டேராடூனுக்கு 1903-ம் ஆண்டு பள்ளி இடம் மாற்றப்பட்டிருக்கிறது. 100 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பள்ளி டேராடூனில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பார்வையற்றவர்கள் அங்கே வந்து படிக்கிறார்கள். பிரெய்ல் முறையில் கற்றுத்தருகிறார்கள். தூய்மையான வளாகம், பல்வேறு கைத்தொழில்கள் கற்றுத்தரப் படுகின்றன; தேவையான மருத்துவ உதவிகளும் தரப்படுகின்றன. உற்சாகமான மாணவர்களையும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் அர்ப் பணிப்பையும் கண்டபோது நெகிழ்ந்துபோனேன்.

ஒரு பக்கம் இப்படி கைமாறு இல்லாத உதவியாக பலரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது கல்வி. இன்னொரு பக்கம், கல்விச்சூழல் குற்றச் சம்பவங்களால் விஷமாகிக்கொண்டு வருகிறது.

குடியும் ஆபாசப் படங்களும் பாலியல் தொல்லைகளும் தற்கொலையும் கல்விச் சூழலில் வளர்ந்துவருவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விஷயம்.

கல்விச் சூழலில் மாற்றம் கொண்டுவராவிட்டால் எதிர்காலம் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதே உண்மை!

- சிறகடிக்கலாம்...