Published:Updated:

அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்?

அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்?
அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்?

ழைத்துக் களைத்துப் போகிறவர்கள் ஒரு ரகம். அண்மைக் காலமாக, `சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள்’ என்று ஒரு ரகம் உருவாகியிருக்கிறது. நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காகத்தான். ஆனால், சோர்வடையும் அளவுக்கு வரைமுறையின்றி அதிகளவில் சாப்பிடுகிறார்கள் சிலர். அளவுக்கு மீறி சாப்பிடுபவர்களுக்கு, ஆரோக்கியமற்ற உடல் பருமனோடு சேர்த்து பல்வேறு நோய்கள் அன்பளிப்பாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகரித்துவரும் ‘பார்ட்டி கலாசாரத்தால்’ ஒரே வேளையில் அதிக உணவுகளையும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் பெருநகரங்களில் உள்ள பலர் உட்கொள்வதாக ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. அதி உணவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்... பார்க்கலாமா?  

நோய் நிலைகளில் அதி உணவு:

சில மரபு சார்ந்த நோய்கள், தலையில் அடிபடுதல், சர்க்கரைநோய், ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid), மனஅழுத்தம், மனச்சோர்வு, பிங் ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Binge eating disorder), சில வகையான மருந்துகள் போன்றவற்றின் காரணமாக அதிகப்பசி ஏற்படலாம். சில காரணங்களால் அதிகப்பசி (Polyphagia) எனும் குறைபாடு ஏற்படுவது இயல்பு. சில அடிப்படை சிகிச்சைகளை மேற்கொண்டாலே இவற்றைச் சரிசெய்துவிடலாம். ஆனால், ருசிக்கு அடிமையாகி, உணவின் நுணுக்கங்களைப் பற்றித் தெரியாமல், எந்த நோய் நிலையும் இல்லாமல், அதிகளவில் உணவை உட்கொள்வதுதான் நவீன சமூகத்தின் நோயாக உருப்பெற்றிருக்கிறது. ருசிக்கு கட்டுப்பட்டதால்தான் இப்போது பல இன்னல்களுக்கும் ஆளாகிறோம். 

`மீதூண் விரும்பேல்!’

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், உணவியல் நுணுக்கங்களை அறிந்திருந்த நமது முன்னோர்களுக்கே, அதிக உணவின் தீமைகளை எடுத்துரைக்கும்விதமாக `மீதூண் விரும்பேல்’ என்று பிரசாரம் செய்தார் ஒளவைப் பாட்டி. நம் உணவியல் நுணுக்கங்களையெல்லாம் மறந்துவிட்ட நவீன தலைமுறைக்கு என்ன சொல்லி பிரசாரம் செய்வது? ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் நெறிமொழி, வாழ்வியலைவிட, உணவியலுக்கு மிகவும் பொருத்தமானது. அளவுக்கு மீறிய உணவுகள்தான் நோய்களின் ரூபத்தில் நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கின்றன. 

’உண்டி சுருங்குதற் மானிடர்க்கு அழகு!’

’உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்பது தவறு... எல்லோருக்குமே அது அழகு. `உண்டி சுருங்குதல் பண்டிக்கு (வயிற்றுக்கு) அழகு’ என்றொரு கருத்தும் இருக்கிறது. எது எப்படியோ உணவை அளவோடு உட்கொண்டால், இடுப்பைச் சுற்றித் தேவையற்ற சதை வளர்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சமீப காலமாக உயரத்துக்கேற்ற எடையைப் பொறுத்தே (Body Mass Index), உடல் பருமனின் தீவிரம் நிர்ணயிக்கப்படுகிறது. உணவின் அளவை முறைப்படுத்திக்கொண்டால் உயரத்துக்கேற்ற எடையோடு நடைபோடலாம். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி... அளவான உணவைச் சாப்பிடுவது முறையானது.

அனைத்து உறுப்புகளுக்கும் ஓவர் டைம்!

சாப்பிட்ட அதிக உணவிலிருந்து கிடைக்கும் குளூக்கோஸை ஈடுசெய்ய, கணையத்திலிருந்து (Pancreas) வழக்கத்தைவிட அதிகளவில் இன்சுலின் சுரக்கும். அதிகமாகச் சாப்பிடுவதால், செரிமானத்துக்காக இயங்கும் உறுப்புகளும் தங்கள் சக்திக்கு மீறி உழைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகின்றன. எப்போதாவது அதிகளவில் சாப்பிட்டால், வயிறு உப்புசம், உணவு எதுக்களித்தல், மந்தம் போன்ற அறிகுறிகள் தோன்றும். தொடர்ந்து பல நாள்கள் அதிஉணவில் திளைத்தால், நோய்களின் ராஜாங்கம் தொடங்கிவிடும். உடல் பருமனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பித்தப்பைக் கற்கள், இதயநோய்கள், மனச்சோர்வு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிற்றறை விரிவடையும் தன்மை உடையது (Rugae அமைப்பின் காரணமாக). அதற்காக அதன் விரிவடையும் திறனைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவதென்பது உடல்நலத்துக்கு உகந்ததல்ல. 

பள்ளித் தொப்பை:

பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம்கூட சாரமே இல்லாத துரித உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக பள்ளிப் பருவத்திலேயே தொப்பைகளைச் சுமந்துகொண்டு, அதன் தொடர்ச்சியாக தொற்றாத நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள். ஓடி, ஆடி விளையாடவேண்டிய பள்ளிப்பருவத்தில் விளையாடாமல், தொலைக்காட்சியின் முன்பும், கம்ப்யூட்டரின் முன்பும் அமர்ந்தநிலையிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதிக கலோரிகள் கரைவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப்போல கொழு கொழுவென்று இருந்தால்தான் ஆரோக்கியம் என்று எண்ணி, தேவையற்ற உணவுப் பொருள்களை அளவுக்கு மீறிக் கொடுப்பதும் இள வயதில் உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம்.

காத்திருந்த நாள்கள்:

வருடத்துக்கு சில நாள்களில் மட்டும் நடைபெற்ற திருவிழாக்களில் பரிமாறப்படும் நெல்லரிசி உணவுக்காகவோ, அசைவ உணவுக்காகவோ, இடுப்பில் கட்டிய வேட்டியை இளக்கிக்கொண்டு ஆசைதீர அதிகமாகச் சாப்பிட்டு, பின்னர் அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, அதி உணவை ஈட்டுகட்டினார்கள் முந்தைய தலைமுறையினர். ஆனால் சுவைக்கு அடிமையாகி, உணவை அதிகளவில் உட்செலுத்துவதற்காக, உணவு உண்ணும் ஒவ்வொரு பொழுதிலும் இடுப்புப் பட்டையை (Belt) இளக்கிவிட்டு, பின் அசையாமல் கம்ப்யூட்டரின் முன்னே அடைக்கலம் அடையும் இன்றைய தலைமுறையில்தான் அதி உணவின் பாதிப்புகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. 

ஆசையைத் தூண்டும் உணவகங்கள்:

உணவகங்களுக்குச் சென்று அளவுச் சாப்பாட்டை தவிர்த்துவிட்டு (லிமிட்டெட் மீல்ஸ்), அன்லிமிடெட் மீல்ஸ்சை முழுக்கட்டு கட்டிவிட்டு, மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம். லிமிடெட் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டால், ஏதோ கெளரவக் குறைச்சலாகப் பார்க்கும் நிலை இன்று. அதிலும் சில உணவகங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க, `அனைத்து வகையான அசைவ உணவுகளையும் சாப்பிடலாம், விலையோ மிகக் குறைவு’ என்ற ரீதியில் நம்மை சுவைக்கு அடிமையாக்க விளம்பரங்களின் மூலம் சுண்டி இழுக்கின்றன. சுவைக்கு அடிமையாகி, அடிக்கடி ஒரே வேளையில் அதிகளவில் சாப்பிடும்போது, உணவகங்களில் வியாபாரமும் அதிகரிக்கும், சாப்பிட்ட நமக்கு தொந்தரவுகளும் பெருகும். இந்தியப் பெருநகரங்களில், உணவுக்கு இடையில் சாப்பிடப்படும் நொறுக்குத்தீனிகள், ஒரு வேளை முழு உணவு கொடுக்கும் கலோரிகளைவிட, அதிக அளவில் கலோரிகள் கொடுக்கின்றனவாம்! அப்புறம் என்ன... பூதாகரமாகக் காட்சியளிக்கும் உடலைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூழல்தான். 

குறள் சொல்லும் உண்மை:

`தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்…’ என்று அதிகமாகச் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் உண்டாகுமென்று குறள் உணர்த்தியது பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன்னர். `இரைப்பையில் உருவாகும் பசித்தீயை உணர்ந்து, உணவின் அளவை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ’பசித்தீ’ என்று அவர் குறிப்பிடுவது, செரிமானச் சுரப்பிகளின் அளவீடு மற்றும் மூளையில் உண்டாகும் பசியுணர்வின் செயல்பாடு! 

செரிவூக்கி மருந்துகள்:

தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்… ’அதிக உணவுகளை ஒரே நேரத்தில் நீங்கள் சாப்பிடும்போது, எங்களது ’செரிவூக்கி சுரப்பு’ (Synthetic Digestive enzymes) மாத்திரையைப் பயன்படுத்துங்கள்… அதி உணவின் காரணமாக செரிமானத் தொந்தரவுகள் ஏற்படாது.’ என்ற வகையில் ஒளிபரப்பாகிறது. தவற்றைத் திருத்திக்கொள்ளச் சொல்லாமல், `தவறு செய்யுங்கள், அதற்கான வழிவகைகளையும் நாங்களே சொல்கிறோம்’ என்ற வகையில் இருப்பது எவ்வளவு கேவலம். செரிமானப் பகுதியில் இயற்கையாகச் சுரந்துகொண்டிருக்கும் செரிவூக்கிச் சுரப்புகளுக்குப் பதிலாக எதற்காகச் செயற்கை செரிவூக்கிகள்? சிந்திப்போம்!

உணவு முரண்:

ஒரு மூலையில் உணவில்லாமல் அவதிப்படும் வறுமைநிலையில் இருப்பவர்களுக்கு, சத்துகளும் ஊட்டமும் கிடைக்காமல், உடல் நலிந்து ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மறு மூலையில் அளவுக்கு மீறி அதிக உணவை உட்கொள்பவர்களுக்கு, ஆரோக்கியம் சீர்கெட்டு பல்வேறு நவீன நோய்கள் உண்டாகின்றன. எவ்வளவு உணவு முரண்? 

சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிகமாகச் சாப்பிடுவது தவறு. பேசிக்கொண்டும் தொலைக்காட்சியில் தீவிரமாக மூழ்கியபடியும் சாப்பிடுபவர்களுக்கு, உணவின் அளவைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. பசித்தீ மந்தப்பட்டு, செரியாமை தலை தூக்கும். தொடர் சங்கிலியாக நோய்களின் தாக்கத்தால் உடல் பலவீனமாகும். உடல் இயற்கையாக வெளிப்படுத்தும் பசியுணர்வின் தூண்டுதலுக்கு ஏற்ப உணவின் அளவை அமைத்துக்கொள்வதுதான் சிறப்பு. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமானது ஒளவையின் அசரீரி… மீதூண் விரும்பேல்!