Published:Updated:

காற்றில் கலந்த கந்தகக் குரல்!

காற்றில் கலந்த கந்தகக் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கலந்த கந்தகக் குரல்!

ரீ.சிவக்குமார்

காற்றில் கலந்த கந்தகக் குரல்!

ரீ.சிவக்குமார்

Published:Updated:
காற்றில் கலந்த கந்தகக் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கலந்த கந்தகக் குரல்!

‘சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயில் வேகுதே! - உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெயை ஊத்துதே...

எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க எரியும்போது...’ என இழுத்து, இடைவெளிவிட்டு `நாங்க எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’ என கே.ஏ.குணசேகரனின் குரல் உரத்து ஒலிக்கும்போது, ஆதிக்கச்சாதி உணர்வுகொண்டவர்களின் நெஞ்சில் ஓங்கி உதைவிட்டதைப்போல் இருக்கும். காற்றைக் கிழித்து, கலகத்தை விதைத்த அந்தக் கந்தகக் குரல் இப்போது அதே காற்றில் கலந்துவிட்டது.

‘ஆக்காட்டி ஆக்காட்டி’ என தாய்ப்பறவையின் சோகத்தைத் தழுதழுத்த குரலில் சொன்ன நாட்டுப்புறப் பாடல்கள், ‘அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க’ என இசையின் பிரமாண்டத்தைப் பொதித்த பாடல்கள்... கிராமிய இசையின் நுட்பங்களைத் தமிழகம் எங்கும் கொண்டுசேர்த்ததோடு, சின்னப்பொண்ணு போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியவர் கே.ஏ.குணசேகரன். நாட்டுப்புற இசை என்றால், ஏதோ கிராமிய வாழ்க்கையின் இனிமையான பக்கங்களைப் பதிவுசெய்வது என்பதோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக அதை மாற்றிய பெருமைக்கு உரியவர்.

 ‘சேரியில் பூத்த மலர்களே... மலர்களே...’, ‘வெள்ளைக்காரங்க ஆண்டபோதும் அரிசனங்க நாம; இப்போ தில்லிக்காரன் ஆளும்போதும் அரிசனங்க நாம...’, ‘ஒருகாலத்திலே பகல்வேளையிலே பொதுவீதியிலே நாங்க நடக்கவே முடியவில்லே’, ‘இந்துமதச் சிறையினிலே அரிசனங்க நாங்க’ என தலித் மக்களின் வலிகளையும், போராட்ட வரலாற்றையும், சாதியத்தின் கொடூரமான முகங்களையும் அழுத்தமாகப் பதிவுசெய்ததுதான் இவரது சாதனை.

காற்றில் கலந்த கந்தகக் குரல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளப்பாடி என்னும் கிராமத்தில், ஆதிக்கச் சாதியினரின் பம்புசெட் தண்ணீரில் குளித்த தலித் குழந்தைகளை, மின்சாரம் பாய்ச்சிக் கொன்றனர் ஆதிக்கச்சாதி வெறியர்கள். அப்போது வெகுண்டெழுந்த மக்கள் கவிஞர் இன்குலாப்,`குளப்பாடி கிணத்துத் தண்ணி பிள்ளையைச் சுட்டது தண்ணியும் தீயாச் சுட்டது! - உங்க ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது?’ எனக் கோபக் கேள்விகளைத் தொடுத்து எழுதிய பாடல்தான் ‘மனுசங்கடா... நாங்க மனுசங்கடா’. இந்தப் பாடலை தமிழ்நாடு முழுக்கக் கொண்டுசேர்த்தார் குணசேகரன்.

``அவர் மிகப் புகழ்பெற்ற பாடகராகத் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே எனக்கு அறிமுகம். தலித் அரசியல் என்னும் அடையாளத்தைப்போலவே அவரது இடதுசாரி அடையாளமும் முக்கியமான ஒன்று" என்று சொல்லும் பேராசிரியர் அ.மார்க்ஸ், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் அவர் தொடர்ந்து பாடினார். 1970-களின் இறுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநாடு ஒன்றில்தான் எனக்கு  அறிமுகம் ஆனார். நான் தஞ்சாவூரில் வசித்தபோது என் வீட்டில் இருந்தபடி நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த ஆய்வுப்பணிகளைச் செய்தார். அவரது முதல் இசைத்தட்டான ‘மனுசங்க’ வந்தபோது முன்னுரையாக அந்த ஒலிநாடாவில் பேசியிருப்பேன். என் மகள்கள் அமலா, ஞானபாரதி இருவரும் நன்றாகப் பாடக்கூடியவர்கள். அந்த ‘மனுசங்க’ ஒலிநாடாவில் ஒலித்த பாடல்களில் அவர்களது குரல்களும் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து கே.ஏ.ஜி-யின் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடினார்கள். என் மகள் ஞானபாரதி, குணசேகரனிடமே முனைவர் ஆய்வுக்காகச் சேர்ந்தார். குணசேகரனுக்குப் பெண் பார்க்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவர் திருமணம் நிச்சயமானபோது நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தேன்.

‘அ.மார்க்ஸைத் திருமணத்துக்கு அழைக்கக் கூடாது’ என கட்சித் தோழர்கள் தடை விதித்தபோதும், அதை மீறி என்னை திருமண மேடையில் அமரவைத்தார். தனித்துவமான தலித் இசையை தமிழ்நாட்டின் திசைகள்தோறும் கொண்டுசேர்த்த வகையில் கே.ஏ.குணசேகரனுக்கு அழியாத ஓர் இடம் உண்டு’’ என்கிறார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மாரந்தை என்னும் கிராமத்தில் பிறந்த குணசேகரனின் அடையாளம், வெறுமனே பாடகர் என்பதோடு முடிந்துவிடவில்லை. தலித் இசையைக் கலை வடிவமாக்கியதோடு அதைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யும் முயற்சிகளிலும் இறங்கியவர். ‘சேரிப்புறவியல்’, ‘தலித் அரங்கியல்’ ஆகிய நூல்களையும் எழுதினார்.

`சத்தியசோதனை’, `பலியாடுகள்’, `பவளக்கொடி’, `தொடு’, `விருட்சம்’... என 12 நாடகங்களை எழுதி இயக்கியிருப்பதோடு நாடகக் கலைஞராக நடித்தும் இருக்கிறார். `அழகி’, `பாரதி’, `ஒன்பது ரூபாய் நோட்டு’ என திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுவை பல்கலைக்கழகம் என கல்வித் துறையில் உயர் பதவிகளை வகித்தார். 1990-களுக்குப் பிறகு உருவான தலித் அரசியல் எழுச்சியின் வெளிச்சத்தில் உதித்த முக்கியமான நூல் கே.ஏ.குணசேகரனின் சுயசரிதையான ‘வடு’. இடதுசாரிச் சிந்தனைகளையும் அம்பேத்கரிய சிந்தனைகளையும் இணைத்த குணசேகரனின் கலை, இலக்கியப் பதிவுகள் ஒடுக்கப்பட்டோரின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கான உத்வேகத்தை எப்போதும் வழங்கும்.

தலித் மக்களை மனிதர்களுக்கும் கீழாக மதிக்கும் ஆதிக்கத் திமிர் எப்போது எல்லாம் தலைதூக்குகிறதோ அப்போது எல்லாம், ‘உன்னைப்போல அவனைப்போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசங்கடா’ என்கிற குரல் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஒலிக்கும். அந்தக் குரல்களில் வாழ்வார் கே.ஏ.குணசேகரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism