Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

பொறந்த தேதிய மனுசன் குறிச்சு வைக்கிறான். அன்னைக்கே அவனுக்குத் தெரியாம இன்னொரு தேதியும் எழுதிவைக்குது காலம். அதுதான் அவன் காலமாகிற காலம்.

 எல்லாரும் சாகப்போறவுகதான்னு எல்லாருக்கும் தெரியும். பொன்னுச்சாமியும் சாவான்னு ஊரு நாட்டுக்குத் தெரியாதா? தெரியும். ஆனா, அவன் தற்கொலை பண்ணிச் செத்துப்போவான்னு ஈ எறும்புகூட நெனைக்கல.

அன்னைக்கு அட்டணம்பட்டியில் வேற வேற வாயில இருந்து வந்த ஒரே கேள்வி: ''பொன்னுச்சாமியா மருந்தக் குடிச்சுச் செத்துப்போனான்?''

அந்த ஊரையே சிரிக்கவச்ச ஆளு பொன்னுச்சாமி. கேலியும் கிண்டலும் நக்கலும் நையாண்டியுமா எப்பவும் கலகலப்பா இருக்கிற ஒரு சந்தோசப் பெறப்பு.

ஒரு கல்யாண வீட்டுல சிரிக்காத ஆளு யாரு? கடன்பட்டுக் கருமாயப்பட்டுப் பொண்ணக் கட்டிக் குடுத்துட்டுக் கடைசிப் பந்தியில மிச்சச் சோறு திங்கிற தகப்பன்தான். கலியாண வீட்டுக்குள்ள போனா - பொண்ணக் கட்டிக்குடுத்த தகப்பனையும் சிரிக்கவச்சுருவாரு பொன்னுச்சாமி.

மூன்றாம் உலகப் போர்

எழவு வீட்டுக்குள்ள போனாருன்னு வச்சுக்குங்க... பொணம் தவிர எல்லாரும் பொக்குன்னு சிரிச்சிருவாங்க.

ரு நாள் கோட்டச்சாமி மகன் கழுவனுக்கும், பொன்னுப்பிள்ள மகன் பாலையாவுக்கும் கடைவீதியில கைகலப்பாகிப்போச்சு. ஏதோ கொடுக்கல் வாங்கலா இருக்கும் போலயிருக்கு. வாய்த் தகராறுல ஆரம்பிச்சு அடிதடியில போயி நிக்குது.

இவன் கைய அவன் முறுக்க, அவன் குரவளைய இவன் புடிக்க, ஒரே ரணகள மாப்போயிருச்சு; ஊரே வேடிக்கை பாக்குது. வீட்டுக்குள்ள கரன்டு இல்லேன்னுவெளியே ஒக்காந்திருந்த சனம் செலவில்லாம சினிமா பாக்குது.

மாறி மாறி அடிச்சுக்கிட்டு மல்லுக்கட்டி உருளுறாங்க; வேட்டி சட்டை வேற விலகி விலகி விவகாரம் விகாரமாப் போய்க்கிட்டு இருக்கு.

பொறுக்க முடியாத ஒருத்தன் புகுந்தான் சண்டைக்குள்ள.

''விடுங்கப்பா... ஏ விடுங்கப்பா...'' ரெண்டு பேரையும் மாறி மாறிக் கையப் புடிச்சு இழுக்கிறான்.

தோட்டத்துக்கு அந்த வழியாப் போய்க் கிட்டிருந்த பொன்னுச்சாமி தோள்ல கிடந்த மம்பட்டியத் தூர எறிஞ்சிட்டு ஓடுனாரு. சண்டை போட்ட ஆளுகள விட்டுட்டு, சண்டைய வெலக்கிவிட்டான் பாருங்க... அவனப் போட்டு அடிச்சாரு 'மடார் மடார்’னு.

''ஏன்டா! மல்லுக்கட்டுற மகராசங்க என்ன வெவரம் இல்லாதவங்களா? காட்டுக் குள்ள போயிச் சண்டை போடாம ஏன் வீதியில மல்லுக்கட்டறாங்க? விலக்கிவிட நாலு பேரு வருவாங்கங்கற தைரியம். ஆள் இல்லாத எடத்துல மல்லுக்கட்டுவானுங்களா? இனிமே இந்த ஊர்ல மல்லுக்கட்டுற ஆளுகள எவனாச்சும் விலக்கிவிடப் பாத்தேன்... வெட்டி உரச் சாக்குல கட்டி வாழைக்கு எருவா வச்சிருவேன்'' சொல்லிட்டுத் திரும்பிப் பாத்தாரு - மல்லுக்கட்டுன ரெண்டு பேரும் சண்டைய விட்டுட்டு ஒருத்தன ஒருத்தன் முறைச்சுப் பாத்து நிக்கிறாங்க.

மூன்றாம் உலகப் போர்

''யப்பா! ரெண்டு பேரும் மன்னிச்சுக்கிருங்க; உங்களுக்கு இனி இந்த ஊர்ல யாரும் எடஞ்சல் பண்ண மாட்டாக. நீங்க விட்ட எடத்துல இருந்து ஆரம்பிங்கப்பா...'' - சண்டைக்காரங்களப் பாத்து இப்படிச் சொல்லிட்டுச் சனங்களப் பாத்து, ''ஒங்க சோலிய நீங்க பாருங்க; அவங்க சோலிய அவங்க பாக்கட்டும்''னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஊரே சிரிச்சு விழுந்துபோச்சு.

இப்ப -

பொன்னுச்சாமி பொணம் அந்தக் கடைவீதி கடந்து போகுது.

''தெப்பம்பட்டிக்குச் சம்பந்தம்பேசப் போறேன்; கூட வரணும் பொன்னுச் சாமி''னு கூப்புட்டாரு பரமனாண்டி.

தட்ட முடியல.

சாதி சனம்ங்கறது வேற எதுக்கு? ஒரு நல்லது கெட்டதுக்குத்தான?

ஒரு ஒம்போது பேர ஒண்ணு சேத்து 'எல்லாரும் வீட்டுக்கு வாங்க. சாப்பிட்டுக் கௌம்பலாம்’னு சொல்லிட்டாரு.

ஒரு விசேஷத்துக்குப் போற வீட்டுல நெல்லுச் சோறும் பருப்புச் சாறுமாவது ஊத்த வேணாமா மனுசன்? சோளக் கூழும் அகத்திக் கீரையும் போட்டுவச்சுச் 'சாப்பிடுங்க... நல்லாச் சாப்பிடுங்க’ன்னுட்டாரு; ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டாக எல்லாரும்.

பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சு பரமனாண்டி சொன்னாரு: ''ஏதோ உண்டானதச் சாப்பிடுங்க... தெப்பம்பட்டியில காத்திருக்கப்பா கறிச் சோறு.''

பஸ்ஸுக்குள்ள ஒக்காந்த பெறகு சொல்றாரு பரமனாண்டி: ''கறிச் சோறு திங்கப்போறீகப்பா. அவங்கவங்க கைக்காசுல டிக்கட்டு வாங்கிக்கங்க.''

என்னா பண்றது? கழுதைக்கு வாக்கப்பட்டாச்சு. உதைக்குப் பயந்தா முடியுமா? எடுத்துட்டாக டிக்கட்டு எல்லாரும்.

உச்சி வெயில்ல தெப்பம்பட்டியில எறங்கிச் சம்பந்தகாரர் வீடு சேந்து, வெறும் பச்சத்தண்ணி குடிச்சுக்கிட்டே அது பேசி, இது பேசி, கத பேசி, காரணம் பேசி முடிக்கு முன்ன, பசி வந்து கண்ணுல பஞ்சு கட்டுது.

''சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.''

கை கால் கழுவி, மூஞ்சி தொடச்சு, மடிச்சுப்போட்ட இத்த பாயில சம்மணங்கால் போட்டு, கறிக்கு நாக்குத் துடிக்க, எலும்புக்குப் பல்லு ஏங்க ஒக்காந்தா... வருதய்யா தட்டுல சோளச் சோறும் அகத்திக் கீரையும்.

பரமனாண்டியையும் சோளச் சோத்தை யும் எல்லாரும் மாறி மாறிப் பாக்குறாக.

பொன்னுச்சாமி சொல்றாரு: ''ஏப்பா பரமனாண்டி! உன் சம்பந்தகாரரு வீட்டுக்கு அட்டணம்பட்டியில இருந்து எங்க செலவுல நாங்க வந்துருக்கோம். எங்களுக்கு முன்னால சோளச் சோறும் அகத்திக் கீரையும் அதுக செலவுல அதுக வந்துருச்சாக்கும்.''

சம்பந்தகார வீடே சோளத்தையும் சோகத்தையும் மறந்து சிரிக்குது.

இப்ப -

பரமனாண்டி வீடு கடந்து போகுது பொன்னுச்சாமி பொணம் சொமந்த பாடை.

ல்ல ஞாபக சக்தி பொன்னுச்சாமிக்கு. இருவது முப்பது வருசத்துக்கு முன்னால கண்டது கேட்டது எதையும் மறக்க

மாட்டாரு மனுசன். ''யண்ணே... மகளப் பொண்ணு பாக்க வாராக. ஒரு எட்டு வந்துட்டுப் போகணும்ண்ணே'' உருத்தாக் கூப்பிட்டா ராமுத்தாயி.

போகாம இருக்க முடியுமா? பெரியத்தா மகளாச்சே! போயிட்டாரு.

ஏழெட்டு வருசமா சீந்தாமக்கெடக்கிற மகள எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துக் கடத்திவிட்டுறணும்ங்கற வெறியில இருக்கா ராமுத்தாயி.

சம்பந்தம் சாடி பேசி முடிச்சதும் கடைசியாப் போய்ச் சேந்தாரு பொன்னுச்சாமி.

கொஞ்சம் வயசாகி வளஞ்சுகெடந்தான் மாப்ள. கடன் வாங்கிக் கல்யாணம் மாதிரி, பின்மண்டை முடியை இழுத்துவிட்டிருந்தான் முன்மண்டை வழுக்கைய மறைக்க. கன்னம் லேசாக் குழி விழுந்து மேலெலும்பு நிக்குது மேடு கட்டி.

பொண்ணு பாக்க வந்தவன உத்து ஊடுருவிப் பாத்தாரு.

''யாத்தே... குடியக் கெடுக்க வந்துட்டான்டா'' -   பொறி தட்டிப்போச்சு பொன்னுச் சாமிக்கு.

மூன்றாம் உலகப் போர்

''ஏப்பா! உங்க பூர்வீகம் பூதிப்புரம்தான?''

''ஆமா.''

''ஒங்க அப்பன் பருத்தி மண்டி பழனியாண்டிதான?''

''ஆமா...''

தவ்வி எந்திருச்சுட்டாரு பொன்னுச்சாமி.

''ஏ ராமுத்தாயி... இங்க வா தாயி... இந்தச் சம்பந்தம் வேணாம்த்தா!''

''என்னண்ணே சொல்ற?'' - உப்புமாவுக்குச் சீனி போட்டு அதுதான் கேசரின்னு கிண்டிக்கிட்டிருந்தவ ஓடியாந்தா.

''மாப்ள யாரு தெரியுதா?''

''சொல்லுண்ணே.''

''இருவத்தி நாலு வருசத்துக்கு முன்ன ஒன்னப் பொண்ணு பாக்க வந்தவன் இந்த எடுபட்ட பய. எந்திர்றா...''

ஓடியே போயிருச்சு பூதிப்புரத்துச் சமூகம்.

''ராமுத்தாயி... உன் பேத்தியப் பொண்ணு பாக்குற அன்னைக்கும் என்னியக் கூப்புடு. அலையுதுக கெழடுக; அடையாளம் சொல்ல நான் இருக்கேன்.''

ராமுத்தாயி வீடு கடந்து இப்பப் போகுது பொணம்.

''போயிட்டியேண்ணே பொன்னுச்சாமியண்ணே...'' - வாசலை அடக்கி அரை வட்டத் தண்ணி தெளிச்சு அழுது குமிக்கிறா ராமுத்தாயி.

''ஊரையே சிரிக்கவச்சவன், ஊரையே அழுகவிட்டுட்டுப் போயிட்டானப்பா.''

''சாகுற வயசாப்பா மனுசனுக்கு. இந்தா இந்தான்னு பாத்தாலும் அறுவது

அறுவத்திரண்டுதானப்பா இருக்கும். கஸ்டத்துக்கு மேல கஸ்டம்; நஸ்டத்துக்கு மேல நஸ்டம். பொறுக்க முடியல; போய்ச் சேந்துட்டான்.''

''அதுக்காக... மருந்தக் குடிச்சா சாவாக?''

''ஏய்! அவன் செத்து ரெண்டு வருசமாச்சப்பா. பொணம் மட்டும்தான இன்னைக்குப் போகுது!''

''என்னய்யா சொல்ற?''

''மூணு வெள்ளாமை ஏச்சுட்டுப் போயிருச்சப்பா பொன்னுச்சாமிய. கடைசியா மக வீட்டுல போயி நகைய வாங்கி அடகுவச்சு ஐ.ஆர். அம்பது நட்டான். ஆறு ஏக்கர் வெவசாயம்; நூறு நாள் வெள்ளாமை. என் பொழப்பும் தழப்பும் இந்த ஒரே வெள்ளாமையில இருக்குன்னு தஞ்சாமி மட்டுமில்லாம ஒஞ்சாமி எஞ்சாமி எல்லாம் சேந்து கும்புட்டான். நல்லாத்தான் வந்துச்சு நெல்லு நாப்பது நாளைக்கு. இப்பவோ பெறகோன்னு கருது தொண்டையில நிக்குது. எங்கிட்டிருந்துதான் வந்துச்சோ அந்தக் கு(¬)ழ நோயி. பெரிய சீக்கு வந்த ஆளுகளுக்கு வெரல் மடங்குமா இல்லையா, அப்பிடி ஒவ்வொரு சோகையாச் சுருங்கி ஒடுங்கி மடங்குது நெல்லு. குழை நோயி வந்த நெல்லுக்குத் தண்ணி ஆகாது; கடுங்காச்சலாக் காயவிட்டான் நெலத்த. மருந்துஞ் சாம்பலுமாக் கலந்து குருத்து மாறாமத் தூவித்தான் பாத்தான். ஒண்ணும் கதைக்காகல. நெல்லுக்கு அது 'பெரிய’ சீக்கு. கொஞ்ச நாள்ல பயிரு நாறிப்போச்சு; பொண நாத்தம் அடிக்குது; போக முடியல உள்ள. செத்த நெல்லு நெலத்துக்கு ஆகாது; ஆடு மாடு மேயாது; தீய வச்சுவிட்டாத் தீயும் புடிக்காது. அடிமாண்டு போச்சப்பா ஆறு ஏக்கரு. அடகுவச்ச நகையத் திரும்பிக் கேட்ட மருமகன் கெட்ட வார்த்த கேட்டுப்புட்டான் பொன்னுச்சாமிய. வாய்ல சொல்ல முடியாது அந்த வார்த்தைய; வாய் வெந்துபோகும். கடைசியாப் பூச்சிக்கு வச்சிருந்த மருந்த அடிச்சுப் படுத்துட்டான். பூச்சியக் கொல்லாத மருந்து பொன்னுச்சாமியக் கொன்னுருச்சு.''

ந்த மரத்து நெழல் சுகம்னு கேட்டா, ஆளுக்கொரு மரத்தச் சொல்லுவாக. ஆனா, மரத்து நெழலோட சுகம் மரத்துல இல்ல; இருக்கிற எடத்துல இருக்கு.

அட்டணம்பட்டி ஆளுகளுக்கெல்லாம் சுடுகாட்டு மரத்து நெழல் மாதிரி சுகம் கெடையாது எந்த மரத்துலயும்.

எப்பவோ விழுந்த இடியில இதுக்கு மேல வளர மாட்டேன்னு அப்பிடியே நிக்குது பல வருசமா அந்த ஆலமரம். அந்தச் சுடுகாட்டுல செத்தும் சாகாம இருக்கிறது வெட்டியானும் அந்த ஆலமரமும்தான்.

பொணத்த எறக்கிவச்சுட்டு, வெட்டியான் பண்ற சாங்கியம் முடியிற வரைக்கும் சௌரியத்துக்கு எடம் பாத்து அங்கங்க ஒக்காந்துட்டாக ஆளுக.

''பொன்னுச்சாமி முன்ன போயிட்டான். இன்னும் எத்தன பேரு அவன் பின்ன போகப்போறமோ?''

''வெவசாயம் இப்பிடியே போனா விளங்கிருமாக்கும்? போய்ச் சேர வேண்டியதுதான்.''

''அந்தக் காலத்துல வெள்ளாமை நல்லாயிருந்துச்சு. மனுசனுக்குச் சீக்கு வந்துச்சு. இந்தக் காலத்துல மனுசனுக்கு மருந்து இருக்கு; வெள்ளா மைக்குச் சீக்கு வந்துருச்சு.''

கால நீட்டிப் படுத்துட்டாரு கம்பளிக் கெழவன். அவரு வீட்டுக்குப் போனாலும் சேக்க மாட்டாக; அங்கேயே விட்டுட்டுப் போனாலும் கேக்க மாட்டாக. கை ரெண்டையும் அணைச்சுத் தலைக்கு ஆதரவா வச்சு அண்ணாந்து பாத்துக்கிட்டே பேசறாரு:

''நானும் மூணு தலமுறையா மண்ணக் கிண்டியே மண்ட காஞ்சுகெடக்கேன். இன்னைக்கு எந்த வெள்ளாமையாச்சும் முழுசா வீடு வருதாப்பா? எங்கிட்டுந்துதான் வந்துச்சோ வெள்ளாமைக்கு இத்தனை சீக்கும்? வாழை போட்டா, 'கு(¬)ழ நோய்’ தாக்குது. கரும்பு போட்டா, 'செந்தா(¬)ழ அடிக்குது’. தென்னைய நட்டா, 'மண்டைப் புழுவு’ விழுந்து குருத்து அழிஞ்சு போகுது. 'செவட்டை’ அடிச்சா, செத்தேபோகுது தக்காளி, கத்தரி. வெண்டை நட்டா, 'கத்தாழைச் சீக்கு’. சக்கர வள்ளிக் கெழங்கு நட்டா, 'அரக்கு’ அடிக்குது. 'காம்பழுகல்’ நோய் வந்து மொண்ணையாப்போயிருது மொளகாச் செடி. கணக்குப் போட்டுப் பாத்தா விதைச் செலவுக்கு வந்து சேரல வெள்ளாமை. எங்க போயிச் சொல்ல? நம்ம பக்கம் இருந்த கடவுளே கட்சி மாறிருச்சு.''

''கடவுளு என்ன பண்ணும் கடவுளு? காலமே மாறிப்போச்சு. ''ஆடிப் பட்டம் தேடி விதை’ன்னான். இப்ப எப்பவாச்சும் விதைச்சிருக்கமா? ஆடி மாசம் அடிக்கிற காத்துல குண்டியில இருக்கற கோவணங்கூடப் பறந்துபோயிருது. பேயிற காலத்துல காயுது: காயிற காலத்துல பேயுது.''

''காலம் மட்டுமா? மண்ணே மாறிப் போச்சப்பா. ஒண்ணு போட்டாத் தொண்ணூறா வெளையிற மண்ணு, இன்னைக்குச் சத்து இல்லாத சவமாப்போச்சா இல்லையா?''

''எப்பிடியிருக்கும் சத்து? பொட்டாசு பட்டாசுன்னு போடுறீக... என்னைக்கு நாட்டெருவு போட்டீக? 'எரு செஞ்ச மாதிரி இனத்தான் செய்ய மாட்டான்’னு சொலவம் சொல்றீங்க. அப்பன் சிய்யான் காலத்துல மாதிரி, ஆட்டுக் கெடை அமத்துனீகளா? கொழிஞ்சிக் குழை போட்டீகளா? கம்மாக் கரம்பை அடிச்சீகளா? ஆணும் பொண்ணும் ஒண்ணு சேந்து புள்ள பெத்தா நல்லாருக்கும். ஊசி போட்டுப் பெத்தா நல்லாருக்குமா?''

''கருத்தமாயி என்ன கம்முன்னு இருக்க? பேசு. சுக்கு அறியாத கசாயமா? கருத்தமாயி அறியாத வெவசாயமா?''

உருமாலத் தலைக்கு அணவு கொடுத்து ஆலமரத்து அடித்தண்டுல சாஞ்சிருந்த கருத்தமாயி ஒரு கையில துண்டைப் புடிச்சு மறு கையத் தரையில ஊன்டி நிமிந்து ஒக்காந்தாரு.

''என் அனுபவத்துல சொல்றனப்பா. வெளவு கொறஞ்சுபோச்சு; செலவு கூடிப்போச்சு; கடன் ஏறிப்போச்சு; வெல எறங்கிப்போச்சு. என்னய்யா ஆகும் வெவசாயத்தத் தவிர வேற ஒண்ணும் தெரியாதவன் பொழப்பு?''

''நூத்துல ஒரு வார்த்தை கருத்தமாயி சொல்றது. இன்னைக்குப் பணக்காரன்தான் தேர்தல்ல நிக்க முடியும்; பசை உள்ளவன்தான் வெவசாயம் பண்ண முடியும்னு ஆகிப்போச்சு. ஒரு ஏக்கர் நெல்லு நட்டு எடுக்கணும்னா, உசுரு போயி உசுரு வருது. சுத்துக்கால் வெட்ட ஆயிரத்தி ஐநூறு, நாத்தங்காலுக்கு எழுநூறு, நாலு டிராக்டர் உழவுக்கு மூவாயிரத்து எரநூறு, அடி உரத்துக்கு ஆயிரம், நடவுக் கூலி ஆயிரத்தி ஐநூறு, களை எடுப்பு ரெண்டுக்கு ஆயிரம், ரெண்டு மருந்தடிக்க ஆயிரம், கருதறுக்க - ரெண்டாயிரம் - விதை நெல்லு வேற விட்டுப்போச்சு - அது ஒரு ஆயிரத்தி முந்நூறு - இதுல பாடு பாத்து, பண்டுதம் பாத்து, உசுரைக் கையில புடிச்சு உழைச்சு அறுத்துக் களஞ் சேத்து அடிச்சுப் பாத்தா, இந்தா இந்தான்னு இழுத்து நாப்பது மூடை வந்தாப் பெருசு. அன்னைக்கு என்ன வெலை விக்குதுங்கறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். போட்ட கணக்கும் மூட்டக் கணக்கும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா, பொண்டாட்டி வித்துத் தண்டட்டி வாங்குன கதைதான்.''

''அத விடப்பா. பரம்பரையா வெளஞ்ச பூமி தஞ்சாவூரு; பொன்னு வெளயிற பூமி. தஞ்சாவூருக்கே தரித்திரியம் வந்துருச்சுன்னா, நீயும் நானும் எந்த மூலை? 'நெல்பழம்’னு ஒரு சீக்கு வந்துருச்சாம். நெல்லு இருக்க அரிசி கூடி வர மாட்டேங்குதாம். பத்துல நாலு குடும்பம் பஞ்சம் பொழைக்கப் போயிருச்சாம் திருப்பூருக்கு. இனி விவசாயம் பண்ணி விடிஞ்சிருமாக்கும்..?''

''இருந்து என்ன பண்றதுன்னு செத்துப்போனான் பொன்னுச்சாமி. செத்து என்ன பண்றதுன்னு இருந்துக்கிட்டிருக்கோம் நாம.''

எல்லாரையும் கருத்தமாயி கை அமத்துனாரு.

''எல்லாரும் எதுக்கப்பா செத்த பேச்சாப் பேசுறீக? பொழைக்கற பேச்சப் பேசுங்கப்பா. விடிஞ்சா எந்திரிப்போம்னு நம்பித் தானப்பா பாயப் போட்டுப் படுக்கப்போறோம். இன்னைக்கில்லேன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் வெளையாமப்போகுமா? சாமி சண்டைக்காரனாப் போனாலும் பூமி கை விடாதப்பா.''

பொன்னுச்சாமி பொணத்துக்குள்ளயிருந்து புகை கிளம்பிருச்சு.

சுடுகாட்டவிட்டு ஒண்ணு கூடித் திரும்புது ஊருச் சனம்.

சுடுகாடுவிட்டு மேடேறி ஒத்தப் புளியமரம் திரும்ப, எதுக்க வந்த சின்னப்பாண்டி கூட்டத்தவிட்டு அப்பனை ஒரு ஓரமா ஒதுக்கிக் காதுக்குள்ள சொன்னான்:

''யப்பா... மதினி பிள்ளைகளையெல்லாம் நடு வீட்டுல கூட்டியாந்து ஒக்காந்துக்கிட்டு ஆத்தாள வெளிய போடிங்குது அண்ணன்.''

கருத்தமாயிக்கு மூஞ்சி சிறுத்துப்போச்சு.

சுடுகாட்டுல இருந்து திரும்பறதுக்குள்ள இன்னொரு எழவா? என்ன பொழப்புடா இது?

 - மூளும்