
"சோதனைக்கும் சாதனைக்கும் ஓர் எழுத்துதான் வித்தியாசம்!"
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய அனுபவப் பாடங்களை நம்முடன் பகிர்ந்தார்...
“படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் அலைந்தபோது, படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒருவழியாக ஒரு வேலை கிடைக்க, முழு அர்ப்பணிப்புடனும் திறனுடனும் செய்தேன். ஆனாலும், டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் அலைமோதினேன். தொடர் முயற்சிகளுக்கும் பலனில்லாமல் துவண்டு போனேன். ‘என்ன வாழ்க்கை இது?’ என்று அவநம்பிக்கை வந்தது. இருந்தாலும் அதைத் துடைத்து தூரப்போட்டுவிட்டு, மீண்டும் எழுந்து ஓடினேன். சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. பெரியத்திரை வாய்ப்புகளையும் பெற்றேன். ஆனாலும், `பெரிய வெற்றி என்று எதையும் இந்த வாழ்க்கை எனக்குத் தரவில்லையே என்ற ஆதங்கத்தில் குமைந்தேன்.

துன்பங்களும் குழப்பங்களுமாகக் கிடந்த என் மனதுக்கு, நானே ஆறுதலும் நம்பிக்கையும் தந்தேன். துவண்டுபோன ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்தேன். இதோ... இன்று உங்கள் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு நடிகனாக இருக்கிறேன். இது எவ்வளவு பெரிய அங்கீகாரம்?! சோதனைக்கும் சாதனைக்கும் ஓர் எழுத்துதான் வித்தியாசம். சோதனைகளைக் கண்டு பின்வாங்காமல், அவற்றை எதிர்த்து அடியெடுத்து வையுங்கள்... சாதனையாளராக மாறுங்கள்!” என்ற எம்.எஸ்.பாஸ்கர்,
• பொறுமையே பெருமை!
• தோல்வியே சிறந்த ஆசிரியர்!
• எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையை இழக்கக் கூடாது!
• செய்யும் தொழிலை உயிருக்கு இணையாக நேசிக்க வேண்டும்!
• தன்னம்பிக்கையே நல்ல நண்பன்!
• பெருக்கிக்கொள்ளுங்கள்... நட்பு வட்டாரத்தை!
• சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்!
- இந்த தலைப்புகளில் `கலங்காதிரு மனமே’ குரல்வழியில் பேசவிருக்கிறார். 044 - 66802912* என்ற எண்ணில் பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை அழையுங்கள்.
கு.ஆனந்தராஜ்