Published:Updated:

என்ன இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா?!

அல்லு

##~##

யசானவர்களை (அத்தை, அத்தைப் பாட்டி இப்படி!) வம்புக்கு இழுத்து, அவர்களின் வாயைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது என்றால், யாருக்குமே பாதாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அதைப் போல, தேமேயென்று டேராடூனில் தன் மகள், மருமகனுடன் வாழ்ந்துகொண்டு இருக்கும் 85 வயதான விஜயலட்சுமி பண்டிட்டின் (நேருவின் தங்கை) நினைவுகளைக் கிளறி, அவர் மனசில் இருந்ததை எல்லாம் கொட்டவைத்திருக்கிறார் 'இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்’ பத்திரிகை நிருபர்.

 இன்றைக்கும் 'கான்ட்ரவர்ஷிய’லாகக் கருதப்படும், எட்வினாவுடன் (மவுண்ட்பேட்டனின் மனைவி) நேரு பரிமாறிக்கொண்ட கடிதங்கள் விவகாரத்தில் பேச்சு தொடங்கியது.

என்ன இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா?!

''நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது என்பது எனக்கு கரெக்டா தெரியல. ஆனா, அவன் ஒரு ரொமான்டிக் டைப். அதோட அண்ணி இறந்துபோன நேரம் அது. ஸோ... என் சகோதரன், தன்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் புரிஞ்சுக்கற ஒரு பெண்ணாக எட்வினாவைக் கருதி இருக்கலாம். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே இருந்த நட்பை யார் எந்தக் கோணத்தில் வேணுமானாலும் பார்த்துக்கட்டும். ஆனா, என்னைப் பொறுத்தவரை அவங்க ரெண்டு பேரும் எழுதிக்கிட்டகடிதங் கள் இருக்கே, அவை எல்லாம் சாதாரண லெட்டர்ஸ்னு நான் சொல்ல மாட்டேன். அத்தனையும் ஒரு சிறந்த இலக்கியத்தைப் படிச்ச உணர்வைத்தான் எனக்குக் குடுத்தது. இப்படி அற்புதமான கடிதங்களை என் சகோதரன் எழுதியதற்காகப் பெருமைப்படறேன். அது மட்டுமல்ல... என்னைக் கேட்டால், அத்தனை கடிதங்களையும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.''

''ஜவஹர்லாலிடம் நான் உயிரையே வைத்திருந்தேன். அதேபோல, அவனுக்கும் என் மேல் தங்கைங்கிற கொள்ளைப் பாசம். எங்க ரெண்டு பேருக்கும் பதினோரு வயசு வித்தியாசம் இருந்தாலும், அது எங்க பாசத்துக்குத் தடையா இருக்கல. அது அரசியலா இருக்கட்டும், வீட்டு விஷயமா இருக்கட்டும், எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை கேட்பான். அந்த அளவுக்கு நானும் அவனும் உயிருக்கு உயிரா இருந்தோம்.''

''1964-ல ஜவஹர்லால் காலமான பிறகு, பாசம் எல்லாம் நாசமாப்போச்சு. குடும்பத்துல விரிசல்.

என்ன இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா?!

இந்திராவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கல. அண்ணனோட செல்வாக்கை வெச்சு, நான் எங்கே வளர்ந்திடுவேனோனு அவளுக்குப் பயம். அதனால், அவ என்னை வெறுக்க ஆரம்பிச்சா. அவ சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டிப் பொம்மையா இருக்கணும்னு எதிர்பார்த்தா. 'இது எதுக்கு... வேண்டாமே’னு ஒரு அல்ப விஷயத்துக்கு சின்ன எதிர்ப்பு தெரிவிச்சாக்கூட அவளுக்குப் பிடிக்காது. அப்படிப்பட்டவகூட நான் எப்படி இருக்க முடியும்?''

''அவ எமர்ஜென்ஸியைக் கொண்டுவந்தது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை... எதிர்த்தேன். 'இந்தியக் குடிமகனுக்குப் பேச உரிமை இல்லை... எழுத உரிமை இல்லை. இதுக்காகவா நாங்கள்லாம் ஜெயிலுக்குப் போய், கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினோம்? நாங்க அடி, உதைபட்டு வாங்கின அந்த ஜனநாயகம் எங்கே?’னு எமர்ஜென்ஸியை எதிர்த்துப் பேசினேன். அவ்வளவுதான்... சொந்த அத்தைனுகூடப் பார்க்காம எனக்கு வர்ற கடிதங்களை எல்லாம் சென்சார் பண்ணச் சொன்னா... என் வீட்டுக்கு யார் யார் வராங்கனு கண்காணிக்கச் சொன்னா... எனக்கு மட்டும் என்ன... நானும் சொந்த மருமகள்னுகூடப் பார்க்காம ஜனதாவுக்கு சப்போர்ட்டா தேர்தல் நேரத்துல பேசினேன். அவ தோத்துப்போனா. அதை அவ கடைசி வரைக்கும் மனசுக்குள்ளயே வெச்சுக்கிட்டு என்னைக் கறுவிக்கிட்டே இருந்தா.''

என்ன இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா?!

''அவளால் என் பேரன் ராஜீவோடு எல்லாம் தொடர்பே இல்லாம போயிட்டு. பையங்க என்ன செய்வாங்க பாவம்? ராஜீவ் ரொம்ப தங்கமான குணம். இந்திரா இறந்தபோது வீட்டுக்கு நான் பார்க்கப் போயிருந்தேன். என்னைப் பார்த்தஉடனே ராஜீவ் ஓடி வந்து இரண்டு கைகளாலேயும் கட்டி அணைச்சுக்கிட்டான். என் கண்ணிலே நீர் வந்துடுச்சு. என்னதான் இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா? எனக்கு இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. 20 வருஷமா அறுபட்டு இருந்த உறவு, இபோதான் துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு.''

இப்போது விஜயலட்சுமி பண்டிட்டுக்கு ராஜீவை நினைத்து மனசு நிறைய மகிழ்ச்சி. வீட்டு வரவேற்பறையில் இருக் கும் அண்ணன் நேருவின் புகைப்படத் துக்குக் கீழே பிரமாண்டமான ராஜீவ் காந்தியின் படத்தை மாட்டி இருக்கிறார். இந்த அத்தைப் பாட்டி!