Published:Updated:

லாபவெறியின் நரபலிகள்!

லாபவெறியின் நரபலிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லாபவெறியின் நரபலிகள்!

லாபவெறியின் நரபலிகள்!

லாபவெறியின் நரபலிகள்!

ள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்ற கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் சடலங்கள், கல்லூரியின் அருகே இருந்த ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே பதறவைத்திருக்கிறது. அது தற்கொலையா... கொலையா என்ற சந்தேகமும் விசாரணையும் ஒரு பக்கம் தொடர... கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு, நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளை கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அனுப்பும் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இறந்த மாணவிகள் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை, காவல் துறை வெளியிட்டுள்ளது. ஆறு லட்ச ரூபாய்க்கும் அதிகமாகக் கட்டணம் கட்டச் சொல்வது, வாங்கிய பணத்துக்கு ரசீது தராதது, கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள்கூட இல்லாதது என கல்லூரியின் பல்வேறு அவலங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘நிர்வாகத்தின் கொள்ளையை எதிர்த்துதான் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களது சாவின் மூலமாகவேனும் மற்ற மாணவர்களுக்கு நீதி கிடைக்கட்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இது உண்மை என்பது, கல்லூரியின் கடந்தகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் புரிகிறது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்தக் கல்லூரி, பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு சித்ரவதைக்கூடமாகவே இருந்துவருகிறது. கட்டடம், ஆய்வகம், உரிய ஆசிரியர்கள் என எந்தவித வசதிகளும் இங்கு இல்லை. விவரம் தெரியாமல் வந்து சேரும் மாணவர்கள் இடையில் வேறு கல்லூரிக்கு மாற விரும்பினால், `ஐந்தரை ஆண்டுகளுக்கான முழுக் கட்டணத்தையும் கட்டினால்தான் மாற்றுச் சான்றிதழ் தரப்படும்!' என மிரட்டப்பட்டனர். இதற்காக மாணவர்கள் உயர் நீதிமன்றம் வரை சென்றும் நிர்வாகத்தின் ஆட்டம் அடங்கவில்லை. கல்லூரியின் அநியாயக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அது கண்டுகொள்ளப்படாததால் தீக்குளிக்கும் போராட்டம் வரை நீண்டது. அப்படியும் தீர்வு கிடைக்காத நிலையில், ஆறு மாணவர்கள் எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்கள்.

லாபவெறியின் நரபலிகள்!

இப்படி `கல்லூரி' என்ற பெயரில் `கந்துவட்டிக் கடை' நடத்திய ஒரு கிரிமினல் கும்பலுக்கு எதிராக மாணவர்கள் மிகக் கடுமையாகப் போராடிவந்த நிலையில்தான், இப்போது மூன்று மாணவிகளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது, இந்த ஒரு கல்லூரியின் பிரச்னையோ, மூன்று மாணவிகளின் சிக்கலோ அல்ல; தமிழ்நாட்டில் பல கல்லூரிகளின் நிலை. கல்வியின் பெயரால் கொள்ளை லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட `கல்வித் தந்தைகளும் தாய்களும்' பல லட்சம் மாணவர்களின் பொருளாதாரத்தை உறிஞ்சி எதிர்காலத்தை நாசப்படுத்துகின்றனர். ரோஹித் வெமுலாக்களைக் கண்காணித்து உயிர் பறிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, கல்லூரிகளின் தரத்தை உத்தரவாதப்படுத்தவேண்டிய கடமையில் இருந்து பின்வாங்குகிறது.

மூன்று மாணவிகளின் மரணம் என்பது, வெறும் உயிரிழப்பு அல்ல... தனியார் கல்வி நிறுவனங்களின் லாபவெறிக்குக் கொடுக்கப்பட்ட நரபலிகள். மாநிலத்தின் பல கல்லூரிகளில் இத்தகைய மரணங்கள் தொடர்கின்றன. அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட வேண்டும். கல்லூரி என்பதன் அர்த்தம் கல்விக்கூடம்தானே தவிர, கொலைக்கூடம் அல்ல!