Published:Updated:

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”
News
“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

விகடன் டீம்

 நீண்ட நாட்களுக்குப் பிறகு, சிரித்து விளையாடுகிறாள்; நன்றாகச் சாப்பிடுகிறாள்; உறங்குகிறாள் 12 வயது தேவி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவளையும், அவளை நினைத்து அழுத பெற்றோரையும் சிரிக்கவைத்திருக்கிறது ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மருத்துவ உதவி. நோயின் தன்மையைக் கூறியதும் உடனே தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த சம்மதம் தெரிவித்தார், தன்னார்வலர்களில் ஒருவரான குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன்.

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

தேவி உடலில் என்ன பிரச்னை... சந்தோஷம் தொலைத்து அவள் அனுபவித்த வேதனைதான் என்ன?

தேவியின் அம்மா பூங்கோதை சொல்கிறார்...

``நல்லாத்தான் பள்ளிக்கூடம் போயிட்டிருந்தா. படிப்புல  படுசுட்டி. விளையாட்டு, சேட்டைனு எல்லா பிள்ளைகளையும்போலவே இருந்தா. இந்த சந்தோஷம் எல்லாம் அவளோட எட்டு வயசு வரைக்கும்தான்’’ என்றவர் முட்டிவந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

``ஒருநாள் `பள்ளிக்கூடத்துல மயக்கம் போட்டு விழுந்துட்டா’னு தகவல் வந்தப்போ, `பசிமயக்கம்’னு நினைச்சுத்தான் பக்கத்துல இருந்த டாக்டர்கிட்டே கூட்டிப்போனோம். அப்போ சரியாப்போச்சு. ஆனா, அதுலேருந்து அவ அடிக்கடி மயங்கி விழ ஆரம்பிச்சா. தூங்கும்போதுகூட உடம்பு வெட்டி வெட்டி இழுக்கும். எங்களுக்கு என்ன பண்றதுனும் விளங்கலை; என்ன நோய்னும் புரியலை. ஊர்ல ஒருத்தர், `உன் பிள்ளைக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இருக்கும். முதல்ல மெடிக்கல் செக்-அப் பண்ணுங்க’னு சொன்னார். `துறுதுறுனு விளையாடுற சின்னப்புள்ளைக்குமா சர்க்கரை வியாதி வரும்?’னு அரைகுறை மனசோடுதான் டாக்டர்கிட்ட காட்டினேன். பரிசோதனை பண்ணிப்பார்த்த டாக்டர், ‘உங்க மகளுக்கு வந்திருக்கிறது வழக்கமான சர்க்கரை வியாதி இல்லை. தொடர்ந்து கவனிப்புல இருக்க வேண்டிய அரிதான சர்க்கரை நோய்’னு சொன்னார். எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுருச்சு. அதை நம்பாம, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காட்டி, 80 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவுசெஞ்சோம். அங்க எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்க. ஏற்கெனவே காரைக்குடி டாக்டர் மணிவண்ணன் கொடுத்த ரிப்போர்ட், மருந்துகளைப் பார்த்துட்டு, `அவர் சரியான வைத்தியம்தான் செஞ்சிருக்கார். இது ரொம்ப ஆபத்தான சர்க்கரை நோய், அவர்கிட்டேயே தொடர்ந்து காட்டுங்க’னு சொன்னாங்க. இனிமே அசால்ட்டா இருக்கக் கூடாதுனு, டாக்டர் மணிவண்ணன்கிட்டயே தொடர்ந்து வைத்தியம் பார்த்தோம். எங்க வேதனையைச் சொல்லிமாளாது.

ஒருநாள் சர்க்கரை அளவு குறைஞ்சு மயக்கமாகிடுவா; இன்னொரு நாள் சர்க்கரை அளவு அதிகமாகி, உடம்பு இழுத்துக்கும். `என் புள்ளைக்கு இப்படி ஒரு கொடுமையா?!'னு மனசு கிடந்து பதறும். அவளுக்கு எந்தெந்த நேரத்துல எல்லாம் சர்க்கரை அளவு கூடும் - குறையும், அப்போ என்ன செய்யணும்னு டாக்டரும் நர்ஸும் சொல்லிக்கொடுத்தாங்க. அதன்படி நானே கவனிக்க ஆரம்பிச்சேன். என்னதான் பத்திரமாப் பார்த்துக்கிட்டாலும், மயங்கி விழுந்துட்டா உடனே ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டுபோகணும். அது மாறாமல் தொடர்ந்துகிட்டே இருந்தது.

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

சில வருஷங்களுக்கு முன்னாடி என் கணவர் சிங்கப்பூர்ல ஹோட்டல் வேலைக்குப் போனார். சொற்ப சம்பளம். அவரு அனுப்புற காசை வெச்சுத்தான் இவ மருத்துவச் செலவோடு, மத்த ரெண்டு புள்ளைங்க தேவையையும் பார்த்துக்கணும். பத்தாததற்கு அங்கங்க கடனும் வாங்கினோம்.

அந்த நேரத்துலதான், `உடம்புல பொருத்துற இன்சுலின் பம்ப் (தானியங்கி மருந்து செலுத்தும் கருவி) ஒண்ணு வந்திருக்கு. அதை தேவிக்குப் பொருத்திட்டா சர்க்கரை கூடும்போது - குறையும்போது அதுவே தன்னால மருந்தை உடம்புக்குள்ள செலுத்திக்கும். நாம பயப்படத் தேவை இல்லை'னு டாக்டர் சொன்னார். ஆனா, அந்த மெஷின் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிகம். `அவ்வளவு பணத்துக்கு என்ன பண்றது?’னு எங்களுக்குத் திக்குனு ஆகிப்போச்சு... அப்பத்தான் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு சொக்கலிங்கம் சார் மூலமா எழுதிப்போட்டோம். அவங்க எங்களுக்கு உடனே இன்சுலின் பம்ப் வாங்கிக் கொடுத்தாங்க. தேவி உடம்புல அதைப் பொருத்தியாச்சு. இப்பத்தான் நாங்க நிம்மதியா இருக்கோம். தேவியும் முன்பைப்போல நல்லா சிரிச்சு, விளையாடுறா’’ என்றார்.
தேவிக்கு சிகிச்சை அளித்துவரும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் பேசினார்...

``தேவியை நன்கு பரிசோதனை செய்து பார்த்ததில், மயக்கம் வருது என்று கூறிய நாட்களில் எல்லாம் அவளுக்கு உடலில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருந்தது. சில நாட்களில் சர்க்கரை அளவு அதிகமாகி கோமா (Diabetic Ketoacidosis) நிலைக்குச் சென்றாள். அவளுக்கு குளூக்கோஸும் இன்சுலினும் மாற்றி மாற்றிக் கொடுத்துவந்தோம். அவளுடைய சர்க்கரை அளவு, காலையில் மிகக் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் இருந்தது. Brittle Diabetes என்ற சர்க்கரை நோய் வகையாக இருக்குமோ என எனக்குச் சந்தேகம் வந்தது. நான் கணித்தது சரிதான். CGMS (Continuous Glucose Monitoring System) பரிசோதனையில் தேவிக்கு Brittle Diabetes இருப்பது உறுதியானது. இது மோசமான வியாதி. இதை கன்ட்ரோலிலேயே வைத்திருக்க வேண்டும்.
 
குழந்தைகளில் ஆயிரத்தில் மூன்று பேருக்கு இந்த வகை சர்க்கரை நோய் வருகிறது. இந்த நோயாளர்களுக்கு, சில சமயங்களில் சர்க்கரை அளவு அதிகமாகி, கோமா நிலைக்குச் (Diabetic Ketoacidosis) செல்வர். சர்க்கரையின் அளவைக் குறைக்க இன்சுலின் ஊசி மருந்தை அதிகப்படுத்தினால், உடனே தாழ்நிலை சர்க்கரை (Hypoglycaemia) ஏற்பட்டு, தாழ்நிலை கோமாவுக்குச் செல்வர். இவர்களின் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். இதற்கான தீர்வு, இன்சுலின் பம்ப் (Insulin Pump) பொருத்துவதுதான். இங்கிலாந்தில் இந்த நோய் ஆயிரத்துக்கு ஆறு பேரிடம் உள்ளது. நம் நாட்டில் ஆய்வுசெய்தால் இது அதிகமாக இருக்கும். என்னிடம் வருகிற பேஷன்ட்டுகளில் 27 பேருக்கு உள்ளது.

“இப்ப தான் நாங்க நிம்மதியா இருக்கோம்!”

இன்சுலின் பம்ப் (Insulin Pump) வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு இன்சுலின் பம்பின் விலை 1,60,000 ரூபாயில் ஆரம்பிக்கிறது. இதை உடலோடு ஒட்டிக்கொள்கிற வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். நமது உடலில் இரைப்பைக்கு சற்று கீழே கணையச் (Pancreas) சுரப்பி உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்து ரத்த ஓட்டத்தில் கலந்ததும், கணையம் தேவைக்கு ஏற்ப இன்சுலினைச் சுரந்து சர்க்கரையை இயற்கையாகக் கட்டுப்படுத்துகிறது. Brittle Diabetes நோயாளிக்கு, சர்க்கரை அளவு எப்போது அதிகமாகும் அல்லது குறையும் என CGMS என்ற பரிசோதனை செய்யப்பட்டு, அதன்படி இன்சுலின் பம்ப்பில் உள்ள Chip–ல் புரோகிராம் செய்யப்படுகிறது. இது நோயாளியின் சர்க்கரையை தனது சென்சார் (Sensor) மூலம் அறிந்து தேவைக்கு ஏற்ப இன்சுலினை வழங்கும். இதனால் எந்தத் தொந்தரவும் வராது. இன்சுலின் பம்பை தேவிக்குப் பொருத்த உதவிசெய்த விகடனுக்கு நன்றி’’ என்றார்.

அறம் செய விரும்புவோம்!