Published:Updated:

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

அதிஷா, படங்கள்: தே.சிலம்பரசன்

மிழகக் கல்வி நிலையங்கள், மாணவர் களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு கொடுங் கனவாக மாறத் தொடங்கியிருக்கின்றன. பிள்ளைகளைப் பெற்று, ஆசை ஆசையாக வளர்த்து, படிக்க அனுப்பிவைத்தால், அவர்கள் நம் வாழ்நாள் சேமிப்பைச் சூறையாடிக்கொண்டு, நம் பிள்ளைகளைப் பிணமாகத் திருப்பித் தருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் கிணற்றில் விழுந்து மடிந்துபோயிருக்கும் மூன்று மாணவிகளும், தமிழகக் கல்விச்சூழல் எத்தகைய இழிநிலையில் இருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சாட்சி.

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் என்ற கிராமத்தில் இருக்கிறது எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. உள்ளடங்கிய கிராமப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கல்லூரியில் படித்த மொத்த மாணவர்களான 160 பேரில், தற்போது 48 மாணவர்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா, சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த மோனிஷா, திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா மூவரும் இரண்டாம் ஆண்டு மாணவிகள். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் சென்றுவிட்டு கல்லூரிக்குத் திரும்பிய இவர்கள், கடந்த 23-ம் தேதி கல்லூரிக்கு அருகில் இருந்த கிணற்றில் சடலமாகக் கிடந்தனர். மூன்று பேரும் கூட்டாகத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப் பட்டாலும், `இது கொலையாக இருக்குமோ?' என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கப் பட்டது. எலெக்ட்ரோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இதே கட்டடத்தில்தான் இயங்கிவருகிறது. பெயர்ப்பலகையில் வரிசையாக இத்தனை கல்லூரிகளின் பெயர்கள் இருந்தபோதிலும், அதற்குரிய வசதிகள் எதுவும் இங்கு இல்லை. கவுன்சலிங் மூலம் தேர்வுசெய்து இங்கு வரும் மாணவர்களுக்கு வரிசையாக அதிர்ச்சிகள் மட்டுமே காத்திருக்கும். ஆய்வகம் கிடையாது, நூலகம் கிடையாது, கீழே ஹாஸ்டல்... மேலே வகுப்பறை என்ற நிலை, அந்த ஹாஸ்டலிலும் சமைக்க ஆள் இல்லை; மாணவர்களே சமைத்துக்கொள்ள வேண்டும். துப்புரவுப் பணிக்கு ஆள் இல்லை; அதையும் மாணவர்கள்தான் செய்ய வேண்டும். பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் கிடையாது. மொத்தத்தில் அது ஒரு கல்லூரியே கிடையாது. இந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளும் மாணவர்கள், ஒன்று `வேறு வழி இல்லை' என சகித்துக் கொள்கிறார்கள் அல்லது வேறு கல்லூரிக்கு மாற்றிக்கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால், அது அத்தனை எளிது அல்ல.

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

‘‘எனக்கு இந்த காலேஜுக்கு வந்து பார்த்ததும் அவ்வளவு அதிர்ச்சி. எந்த அடிப்படை வசதியும் இல்லை. டாய்லெட்கூட சரியா இருக்காது. `இதுக்காகவா லட்சம், லட்சமாகப் பணம் கட்டி இங்கே வந்தோம்? எப்படியாவது காலேஜ் மாத்தணும்'னு முயற்சிபண்ணினேன். கரஸ்பாண்டென்ட் வாசுகி மேடத்தைப் பார்த்துப் பேசினேன். அவங்க, ‘டி.சி எல்லாம் தர முடியாது. வேணும்னா பத்து லட்சம் ரூபாய் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போ’னாங்க. ‘நான் எதுக்கு பத்து லட்சம் தரணும்?’னு கேட்டதுக்கு, மிரட்டி அனுப்பினாங்க. எனக்கு மட்டும் இல்லை... யார் டி.சி கேட்டாலும் இதுதான் நிலைமை’’ என்கிறார் அந்தக் கல்லூரி மாணவர் ஒருவர்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு, அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால், இந்தக் கல்லூரி நிர்வாகமோ 1,20,000 ரூபாய் கட்டணம் வசூலித்தது. முதலாம் ஆண்டின் இரண்டாவது பருவத்துக்கு, கல்விக் கட்டணம் இல்லை என விதி இருந்தும், 80 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர். இதுபோக புத்தகக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகக் கட்டணம், உணவுக் கட்டணம் என வெவ்வேறு பெயர்களில் கட்டணக் கொள்ளையை மட்டும் தொடர்ந்துள்ளனர். பல்கலைக்கழக விதிமுறைப்படி, கல்லூரியில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இருக்க வேண்டும்; ஆய்வகம் இருக்க வேண்டும். இங்கு எதுவும் இல்லை. கல்லூரி தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில், இதுவரை ஒருவர்கூட இந்தக் கல்லூரியில் இருந்து மருத்துவம் முடித்து வெளியே சென்றது இல்லை. இதே எட்டு ஆண்டுகளில், 200-க்கும் அதிகமான மாணவர்கள், இந்தக் கல்லூரியில் இருந்து படிப்பைப் பாதியில்விட்டு வெளியேறியுள்ளனர்.

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

‘‘ஒரு ரெக்கார்டு நோட் விலை 30 ரூபாய். அதை வெளியில் வாங்கி, கல்லூரிப் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி மூவாயிரம் ரூபாய்க்கு விற்றார்கள். கல்லூரியில் குடிதண்ணீர் இருக்காது. எல்லாமே கிணற்றுநீர்தான். அதையும் நாங்கள்தான் போய் எடுத்து வரவேண்டும். இத்தனை பெண்கள் படிக்கும் கல்லூரிக்கு, காம்பவுண்டு சுவர் கிடையாது; செக்யூரிட்டி கிடையாது; வாட்ச்மேனுக்குக்கூட சரியாக சம்பளம் கொடுக்க மாட்டார்கள். வருபவர் ஒரே வாரத்தில் ஓடிவிடுவார்’’ என்கிறார்கள் மாணவர்கள்.

‘‘பல்கலைக்கழகத்தில் இருந்து திடீரென ஆய்வுக்காக யாராவது வந்தால், நாங்களே நோயாளியாகவும் நாங்களே மருத்துவராகவும் நடிப்போம்’’ என்கிறார் ஒரு மாணவி. வகுப்பறையில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதால், ஜூனியர் மாணவர்களுக்கு, சீனியர் மாணவர்கள் பாடம் நடத்துவதும் நடந்திருக்கிறது.

இந்த நரகத்தில் இருந்து டி.சி வாங்க முயன்று முடியாமல்போன மாணவர்கள் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்து, போராடித்தான் டி.சி பெற முடிந்தது. 2010-ம் ஆண்டு தொடங்கி 2012-ம் ஆண்டு வரை இது தொடர்பாக மூன்று வழக்குகள் மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்டன என்றாலும், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மாணவர் களின் இந்தச் சகிப்புத்தன்மை, கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சத்துக்குச் சென்று போராட்ட மாக வெடித்தது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் பல வழிகளில் முயன்றும் தீர்வு இல்லை. `கல்லூரி' என்ற பெயருக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற இந்தப் பாழுங்கிணற்றில் விழுந்து நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ள நிலையில்தான் ஜனவரி 23-ம் தேதி மூன்று மாணவிகள் கல்லூரிக்கு அருகில் இருந்த கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தார்கள்.

மாணவிகள் மூவரும், மிக மிக எளிய வறிய பின்னணியைக்கொண்டவர்கள். திருவாரூர் பிரியங்காவின் தந்தை, கடந்த ஆண்டுதான் இறந்தார். அம்மா ஜெயந்தி, விவசாயக் கூலி வேலைசெய்து பிள்ளையைப் படிக்கவைத்தார். கவுன்சலிங்கில் இந்தக் கல்லூரியில் ஃப்ரீ ஸீட் கிடைத்தவுடன் மகள் டாக்டராகவே ஆகிவிட்ட பெருமிதத்துடன் பிரியங்காவை படிக்க அனுப்பினார். ஆனால் இன்று, ஆசை மகளைப் பறிகொடுத்து நிற்கிறார். “கவர்மென்ட் ஸீட்னு நம்பித்தான் இந்த காலேஜ்ல சேர்த்தோம். ஆனா, அரசாங்கம் சொல்றதைவிட அதிகமா பணம் கேட்டாங்க. ‘புள்ள படிக்கட்டும்'னு எவ்வளவு கேட்டாலும் கட்டினோம். ‘பரவால்லம்மா, எப்படியாவது படிச்சு முடிச்சிடுறேன்'னு சொல்லிக்கிட்டே இருந்தா... கடைசியிலே எங்களை விட்டுட்டுப் போயிட்டா’’ என்று அழுது புரளும் மோனிஷாவின் தந்தை தமிழரசன், மின்சார வாரியத்தில் லைன்மேன். சரண்யாவின் தந்தை ஏழுமலை, விவசாயி. தமிழரசனும் ஏழுமலையும் தங்கள் மகள்களை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்க நினைத்தனர். ஆனால், இன்று அது நிறைவேறாக் கனவாகிப்போனது.

காவு வாங்கும் கல்விக் கூடங்கள்!

‘நாங்க தற்கொலை பண்ணிக்கிறதே, இந்த காலேஜ்மேல ஆக்‌ஷன் எடுக்கணும்னுதான்’ என எழுதிவைத்திருக்கிறார்கள் மாணவிகள். இப்போது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி, ‘‘அந்தக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை, கடந்த ஆண்டே ரத்து செய்துவிட்டோம். எங்கள் இணையதளத்திலேயே இதைப் பார்க்கலாம்’’ என்கிறார். ஆனால், மாணவிகள் இறந்துபோன அன்றுகூட, இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் எஸ்.வி.எஸ் கல்லூரியும் இருந்தது. இதுதான் நமது அரசு நிர்வாகமும் கல்வித் துறையும் பள்ளிக் கல்லூரிகளைக் கண்காணிக்கும் விதம்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 94 பள்ளிச் சிறார்கள் தீயில் கருகிச் சாக வேண்டும்; தனியார் பள்ளிகளின் அவலநிலையை வெளிக்கொணர, பேருந்து ஓட்டையில் விழுந்து ஒரு குழந்தை மரிக்க வேண்டும்; ஒரு மருத்துவக் கல்லூரியின் உண்மை நிலையை அறிந்துகொள்ள, மூன்று அப்பாவிப் பெண்கள் தங்களைப் பலிகொடுக்க வேண்டும். இதுதான் நமது அரசு இயந்திரம் இயங்கும் விதம்!