Published:Updated:

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?
News
உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

கார்க்கிபவா

`ஆன்யோமேனியா’ (Onyomania) என்றால் என்ன எனத் தெரியுமா?நீங்களோ, உங்களுக்குத் தெரிந்தவர்களோ அடிக்கடி ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்பவர்களா... தேவை இல்லாத பொருட்களையும் ‘ஆஃபரில் கிடைக்கிறதே’ என வாங்கிக் குவிப்பவர்களா? வாழ்த்துகள்... நீங்கள் ‘ஆன்யோமேனியா’வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

சமீபமாக, தமிழர்கள் அதிக அளவில் இந்த ‘ஆன்யோமேனியா’வால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். நகவெட்டி ஒன்றை வாங்க வேண்டும் என்றாலும் உலகத்தின் அத்தனை பெஸ்ட் பிராண்டுகளின் சாம்பிள் களையும் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்து, பயனாளிகளின் கருத்துக்களைப் படித்து, சிறந்த நகவெட்டியைத் தேர்ந்தெடுக்கலாம். அது இந்தியாவின் எங்கோ ஒரு கிடங்கில் இருந்து நம் வீட்டுக்கு, மூன்றே நாட்களுக்குள் வந்துவிடும். இப்படி 150 ரூபாய் நகவெட்டி முதல் லட்சம் ரூபாய் மின்சாதனப் பொருட்கள் வரை அனைத்தையும் எப்போதும் இணையத்தில் வாங்கலாம்.

மென்பொருள் பொறியாளரான லாவண்யா, ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்காகச் சொல்லும் காரணம்...

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

‘‘பெண்களுக்கான சில அத்தியாவசியப் பொருட்களை கூட்டமான கடைகள்ல கேட்டு வாங்கக் கூச்சமா இருக்கும். அதனால வேற வழி இல்லாம கண்ல படுற ஏதோ ஒரு பிராண்டை அல்லது கடைக்காரர் கொடுக்கிற பொருளை வாங்குவோம். ஆனா ஆன்லைன்ல, எனக்குத் தேவையான பொருட்களைப் பற்றிய ரிவ்யூஸை நிதானமா படிச்சு வாங்க முடியுது. வீட்டுக்கு வர்ற பேக்கிங்கும் பாதுகாப்பா இருக்கு. அதனால, எனக்கு ஆன்லைன் ஷாப்பிங் ஈஸியா செட் ஆகுது’’ என்கிறார்.

இப்படிப்பட்ட வசதிகள்போக தரமான பொருட்கள், நியாயமான விலை, சமயங்களில் சலுகை விலை, டெலிவரியின்போது காசு செலுத்திக்கொள்ளும் வசதி, மாதத் தவணை வசதி, பொருளில் குறை இருந்தால் திருப்பிக் கொடுக்கும் வசதி... என ஆன்லைன் ஷாப்பிங்கில் பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தனை சாதகங்களுடன் வாங்கும் அந்தப் பொருள் நமக்குத் தேவையான ஒன்றா... ஆசை ஆசையாக வாங்கிவிட்டு அடுத்தடுத்து அவற்றைப் பயன்படுத்துகிறோமா?

‘‘என் ஆபீஸ்ல வேலை செய்யுற ஒருவர், ஆன்லைன்ல வாரத்துக்கு ஒரு பொருளாவது ஆர்டர் பண்ணிடுவார். ‘கம்மியாத்தான் செலவு பண்றேன்’னு சொல்லிட்டு, 100, 200, 300 ரூபாய் பொருட்களா வாங்கிக் குவிப்பார். கூரியர் பையன் தினமும் இவரைத் தேடி வர்றதைப் பார்த்தாலே அவர் முகம் மலரும்.

ஒருநாள் அவர் டேபிள் மேல் பிரிக்கப்படாத ஒரு பார்சல் இருந்தது. அது நாலைஞ்சு நாளா அப்படியே இருந்தது. ‘என்ன விஷயம்?’னு கேட்டா, ‘கடன் அதிகமாயிடுச்சு’னு புலம்புறார். ‘ஏற்கெனவே நான்கு மொபைல் இருந்தும் லேட்டஸ்ட் வெர்ஷன்னு இதை ஆர்டர் பண்ணிட்டேன். ஆனா, இது எனக்குத் தேவையே இல்லை. அதான் பிரிக்காமலே வெச்சிருக்கேன். இதைப் பார்க்கிறப்பலாம், `இனி எதையும் வாங்கக் கூடாது'னு தோணும்ல. அதான் டேபிள் மேலயே வெச்சிருக்கேன்’னு சொன்னார். இதே மாதிரி பலரும் புலம்பினதால, இப்போ எங்க அலுவலக இணையத்துல ஷாப்பிங் தளங்களை பிளாக் பண்ணச் சொல்லிட்டேன்’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்.

கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பாருங்கள். செய்தித்தாள்கள், சேனல்கள், இணையம், மொபைல் பிரௌஸிங் என எங்கெங்கும், சமீபமாக நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாம் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ பற்றியதுதான். ஏதாவது ஒரு பொருள் பற்றிய தகவல்களை இணையத்தில் நீங்கள் ஒருமுறை தேடினால்... தீர்ந்தது. நீங்கள் செல்லும் பக்கம் எல்லாம், அந்தப் பொருளின் விளம்பரங்கள் உங்களைப் பின்தொடரும். பலவீனமான ஒரு நொடியில் உங்களை அதை வாங்கவைத்துவிடும்.

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

‘‘நீங்கள் இணையத்தில் இயங்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களின் நடவடிக்கைகள் கண்காணிப்படுகின்றன. உங்கள் தேவை என்ன, உங்களுக்குச் சம்பளம் எப்போது வரும், மாதத்தின் எந்தச் சமயத்தில் நீங்கள் அதிகமாகச் செலவழிக்கிறீர்கள்... என உங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தொகுத்துக்கொண்டே இருக்கிறது இணையம். ஆக, ‘எங்கே அடிச்சா எங்கே வலிக்கும்’ என்பதைத் தெரிந்துகொண்டு ‘ஆஃபர் கேரட்’டை உங்கள் முன்பாக நீட்டுவார்கள்’’ என்கிறார் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் பிரபு.

ஒரு பொருளை வாங்கும் நேரத்தைக் குறைப்பது, எவ்வளவு செலவுசெய்கிறோம் என்பதை வாடிக்கையாளர் உணராமல் இருப்பது... இந்த இரண்டும்தான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் தாரக மந்திரங்கள்.

‘‘அழகான வடிவமைப்புடன் கூடிய இணையதளம், வானவில் வண்ணங்களில் ஈர்க்கும் டிசைன், இயல்பைவிட ஈர்க்கும் புகைப்படங்கள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்... என வலைதளங்களில், தான் வாங்க விரும்பிய, ஆனால் அவசியப்படாத பொருட்களைப் பார்த்ததும், அவற்றை வாங்கியே ஆகவேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவது, ஒருவிதத்தில் வன்முறைதான். அதுவும் அலுவலக நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இடையே ‘நான் எவ்வளவு பொருட்களை வாங்கியிருக்கிறேன் பார்’ என, தன்னைப் பெருமிதமாக வெளிக்காட்டிக்கொள்வதில் ஒரு திருப்தி. இப்படியான எந்தத் திட்டமும் இல்லாமல், அந்த நொடியில் முடிவெடுத்து வாங்கும் Impulsive buying பழக்கம்தான் நாளடைவில் அடிக்‌ஷனாக மாறுகிறது’’ என்கிறார் பிரபல மனநல நிபுணர் அபிலாஷா.

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

‘‘இளைஞர்கள்தான் என இல்லை... இணையப் பரிச்சயம் அதிகம் உள்ள அனைத்து வயதினரும் ஆன்யோமேனியாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. சென்ற வாரம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் 45 வயதுப் பெண் ஒருவர் என்னிடம் ‘ஆன்யோமேனியா’ சிக்கலுக்கான கவுன்சலிங் வந்தார். அவரது மாதச் சம்பளம் 75 ஆயிரம் ரூபாய். ஆனால், 50 நாட்களுக்குள் இரண்டரை லட்சத்துக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்கியிருக்கிறார். ‘50 ஆயிரம் ரூபாய் டி.வி ஆஃபரில் 40 ஆயிரத்துக்குக் கிடைச்சது... வாங்கினேன். அதோடு ஹோம் தியேட்டர் வாங்கினால் 20 சதவிகிதம் தள்ளுபடி. அதையும் வாங்கினேன். எதையும் பேக்கிங்கூடப் பிரிக்கவில்லை. ஆனால், கிரெடிட் கார்டில் அடுத்த இரண்டு வருஷத்துக்கான கடன் ஏறிவிட்டது. என்னை தயவுசெய்து காப்பாற்றுங்கள்’ எனப் புலம்பினார். அவர், கணினியில் எப்போதும் ஏதேனும் ஒரு ஷாப்பிங்  தளத்தைத்  திறந்தே வைத்திருப்பாராம். அவருக்கு கவுன்சலிங் கொடுத்து மீட்டோம். ஆன்லைனில், ரூபாய் தாளை கண்ணில் பார்க்காமல், கையால் தொடாமல் பரிவர்த்தனை நடைபெறுவதால், ஆயிரம் ரூபாய்க்கும் லட்சம் ரூபாய்க்கும் வித்தியாசம் தெரிவது இல்லை. கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டிலோ, மாதத் தவணையிலோ வாங்குகிறார்கள்.

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

இன்றைய இளைஞர்களுக்கு என்ன பொருள் வாங்குகிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் மகிழ்ச்சியோ திருப்தியோ இல்லை. வாங்க வேண்டும்... அவ்வளவுதான். அதனால்தான் இணையத்தில் வாங்கும் முறையை எளிதாகவும் ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவும் வடிவமைக்கிறார்கள். ‘லிமிடெட் எடிஷன்’, ‘முந்துபவர்களுக்கு முன்னுரிமை’ போன்ற தூண்டில் சலுகைகளால் பொருட்களின் தரம் பற்றிய கவலை இல்லாமல் எதையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆக, கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், இந்த ஆன்லைன் மோகம் மிக மோசமான ஒரு பழக்கமாகிவிடும்’’ என எச்சரிக்கிறார் அபிலாஷா.

சென்ற ஆண்டு அக்டோபரில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்திய ‘பிக் பில்லியன் டே’வில் மூன்றே நாளில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக அறிவித்தது. இந்த ஆண்டு முடிவதற்குள் இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா, அமெரிக்காவை முந்திவிடும் எனக் கணிக்கிறது கூகுள். அப்படி ‘ஃப்ரெஷ்’ஷாக உள்ளே நுழைபவர்களைப் பொறிவைத்துப் பிடிக்க, பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆயத்தமாகிவருகின்றன.

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

ஆன்லைன் என்பது மிகப் பெரிய கடல். அங்கு எந்த மீனைப் பிடிப்பது என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், வீசப்படும் வலையில் நீங்களே இரையாக நேரிடலாம். உஷார்... உஷார்!

உஷார் உஷார்!

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

‘‘இன்று நம் இளைஞர்களுக்கு, சேமிக்கச் சொல்லித் தர யாரும் இல்லை. ஆனால், செலவு பண்ண, நாடே வழி சொல்கிறது. முன்பெல்லாம் ‘இரண்டு கார்கள் வாங்கும் வசதி இருக்கும்
போதுதான், முதல் கார் வாங்க வேண்டும்’ என்பார்கள். ஆனால் இன்று, வங்கி லோன் சுலபமாகக் கிடைக்கிறதே என கார் வாங்கிவிட்டு, சம்பளத்தில் தவணை கட்டிவிட்டு, பெட்ரோல் போடக்கூடக் காசு இல்லாமல் காரை சும்மாவே நிறுத்தி வைத்திருப்பவர்கள் ஏராளம். நான்கு கடை ஏறி இறங்கும் போதுதான், அந்தப் பொருள் நமக்கு அவசியமா, நம் பட்ஜெட்டுக்குள் அடங்குமா... என மனதில் ஒரு தெளிவு பிறக்கும். ஆனால் நினைத்த அடுத்த நிமிடமே பொருளை வாங்கத் தூண்டுகின்றன ஆன்லைன் சலுகைகள்.

உங்களுக்கு ‘ஆன்யோமேனியா’ இருக்கா?

கிரெடிட் கார்டு வசதி அறிமுகமான புதிதில், பலரும் தாறுமாறாகச் செலவழித்து தடுமாறினார்கள். அதுபோல, இப்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரிக்கிறது. இதுவும் எதிர்காலத்தில் தணிந்து, இயல்புக்கு வரும். ஆனால், அதற்குள் ஆயிரங்களையோ, லட்சங்களையோ இழக்காமல் கவனமாக இருப்போம்’’ என்கிறார் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன்.