Published:Updated:

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

அதிஷா, ஓவியங்கள்: ஹாசிப்கான், செந்தில்

`தான் முன்னேறுவதற்கான வாய்ப்பையோ, நம்பிக்கையையோ வழங்கத் தயாராக இல்லாத ஒரு சூழலுக்குள் ஒருவன் தொடர்ந்து இருந்தால், எப்படி அவன் ஊக்கத்தோடு இருப்பான்?'

- அம்பேத்கர்

அந்த மாணவனை, நான்கைந்து சீனியர் மாணவர்கள் சுற்றிவளைத்துக்கொள் கின்றனர். அவர்கள் அவனை மிரட்ட ஆரம்பிக்கிறார்கள்.

``எங்களது போஸ்டர்களைக் கிழித்தது நீதானா?''

``ஆம், நான்தான் கிழித்தேன்.''

அவர்கள் கோபத்தின் உச்சிக்குச் செல்கின்றனர்.

``ஏன் கிழித்தாய்?''

``அந்த போஸ்டர்களில் இந்துத்துவத்தின் நிறத்தை, ஆர்.எஸ்.எஸ்-ஸின் நிறத்தைப் பார்த்தேன். அதனால் கிழித்தேன். இப்போது மட்டும் அல்ல, எப்போதும் கிழிப்பேன்... கடைசி வரை கிழிப்பேன்.''
தன்னை ஒரு கூட்டம் சூழ்ந்து நிற்கும் நிலையில், தான் எந்த நிமிடமும் அடித்து நொறுக்கப்படலாம் என்ற நிலையில் அந்த இளைஞனின் குரலில் வெளிப்பட்ட துணிவு, அசாதாரணமானது; உண்மையை எதிர்கொள்ளும் தைரியமும், தான் நம்பும் அரசியலை எந்தத் தருணத்திலும் விட்டுக்கொடுக்காத தீரமும் அது. அந்த இளைஞன்தான் ரோஹித் வெமுலா. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் தூக்கிட்டு மடிந்த பிஹெச்.டி மாணவன். மேலே விவரிக்கப்பட்ட காட்சியில் ரோஹித்தை மிரட்டிய சீனியர் மாணவர்கள், என்றோ எடுத்த வீடியோ,  ரோஹித்தின் அரசியல் உறுதிக்குச் சான்றாக இன்று உலகம் முழுவதும் சுற்றிவருகிறது.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

ரோஹித் வெமுலா, 25 வயது இளைஞன். ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். `மாலா' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர், மிக மிகப் பின்தங்கிய காலனி ஒன்றில் பிறந்து வளர்ந்தவர். ரோஹித் பிறந்த சில ஆண்டுகளிலேயே அம்மாவை தனியே தவிக்கவிட்டு அப்பா வெளியேறிவிட, ஒற்றைப் பெண்ணாக ஒரு தையல் இயந்திரத்தை ஓட்டி மகன்கள் இருவரையும் வளர்த்தெடுத்தார் அந்தத் தாய். அந்தத் தையல் இயந்திரம், இரவு-பகலாக ஓடிக்கொண்டே இருக்கும். தனக்கான எல்லா ஆசைகளையும் மகிழ்ச்சிகளையும் துறந்துவிட்டு, எந்நேரமும் தையல் இயந்திரத்துக்கே தன்னை ஒப்படைத்துக்கொண்ட அம்மாவை அதில் இருந்து மீட்க வேண்டும் என்ற வேட்கை, ரோஹித் மனதில் ஆழப் பதிந்தது.

தான் ஒரு தலித் என்பதாலேயே, பள்ளி முதல் படித்த ஒவ்வோர் இடத்திலும் ஏராளமான இன்னல் களை எதிர்கொண்டார் ரோஹித். எங்குமே அவர் தனித்திருக்கவேண்டியதாக இருந்தது. மற்ற மாணவர்களை விடவும் அதிகமாகப் படிக்கவும் போராடவும் வேண்டியிருந்தது. அதற்காக அவர் சோர்வு அடைய வில்லை.  தன் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் வளர்ந்தது.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

கல்லூரியில் எந்நேரமும் நூலகத்திலேயே கதியாகக் கிடந்தார். அவருக்குப் பல்கலைக்கழகத்தில் கிடைத்த ஸீட்கூட கோட்டாவில் கிடைத்தது அல்ல. அவருடைய சிறப்பான மதிப்பெண்களால், அறிவுத்திறனால் மெரிட்டில் கிடைத்தது. ஆராய்ச்சிக்காக இரண்டு வெவ்வேறு ஸ்காலர்ஷிப்களைப் பெற்றதே அதற்குச் சான்று. அவர் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சி, புற்றுநோயை உண்டாக்கும் திசுக்களைக் கண்டறிவதைப் பற்றியது.
 
கவிதை எழுதுவார்; தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவர்; கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டவர்; சில ஆண்டுகளுக்கு முன்பு தலித்தியச் சிந்தனைகளில் உந்தப்பட்டு அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்தவர்.

``அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும். அதற்குள்ளாகவே தலித்துகளுக்காக மட்டும் அல்லாமல், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், திபெத்தியர்கள், திருநங்கைகள் என அனைத்துத் தரப்பினருக்காகவும் நாம் போராட வேண்டும் என வலியுறுத்தி, அதைச் செயல்படுத்தவும் வைத்தார். அவருக்குள் தலைமைப் பண்பு இயல்பாக இருந்தது. போராட்டங்களை, தானாக முன்னின்று நடத்திக் காட்டினார்'' என்கிறார் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த டிக்கன்ஸ்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல்கொடுத்ததும், பல்கலைக்கழகத்தில் `முசாஃபர் நகர் பாக்கி ஹை' என்ற ஆவணப் படத் திரையிடலுக்கு இந்து அமைப்புகளால் தடை வந்தபோது அதை எதிர்த்து நின்றதும், ரோஹித்தும் அவருடைய நண்பர்களும்தான். பின்னாளில் இதுதான் அவரை அலைக்கழிப் பதற்கான காரணமாகவும் அமைந்தது.

``சென்ற ஆண்டு மே மாதம் உழைப்பாளர்களுக்காக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தோம். அதற்கான செலவு களுக்கு எங்களுக்குள் பணம் திரட்டினோம். அந்தச் சமயத்தில் ரோஹித் `என்னிடம் பணம் இல்லை. நான் சமையல் வேலைகளைப் பார்த்துக்கொள்கிறேன்' என வந்து நின்றார். ஒரு டெம்போவில் வந்து இறங்கிய விறகுகளை, நாள் முழுக்க ஒரே ஆளாக வெட்டிக் கொடுத்தார். அவருக்கு, தான் ஒரு பெரிய ஸ்காலர், அறிவுஜீவி, விஞ்ஞானி போன்ற அகந்தை எதுவும் கிடையாது. நிறையக் கனவுகள்கொண்ட எளிய மனிதனாக மட்டும்தான் ரோஹித் எங்களோடு இருந்தார்'' என உணர்ச்சிப் பெருக்குடன் பேசுகிறார் கார்த்திக் பிட்டு.

ரோஹித்தின் மிக நெருங்கிய நண்பன் கோலங்கினி அசோக்குமார். ஆறு ஆண்டுகளாக இணைபிரியாத அறைத் தோழர். ஆனால், அசோக்குமார் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர். இருப்பினும் வேறுபாடுகளைத் தாண்டி நட்பை இருவரும் தொடர்ந்தனர்.

``இரவு உணவுக்குப் பிறகு ஹாஸ்டலுக்கு வெளியே இருக்கும் நீண்ட கற்பாறைகளின் மேல் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தபடி இருப்பார். இந்த நட்சத்திரம் பார்ப்பது சில நேரங்களில் இரவு முழுவதும் நீளும்.

ரோஹித், யாருக்கும் அடிபணியும் ஆள் அல்ல; எப்படிப்பட்ட மூர்க்கமான ஆட்களிடமும் மிகச் சாதாரணமாகப் பேசிவிடக்கூடியவர். அவருக்கு எத்தனை எத்தனையோ மிரட்டல்கள் வந்தபோதெல்லாம் அசரவே இல்லை. அவரை வீழ்த்த நிர்வாகம் எடுத்துக் கொண்ட ஆயுதம், ஸ்காலர்ஷிப் பணத்தை நிறுத்தியதுதான். இது அவருடைய உள்ளத்தை உடைத்துப்போட்டது. மாதம்தோறும் அவருடைய செலவோடு வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்த பணமும் நின்றுவிட... அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கூடவே ஹாஸ்டலைவிட்டும் வெளியேற்றியதும் திக்குமுக்காடினார்'' என்கிறார் கோலங்கினி அசோக்குமார்.

பிறந்ததில் இருந்து சாதிவெறியின் கோர முகத்தை நேருக்குநேர் எதிர்கொண்டு வளர்ந்தவர் என்பதால், நிராகரிப்புக்குப் பழகியவர்தான் அவர். ஆனால் தன்னை, `அடிப்படைவாதி, சாதி வெறியன், தேச விரோதி' என முத்திரை குத்தியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் `தலித் மாணவர்களுக்கு அட்மிஷன் கொடுக்கும்போது கொஞ்சம் விஷம் கொடுத்துவிடுங்கள் அல்லது நீண்ட கயிறு கொடுத்துவிடுங்கள்' எனக் கொந்தளித்தபடி கடிதம் எழுதியிருந்தார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

அடிபணிய மறுக்கும் எவரையும், அதிகாரம் தன் கொடுங்கரங்களால் எல்லா வித ஆயுதங்களையும் பிரயோகித்து வீழ்த்தும் என்பதற்கு ரோஹித் ஓர்  உதாரணம்.

`ஒருசிலருக்கு வாழ்வே சாபம்தான். என் பிறப்பே மரணத்தைப் போன்றதொரு விபத்துதான். என் பால்யகாலத் தனிமையில் இருந்து ஒருபோதும் என்னால் மீள முடியவில்லை. கடந்த காலத்தில் எவராலும் பாராட்டப்படாத குழந்தை நான்' - என்ற ரோஹித்தின் கடைசி வரிகள், வெறும் வார்த்தைகளாக மட்டும் அல்ல... தன் பிறப்பை, வாழ்வை சாபமாகக் கருதுகிற அளவுக்கு ஒரு படித்த இளைஞனை மாற்றிய சூழலின் மீது உமிழப்பட்ட எச்சில்.

அவருடைய மரணத்துக்குப் பிறகு, கடும் போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என மாணவர் போராட்டம் தேசம் முழுவதும் பரவுகிறது. சர்வதேச ஆராய்ச்சி யாளர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் தற்கொலை, ரோஹித்தில் இருந்து தொடங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ரோஹித் போலவே 23 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ பேர் கல்வியைக் கைவிட்டிருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கும் கலைந்துபோன கனவுகளுக்கும் பின்னால் இருக்கும் இந்துமத வெறியும், சாதி ஆதிக்க வெறியும் எந்த அணு ஆயுதத்தைவிடவும் கொடியது. சக மனிதர்களை தனக்குக் கீழாகக் கருதுவது ஒரு மனநோய். `சாதி சரி' என நினைக்கிற ஒவ்வொருவரும் மனநோயாளிதான். ரோஹித்தைக் கொன்றது நாம் அனைவரும்தான்!

ரோஹித் தற்கொலை நடந்தது எப்படி?

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்
ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** 2015, ஜூலை - ரோஹித் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் மூலமாக, தொடர்ச்சியாக பலவிதப் போராட்டங்களை முன்னெடுக்கிறார் என அவருக்கான உதவித்தொகை (ரூபாய் 25,000) நிறுத்தப்படுகிறது.

** 2015 ஆகஸ்ட் - 'முசாஃபர் நகர் பாக்கி ஹை' ஆவணப் பட தடையை எதிர்த்து ரோஹித், அம்பேத்கர் மாணவர் சங்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

**  ரோஹித் மற்றும் அவருடைய நண்பர்களை, `ரெளடிகள்' என அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுஷில்குமார், முகநூலில் எழுதுகிறார்.

** அதே நாள் இரவில் சுஷில்குமார் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற ரோஹித், `இப்படி எழுதலாமா?' என வாதாட, மன்னிப்புக் கேட்டு முகநூலில் எழுதியதை நீக்குகிறார் சுஷில்குமார்.

** 2015-ஆகஸ்ட் மாதம் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தன்னைத் தாக்கி, காயப்படுத்தியதாகப் புகார் கொடுக்கிறார் சுஷில்குமார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** விவகாரம் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல, ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் அலோக் பாண்டே இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி, சுஷில்குமார் சொல்வது பொய் என முதல்கட்ட விசாரணை அறிக்கையை அளிக்கிறார்.

** இதற்கிடையே சுஷில்குமாரின் தாயார், நீதிமன்றத்தில் பல்கலைக் கழகத்துக்கு எதிராகவும், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கு எதிராகவும் தனித்தனியாக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்கிறார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தலித் மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என பல்கலைக்கழகத்திடம் கேட்கிறது.

** சுஷில்குமார், மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந்தித்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** பண்டாரு தத்தாத்ரேயா, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, `அம்பேத்கர் மாணவர் சங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கடிதம் அனுப்புகிறார்.

** மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், `அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடுகிறது.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** 2015 - டிசம்பர் - துணைவேந்தர் அப்பா ராவ், ரோஹித் வெமுலா உள்ளிட்ட ஐந்து தலித் மாணவர்களை மீண்டும் இடைநீக்கம் செய்ய உத்தரவிடுகிறார்.

** 2016 ஜனவரி 3 - ரோஹித், தன்னுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு பேருடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

** 2016-ஜனவரி 17 - ரோஹித் தற்கொலை செய்துகொள்கிறார்.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

முனைவர் வசந்தா கந்தசாமி, பேராசிரியர், ஐ.ஐ.டி., சென்னை.

``நம் உயர்கல்வி நிறுவனங் களில் நிலவும் சாதிப் பாகுபாடுகள் மோசமானவை. பல பேராசிரியர்கள், தலித் மாணவர்களுக்கு கற்பிப்பதை தாங்கள் செய்யும் சேவையைப்போல நினைக் கிறார்கள். மனரீதியாக மாணவர் களைத் துன்புறுத்துகின்றனர். வகுப்பறைகளில், விடுதிகளில், வளாகத்தில் என எங்கும் அவர் களுக்கு அவமானங்கள் நடக்கின்றன. இந்தச் சூழலில் மாணவர்கள் எப்படி நிம்மதியாகப் படிக்க முடியும்?'' 

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

முனைவர் லட்சுமணன்

 இணைப் பேராசிரியர் -  சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.

``அண்ணா பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் பெண் ஒருவருக்கு  மெரிட்டில் ஸீட் கிடைத்தது. மிக நன்றாகப் படிக்கக்கூடிய பெண் அவர். சில மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி தரப்பில் இருந்து, `சித்தி கொடுமையால்தான் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்' எனச் சொல்லப்பட்டது. பிறகு விசாரித்தபோது அந்தப் பெண்ணுக்கு அம்மா, அப்பா, சித்தி என யாருமே இல்லை எனவும், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இது தெரிந்ததும், காதல் தோல்வியால்தான் இறந்தார் என அடுத்த பொய்யைச் சொன்னார்கள். உண்மையான காரணம் கடைசி வரை மறைக்கப்பட்டது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்துக் கொண்டிருந்த தலித் மாணவர் ஒருவருக்கு எம்.ஃபில் படிப்பில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது வழங்கப்பட்டது. பிறகு எந்தக் காரணமும் சொல்லப்படாமல் அந்த விருது வேறோர் ஆதிக்க சாதிப் பெண்ணுக்கு வழங்கப்பட்டது. அவர் எவ்வளவோ போராடியும் கடைசி வரை அவருக்கான அங்கீகாரம் வழங்கப்படவே இல்லை.

சிதைந்த கனவு

2007-ம் ஆண்டில் இதே ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் தலித் மாணவர் செந்தில். சேலத்தைச் சேர்ந்த இவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த `பன்னியாண்டி' என்ற சாதி, பன்றி மேய்ப்பவர்களுடையது. குடும்பத்திலேயே கல்லூரிக்குச் சென்று படித்த முதல் பட்டதாரி செந்தில்். மெரிட்டில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. ஓர் ஏழை தலித் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையுமாகப் படிக்கச் சென்றார்.

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

பலவிதமான அடக்குமுறைகளை, பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதியிலும் சந்திக்க நேர்ந்தது. `பன்னி மேய்க்கிறவனுக்கு எதுக்கு படிப்பு?' என, பேராசிரியர்கள்கூட கேட்டனர். சின்னச்சின்ன தவறுகளுக்கும் பெரிய தண்டனை, சிறிய வேண்டுகோளுக்கும் மிகப் பெரிய காத்திருப்பு என அலைகழிக்கப்பட்டார். அவருடைய சாதி அடையாளம், அவரை ஒரு விஷப்பாம்பைப்போல துரத்த, ஒருநாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் செந்தில்குமார். விஷம் குடித்து செத்துப்போன அந்த அறையின் மூலையில் கிடந்த நோட்டுப்புத்தகத்தில் எப்போதோ செந்தில் எழுதிவைத்திருந்தார், `என் நாட்டுக்காக ஒருநாள் நான் நோபல் பரிசைப் பெறுவேன்'.

செந்திலுக்காக எத்தனையோ ஆண்டுகள் காட்டிலும் மேட்டிலும் உழைத்திருந்தது அவருடைய குடும்பம். `அண்ணன் படிக்கட்டும்' என, தம்பியின் படிப்பு ஆறாம் வகுப்பிலேயே இடைநிறுத்தப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போதும் செந்திலின் மரணம், அந்தக் குடும்பத்தை நினைவுகளாகத் துரத்துகிறது. ``இன்னைக்கு ரோஹித் தம்பி செத்துப்போனதுக்கு என்னென்னவோ உதவிகள் பண்றாங்க, போராட்டம் நடத்துறாங்க. செந்தில் இறந்தப்போ இதே ராகுல் காந்தி கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனா, அண்ணனை அநாதைப் பிணமாகத் தூக்கிட்டு வந்தோம். எங்களுக்கு இப்ப வரைக்கும் யார்கிட்ட இருந்தும் எந்த உதவியும் வரலை... எங்களுக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை. ஆசை, ஆசையாகப் படிக்க வர்றவங்களை சாகடிக்கிறதை நிறுத்துங்க... அது போதும்'' என கலங்குகிறார் செந்திலின் தம்பி சரவணன்.

ஒருநாள் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்

நான் ஏன் மூர்க்கமுற்றேன் என

அந்த நாள் உங்களுக்குப் புரியும்

நான் ஏன் சமூக நலன்களுக்குச்

செயலாற்ற இயலவில்லை என

அந்த நாள் உங்களுக்குத் தெரியவரும்

நான் ஏன் மன்னிப்புக் கேட்டேன் என

அந்த நாள் உங்களுக்குப் புரியும்

வேலிகளைத் தாண்டியும் புதைகுழிகள் உண்டென

ரோஹித் வெமுலா - என்னும் துருவ நட்சத்திரம்

ஒருநாள் நீங்கள் என்னை வரலாற்றில் கண்டடைவீர்கள்

மோசமான வெளிச்சத்தின் மஞ்சள் பக்கங்களில்

அப்போது என் அறிவை வாழ்த்துவீர்கள்

அந்த நாளின் இரவில்

என்னை நினைப்பீர்கள், உணர்வீர்கள்

ஒரு புன்னகைப் பெருமூச்சை விடுவீர்கள்

அந்த நாள் நான் புத்துயிர்ப்பேன்!

- ரோஹித் வெமுலா, (2015 - செப்டம்பர்)

தமிழில்: இளங்கோ கிருஷ்ணன்