Published:Updated:

"35 ஃப்ரெண்ட்ஸ்... நாலு வருஷம்... சக்ஸஸ் ஓவியக் கண்காட்சி!" - நடிகை மேனகா சுரேஷ்

"35 ஃப்ரெண்ட்ஸ்... நாலு வருஷம்... சக்ஸஸ் ஓவியக் கண்காட்சி!" - நடிகை மேனகா சுரேஷ்
"35 ஃப்ரெண்ட்ஸ்... நாலு வருஷம்... சக்ஸஸ் ஓவியக் கண்காட்சி!" - நடிகை மேனகா சுரேஷ்

"நல்ல நோக்கத்துக்காக தொடங்கின ஓவியக் கண்காட்சி சிறப்பா நடந்து முடிஞ்சிருக்கு. அடுத்தமுறை இன்னும் பெரிய கான்செப்ட்ல எங்க தோழிகள் குழு களம் இறங்கப்போறோம்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை மேனகா சுரேஷ். இவர் உள்பட 35 தோழிகள் ஒன்றிணைந்து, மகாபாரத நிகழ்வுகளை விளக்கும் ஓவியக் கண்காட்சியை கேரளாவில் நடத்தியுள்ளனர். ஓவியங்கள் விற்பனையில் கிடைத்துள்ள தொகையைப் பயனுள்ள காரியங்களுக்குச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளனர். 

"எனக்கு பெயின்டிங் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் ஃப்ரீ டைமில் பெயின்டிங் பண்ணுவேன். என் ஓவியங்களை, இளைய மகள் கீர்த்தி சுரேஷ், ஸ்கூல் நிகழ்ச்சிகளுக்கு எடுத்துட்டுப்போவா. பொழுதுபோக்குக்காக மட்டுமே பெயின்டிங் பண்ணிட்டிருந்தேன். கேரளாவின் ஃபேமஸான மியூரல் பெயின்டிங் வரைய ஆசைப்பட்டேன். மற்ற ஓவியங்களைவிட இதில் கலைநயமும், உயிர்ப்பும் அதிகம் இருக்கும். தபோகுணம், ரஜோகுணம், சாத்விக குணம் என்கிற மூன்று திருவர்ண குணங்களைப் பிரதிபலிக்கும் தன்மை நேச்சுரல் மியூரல் ஓவியங்களுக்கு உண்டு. அதனால், இந்த வகை ஓவியத்தைக் கற்க, ப்ரின்ஸ் என்ற குருவிடம் நாலரை வருஷத்துக்கு முன்னாடி சேர்ந்தேன். 

ஓவிய வகுப்பிலிருந்த 17 பெண்கள் சேர்ந்து, இந்த ஓவியத்தை இளைய தலைமுறையிடம் வித்தியாசமான முறையில் கொண்டுபோக முடிவெடுத்தோம். 2007-ம் வருஷம், ராமாயண நிகழ்வைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரையும் ஐடியா உருவாச்சு. ஒருத்தருக்கு ரெண்டு படம்னு, 34 காட்சிகளை வரையத் திட்டமிட்டோம். காட்சிகளின் பெயரை பேப்பரில் எழுதி, குலுக்கல் முறையில் ஆளுக்கு ரெண்டு கான்செப்ட் ஓவியங்களை வரைய ஆரம்பிச்சோம். எனக்கு ராவணன் மற்றும் கும்பகர்ணன் காட்சிகள் வரையும் வாய்ப்புக் கிடைச்சுது. முடிவில், எங்க ஓவியங்களைக் கண்காட்சியாக வெச்சோம். கூடவே, நாங்க வரைந்த காட்சியமைப்புகளை மையப்படுத்தி, ஒரு புத்தகமும் வெளியிட்டோம்" என்கிறார் மேனகா சுரேஷ்.

இந்த முறை கூடுதல் தோழிப் பட்டாளத்துடன் மகாபாரத கதைக்கு உயிர்கொடுத்துள்ளார். "முதல் முயற்சியில் கிடைச்ச வெற்றி கொடுத்த உற்சாகத்தில், அடுத்து 35 பெண் தோழிகள் ஒன்றிணைஞ்சோம். இம்முறை மகாபாரதம். குலுக்கல் முறையில் ஒவ்வொருத்தரும் மூன்று ஓவியங்களைத் தேர்வுசெஞ்சோம். சுயம்வர நிகழ்வுக்காக, அம்பா-அம்பிகா-அம்பாளிக்காவை, பீஷ்மர் அழைச்சுட்டுப்போறது, உத்ரா சுயம்வர நிகழ்வு உள்பட மூன்று ஓவியங்கள் வரையும் வாய்ப்பு எனக்கு வந்தது. நாங்க 35 பேரும் இந்தியாவின் பல இடங்களில் இருக்கிறவங்க. பலரும் பல்வேறு துறையில் வொர்க் பண்றாங்க. அதனால், கிடைக்கிற ஃப்ரீ டைமில் ஓவிய இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து டிஸ்கஸ் பண்ணுவோம். வீட்டிலிருந்தபடியும் வரைவோம். வாட்ஸ்அப் குரூப்ல அப்டேட் கொடுத்துப்போம். எல்லோரும் தங்கள் ஓவியங்களை வரைஞ்சு முடிச்சு ஓரிடத்தில் சங்கமிக்க நாலு வருஷம் ஆகிடுச்சு'' என்றவர், கண்காட்சி அனுபவங்களைப் பகிர்கிறார். 

''எல்லோரும் குறிப்பிட்ட தொகையைப் பங்கிட்டு கண்காட்சி அரங்கு பிடிச்சோம். ஜனவரி 26-ம் தேதி கண்காட்சியை ஆரம்பிச்சோம். பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி. ஜனவரி 31-ம் தேதி கண்காட்சி நிறைவடைஞ்சுது. 'கதையைப் படிக்கிற உணர்வு, நீங்க வரைஞ்சிருக்கும் ஓவியங்கள் மூலமா கிடைச்சது'னு பார்வையாளர்கள் பாராட்டினாங்க. இந்த ஓவியங்களின் விற்பனை மூலமாக கிடைக்கும் தொகையைப் பயனுள்ள காரியங்களுக்கு உபயோகப்படுத்த முடிவுசெய்திருக்கோம். இதிகாசம் மற்றும் பாரம்பரிய விஷயங்கள் மீதான இன்றைய தலைமுறையின் ஆர்வம் குறைஞ்சுட்டிருக்கு. எங்க முயற்சி நல்ல ஒரு மாற்றத்துக்கு வழிசெய்யும் என நம்புறோம். 

என் பெரிய பொண்ணு ரேவதி மற்றும் என் ஃப்ரெண்ட் நடிகை ராதா உள்ளிட்ட பலர் கண்காட்சியைப் பார்க்க வந்தாங்க. ஆனா, சின்னப் பொண்ணு கீர்த்தி சுரேஷ் மிஸ்ஸிங். 35 தோழிகள் திட்டமிட்டு ஒரு நல்ல நோக்கத்தை செய்து முடிச்சிருக்கோம். அடுத்தமுறை இன்னும் பெரிய விஷயத்தைக் கையில் எடுக்கப்போறோம். தசாவதாரம் கதையை ஓவியமா வரைஞ்சு கண்காட்சி அமைக்கும் எண்ணமும் இருக்கு" எனப் புன்னகைக்கிறார் மேனகா சுரேஷ்.