சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்!’’

ஸ்வீட் மெமரீஸ்

‘‘கல்யாணத்துல பையன், பொண்ணு, ரெண்டு வீட்டுக்காரங்க மட்டும் சந்தோஷமா இருந்து, விருந்தினர்கள் எல்லாம் பொதுக்கூட்டத்துக்கு வந்த மாதிரி ஃபார்மலா இருந்தா, அந்த விழா களைகட்டாது. அதனால நான் என்னோட திருமணம் கொண்டாட்டமா, சந்தோஷமா, ஆயுளுக்கும் அசைபோடும் நினைவுகளைத் தரணும்னு ஆசைப்பட்டேன். என் கணவர் அருணுக்கும் அதே ஆர்வம் இருந்தது, சர்ப்ரைஸ்! நாங்க ரெண்டு பேரும், எங்க ரெண்டு குடும்பங்களுக்கும் பக்காவா பிளான் செய்து அசத்திட்டோம், எங்க கல்யாணத்தை!’’  - சரண்யா சந்தோஷமாகப் பேசியபடியே, ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த தன் திருமணத்தின் ஆல்பத்தைப் புரட்ட, அருகில் இருந்து ரசிக்கத் தயாராகிறார் அவர் கணவர் அருண். சென்னையைச் சேர்ந்த இந்தத் தம்பதியின் வியக்கத்தகு திருமணத்தின் ஹைலைட்ஸ், சரண்யா வார்த்தைகளில்...

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

ஆஹா அலங்காரம்!

‘‘கல்யாண வீட்டின் குதூகலத்தை நுழைவுவாயிலிலேயே பளிச்னு சொல்றது, அலங்காரம். எங்க திருமண மண்டப அலங்காரத்துக்கு ‘விபா’ குரூப்பை ஏற்பாடு செய்தோம். பெரிய மண்டபமா வேணும்னு, மணப்பாக்கத்துல இருக்கிற EVP ராஜலக்ஷ்மி பேலஸை புக் செய்தோம். பேருக்கேத்த மாதிரியே, டெகரேஷன் எல்லாம் முடிஞ்சு பார்த்தப்போ பேலஸ் மாதிரி ஆகியிருந்தது மண்டபம். பேசஜ் டிசைனிங், மேடையில் `கொலோசியம்’ டிசைனிங், டைனிங் ஹால் டெகரேஷன்னு அசத்திட்டாங்க. இந்த அலங்காரத்தை எல்லாம் பார்த்த பலரும், இது சினி ஃபீல்டு ஆளுங்க கல்யாணம்போலனு நினைச்சாங்க. இன்னும் சிலர், அலங்காரத்தைப் பார்க்கிறதுக்காகவே மண்டபத்துக்கு வந்ததா அங்கிள் (அருணின் அப்பா) சொன்னார்!

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

விருந்தினர்களுக்கு எக்ஸ்ட்ரா என்டர் டெயின்மென்ட்!

ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்தான் வேணும் என்பதில் நானும் அருணும் உறுதியா இருந்தோம். அப்போதான் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா தரப்பும் அவஸ்தையில்லாம நிகழ்வில் கலந்துக்க முடியும். இன்னொரு பக்கம், பொதுவா எல்லாருமே வீக் எண்ட்டுக்கு ஒரு பிளான் வெச்சிருப்பாங்க. அதை விட்டுட்டு நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாங்கன்னா, அதுக்கு மரியாதை செய்ற விதமா கொஞ்சம் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் கொடுக்க முடிவெடுத்தோம். அதனால சங்கீத் நிகழ்ச்சிக்கு `டிஜே’ (DJ) ஏற்பாடு செய்தோம். குட்டீஸ் முதல் பெரியவங்க வரை எல்லோருக்கும் பிடித்தமான பாட்டுகள் போட்டு, ஆட்டம் பாட்டம்னு கொண்டாட வெச்சாங்க, `டிஜே’ வின்சென்ட் குழுவினர்!

இலியானா மாதிரி என்ட்ரி!

நான் சங்கீத் நிகழ்ச்சிக்கு என்ட்ரி ஆகும்போது வித்தியாசமா இருக்கணும்னு, ‘நண்பன்’ படத்துல இலியானா வருவதுபோல யெல்லோ வெஸ்பா வண்டியில் வந்தேன். இதுக்காகவே சிலரை இம்சை செய்து, கல்யாணம் நடந்த முதல் மாடிக்கு வண்டியைத் தூக்கச் சொல்லி வாங்கிக்கட்டிக்கிட்டாலும், நான் வெஸ்பாவில் உள்ள வந்தப்போ, மண்டபமே கூச்சல் போட்டது... பரவசம்!

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

பல்லக்கும் சாரட்டும்!

திருமணத்துக்கு முதல் நாள், நிச்சயதார்த்தம். அப்போ என் சகோதரர்கள் என்னைப் பல்லக்கில் தூக்கணுமாம். சகோதரர்கள் இல்லாததால, என் நண்பர்களும் அருணின் நண்பர்களும் தான் என் பல்லக்கைத் தூக்கினாங்க. மறுநாள் காலை முகூர்த்தம் முடிந்ததும், மாலை ரிசப்ஷன். அதுக்குச் சாரட் வண்டியில் ஊர்வலம் வந்தப்போ அரை மணி நேரம் தொடர்ந்து சரவெடி வெச்சு, விழாவையே அமர்க்களப்படுத்திட்டாங்க!

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

மெனுவுக்கு 22 செஃப்

விருந்தினர்களுக்கான பந்தியைச் சிறப்பா செய்ய, பல கேட்டரிங்களில் சேம்பிள் பார்த்துட்டு, இறுதியா ‘ஐயப்பா கேட்டரிங்’கை முடிவு செய்தோம். மொத்தம் 22 செஃப், சைனீஸ், நார்த் இண்டியன், ஆந்திரா ஸ்டைல், கேரளா ஸ்டைல்னு ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு ரக உணவைச் சமைச்சு அசத்திட்டாங்க. இதனாலேயே ஒவ்வொரு முறையும் ‘இப்போ என்ன ஸ்பெஷல்’னு ஒரு எதிர்பார்ப்புடனே பந்தியில் அமர்ந்தாங்க எல்லோரும்! கட்டு சாதம் நிகழ்ச்சிக்கும், எல்லோருக்கும் மிளகுக் குழம்பு, சீரக ரசம்னு செரிமானத்துக்குத் தகுந்த உணவு பரிமாற, சாப்பாடு பெரிய ஹிட்!

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

போட்டோ பூத்!

திருமண நினைவுகளை, விருந்தினர்களுக்கும் மனசோட மட்டுமில்லாம கையோடவும் பரிசளிக்க நினைச்சோம். அதுக்காக ஒரு போட்டோ பூத் ஏற்பாடு செய்தோம். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அலைபாயுதே’, ‘காக்க காக்க’, ‘உயிரே’ படங்களின் ஃபேமஸ் ஸ்டிஸ் சாயலில், நானும் அருணும் போட்டோ ஷூட் செய்தோம். அதை `போட்டோ பூத்’தில் பேக் கிரவுண்டா வெச்சோம். செல்ஃபி,  குரூப்பி, போட்டோகிராஃபர்கிட்ட சொல்லி ஒரு போட்டோனு கெஸ்ட்ஸ் எது வேணும்னாலும் அங்க எடுத்துக்கலாம். உடனடியா அதை ஃபிரேம் செய்து, ரிட்டர்ன் கிஃப்ட்டாகக் கொடுக்கிற ஏற்பாடும் செய்தோம். மெஹந்தி ஸ்டால், பெண்களுக்குப் பிரியமாகிப்போன இன்னொரு ஏற்பாடு!

வீடியோ பூத்!


வீடியோ பூத்தில் திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், எங்க வரவேற்பு, உபசரிப்பைப் பற்றித் பகிர்ந்துக்கிற, எங்களை வாழ்த்த, எங்களோட அவங்க சம்பந்தப்பட்ட பசுமை நினைவுகளை மீட்டெடுத்துப் பேச... அதையெல்லாம் வீடியோவா ரெக்கார்டு செய்தோம். இப்போ அதைப் பிளே செய்து பார்த்தா, அவ்ளோ சந்தோஷமா, நெகிழ்ச்சியா இருக்கு. அருண், ‘கிரேஸி’ மோகனின் டைஹார்ட் ஃபேன். அவரை எங்க கல்யாணத்துக்கு அழைத்திருந்தோம். ஆனா, அவரால வர முடியலை. இருந்தாலும், அவர் பேசிய ஒரு கிரீட்டிங் வீடியோவை ப்ளே செய்தோம்!

‘‘நீங்களும் உருவாக்கலாம்  ஸ்வீட் மெமரீஸ்!’’

ஹைலைட் மெமரி!

முகூர்த்தத்தில் மறக்க முடியாத சர்ப்ரைஸ் நடந்துச்சு. அருண் லண்டன்வாசியா இருந்ததால, அங்கிருக்கும் வெடிங் ஸ்டைல் பார்த்துப் பழகிட்டாப்ல. தாலிகட்டின அடுத்த நிமிஷம் எனக்கு நெத்தியில் முத்தம் கொடுத்துட்டார். எனக்குத் தர்ம சங்கடமா ஆயிடுச்சு. ஆனா, எல்லோரும் கிண்டல், கேலினு கலாய்க்க ஆரம்பிக்க, அதுவே எங்க கல்யாணத்தின் ஹைலைட் மெமரி ஆகிப்போச்சு.

இன்னிக்கும் எங்க வீட்டுக்கு வரும் உறவு, நட்புகள், எங்க கல்யாணக் கதையை அஞ்சு நிமிஷமாவது பேசாமப் போகமாட்டாங்க. வரலாறு படைக்கிறது கஷ்டமா இருக்கலாம். ஆனா, ஸ்வீட் மெமரீஸை நிச்சயம் எல்லோரும் உருவாக்கிக்கலாம்!’’ - கண்களும் சிரிக்க முடித்தார் சரண்யா.

- ச.சந்திரமௌலி

நானும் அருணும்!

``நானும் அருணும் திருமண வலைதளத்தில் பதிவு செய்திருந்தோம். அங்கதான் என்னைப் பார்த்து, அவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். ஆன்லைனில் கொஞ்சநாள் பழகினோம். லண்டனில் இருந்து அவர் சென்னைக்கு வந்தப்போ சந்திச்சோம். பிடிச்சதும் வீட்டில் சொன்னோம். குலம், ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணத் தேதி குறிச்சிட்டோம். இப்போ நான் ஆஸ்திரேலியாவில் பிசினஸ் அனலிஸ்ட்டாக வேலை பார்க்கிறேன். அருண் சென்னையில் நெட்வொர்க் அட்மின்-ஆக இருக்கார். ஒருதடவை நான் ஊருக்கு வந்துட்டுப் போனேன்னா, அடுத்த முறை வர்ற வரைக்கும் பிரிவைத் தாங்குற அன்பை பரஸ்பரம் பகிர்ந்துப்போம். தனக்கு ஒரு வாயாடிதான் வேணும்னு என்னைத் தேர்வு செய்த அருணுக்கு நானும், எனக்கு அருணும் மேட் ஃபார் ஈச் அதர்!’’