சைக்கிள் ஓட்ட குரங்குப்பெடலில் பழகும்போது, ரோட்டில் வரும் தண்ணீர் லாரியைப் பார்த்து ஹேண்டில்பாரில் பிரேக் டான்ஸ் ஆடியதில், சாலையில் இந்தியா மேப் மாதிரி விழுந்து முட்டியைச் சிராய்த்துப் புண்ணாக்கியது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். இரண்டே நாட்களில் அந்தப் புண் ஆறிப்போயிருக்கும். அந்த மொறுமொறுப்பான ஆறிய மேல் தோலை, மெள்ள மெள்ள சுகமான வலியுடன் பிய்க்கப் பிய்க்க, உள்ளே வெளுத்த புதுத் தோல் இருப்பதைப் பார்த்தும், நம் உடலின் குணப்படுத்தும் வேகம் கண்டும் சிலாகித்திருப்போம்.

இன்றைக்கு சைக்கிள் சரிந்தாலும், ஆளைத் தாங்கும்படி பின் சக்கரத்தின் பக்கவாட்டில் குட்டியாக இரண்டு சக்கரங்கள் வந்ததில்... இப்படி விழுப்புண் பெற்ற அனுபவம் இப்போதைய குழந்தைகளுக்கு அதிகம் இல்லை. அப்போது எல்லாம் அது வீரத் தழும்பு. சிராய்ப்பின் தொடர் நிகழ்வாக, டவுசரின் விளிம்பு அதில் உரசி உரசி ஏற்படும் காந்தல் வலியும் சரி, `எங்கலே போய் விழுந்து எந்திச்சே... கண்ணு என்ன பிடதியிலா இருந்துச்சு?' என யாரும் ஏசிவிடக் கூடாது என்பதற்காக, அப்பவே லோ ஹிப்பில் டவுசரை மாட்டித் திரிந்த காலமும் சரி, மறக்கவே முடியாத கல்யாண்ஜி கவிதைகள். அந்தச் சிராய்ப்புப் புண்ணுக்கு, முதலில் எச்சில் தொட்டு வைத்ததும், வீட்டுக்கு வந்ததும் மஞ்சள் தூளை நீரில் குழைத்துச் சூடாக்கி அம்மா தடவியதும் ஏதோ மாஞ்சா தடவியது மாதிரி குதித்ததும், சின்ன வயதின் சித்தன்னவாசல் சித்திரங்கள்.

இப்படியான சிராய்ப்புகளும் சித்திரங்களும் கவிதைகளும் வழக்கொழிந்து விட்டன. ஆனால், இப்படியான காயம், புண், வலி, கரிசனம், அடுத்த நாளே ஆறிவிடும் நடவடிக்கை எல்லாம் சைக்கிள் காயத்தில் மட்டும் அல்ல; தினம் தினம் நம் உடலுக்குள்ளேயும் சைக்கிளாக நடக்கும் விஷயமும்கூட.

பெப்பர் சிக்கனில் புரண்டு எழுந்த பின்னர், கடைசியாகக் கட்டித்தயிர்ச்சோற்றுக்கு வலது கையில் வத்தக்குழம்பைத் தொட்டு, இடது கையில் மோர்மிளகாயைப் பிடித்துக் கடித்து, இடையே `கடப்பா மாங்கா' ஊறுகாயையும் ஒரு வாய் தொட்டு, கண்ணீர் மல்க ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடும்போது இரைப்பை முழுக்க சிராய்ப்பை உருவாக்குவோம். காரசாரமாகச் சாப்பிட்டு, பின்னர் கொலைவெறித் தாக்குதலில் தப்பிப்பது போன்ற பயணமும், முகமற்ற மனிதனுக்கான புன்னகைக்கு, பொய் முகத் தோடு நித்யகண்டப் பணியும் செய்ததில் அதே இரைப்பையின் சிராய்ப்பில் சில துளி அமிலம் கூடுத லாகத் தூவுவோம்.

உயிர் பிழை - 24

`வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொரு உருண்டை யும் உருளுதடி...' என ஸ்லோமோஷனில் ஓடிப் பாடிய அந்த நாள் காதலி, இப்போது புரொமோஷனில் மனைவியாக பெரிய ஆபீஸ ராகி எக்குத்தப்பாகக் கேள்வி கேட்கும்போது விக்கித் திக்கிப் பொய்யாகப் பேசும்போது உண்மையிலேயே வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே உருண்டை யாக ஒன்று உருளும். எண்டோஸ் கோப்பியில் அதைப் பார்க்கும் இங்கிலீஷ் டாக்டர், `ஏன் இப்படி வயிறைப் புண்ணாக்கி வெச்சிருக்கீங்க..? இப்படியே விட்டா கேன்சர் வந்துடப்போகுது' எனப் புளியைக் கரைக்கும்போது, அதே புண்ணில் இன்னும் கொஞ்சம் மாஞ்சா தூவியதுபோல் வலிக்கும்.

ஆமாம்... நாள்பட்ட ஆறாத புண் எதுவும் புற்றாகும் வாய்ப்பு எப்போதும் உண்டு. அது உள்ளே வயிற்றில் இருந்தாலும் சரி, வெளியே ஆறாத நீரிழிவுப் புண்ணோ அல்லது ரத்தநாள அடைப்பில் ஸ்தாபிதத்தில் வந்த புண்ணாக இருந்தாலும் சரி. ` `கோலிசோடா குடிச்சா சரியாகிடும்' என்ற நினைப்பில் உள்ள சின்ன காஸ் ட்ரபிளுக்கு ஏன் சார் கேஷுவாலிட்டி சீன் வைக்கிறீங்க?’, `ரொம்பப் பயமுறுத்தாதீங்க பாஸ்' என நீங்கள் படபடப்பது புரிகிறது. எப்போதும் நாள்பட்ட வயிற்றுப்புண்ணை அலட்சியப் படுத்திவிட முடியாது. ஆனால், இன்று இளசுகளால் பெரிதும் அலட்சியப்படுத்தப்படும் வியாதி, வயிற்றுப்புண். மிக எளிதாகக் குணப் படுத்தி ஆரோக்கியத்தை நங்கூரமிட வைக்க முடியும் என்ற நிலையை முற்றிலும் உதாசீனப் படுத்தி, பல வருடங்களாக ஜெலுசிலிலும் ஸிண்டேக்கிலும் காலம் கடத்தும் இளம் நண்பர்கள் நம்மிடையே நிறைய உள்ளனர்.

சோழிங்கநல்லூரில் இருந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பனியன் கணக்கைப் பார்த்து விட்டு நடு இரவில் கிளம்பும் பல லட்சக் கணினிப் பொறியாளர்களை மோப்பமிட்டால், பாதிக்கு மேல் இப்படியான ஏப்ப வியாதியில் இருப்பது தெரியும். ஏப்ப வியாதி, வெறும் அவஸ்தையை மட்டும் தருவது அல்ல;  அவ்வப்போது அது நடத்தும் கலவரமும் பெரும் வலியைத் தரும். இரவு 11 மணிக்கு பணி முடிந்து பெரும் பசியில் சாப்பிட்ட லெக்பீஸும் பிரியாணியும், நடு இரவைத் தாண்டி குப்புறப் படுக்கும்போது இரைப்பையின் மேல்வாசலான `பைலோரிக் வாசலை' உடைத்து, தொண்டை வரை எரிச்சலுடன் நழுவி வரும். கூடவே, பின்னணியில் குபீர் வாயு கிளம்பி அடைத்துக்கொண்டு வர, திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழும்பி நெஞ்சைப் பிடித்து உட்காரவைக்கும். `என்னங்க மாரடைப்பா... இன்சூரன்ஸ் கார்டு எங்கே இருக்கு?' என புத்திசாலி மனைவி கிளப்பிவிட, இன்சூரன்ஸைப் பார்த்த ஜோரில், ஈசிஜி எக்ஸ்ரேவில் தொடங்கி எண்டோஸ்கோப்பி, கலைடாஸ்கோப் வரை சிரத்தையாக மருத்துவ மனை எடுத்து முடிக்கும்போது `நெஞ்சு வலி இல்லை. இது வயிற்று வலி' என ஊர்ஜிதமாகும். அப்போது வயிற்றுவலியின் தீவிரம் பில்லை நினைத்து எகிறும்.

உயிர் பிழை - 24

பெரும்பாலான வயிற்றுப்புண்கள், இயற்கைப் பேரிடராக வருவது இல்லை. கார உணவு, நேரம் தப்பிய உணவு, மன அழுத்தம், வேலைப்பளு, மது, புகை, வலி மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் அவசியமற்ற அதிகபட்சப் பிரயோகம், தூக்கமின்மை என நம் ஒழுக்க மின்மையால் உருவாகுபவை. நாம் அனுப்பும் இரக்கமற்ற உணவு, உணவுக்குழல், இரைப்பை, குடல் என அனைத்தையும் புண்ணாக்க முயற்சி செய்ய, சைக்கிளில் இருந்து விழுந்த சிராய்ப்பு சின்னச்சின்ன அக்கறையில் உடனுக்குடன் ஆறிவிடுவதுபோல், நம் உடலின் நொதிகளும், உறுப்புகளின் உட்சுவரில் உள்ள பாதுகாப்பு அரணும் சேர்ந்து அல்சர் ஆக்காமல் பாதுகாக்கும். `இல்லை... இல்லை... என்னதான் பாதுகாப்பான, பழக்கமான உணவாக இருந்தாலும் வயிற்றுப்புண் தொடர்ந்துகொண்டே இருக்கிறது' என்போரை சோதித்தபோது, அவர்கள் வயிற்றுப் பகுதியில் வாழும் ஒரு பாக்டீரியாவை நவீன உலகம் கண்டறிந்து அதற்கு நோபல் பரிசும் பெற்றது. அந்த பாக்டீரியாவுக்குப் பெயர் `ஹெலி கோபாக்டர் பைலோரை'. வயிற்றில் சுரக்கும் அமிலத்திலும் அழியாமல் வயிற்றின் உள் உறையைப் புண்ணாக்கி ஒளிந்து வாழும் இந்தக் கிருமி, பெரும்பாலான நாள்பட்ட வயிற்றுப் புண்ணாளருக்கு இருக்கிறது. இதில் கலவரப் படுத்தும் விஷயம் என்ன என்றால், இந்தக் கிருமி இருப்போரில் ஒரு சதவிகிதம் பேருக்கு நாள்பட்ட புண், இரைப்பைப் புற்றாக மாறும் என்பதுதான்.

இந்தக் கிருமிக்கு எதிரான `முப்படை' எதிர் நுண்ணுயிரிகள் வெற்றிகரமாக இயங்குவதாகப் பரிந்துரைக்கப்பட்டாலும், பல நேரங்களில் மீண்டும் மீண்டும் இந்தக் கிருமி இரைப்பையில் குத்தாட்டம் போடுவதுதான் வேதனையான விஷயம்.

உணவில் சின்னச்சின்ன அக்கறைகள் இந்தக் கிருமியை அடித்துவிரட்டும் அல்லது ஓரமாக அடக்கி ஒடுக்கிக் குத்தவைக்கும் என்பது இப்போது புலப்பட ஆரம்பித்திருக்கிறது. புரோபயாட்டிக்ஸ் என வளர்ந்திருக்கும் அந்தத் துறை, அழிச்சாட்டியம் பண்ணும் அக்கிரமக்காரக் கிருமியை, அமைதியாக நமக்கு நல்லதுசெய்யும் நம் குடல்வாழ் நுண்ணியிரியை வைத்து நொங்கு எடுப்பது. அப்படியான நல்லதுசெய்யும் புரோபயாட்டிக்கில் முதல் இடம், நம் மோரில் உள்ள லாக்டோபாசில்லஸ்தான். `தக்காளி சாம்பாரும் பூண்டு ரசமும் எறா பிரியாணியும் நண்டு ரசமும் சாப்பிட்ட பின்னர், நிறைவாக ஒரு கப் தயிர் அல்லது ஒரு டம்ளர் மோரில் முடிப்பது வயிறுக்கு மட்டும் அல்ல, உயிருக்கே நல்லது' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

`நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்போர்தம் பேருரைக்கிற் போமே பிணி' என்பது, ஆயிரம் ஆண்டு அனுபவக் குறிப்பு (Experiential Inferences). இன்று தேடப்படும் அனுபவக் குறிப்புகளுக்கு சற்றும் குறைவு இல்லாத முன்னோடி முடிவு. ஒரு கோப்பை மோரில் 260 மி.கி கால்சியமும், ஏழெட்டு மில்லியன் லாக்டோபாசில்லஸும் கிடைக்கும் என்பதைப் பார்க்கும்போது இனி `நீரின்றி அமையாது உலகு'-க்கு அடுத்த பக்கத்தில் நாம் `மோரின்றி அமையாது உடம்பு' என்றும் எழுதிக்கொள்ளலாம்.

`இரைப்பையில் `உயிர் பிழை' உருவாக்கக்கூடும் என எச்சரிக்கப்படும் இந்த ஹெலிகோபாக்டர் பைலோரைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மூலிகைகளைப் பட்டியலிட்டாலும், மோரைத் தாண்டி பெரிதும் பயனாவது பூண்டும் தேனும்தான்' என நவீன உலகம் உறுதிப்படுத்தி யுள்ளது. அதிலும் அன்று சித்த மருத்துவத்தில் வயிற்றுப்புண்ணுக்கு எளிய மருந்தாக அதிமதுரத் தூளை தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்வது உண்டு. நாங்கள் சித்த மருத்துவம் பயின்ற காலத்தில் வெறும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருந்தாக மட்டுமே பார்த்த விஷயம் அது. இன்றைய நுண்கண்ணாடிக்குள் பார்க்கும்போது, இந்தக் கூட்டணிப் புண்ணையும் தாண்டி அது உயிர் பிழை உருவாகாமல் ஹெலிகோபாக்டரையும் விரட்டும் கூட்டணி என்பது புரிகிறது.
 

உயிர் பிழை - 24

நியூஸிலாந்தின் விளிம்பில் உள்ள ஓர் ஊர் `மனுக்கா'. அங்கு இருந்து வரும் மனுக்கா தேனுக்கு, உலக அரங்கில் கொள்ளை விலை.

100 கிராம் மனுக்காவின் விலை சில நூறு டாலர். `அந்தத் தேனும் சரி, ஆப்பிரிக்கக் காடுகளில் சேகரிக்கப்படும் தேனும் சரி, புற்றுநோய்க்கு மருந்தாக பாரம்பர்ய மருத்துவம் பேசுவது அவை ஹெலிகோபாக்டரை விரட்டுவதால்தான்' என்கிறது நவீன விஞ்ஞானம். நம் ஊரின் பொதிகைத் தேனும், சத்தியமங்கலக் காட்டுத் தேனும், கொல்லிமலைத் தேனும் சரி அல்லது ஒவ்வொரு பருவகாலத்துக்கும் அல்லது அந்தப் பருவத்தில் பூக்கும் பூக்களை ஒட்டி, அதன் சுவையில் கிடைக்கும் வெட்பாலைத் தேன், வேம்புத் தேனும் சரி... இப்படி எல்லாமே மனுக்கா தேன் மாதிரி பயனுள்ளதாகத்தான் இருக்கும்.

நாள்பட்ட வயிற்றுப்புண் உள்ளவர்கள் காரத்தை மட்டும் அல்லாமல் வெள்ளைச் சர்க்கரையை ஒட்டுமொத்தமாக விலக்கி, இனிப்புச் சுவைக்காக தேனுக்கு மாறுவது நல்லது. ஒருவேளை அவர்கள் இரைப்பைக்குள் அந்தக் கிருமி இருந்து புற்றாக மாறுவதைத் தடுக்க, தேன் கொஞ்சமேனும் உதவும்.

அதேபோல் நவீன தாவர மருந்து அறிவியலில் இரைப்பைப் புற்று உருவாவதை ஹெலி கோபாக்டரை அடக்கித் தடுக்க அடையாளம் காட்டும் இன்னும் இரு தாவரம் Green Tea மற்றும் பிராக்கோலி. Isothiocyanate sulforaphane (SF) எனும் வேதிச்சத்து உள்ள பிராக்கோலி, ஜப்பானிய நாட்டுப் பாரம்பர்ய மருத்துவத்தில் புற்றுக்கான முக்கிய உணவு. அதேபோல் Catechins நிறைந்த Green Tea சீன பாரம்பர்ய மருத்துவத்தில் பிரபலமான பானம்.

ஆடம்பரத்துக்காக வேகவேகமாக வெளிநாட்டு ஆடி கார் முதல் ஜாக்கி ஜட்டி வரை மாறும் இளசுக் கூட்டம், இப்படி கிரீன் டீ, பிராக்கோலி மாதிரி நலம் தரும் வெளிநாட்டு விஷயங்களுக்கும் சேர்ந்து மாறினால் நல்லது. ஆடியும் ஜாக்கியும் திருப்பூரிலும் ஸ்ரீபெரும்புதூரிலும் தயாராவதுபோல,  கிரீன் டீயும் பிராக்கோலியும் நீலகிரியிலும் கொடைக்கானலிலும் தயாராக ஆரம்பித்து விட்டதாம்.

உணவில் காரத்தையும் புளிப்பையும் தந்த நம் உணவுக் கலாசாரம், ஒருவேளை இந்தக் காரமும் புளியும் கொஞ்சம் கூடுதலாகச் சேர்ந்து புண்ணாக்கி விடக் கூடாதே எனக் கடைசிப் பரிமாறலாக மோரை கைக் கவளத்தில் ஊற்றியது. அந்த அக்கறையும் புரிதலும் எங்கே? வயிற்றுக் குடலில் அமர்ந்து நன்மை பயக்கும் நுண்ணுயிரியை எல்லாம் நசுக்கிச் சிதைக்கும் மைதாவில் வேதி சேர்த்துப் பொங்கவிட்டு, எடுக்கும் பீட்சாவில் மரபுக்கும் மண்ணுக்கும் பரிச்சயம் இல்லாத புரியாத ரசாயன உணவைத் தூவி, வயிற்றைப் புண்ணாக்கிவிட்டு, இதோடுவிட்டால் எப்படி, கொஞ்சம் இதைத் தூவுங்க... என கார்சினோஜன் நிரம்பிய மிளகாய் வற்றலை அலங்கார நெகிழித் தாளில் அதற்குத் தொட்டுக்க அனுப்பும் அவர் களின் அக்`கறை' எப்படி..? கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே!

- உயிர்ப்போம்...