Published:Updated:

முகம், கண், உடல்... இப்படியெல்லாம் சுத்தப்படுத்துங்கள் மணப்பெண்களே! #BeautyTips

முகம், கண், உடல்... இப்படியெல்லாம் சுத்தப்படுத்துங்கள் மணப்பெண்களே! #BeautyTips
முகம், கண், உடல்... இப்படியெல்லாம் சுத்தப்படுத்துங்கள் மணப்பெண்களே! #BeautyTips

''இந்த மாசம் கல்யாணம்; அடுத்த மாசம் கல்யாணம்'' என்று நம்மைச் சுற்றி நிறைய மணப்பெண்களின் முகங்கள் மகிழ்ச்சி மத்தாப்பூவாகக் கல்யாண சீசனை ஞாபகப்படுத்துகிறது. ஒரு தலைமுறைக்கு முன்புவரை திருமணம் முடிவான பெண்களுக்கு, ''வெயில்ல நிக்காதடி; எண்ணெய் தேய்த்துக் குளிம்மா; நலங்குமாவு தேய்ச்சுக்க'' என வீட்டுக்குள்ளேயே பியூட்டி டிப்ஸ் கிடைத்துவந்தது. இன்றைய பெண்களுக்கு பிரைடல் பேக்கஜுக்கு பார்லர்கள் இருக்கின்றன. அதையும்தண்டி, சருமம், கூந்தல், நகங்கள், கண்கள், உதடு என்று கேமிராவில் அதிகமாக போகஸாகும் பகுதிகளை வீட்டிலேயே, இயற்கையாக ஜொலி ஜொலிக்கவைக்க, பாரம்பரிய அழகுக் குறிப்புகளையும், ஸ்பா வழிமுறைகளையும் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் மோனிஷா பிரசாந்த். 'பார்லர் டிரீட்மென்ட்ஸ் எனக்கு அலர்ஜி ஏற்படுத்தும்' என்கிற பெண்களுக்கு, இந்த இயற்கை டிப்ஸ் கைக்கொடுக்கும். 

சி.டி.எம். மறக்காதீங்க! 

வேலை முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ளென்சரால், முகச்சருமத்தின் துவாரங்களைத் திறந்து, அதிலிருக்கும் அழுக்குகளை நீக்கிவிட்டு, டோனரால் அந்தத் துவாரங்களை மூடி, ஈரப்பதத்துக்கு மாய்ஸ்ரைசர் போடுங்கள். எல்லாவற்றையும் 5 நிமிடங்களில் செய்துவிடலாம். முகத்தில் அழுக்கு, பிசுக்கு, தூசி தேங்காமல் இருக்கும். 

அமிலமும் காரமும்! 

உடம்பில் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் பேலன்ஸாடாக இருந்தால், நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். இதே ஃபார்முலாதான் அழகுக்கும். உச்சந்தலையில் ஊறவைக்கிற எண்ணெய், அமிலத்தன்மை கொண்டது. அந்த எண்ணைய்யை போக்கும் சீயக்காய் காரத்தன்மை கொண்டது. இந்த இரண்டையும் பயன்படுத்தி, வாரம் இரண்டு முறை தலைக்குக் குளிக்கவும். கூந்தலும் சருமமும் ஆரோக்கியமாகப் பளபளக்கும். விருப்பப்பட்டவர்கள் கண்டிஷனர் அப்ளை செய்துகொள்ளலாம். 

ஸ்பா பாடி பாலிஷிங் வீட்டிலேயே! 

'ஸ்பா பாடி பாலிஷிங் எனக்கு ஒத்துக்குமா? அது ரொம்ப காட்ஸ்லியாச்சே; கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை பாடி பாலிஷிங் செஞ்சா எவ்ளோ நல்லாயிருக்கும்' என நினைக்கும் மணப் பெண்கள், இந்த பாடி பாலிஷிங்கை வீட்டிலேயே சூப்பராக செய்துகொள்ளலாம். முதலில், ஆயில் மசாஜ். முழு உடம்புக்கு 100 மில்லி ஆயில் வேண்டும். பாதாம் எண்ணெய், சந்தன எண்ணெய், மல்லிகை எண்ணெய், ரோஜா எண்ணெய் ஆகியவற்றை தலா 25 மில்லியாக எடுத்து, ஒன்றாகக் கலக்கவும். முகத்திலிருந்து பாதம் வரை தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆவி பிடியுங்கள். இது 5 முதல் 8 எட்டு நிமிடங்கள் எடுத்தாலே போதும். ஆவி பிடிப்பதற்கு முன்பு, ஒரு பெரிய டம்ளர் நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போதுதான், உடம்பிலிருந்து வெளியேறும் தண்ணீரை ஈடுகட்ட முடியும். அடுத்து, பாடி பாலிஷிங். இதற்குக் கரகரப்பான கடலைமாவு, (அல்லது பாசிப்பருப்பு மாவு, அல்லது அடிசி மாவு) ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், பட்டைத்தூள் கால் டீஸ்பூன், தேவையான அளவு தயிர் நன்கு கலந்து, உடல் முழுக்கத் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, மெதுமெதுவாக வட்ட வட்டமாகத் தேய்த்து, மேல் நோக்கியே மசாஜ் செய்து, குளியுங்கள். தயிர் அழுக்கை நீக்கும். மாவு வகைகள் இறந்த செல்களைப் போக்கும். கஸ்தூரி மஞ்சள் கிருமிகளைக் கொல்லும். பட்டைத்தூள் சருமத்தில் ஒரு விறுவிறுப்பை உண்டாக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, சருமத்தை ஹெல்தியாக்கும். இது, தாய்லாந்து ராணிகளின் அழகுக் குறிப்பு. வாரம் ஒருமுறை செய்தாலே, சருமம் உங்கள் கல்யாணப் புடவையைவிட பளபளப்பாக இருக்கும். 

அழகான நகங்களுக்கு... 

திருமண ஆல்பத்தில் மணப்பெண்ணின் கைகளுக்கு பல பக்கங்கள் ஒதுக்குவார்கள் போட்டோகிராபர்கள். ஸோ, நகங்கள் நீளமாக, ஷேப்பாக இருக்க வேண்டும். நகங்கள் அடிக்கடி உடைந்துபோகும் பிரச்னை இருக்கிற பெண்கள், வாரம் ஒருமுறை நகங்களை ஃபைலிங் செய்வதோடு, எப்போதும் பேஸ் கோட் நெயில் பாலிஷை போடுங்கள். தவிர, லேசாக ஆலிவ் ஆயிலைத் தடவி வந்தால் அழகான நகங்களுக்கு கியாரண்டி. 

டானிக்கும் எடுத்துக்கலாம்! 

ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போகும் பெண்கள், சரியான சாப்பாடும் போஷாக்கும் இல்லாமல் இருப்பார்கள். இவர்களின் சருமமும் கூந்தலும் எப்படி ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்? இவர்கள், டாக்டர் ஆலோசனைப்படி, விட்டமின்ஸ், மினரல்ஸ் நிறைந்த சப்ளிமென்ட் அல்லது டானிக் எடுக்கலாம். வெளிப்பூச்சாக தேங்காய் எண்ணெய்யை உடல் முழுக்க தடவி, 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் குளிக்கவும். நம் தேங்காய் எண்ணெய், இப்போது வெளிநாட்டு அழகுக் குறிப்பில் இருக்கிறது. அதை நாமே அனுபவிக்காவிட்டால் எப்படி? 

பொடுகு இருக்கிறதா? 

நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அரை டீஸ்பூன் வெந்தயம் போட்டு பொரிக்கவும். பிறகு, சிறிதளவு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, கைப்பிடி அளவு கொத்துமல்லியைப் போட்டு பொரியவிடுங்கள். இந்த எண்ணெய்யைத் தடவுங்கள். அல்லது கடைகளில் கிடைக்கும் கொரியாண்டர் ஆயிலை வாங்கிப் பயன்படுத்துங்கள். பொடுக்குப் பெரிய எதிரி கொத்துமல்லிதான். 

உதடுகளுக்கு... 

இரவுகளில் மாதுளைச்சாறை உதடுகளில் தடவி ஊறவிட்டால், இயற்கையான சிவந்த நிறம் கிடைக்கும். 

கண்களுக்கு... 

கண்களுக்கு மேல் ஈர வெற்றிலைகளை வைக்கவும். அது பறந்துவிடாமல் இருக்க, ஈரமான பஞ்சை வையுங்கள். கம்ப்யூட்டர் பார்த்து பார்த்துச் சோர்ந்துபோன இந்தக் காலப் பெண்களின் கண்கள் உயிரோட்டமாக மாறும்.