Published:Updated:

குமரனே குறத்தியாக மாறி குறி சொன்ன வள்ளிமலை! - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 10

குமரனே குறத்தியாக மாறி குறி சொன்ன வள்ளிமலை! - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 10
குமரனே குறத்தியாக மாறி குறி சொன்ன வள்ளிமலை! - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி! பரவசப் பயணம் - 10

ண்ணீர் தவழ்ந்தால்தான் ஆறு; தேரோட்டம் நடந்தால்தான் திருவிழா; வேர்கள் மண்ணுக்குள் ஊடுருவிப் பரவினால்தான் விருட்சம். அதேபோல் மனிதர்களும் பயணிக்கும்போதுதான் அனுபவங்கள் கிடைக்கின்றன. கிடைக்கக்கூடிய அனுபவங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. பயணத்தின் நோக்கம் ஆன்மிகத் தேடலாக இருந்தால், அந்தப் பயணம் யாத்திரையாகப் பரிணமிக்கிறது. நம் வாழ்க்கைக்கு பரிமளம் சேர்க்கிறது. யாத்திரையின் தொடர்ச்சியாக வள்ளிமலைக்குச் சென்ற நாம், மலைப் பாதையைக் கடந்து, வள்ளிமலைக் குகைக் கோயிலுக்குள் செல்கிறோம்.

குகைக்குள் புடைப்புச் சிற்பமாக வள்ளிப்பிராட்டி திருக்காட்சி தருகிறாள். வலக்கை அபயம் காட்ட, இடக் கையில் கவண் ஏந்தி இருக்கும் வள்ளிப் பிராட்டியின் வடிவழகு, ஒற்றை தீபத்தின் மெல்லிய ஒளியிலும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. அவள் தினைப்புனம் காக்க மட்டுமா கவண் ஏந்தினாள்? நம் மனதில் தோன்றும் தீய எண்ணங்களை விரட்டவும் கவண் ஏந்தியிருப்பதாகத்தான் நம் மனதுக்குப் பட்டது. குமரனே குறத்தியாக வந்து குறி சொல்லிக் கொண்டாடிய வள்ளிமலை நாயகியை வணங்கிவிட்டு வெளியே வருகிறோம்.

வள்ளியின் குகைக் கோயிலுக்கு வெளியில் எதிர்ப்புறமாக கணபதியின் ஆலயம் வனப்புடன் காட்சி தருகிறது. யானைமுகத்தோனின் திருவடிகளுக்குக் கீழே யானைகள் வலமும் இடமும் ஓடுவதைப் போல் செதுக்கப்பட்டிருந்தது. புலிகளும், சிங்கங்களும், யானைகளும் உலவும் வனத்தில் வளர்ந்தவள் வள்ளிப் பிராட்டி. அவள் எப்படி ஒரு யானையைக் கண்டு அச்சம் கொண்டாள் என்ற கேள்வி நமக்குள் எழுந்தது. காட்டு யானைகள் அவளுக்கு எப்போதுமே துன்பம் விளைவிக்கத் துணிந்ததில்லை. ஆனால், வள்ளியைத் துரத்தியது காட்டு யானை அல்லவே. இச்சா சக்தியான வள்ளிப் பிராட்டியை ஞானசக்தியாம் முருகப் பெருமானுடன் இணைப்பதற்காக, யானைமுகத்தோன் அல்லவா வள்ளியை விரட்டி அச்சுறுத்தினார்? அவர் அச்சுறுத்தினாரா அல்லது அச்சுறுத்துவதுபோல் நடித்தாரா என்பதும், வள்ளிப் பிராட்டி அச்சப் பட்டாளா அல்லது அச்சப்படுவதுபோல் நடித்தாளா என்பதும், அந்த அற்புதத் திருவிளையாடல் நடத்திய அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம்! கணபதி சந்நிதிக்கு வெளியில் மகர வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சிற்பங்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. வினைகளை அகற்றும் நாயகனிடம், நம்முடைய வினைகளையும் அகற்றும்படி வேண்டிக்கொண்டு முருகப் பெருமானின் சந்நிதிக்குச் செல்கிறோம்.

அழகன் முருகனை திருவடி முதல் திருமுகம் வரை கண்ணும் மனமும் குளிரக் குளிர தரிசித்தபடி, 'நதி,தான் பட்ட கடனை கடலில் தீர்க்கும்; மதி தான் பெற்ற கடனை இரவில் தீர்க்கும்; ஐயனே! என் விதி பட்ட கடனை உந்தன் திருவடிகளில் தீர்க்கிறேன்' என்று நெஞ்சம் உருகப் பிரார்த்தித்து வழிபட்டோம். அவ்வளவில் முருகப் பெருமானின் அருளொளி நம்முள் பாய்ந்தது போன்ற ஒரு பரவச உணர்வு நம்மை ஆட்கொண்டது. குமரனின் சந்நிதிக்கு வலப் புறமாக வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்கள் கணபதி, சிவலிங்க வடிவில் சிவபெருமான், அம்பிகை ஆகியோரும் நமக்கு அருட்காட்சி தந்தனர். அவர்களை வழிபட்டுவிட்டு, அங்கேயே சற்று நேரம் தியானம் செய்தோம். குகையின் இருளும் குளிர்ச்சியும் நம்மை பூரண அமைதி நிலைக்கு இட்டுச் சென்றது. சற்றுப் பொறுத்து கோயிலிலிருந்து புறப்பட்டு, குகைக்கு மேலாக அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தையும் தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.

வழியெங்கும் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்பை மரம் போன்ற பல பிரமாண்டமான மரங்கள் வள்ளிப்பிராட்டியின் காலத்துக்கே நம்மை கொண்டு சென்றது. சில்வண்டுகள் எழுப்பும் ஒலியைத் தவிர வேறு எந்த ஒலியும் எழாத அந்தப் பாதையில் மனம் அமைதியில் லயித்துக் கிடந்தது. எதிரே காணப்படும் பிரமாண்ட பாறைகளின் வழுவழுப்பு அந்த மலையின் வனப்பை மேலும் அழகூட்டியது.

காணும் இடமெங்கும் பழைமையின் சுவடுகள் பளிச்சிட்டுக் காணப்பட, ஒரு கணம் நம் மனதுக்குள் ஏதோ உடைந்து, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அமைதியாக அமர்ந்து யோசித்தேன். வரலாற்றுப்படி பார்த்தாலும் முதலாம் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு வேடுவப் பெண், வனக்குறத்தியாக, வள்ளிப்பிராட்டியாக வாழ்ந்து, தனது வீரத்தாலும், கண்ணியத்தாலும், பக்தியாலும் உயர்நிலையை எட்டி இறைவனையே அடைந்த செயல் சிலிர்க்கச் செய்தது. வேளாண்மைக்கு முன்னர் வேட்டையாடுவதுதானே ஆதி தொழிலாக இருந்தது. வேட்டையாடி பிழைத்த காலத்திலேயே தெய்வமாக விளங்கிய எங்கள் வீரத்தமிழ்ப் பெண் இங்குதானே உலவி இருப்பார். இங்குதானே நீர் கொண்டு சென்று இருப்பார் என்றெல்லாம் மனம் அலை பாய்ந்துகொண்டு இருந்தது.

உடன்வந்தவர்கள் மேலும் நடந்து வள்ளிமலை ஸ்வாமிகளின் ஆஸ்ரமம், வள்ளியம்மை வேடனைச் சந்தித்த இடங்கள், அற்புதச் சுனைகள், பொங்கியம்மன் சந்நிதி, மலை உச்சியில் இருக்கும் சிவலிங்க தரிசனம் இவற்றையெல்லாம் தரிசிக்க வேண்டாமா என்று கூறியதும், உடனே பயணத்தை தொடர்ந்தோம். அடர்த்தியாகப் புதர் போல் மண்டிக்கிடந்த அரளிச்செடி களைக் கடந்து குறுகலான ஆஸ்ரமப்பாதையில் நுழைந்தோம். அரளிச்செடிகள் அதிகம் இருந்தாலே அந்த இடம் பூஜைக்கு உரிய இடம்தான்.

(வள்ளிமலை அற்புதங்களைச் சொல்லும் விடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...)

ஆஸ்ரமத்தில் முதலில் கண்ட காட்சியே நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. இரண்டு பிரமாண்ட பாறைகளுக்கு நடுவே சிறிய சந்நிதியில் நின்ற கோலத்தில் அருபாலித்தார் பொங்கியம்மன். திருமகள், கலைமகள் இடையே பொங்கியம்மன் இருப்பதாக ஓர் அறிவிப்புப் பலகை நமக்குக் கூறுகிறது. அம்மனுக்கு பூஜைகளைச் செய்து ஆரத்தி காட்டிய அர்ச்சகர் 'திருமணம் முடித்த பிறகும், இந்த மலையின் மீது கொண்ட ஆர்வத்தாலும், சித்தர்களின் வேண்டுதல்களாலும் வள்ளியம்மை பொங்கியம்மனாக இங்கே வந்து வீற்றிருக்கிறாள். வேண்டும் எல்லா வரங்களையும் அளித்து காத்து வருகிறாள்' என்று கூறினார்.

பொங்கியம்மனை தரிசித்து விட்டு அந்த எளிமையான ஆசிரமத்தைச் சுற்றி பார்த்தோம். தரையெங்கும் சாணம் தெளிக்கப்பட்டு, தூய்மையாக இருந்தது. களைத்திருந்த எங்களுக்கு பொங்கியம்மன் ஊற்று நீர் வழங்கப்பட்டது. இளநீரெல்லாம் தோற்றுவிடும் சுவையும், குளிர்ச்சியும் எங்களை பரவசப்படுத்தியது. அந்த அற்புத மூலிகை நீரை மனமும் வயிறும் குளிரப் பருகினோம். பிறகு, வள்ளிமலை ஸ்வாமிகள் தியானம் இருந்த குகைக்குள் சென்று தியானத்தில் இருந்தோம். பக்தர் ஒருவர் அங்கிருந்த ஒரு படத்தை நம்மிடம் காட்டினார். அந்தப் படத்தில் இருந்தவர் வீணை வைத்திருந்தார். நாம் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தோம்.

நம் பார்வையின் பொருளைப் புரிந்தவர்போல், ''இவர்தான் வள்ளிமலை ஸ்வாமிகள். திருப்புகழை வீணையிலேயே இசைத்ததால், வீணைபிரம்மம் என்று போற்றப் பெற்றார்'' என்று விளக்கமளித்தார். வீணையிலேயே திருப்புகழை மீட்டி முருகப்பெருமானை மகிழ்வித்த மகா யோகியான வள்ளிமலை ஸ்வாமிகளை வணங்கிவிட்டு சுற்றுப்புறத்தை நோக்கினோம். ஸ்வாமிகள் வணங்கிய வேல், அருணகிரிநாதர் சிலை யாவும் நமக்குள் ஒரு பரவச நிலையினை ஏற்படுத்த அமைதியாக வெளியே வந்தோம். அருகேயே இருந்த ஸ்வாமிகளின் அறைக்குச் சென்று அவர் பூஜித்த லிங்கத்திருமேனி உள்ளிட்ட மூர்த்தங்களை தரிசித்தோம். அந்த ஆசிரம வளாகத்திலும் காட்சி தந்த கணபதியை வணங்கி விட்டு நகர்ந்தபோது, அங்கே இருந்த வேம்பு, வில்வம், அரசு மரங்கள் எங்களைக் கவர்ந்தது.

அந்த மரங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டதும், 'வெறும் மரங்களா அவை?' என்ற கேள்விதான் நமக்குள் தோன்றியது. இப்படி ஒரு கேள்வி நமக்குத் தோன்றுவதற்குக் காரணம் என்ன தெரியுமா..?

பயணம் தொடரும்..