Published:Updated:

மஞ்சு வாரியர் நடிக்கும் கேரளா எழுத்தாளர் கமலா தாஸின் பயோபிக் 'ஆமி' படத்திற்குத் தடை?

அலாவுதின் ஹுசைன்
மஞ்சு வாரியர் நடிக்கும் கேரளா எழுத்தாளர் கமலா தாஸின் பயோபிக் 'ஆமி' படத்திற்குத் தடை?
மஞ்சு வாரியர் நடிக்கும் கேரளா எழுத்தாளர் கமலா தாஸின் பயோபிக் 'ஆமி' படத்திற்குத் தடை?

'லவ் ஜிகாத்' என்ற வார்த்தை சமீபகாலமாக அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாகக் கேரளாவில் இது சம்பந்தமாக சில வழக்குகள் பரப்பரபாகப் பேசப்பட்டும் வந்தது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கமலாதாஸின் பயோபிக்காக உருவாகியிருக்கும் 'ஆமி' படம், லவ் ஜிகாத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் இப்படத்திற்குத் தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலையாள டாப் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், அனூப்மேனன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை, பழம்பெரும் இயக்குநர் கமல் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரெய்லரில் கமலாதாஸின் ஆரம்பகால வாழ்க்கை, எழுத்துப் பணி மற்றும், இஸ்லாம் மதத்தைத் தழுவியது எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. 

கமலாதாஸ் தனது 15-வது வயதில் மாதவ்தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே காதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய கமலா, 'மாதவிகுட்டி', 'கமலாதாஸ்' ஆகிய பெயர்களில் ஆங்கிலக் கவிதை, கதை தொகுப்புகளை எழுதியுள்ளார். எழுத்தாளர் கமலாதாஸ் தனது 65-வது வயதில் 1999-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவினார். தனது பெயரையும் கமலா சுரையா என மாற்றிக்கொண்டார்.  அதைத் தொடர்ந்து பல்வேறு மத அமைப்புகள் இவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதற்குச் செவிசாய்க்காத கமலா, புனேயில் வசித்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு மே-31-ம் தேதி மறைந்தார். 

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், " 'ஆமி' திரைப்படம் கமலாதாஸின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்காது. உண்மையும், கற்பனையும் கலந்ததாகவே இருக்கும். தவிர, இப்படத்தில் கமலாதாஸின் கேரக்டரை எந்த வகையிலும் சர்ச்சைக்குரியதாக மாற்றவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்திற்கு முதலில் வித்யாபாலன் நடிக்கத் தேர்வாகியிருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்ட அவர், சில காரணங்களுக்காகப் படத்தில் இருந்து விலகினார். வலதுசாரி மற்றும் அடிப்படைவாதிகளின் மிரட்டல்களாலேயே வித்யாபாலன் இப்படத்தில் இருந்து விலகியதாக மாலிவுட்டில் கூறப்பட்டது. இதன் பிறகே மஞ்சு வாரியர் இப்படத்தில் கமிட் ஆனார்.  

இப்படம் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் கொச்சினைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பி.ராமசந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஆமி' திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியது ஏற்கத்தக்கதல்ல. கமலாதாஸின் உண்மை வாழ்க்கையை மாற்றி எழுத யாருக்கும் உரிமையில்லை. இப்படம் லவ் ஜிகாத்தை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. கமலாவின் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வுகளைக் கற்பனை சுதந்திரம் என்றுகூறி மாற்றியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், கமலாதாஸின் மதமாற்றத்திற்குப் பிறகே, கேரளாவில் 'லவ் ஜிகாத்' பரவியது. கமலாதாஸின் உண்மை வாழ்க்கையை மறைத்துத் தவறாகக் காட்டினால், அது கட்டாய மதமாற்றத்தை ஆமோதிக்கும் வகையில் அமையும். மக்களுக்குத் தவறான ஒரு செய்தியையும் தரும். எனவே, 'ஆமி' படம் வெளியாவதற்குத் தடை விதிக்குமாறும், மத்தியத் தணிக்கைக்குழு கமலாதாஸின் வாழ்க்கை சரிவரப் படமாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்தவும்,  இப்படத்திற்குத் தணிக்கைச்சான்று வழங்காத வண்ணம் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.     

மலையாளப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள கமலாதாஸின் வாரிசுகளில் ஒருவரான ஜெயசூர்யா, இப்படத்தைப் பற்றி கூறுகையில், "இயக்குநர் கமலுக்கு 'ஆமி' படத்தின் ஆக்க உரிமை மற்றும் ஆங்கில டப்பிங் உரிமை வழங்கியுள்ளோம். இப்படம் தன் வாழ்க்கையில் கமலாதாஸ் சந்தித்த அனைத்துச் சம்பவங்களும் உண்மையும் கற்பனையுமாக இப்படத்தில் இடம்பெற்றுள்ளன" எனக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாகப் பல படங்கள் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், 'ஆமி' படமும் அப்பட்டியலில் இணைந்திருக்கிறது.