Published:Updated:

என் ஊர்!

சைக்கிளில் சுற்றிய திருவல்லிக்கேணி நாட்கள்!

##~##

'எனக்கென ஏற்கெனவே...’, 'பூக்கள் பூக்கும் தருணம்..’ எனப் பல ஹிட் பாடல் களைப் பாடிய பின்னணிப் பாடகி ஹரிணி, தான் வளர்ந்த திருவல்லிக்கேணி பற்றி தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள் கிறார்.

''நான் பிறந்தது ஆந்திரா, சித்தூர். எனக்கு ஒரு வயசு இருக்கும்போது, எங்கக் குடும்பம் திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவுக்கு குடி வந்தாங்க. இப்போ நான் வேற ஏரியாவில் குடியிருந்தாலும், திருவல்லிக் கேணிதான் என் பூர்வீக ஏரியா.

என் ஊர்!

அல்லிப் பூக்கள் நிறைஞ்ச குளம் இருந்ததால் திருஅல்லிக்கேணின்னு இருந்து, மருவி திருவல்லிக்கேணியா மாறிச்சுன்னு சொல்வாங்க. தென்னிந்தியாவின் பழமையான மசூதிகள், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோயில், பாரதி நினைவு இல்லம், 150 வருஷங்கள் பழமையான இந்து மேல்நிலைப் பள்ளி, குட்டி தி.நகர் மாதிரி இருக்கும் ஃபைகிராப்ட்ஸ் ரோடு, புதிய, பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள், உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா, எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம், அமீர் மஹால், மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், கலைவாணர் அரங்கம், விவேகானந்தர் மண்டபம், கலங்கரை விளக்கம் எனத் திருவல்லிக்கேணியைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கு!

திருவல்லிக்கேணியில் வசிக்கும் ஒருவர் வேற வீட்டுக்கு போகணும்னு நினைச்சால், ரொம்ப கஷ்டப்படுவார்.  ஏன்னா அந்த அளவுக்கு அங்க வசிக்கும் ஒவ்வொருத்தருக் கும் மனசளவில் அங்கே நெருக்கம் ஆகிரு வாங்க. கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கத்துலயே வீடு இருந்ததால் ரசிகர்களோட ஆராவாரம் பிரமாண்டமா கேட்கும்.  

எப்போ போரடிக்குதோ அப்பல்லாம் மெரினாவுக்குக் கிளம்பிடுவோம். அங்கேதான் மாதங்கி, பத்மப்ரியானு என் ஃபிரண்ட்ஸுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன். அதேபோல் நவராத்திரி கொலுவுக்கு திருவல்லிக்கேணி ரொம்ப ஸ்பெஷல். அப்படி ஒரு கொலுவுக்காக பாட்டி வீட்டுக்கு போயிருந்தேன். அப்ப எனக்கு ஒன்பது வயசு. எனக்கு சேலை கட்டிவிட்டு பாடவெச்சு கேட்டாங்க. அதுதான் என் முதல் அரங்கேற்றம். அந்த நாள் இன்னமும் என் நினைவில் அப்படியே இருக்கு.  

என் ஊர்!

நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியம் சந்திரசேகரன் இந்து ஸ்கூலில் படிச்சவர்தான். அந்த ஸ்கூலைக் கடக்கும்போது எல்லாம் அவரை மாதிரியே நாமளும் ஜெயிக்கணும்னு ஸ்பார்க் தோணும். அதேபோல் சென்¬¬யை நோக்கி நம்பிக்கையோடு வரும் இளைஞர்களுக்கு அடைக்கலம் தர்றதும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள்தான். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், இங்கிலீஷ்னு பல மொழிகள் பேசியபடி வலம் வரும் மனிதர்களைப்பார்க்கும் போது, அது ஒரு குட்டி இந்தியாவா மாறிடும்.

என் ஊர்!

ஐஸ் ஹவுஸைச் சுத்தி இருக்குற முஸ்லிம் வீடுகள் எனக்கு ரொம்பவேப் பிடிக்கும். அதேபோல், மொஹரம் பண்டிகையின்போது ஷியா முஸ்லிம்கள் தன்னைத்தானே இரும்பு சாட்டையில  அடித்துக்கொண்டு செல்லும் தீவிரமான பக்தி என்னை பாதிச்ச விஷயங்களில் ஒண்ணு. பார்த்தசாரதி கோயிலில் நடக்கும் பெரும்பாலான விசேஷங்களில் தவறாமல் கலந்துக்குவேன். பத்ம சேஷாத்ரி ஸ்கூல்ல படிப்பதற்காக மேற்கு மாம்பலத்துக்கு குடிவந்தோம். ஆனாலும் மார்கழி திருப்பாவை சமயத்தில் ஸ்கூலில் இருந்து பார்த்தசாரதி கோயிலுக்குத் தேரில் வருவோம். அப்போது திரும்ப மேற்கு மாம்பலம் போகவே மனசு வராது. ஸ்கூலில் படிக்கும்போது ஸ்டேட் லெவலில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். பரிசு கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான் சார்.  'உன் குரல் நல்லா இருக்கு’னு பாராட்டியவர், அதை மறக்காம 'இந்திரா’ படத்தில் 'நிலா காய்கிறது நேரம் தேய்கிறது’ பாட்டுப் பாட சான்ஸ் கொடுத்தார். அதுக்குப் பின்னாடி பிஸியாகிட்டேன். இப்ப நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்கு கார்ல போய் வர்றேன். இருந்தாலும் சைக்கிள்ல திருவல்லிக்கேணி தெருக்களில் சுத்தி வந்த நாட்கள் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு!''

- க.நாகப்பன்,படங்கள்: பொன்.காசிராஜன்,சொ.பாலசுப்பிரமணியன்