Published:Updated:

என் ஊர்!

உழைப்புக்கு அஞ்சாத ஈரோட்டு மக்கள்!

##~##

கைச்சுவைக் கலைஞர், பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் ஈரோடு மகேஷ். அவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''நான் பிறந்து, வளர்ந்தது ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் ஹவுஸிங் யூனிட்தான். அங்க பாலர் கல்வி நிலையம் இருந்தது. அங்க தமிழ் அய்யா வகாப்பை மறக்க முடியாது. குட்டிக் கதைகள் மூலம் நகைச்சுவையாகப் பாடம் நடத்துவார். இன்னைக்கு நான் நகைச்சுவையா பேசுறேன்னா, அதுக்கு இவரும் ஒரு காரணமா இருக்கலாம். 12-ம் வகுப்பு வரைக்கும் ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன்.

என் ஊர்!

ஈரோட்டுக்கு ரொம்பப் பக்கமா நாலு கி.மீ. தூரத்துல மூலப்பாளையம் இருந்தாலும் இப்பவும் எங்க ஊர் கிராமம்தான். வானம் பார்த்த மண்ணு அது. விவசாயம்னு பார்த்தா சோளம் மட்டும்தான் விளையும். தண்ணீர் பஞ்சம் அதிகம். போர்வெலில் 10 நிமிஷம் தொடர்ந்து அடிச்சாதான் கொஞ்சம்போலத் தண்ணீர் வரும். நல்ல தண்ணீர் பிடிக்க மூலப்பாளையம் பஸ் ஸ்டாப் கிட்ட இருக்குற முருகன் கோயில்கிட்ட விடியற்காலை மூன்றரை மணிக்கு குடத்தைத் தூக்கிட்டுப் போய், அங்க இருக்குற பைப்புல கியூவுல நின்னா, ஏழரை மணிவாக்குல ரெண்டு குடம் நல்ல தண்ணீர் கிடைக்கும்.

என் ஊர்!

மூலப்பாளையத்தில் வருஷா வருஷம் சர்க்கஸ் போடுவாங்க. அப்பாகிட்ட அடம்பிடிச்சு அந்த சர்க்கஸுக்குப் போவேன்.  

எங்க ஊர் மாரியம்மன் பண்டிகை ரொம்ப பிரசித்தி. அப்போ, 'பாட்டி சொல்லைத் தட்டாதே’ படம் வந்திருந்த நேரம். மாரியம்மன் கோயில் திருவிழாவுல 'பாட்டி சொல்லைத் தட்டாதே கார்’னு சொல்லி படத்தோட க்ளைமாக்ஸுல வர்ற கார் மாதிரியே பொம்மை கார் வித்தாங்க. அந்தப் பண்டிகை நாளில் மட்டும்தான் மிளகாப் பொடி தூவுன பெரிய சைஸ் அப்பளம், கரும்பு ஜூஸ், கண்ணாடி பேப்பர்ல சுத்துன ஜவ்வு மிட்டாய், வாட்சு மிட்டாய் இதெல்லாம் கிடைக்கும்.  

இன்னைக்கு டி.வி. சேனல்களிலும் காமெடி நிகழ்ச்சிகளிலும் காமெடியுடன் தூய தமிழையும் நல்ல தகவல்களையும் சொல்றேன்னா, அதுக்குக் காரணம், கல்லூரியில் எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த முனைவர்கள் சிவசந்திரன், தாமோதரன், மணலி சோமன், மன்சூர் இவங்கதான்.

என் ஊர்!

ஈரோட்டை ஒரு ஊராக மட்டும் என்னால் நினைக்க முடியாது. உபசரிப்புன்னா என்ன? ஒரு தொழிலைச் செஞ்சா எப்படி உண்மையா உழைக்கணும் அப்படினு கத்துக் கொடுத்த ஊர் அது. உழைப்புக்கு அஞ்சாத மக்கள் ஈரோட்டு மக்கள். இப்ப நான் சென்னையில வசிக்கிறேன். கூடவே, கும்பகோணம் கலைக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராக இருக்கேன். கல்லூரிக்கே போகாத ஆசிரியர் அநேகமா நானாத்தான் இருக்க முடியும். மாசத்துல பாதி நாள் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் போயிடறேன். ஆனா, மூலப்பாளையம் மண்ணுல கால்வைக்கும்போது ஏற்படுகிற பரவசத்தை எந்த நாடும் எனக்குக் கொடுத்தது இல்லை!''

ச.ஆர்.பாரதி, படங்கள்: கி.ச.திலீபன்