Published:Updated:

“தீர்வே கிடைக்காத பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி இருக்கு!” - ‘ஆடுகளம்’ நரேன் #LetsRelieveStress

“தீர்வே கிடைக்காத பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி இருக்கு!” - ‘ஆடுகளம்’ நரேன் #LetsRelieveStress
“தீர்வே கிடைக்காத பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி இருக்கு!” - ‘ஆடுகளம்’ நரேன் #LetsRelieveStress

‘ஆடுகளம்’ நரேனுக்குத் திரையுலகில் திடீர்ப் பிரவேசம் என்றாலும், எல்லோர் மனதிலும் எளிதாக இடம்பிடித்தவர். பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' முதல் இப்போது வரை ஏற்றுக்கொண்ட பாத்திரத்தைத் தனது கம்பீரமான தோற்றத்தாலும் குரலாலும் தூக்கிநிறுத்துபவர். எல்லோரிடமும் எந்தவித ஈகோவும் பார்க்காமல் பழகுபவர். தன்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர் எது? என்பதை விரிவாகச் சொல்கிறார் ஆடுகளம்’ நரேன்...

“நான் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷனாகிடுவேன். ஆனா, பெரிய விஷயத்துக்கு டென்ஷனாக மாட்டேன். டேபிள், நீட் அண்ட் க்ளீனா இருக்கணும்னு நினைப்பேன். ஆனா, அதே பெரிய விஷயமா இருந்தா... ‘ஃபிளைட்டை மிஸ் பண்ணிட்டோம்’, `நம்ம வண்டி ஆக்ஸிடன்ட்  ஆகிடுச்சு..., என்னைச் சுற்றிலும் ஆளுங்க சூழ்ந்துக்கிட்டாங்கனாக்கூட டென்ஷனாக மாட்டேன். எப்படி அந்தச் சூழ்நிலைய ஹேண்டில் பண்றதுனுதான் பார்ப்பேன்.

அப்போ எம்.ஜி.ஆர் முதலமைச்சரா இருந்த நேரம்னு நினைக்கிறேன். வருஷம் ஞாபகத்துல இல்லை. `டாக்டர் ராமதாஸ் கைது’னு நியூஸ் வருது. நானும் என் ஃபிரெண்டும் உறவினர் ஒருவரைப் பார்க்குறதுக்காக சேலத்துக்குப் போயிருந்தோம். ஒரேநாள் பயணம்தான்.
ஞாயிற்றுக்கிழமை... காலையில போய்ட்டு, ராத்திரி பஸ்ஸைப் பிடிச்சு சென்னைக்குத் திரும்பி வந்துடுறதா முடிவு பண்ணியிருந்தோம். ஏன்னா, என் ஃபிரெண்டுக்கு மறுநாள் சென்னையில ஒரு இன்டர்வியூ இருந்தது. அவன் பி.இ முடிச்சிருந்தான். மின்சார வாரியத்துல இன்டர்வியூ. அட்டெண்ட் பண்ணினா போதும்... நிச்சயம் வேலை கிடைச்சிடும்ங்கிற மாதிரி நிலைமை.

என் ஃப்ரெண்டு என்ன பண்ணினான்னா ‘இன்னொரு ரிலேட்டிவைப் பார்த்துட்டு பஸ்ஸ்டாண்டுக்கு வந்துடுறேன். நீ போய் டிக்கெட் எடுத்து வெச்சிரு’னு சொல்லிட்டான். அப்போல்லாம், ஒரு ரூபாய் டோக்கன்தான். சேலம் டு மெட்ராஸுக்கு நாப்பது ரூபாய்தான் டிக்கெட் விலையே. 

என்கிட்ட நூறு ரூபாய் இருந்துச்சு. நான் போய் ரெண்டு டோக்கனும் சிகரெட்டும் வாங்கிட்டு வந்து உட்கார்ந்துட்டேன். மணி ஏழாகுது. கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, மெட்ராஸ் போற பஸ்ஸெல்லாம் திரும்பி வர ஆரம்பிச்சிடுச்சி. `ராமதாஸ் கைது’ங்கிறதால பஸ் ஓடாதுன்னுட்டாங்க. என் ஃபிரெண்டும் வந்து சேர்ந்துட்டான். ''என்னடா மச்சான்..? இப்படி பஸ் போகாதுங்கிறாங்க''ன்னேன்.  நாங்க போகவேண்டிய பஸ் ராத்திரி 8 மணிக்குப் புறப்படணும்.

'சரிடா வாடா'னு சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியில வந்து பார்த்தோம். நல்லவேளையா ஒரு வேன் கிளம்பிக்கிட்டு இருந்துச்சு. மெட்ராஸுக்கு ஆளுங்களை ஏத்திக்கிட்டு இருந்தாங்க... ஒரு ஆளுக்கு 140 ரூபாய்னாங்க. `சரி 280 ரூபாய் கொடுத்தாவது போயிடுவோம்’னு வேன்ல ஏறிட்டோம். 

அப்போதான் என் ஃபிரெண்டு  பையைப் பார்த்தான். பர்ஸ் இல்லை... யாரோ பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்க. நாளைக்கு இன்டர்வியூ. 'உன்கிட்ட எவ்வளவுடா இருக்கு?'ன்னான். நான், ''80 ரூபாய் இருக்குடா''னு சொன்னேன். பஸ்லன்னா போயிடலாம். பஸ்தான் போகலியே. என்ன பண்றதுனு தெரியலை, ''சரி வாடா... ட்ரெயின்ல போலாம்''னு அவனைக் கூட்டிக்கிட்டு ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்தேன். 
அங்கே பார்த்தா மொத்த ஜனமும் ட்ரெயினுக்கு வந்துட்டாங்க. அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல கூட்டம் நிரம்பி வழியுது. ஃபிரெண்டு கண்கலங்க ஆரம்பிச்சிட்டான்.

`இருடா’னு சொல்லிட்டு, ஒரு டி.டி.ஆரைப் பிடிச்சு, உண்மையைச் சொல்லிக் கேட்போம்னு போய்ப் பேசினேன். அவர் எங்க நிலைமையைப் புரிஞ்சுகிட்டார். எங்க நல்ல நேர...ம் அவர் ஒரு ஏற்பாடு பண்ணினார். ஏ.சி கோச்ல இருந்த ஆர்.பி.எஃப் போலீஸ்கிட்ட சொல்லி, `இவங்க நம்ம ஸ்டேஷன் மாஸ்டரோட பசங்க... பார்த்துக்கோங்க’னு சொல்லி ஏத்திவிட்டார். அவர்மூலமா எப்படியோ சென்னை வந்து சேர்ந்தோம். 

சென்னை, பழவந்தாங்கல்ல வழக்கமா நாங்க டீ சாப்பிடுற கடைக்கு வந்து டீ குடிச்சோம். அப்போதான் என் ஃபிரெண்டுக்கு உயிரே வந்துச்சு. தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் அவன் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, வேலை கிடைச்சு, இன்னைக்கு பெரிய ஆபீஸராக இருக்கான். எதுக்கு இதைச் சொல்றேன்னா... நெருக்கடியான நேரங்கள்ல சுதாரிப்பா வேலை பார்த்தோம்னா நிச்சயம் நமக்கு சக்சஸ்தான்.

நான் இப்படி டென்ஷனாகவோ, ஸ்ட்ரெஸ்ஸாகவோ இருந்தேன்னா, சுடோஹூனு ஒரு 'பஸில் கேம்' இருக்கு இல்லியா..? அதை விளையாட ஆரம்பிச்சிடுவேன். அது எனக்கு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். அப்பப்போ ட்ராஃபிக் ஜாம், ஷூட்டிங் கேன்சலாகி டென்ஷனாயிடுச்சுனா இந்த விளையாட்டை விளையாட ஆரம்பிச்சிடுவேன். அதுல வர்ற பிராப்ளத்தை சால்வ் பண்ண ஆரம்பிச்சா, அது எனக்கு அப்படியே மைண்டை ரிலாக்ஸ் பண்ணிடும். 

தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கிட்டே இருக்கு... அதனால ரொம்ப டென்ஷனா இருந்ததுனா யோகா, பண்ண ஆரம்பிச்சிடுவேன். யோகாவும் பிராணயாமமும்தான் இந்த அளவு என்னைக் காப்பாத்தி வெச்சிருக்கு. 

சில நேரங்கள்ல, சில பிரச்னைகளுக்கு என்ன யோசிச்சாலும் தீர்வு கிடைக்காது. அந்த மாதிரி நேரங்கள்ல விடியற்காலைல 4 மணிக்கு எந்திரிச்சு 5 மணி வரைக்கும் வாக்கிங் போக ஆரம்பிச்சிடுவேன். அந்த நேரத்துல வாக்கிங் போகும்போது எந்தத் தொந்தரவும் இருக்காது. மைண்ட் ப்ளெஸன்ட்டா இருக்கும். அப்போ யோசிச்சோம்னா, நம்ம பிரச்னைக்கு எளிதான தீர்வும் கிடைக்கும். 
அப்புறம் கண்டதையும் சாப்பிடுறோம்... கண்ட நேரத்துல தூங்குறோம்.  

மனசுக்கும் உடம்புக்கும் ரொம்பவும் முடியலைனா, நேரா திருவண்ணாமலைக்குக் கிளம்பிப் போயிடுவேன். அங்கே `எழில்மாறன்’னு ஒரு நேச்சுரோபதி டாக்டர் இருக்கார். கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்குற அவருடைய மருத்துவமனையிலே தங்கிடுவேன். அங்கே முழுக்க முழுக்க இயற்கையான உணவுதான். கூடவே, மசாஜ், யோகா இதெல்லாம் சொல்லித் தருவார். நமக்கு என்ன குறைபாடு இருக்கு... அதனால என்ன பிரச்னை வரப்போகுதுனு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு உரிய யோகாவை நமக்குக் கற்றுத் தருவார்.

அங்க போனா நாலஞ்சு நாள்கூட தங்கிடுவேன். அங்கே உள்ள மொட்டை மாடியில வாக்கிங் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோயில் கோபுரத்தைப் பார்த்துக்கிட்டு வாக்கிங் போகும்போது நமக்குள்ள பிரச்னையெல்லாம் காற்றாகப் பறந்துடும்... மனசு லேசாகிடும். நானும் கிளம்பி சென்னை வந்துடுவேன்" புன்னகை மாறாமல் சொல்கிறார் நரேன்.