அதிகம் பேசாதே

இசை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். பாதிக் கச்சேரியில் யாரோ ஒருவரின் செல்போன் அலறியது. `அழகென்ற சொல்லுக்கு முருகா...' என்ற ரிங்டோன். கூட்டமே எரிச்சலுடன் திரும்பி, போனை அணைத்துவைக்கச் சொன்னார்கள். பதற்றமான அந்தப் பெரியவர் போனை அணைக்க முயன்றார். அவரால் முடியவில்லை. ``சைலன்ட்ல போடுங்க'' என முன் வரிசையில் இருந்து ஒருவர் கோபமாகக் கத்தினார்.

அதற்கு அந்தப் பெரியவர், ``போனை எப்படி சைலன்ட்ல போடுறதுனு எனக்குத் தெரியாது'' என்றார். யாரோ அவரது போனைப் பிடுங்கி அணைத்தார்.
இப்படி கச்சேரி, சினிமா தியேட்டர், கோயில், இலக்கியக் கூட்டம், மருத்துவமனை என எங்கும் `மற்றவர் களுக்குத் தொல்லை தருகிறோம்' என்ற துளி பிரக்ஞையும் இல்லாமல் செல்போனில் உரக்கப் பேசிக் கொண்டிருப்பவர்கள் பெருகி விட்டார்கள்.

கச்சேரியில் அந்தப் பெரியவர் நடந்துகொண்டது தற்செயல். அவர் சொன்னது முக்கியமான பிரச்னை. போனை எப்படி சைலன்ட்டில் போடுவது, எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவது, எப்படி ஒரு பெயரைப் பதிவுசெய்வது போன்றவை தெரியாமல் பலரும் தடுமாறுகிறார்கள்.

முதியவர்களில் சிலர், அறியாமல் கை தவறி ஏதோ ஒரு பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக வேறு சில எண்களை அழுத்திவிட்டால் அவ்வளவுதான். `கைபேசிக்கான தொகை இருப்பு குறைந்துவிடுகிறது...' போன்ற காரணங்களைக் காட்டி அவர்களை வீட்டில் இருப்பவர்கள் கேலி செய்வதும், திட்டுவதும், கோபம் அடைவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒருமுறை கே.கே நகரில் உள்ள பூங்காவில் ஒரு முதியவரைப் பார்த்தேன். அவர் தனது செல்போனைத் தொலைத்துவிட்டு, பதற்றத் துடன் ஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டு இருந்தார். நடந்துபோகிற ஒவ்வொருவரிடமும் `போனைக் காணவில்லை' எனப் புலம்பிக் கொண்டிருந்தார். என்னிடமும் ஆதங்கத்துடன் ``போனைக் காணோம்'' என்றார்.

இந்திய வானம் - 24

``என்ன போன், எப்படி இருக்கும்?'' எனக் கேட்டதற்கு, ``செல்போன்'' எனச் சொல்ல முடிந்ததே தவிர, அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, என்ன மாடல் போன்ற எந்தத் தகவலும் அவருக்குத் தெரியவில்லை. ``கறுப்பு கலர்' ’என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது செல்போன் நம்பரைக் கேட்டு, அதற்கு போன் செய்தால் `அணைத்துவைக்கப் பட்டிருப்பதாக' மறுமுனை சொன்னது.

``உங்க போனை அணைத்து வைத்திருந் தீர்களா?'' எனக் கேட்டேன்.

``செல்போன் தானே ஆஃப் ஆகிருச்சு. அதை எப்படி ஆன் செய்றதுனு தெரியலை. `சார்ஜ் போட்டா திரும்பவும் ஆன் ஆகிரும்'னு சொன்னாங்க. ஆனா, சார்ஜ் போட்டா ஆன் ஆகலை. என்ன செய்றதுனு தெரியாம சட்டைப்பையில் போட்டுவெச்சிருந்தேன். எப்படிக் காணாமப்போச்சுனு தெரியலை'' எனப் புலம்பினார்.

அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தேடித் தேடி அலுத்துப்போன அவர், சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு மரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பூங்காவின் காவலாளி, அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவரிடம் பெரியவர் தழுதழுத்த குரலில் ``என் மகனுக்குத் தெரிஞ்சா திட்டுவான். எனக்கு எதுக்கு இந்தச் சனியன்... `வேண்டாம்'னு சொன்னா கேட்கிறானா? எனக்கு இந்த செல்போன் எல்லாம் சரிவரலை. தொந்தரவுதான்'' என்றார்.

பூங்கா காவலாளி, தனது செல்போனை எடுத்துக்காட்டி அவருக்கு ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார். போனைத் தொலைத்தவர், அதைக் கேட்டதாகவே தெரியவில்லை. அவர் நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்.

இது யாரோ ஒரு பெரியவரின் பிரச்னை இல்லை. எல்லா வீடுகளிலும் வயதானவர்கள் புதிய தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டு பயப்படுகிறார்கள்; கட்டாயத்தின் பேரில் அதைப் பயன்படுத்துகிறார்கள். ஒருசிலரே அதை எளிதாகக் கற்றுக்கொண்டு உற்சாகமாகப் பயன்படுத்துகிறார்கள்; புதிய அனுபவங்களை அடைகிறார்கள்.

புதிதாக ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கிய முதியவர்களில் சிலர் அடையும் சந்தோஷம் இத்தகையதே. அதுபோலவே ஸ்கைப், வாட்ஸ்அப், ட்விட்டர் எனப் பெருகிவரும் தொலைத்தொடர்பு வசதிகளை உபயோகப்படுத்திக்கொண்டு மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளனர்.

ஆனால், தான் உபயோகப்படுத்தும் செல்போனில் என்ன இருக்கிறது, அதை எப்படிக் கையாள வேண்டும், எப்படிப் பாதுகாப்பது, திடீரென அது ஏன் வேலை செய்யாமல்போகிறது போன்றவை, முதியவர்கள் பலருக்கும் சிக்கலான பிரச்னைகளாகவே இருக்கின்றன.

போனை உபயோகிக்கத் தெரியாத பிரச்னையைவிடவும் செல்போனைத் தவறாகப் பயன்படுத்தும் பிரச்னைதான் பெரும் தலைவலியாக உள்ளது.

சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவின்போது ஓர் அரங்கில் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஓர் இளைஞர் செல்போனில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதைத் தாங்க முடியாத பார்வையாளர்கள், போனை அணைக்கும்படி கத்தினார்கள்.

அதைக் கேட்டதும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர், மிக ஆபாசமான வார்த்தைகளில் திட்டியபடியே, ``அப்படித் தான்டா பேசுவேன். நானும் காசு கொடுத்துதான் படம் பார்க்க வந்திருக்கேன்'' என்றார்.

உடனே ஒருவர் எழுந்து, ``அறிவு இல்லையா உனக்கு? எத்தனை பேர் படம் பார்க்கிறாங்க... வெளியே போய் பேசுடா'' என்றார்.
அப்படிச் சொன்னவருக்கு, 60 வயது இருக்கும். இதைக் கேட்டவுடன் செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஆத்திரத்துடன் அவரை அடிக்கப்போய், கண்டபடி திட்டினான். இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது.

`செல்போன்களை அணைத்துவையுங்கள்' என்ற அறிவிப்பை ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் அறிவிக் கிறார்கள். அதை ஏன் யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை; அப்படி என்ன முக்கியமான விஷயத்தைப் பேசுகிறார்கள்... அடுத்தவரை தொந்தரவு செய்கிறோம் என்பதைப் பற்றி, ஏன் துளிகூடக் கவலைப்படுவது இல்லை? அன்றாடம் திரையரங்கு களில் யாரோ எரிச்சல் அடைந்து செல்போனை அணைத்துவைக்கும்படி சண்டையிட்டு, உச்சஸ்தாயியில் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

விகாஸ் சர்மா என்கிற இந்தி எழுத்தாளர், ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதன் பெயர் `அதிகம் பேசாதே'.

மும்பையில் வசிக்கும் ஷியாம், கிராமத்தில் தனியே வசிக்கும் தனது அம்மாவோடு பேசுவதற்காகப் புதிதாக செல்போன் ஒன்றை வாங்கித் தருகிறான். அம்மாவுக்கு அதை எப்படி உபயோகப்படுத்துவது எனக் கற்றுத்தருகிறான். அம்மாவும் மகன் ஆசையோடு வாங்கிக்கொடுத்த செல்போனை சந்தோஷத்துடன் வைத்துக்கொள்கிறாள்.

மும்பையில் இருந்து ஷியாம் தினமும் மாலை நேரத்தில் அம்மாவுக்கு போன்செய்கிறான். அம்மாவும் போனை எடுத்துப் பேசுகிறாள். ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

இரண்டு மாதங்கள் இது தவறாமல் நடந்துவருகிறது. பிறகு ஒருநாள், அவன் போன் செய்தால், போனை எடுத்துப் பேச மறுக்கிறார் அம்மா. சில வேளைகளில் போனை எடுப்பார். ஆனால், ஒருசில வார்த்தைகளில் முடித்துவிடுகிறார். ஷியாமுக்கு, அம்மா ஏன் இப்படி இருக்கிறார் எனப் புரியவில்லை.

போனில் பேசும்போதுகூட தன் உடல்நலம் பற்றியோ, குழந்தைகள் பற்றியோ அம்மா எதுவும் விசாரிப்பது இல்லை என்பது அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது. `அம்மாவுக்கு என்ன கோபம், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?' என ஷியாம் வேதனைப்படுகிறான்.

கோடை விடுமுறைக்கு, தனது மனைவி பிள்ளை களை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்தான். அம்மா, அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று உபசரிக் கிறாள். அவளிடம் `ஏம்மா போனில் பேசுவதைக் குறைத்துக்கொண்டுவிட்டாய்... என்ன பிரச்னை?' எனக் கேட்கிறான் ஷியாம்.

அதற்கு அவள் `நீ என்னைப் பிரிந்து நகருக்குப் போன பிறகு, `உன் குரலைக் கேட்க மாட்டோமா, நீ ஊருக்கு வர மாட்டாயா...' என ஏங்கிக்கொண்டே இருப்பேன். தினமும் மனதுக்குள்ளாக உன் பிரிவை நினைத்துக்கொண்டு நீயும் உன் மனைவி குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துகொண்டிருப்பேன். சில சமயம், எனக்கு நானே பேசிக்கொண்டி ருப்பேன். எப்போதாவது நீ ஊருக்கு வந்தால், நீயும் நானும் விடிய விடிய கடந்துபோன நாட்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

இந்திய வானம் - 24

ஆனால், இந்த செல்போன் வந்த பிறகு தினமும் உன் குரலைக் கேட்கிறேன். நீயும் எதை எதையோ சொல்கிறாய். உன்னிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு விஷயமும் இல்லை. இங்கே அப்படி ஒன்றும் நடப்பதும் இல்லை. அதைவிடவும் அதிகம் பேசுவது அன்பை முறித்துவிடும். எவ்வளவுதான் நெருக்கமாக இருந் தாலும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் எரிச்சலாகத்தான் இருக்கும்.
உறவை வளர்க்க, அமைதியும் பிரிவும் அவசியம் தேவை. ஐந்து விரல்களும் ஒட்டிக்கொண்டே இருந்தால், கை எதற்கும் பிரயோஜனப்படாது. விரல்களுக்குள் இடைவெளி இருப்பதுபோல மனிதர்களுக்குள்ளும் இடைவெளி வேண்டும்.

அதை உணராமல் சதா பேசிக்கொண்டே இருந்தால், எரிச்சலும் கோபமும்தான் மிச்சம் ஆகும். அந்தக் காலத்தில், உன் அப்பா ராணுவத்தில் இருந்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு கடிதம் வரும். எனக்குப் படிக்கத் தெரியாது. யாரிடமாவது கொடுத்துப் படிக்கச் சொல்வேன், ஒரே கடிதத்தை ஆறு மாதங்கள் வரை வைத்து வைத்து படித்துக் கொண்டிருப்பேன். ஏக்கமாகவும் மனவேதனை யாகவும் இருந்தாலும், அதுதான் எங்களுக்குள் இருந்த உறவை உறுதியாக்கியது.

இன்று பலரும் வாய் இருக்கிறதே என எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்கி றார்கள். அது தவறு. நாம் சொல்லை வீணடிக்கக் கூடாது. இந்த செல்போன் எனக்கு வேண்டாம். நான் உன்னைப் பற்றி நானாக நினைத்துக்கொண்டு காத்திருக்கவே விரும்புகிறேன். இதை நீயே வைத்துக்கொள்' என அவனிடமே தந்துவிடுகிறாள்.

இந்தக் கதையை வாசித்தபோது, ஷியாமின் அம்மா சொன்னது உண்மை என்பது புரிந்தது. நாம் விரும்பும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது வேறு; தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது வேறு. நல்ல நண்பர்கள்கூட தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால், ஏதாவது ஒரு நேரத்தில் கசப்படைந்துவிடுகிறார்கள். பிரிவை, அமைதியை, இடைவெளியை இந்தத் தலைமுறை உணரவே இல்லை. செல்போனில் இரவு முழுவதும் தொடரும் பேச்சு இல்லா உரையாடல்கள் ஏதோ ஒரு தருணத்தில் வெறுப்பை, எரிச்சலை உருவாக்கிவிடுகின்றன. அதனால் உறவு முறிந்து போகிறது. ஏமாற்றமும் மனக்குழப்பமும் உருவாகின்றன. செல்போனை வீசி எறிந்து உடைத்த எத்தனையோ இளைஞர்களை நான் அறிவேன். ஒரு முதியவர்கூட அப்படி நடந்திருப்பாரா என்பது சந்தேகமே!

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதிலும் அரட்டை அடிப்பதிலும் எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ, அதற்கு இணையான சந்தோஷம் விருப்பத்துடன் தனித்து இருப்பதிலும் கிடைக்கும். அதற்கு, தனிமைக்கு நாம் பழக வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டு தனிமையில் இருப்பது என்பது வேறு; விருப்பத்துடன் தனிமையில் இருப்பது என்பது வேறு.

நாம் விருப்பத்துடன் தனித்திருக்கப் பழக வேண்டும். அது ஒரு சுவை. பறக்கும்போது மட்டுமே பறவைகள் கூட்டமாகச் செல்கின்றன. பிறகு, ஒவ்வொரு பறவையும் அதனதன் வழியே தனியேதான் இரை தேடுகின்றன. விரும்பிய மரத்தைத் தேர்வுசெய்து, வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன. தனிமைகொள்ளுதல் என்பது, நம்மை நாம் அறிந்துகொள்ளும் வழி.

`ரோமன் ஹாலிடே', `மை ஃபேர் லேடி' போன்ற படங்களில் நடித்த ஆட்ரி ஹெபர்ன், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை. 1950-ம் ஆண்டுகளில் யுனிசெஃப் நிறுவனத்தில் நடைபெற்ற பல்வேறு நற்பணிகளில் பங்குகொண்டவர். அவர் தனது அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். அதை வாசித்தபோது வியந்து போனேன்.

இந்திய வானம் - 24

`கண்கள் அழகாக இருக்க வேண்டுமா? உங்களைச் சுற்றி உள்ளவர்களின் நல்ல தன்மைகளைக் காணுங்கள். மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை, பசித்தவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். எப்போதும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் உடன் வைத்திருங்கள். சிரிப்புதான் ஆரோக்கியத்தின் முதற்படி. ஒப்பனை செய்துகொள்வதால் உங்கள் முகம் மட்டும்தான் அழகாக இருக்கும். ஆனால், மனம் அழுக்காக இருந்துகொண்டு முகம் அழகாக ஒளிர்வது தவறு அல்லவா?

அழகான கூந்தல் வேண்டும் என்றால், உங்களின் கூந்தலை, ஒரு குழந்தை தனது பிஞ்சு விரல்களால் தினமும் ஒருமுறை கோதிவிடட்டும்.

எவரையும் துச்சமாக நினைக்காதீர்கள்; பொருட்களைவிட அவசியம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மனிதர்கள்.

உங்களுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. அதில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று பிறருக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்' - ஆட்ரி ஹெபர்ன் சொன்னது இன்றைக்கும் பொருந்தக் கூடிய வழிகாட்டுதலே. தகவல்தொடர்பு சாதனங் களால் நமது வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. ஆனால், அதைக் கொண்டு உறவுகளைக் கெடுப் பதுடன் சமூகக் குற்றங்களையும் நாம் உருவாக்கு கிறோம் என்பது நாம் அறிந்தே மேற்கொள்ளும் தவறு. இதை உணர்ந்துகொண்டு, கவனத்துடன் களைந்து எறியவேண்டியது நமது கடமை.

- சிறகடிக்கலாம்...