`சுத்தம் சோறு போடும்’ என்பது நம் ஊரின் நெடுநாள் முதுமொழி. `சரி... அப்ப யார் குழம்பு ஊத்துவாங்க?’ என்பது நவீன நையாண்டி. வெறும் எள்ளலைத் தாண்டி `சுத்தம்' என்ற பெயரில் நடத்தும் சூழல் யுத்தம் குறித்த பேச்சு, இன்று பரவலாகிவருகிறது. 1947-ம் ஆண்டு, இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பீத்துணியை அலசிக் காயப்போட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கும் ஆயாவுக்கும் விடுதலை கிடைத்த வருடம்.

டோனாவேன் என்பவர், குழந்தைகளுக்காக 1947-ம் ஆண்டுக்குப் பிறகு கண்டறிந்த `டயாப்பர்’தான் அந்த விடுதலையை முதலில் பெற்றுத்தந்தது. 1600-களிலேயே டயாப்பர் கருத்தாக்கமும் பயனும் இருந்தாலும், கழிவுகள் வெளியே சிந்திவிடாதபடி படகு போன்ற ஆடையை (Boater) பிளாஸ்டிக்கில் வடிவமைத்துத் தந்தவர் டோனாவேன். அந்த டயாப்பரின் வெளி உறையை, நைலான் பாராசூட் துணியில்தான் அவர் முதலில் செய்தார். அந்த உறைதான் பிளாஸ் டிக்கில் இருந்ததே தவிர, உள்ளே அனைத்தையும் கழுவிக் காயப்போடும்படியான பஞ்சிலும் துணியிலும்தான் ஆரம்பகால டயாப்பர் இருந்தது.

1965-70களில்தான் `பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் டயாப்பர்கள்' வந்து சேர ஆரம்பித்தன. இன்றைக்கு ஒரு குழந்தை `மம்மி... ச்சூச்சூ, கக்கா வருது’ எனச் சொல்லி கழிவறையைப் பயன்படுத்தும் முன்னர், சுமாராக 10,000 டயாப்பர்களைக் காலிசெய்கிறதாம். வளர்ந்த நாடுகளிலேயே அப்படியென்றால், நம் ஊரில் குறைந்தது 4,000 டயாப்பர்களாவது காலியாகிருக்கும்.
 
டயாப்பரின் பயன்பாடு குறித்து, குழந்தை மருத்துவ உலகம் ஆங்காங்கே `குய்யோ... முய்யோ...’ என முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சாதாரணமாக, இரண்டு வயது ஆகும்போது டயாப்பரில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். பெற்றோரின் சௌகரியத்துக்காக, நம் ஊரில் 7-8 வயது வரை டயாப்பரோடு திரியும் குழந்தைகள் பெருகிவருகிறார்கள். கூடுதல் சோம்பேறித்தனத்தால், இரண்டு வயதுக்கு மேலாகவும் டயாப்பரைக் கழற்ற மறந்த குழந்தைகளில் பலருக்கு, `வருது... வருது’ என மூளையை உசுப்பிவிடும் நரம்புகளில் கொஞ்சம் `தேமே...’ என ஆகிவிடுவதால் ரொம்ப நாளைக்குப் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்களாம்.

உயிர் பிழை - 25

அந்தக் காலத்தில், கைக்குழந்தை வீட்டில் துணி துவைக்கும் நிகழ்வு, ஒரு குட்டித் திருவிழாவைப் போல் இருக்கும். வளைகாப்புக்குக் கட்டிய மாயிலைத் தோரணம் வாசலில் காய்ந்த கொஞ்ச நாட்களிலேயே, வீட்டுப் புறவாசல் கொடிக்கம்பியில் குழந்தையின் கோவணத் துணி தோரணமாகத் தொங்கிக்கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் குழந்தைகளின் கோவணத் துணிகளை அலசும்போது, `நல்லா துவைச்சியா புள்ள... சோப்புக் கறை இருந்திடப்போகுது. அந்தக் காரம் பச்சப்புள்ள உடம்புக்கு ஆகாது... பார்த்துக்கோ!’ என்ற அக்கறைக் கூவல் அடிக்கடி கேட்கும்.

இப்போது `இரவு முழுவதும் குழந்தை ஈரத்தால் சிணுங்காமல் இருக்க, கழிக்கும் சிறுநீரை எல்லாம் உறிஞ்சி உட்புறம் உலர்வாக வைக்க டயாப்பருக்குள் பிளாஸ்டிக் பாலிமர் உறிஞ்சிகள் (Superabsorbent  polymer) இருக்கின்றன. கவலையே வேண்டாம்’ என்கிற ஊடகக் கூவல் அடிக்கடி கேட்கிறது. இந்த பாலிமரின் பிரச்னை என்ன? கொஞ்சம் விசாலமாகப் பார்த்தால், அதன் பயன்பாடு கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது.

டயாப்பரைவிட, இன்னும் பல மடங்கு ராட்சச உறிஞ்சிகளுடன் நம் உடலோடு ஒட்டி உறவாடும் பொருள் `நாப்கின்'. மாதவிடாய் காலத்தில் `ஓய்வு' என்ற பெயரில் கூனிக்குறுகி, பெரும் வலியுடனும் அசௌகரியத்துடனும் மூலையில் முடங்கிக்கிடந்த மகளிரை, குதூகலமாகப் பாடித் திரியவைத்தது நாப்கின். ஆனால், `அந்தச் சௌகரியத்துக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ள அதே பிளாஸ்டிக் உறிஞ்சிகள், பெண்ணுக்கும் மண்ணுக்கும் எப்போதுமே பாதுகாப்பானவையா? வசதி மட்டுமா... அல்லது இதிலும் அறம் இல்லா வணிகம் ஒளிந்துள்ளதா?' போன்ற முக்கியமான கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

சாதாரணமாக, ஒரு பெண் தன் வாழ்நாளில் 3,500 மாதவிடாய் நாட்களைக் (12-45 வயதுக்குள்) கடக்கிறார். ஒரு மாதவிடாய் சுழற்சிக்கு 12-15 நாப்கின்கள் பயன்படுத்தும்போது, கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் 8,000 முதல் 10,000 வரையிலான நாப்கின்களைப் பயன்படுத்திவிட்டு எறிகிறார்கள்.

2011–ம் ஆண்டில் ஏ.சி.நீல்சன் நடத்திய ஒரு சர்வேயில், `இந்தியாவில் 355 மில்லியன் பெண்கள், மாதவிடாய்ப் பருவத்தில் உள்ளனர். அவர்களில் 12 சதவிகிதத்தினர் மட்டுமே இன்னமும் நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள்’ என அறிக்கை வெளியாகியுள்ளது. `டெளன் டு எர்த்’ எனும் இந்தியாவின் தலைச்சிறந்த சூழலியல் இதழ், 2013-ம் ஆண்டில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில், `சராசரியாக மாதம் ஒன்றுக்கு, இந்தியப் பெண்கள் மட்டும் 9,000 டன் நாப்கின் கழிவுகளை (24 ஹெக்டேர் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கக்கூடியது) எறிகிறார்கள்’ என உள்ளது.

`சரி... நாப்கின்கள் அனைத்தும் மண்ணில் அழியக்கூடியவையா?' என்றால், அதுதான் இல்லை. நெடுநேரத்துக்கு உலர்வாகவைத்திருக்கும் Superabsorbent  polymer எல்லாம், எப்போதும் அழியா பாலிமர் வகைகளைச் சேர்ந்தவை. கூடவே, நாம் அடிக்கடி பேசும் Phthalates-ம் நாப்கினின் வளைவுகளில் கொஞ்சூண்டு உண்டு.

இதை விற்று, பெரும் பணம் சம்பாதிக்கும் `புராக்டர் அண்ட் கேம்பிள்’ (நாப்கின் உலகின் 51 சதவிகிதத்துக்கு மேல் வணிகப் பங்கு உள்ள நிறுவனம்), `இந்துஸ்தான் யூனிலீவர்’, `ஜான்சன் அண்ட் ஜான்சன்’ போன்ற நிறுவனங்கள், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அழிப்பதில் என்ன பங்கு வகிக்கின்றன என்றே யாருக்கும் (அரசுக்கும்கூட) தெரியவில்லை.  `என்ன செய்யலாம்... வாருங்கள்’ என அழைத்த விவாதத்துக்குக்கூட இவர்கள் வரவில்லை என்ற குற்றச்சாட்டும், இந்திய அளவிலான சூழலியலாளர்களிடம் உண்டு.

நகர்ப்புறப் பெண் குழந்தைகள் படிக்கும் வசதியுள்ள பள்ளிகள், சிறிய இன்சினரேட்டரை மட்டுமே வைத்திருக்கின்றன. வசதி இருந்தும் மனம் இல்லாத பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரி...  `இன்சினரேட்டரா... அப்படின்னா?’ என அப்பாவி யாகக் கேட்கும் கிராமப்புறப் பள்ளிகளிலும் சரி... நாப்கின் கழிவுகள் மலைபோல் சேர்ந்துவிடுகின்றன.

டயாப்பர் மற்றும் நாப்கினின் உள்புறத்தில், 4 முதல் 5 கிராம் பாலி அக்ரிலிக் அமிலத்தில் செய்யப் படும் சூப்பர் உறிஞ்சிகள் சேர்க்கப்படுகின்றன. ஒரு கிராம் உறிஞ்சி, தன்னைவிட முப்பது மடங்கு தண்ணீரை உறிஞ்சும் தன்மை உடையதால், கிட்டத் தட்ட 100-120 மி.லி திரவத்தை உறிஞ்சும் தன்மையுடன் அந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

உயிர் பிழை - 25

குழந்தையின் நோய் எதிர்ப்பு செதுக்கப்படும் காலத்தில் உறவாடும் டயாப்பரிலும், இயல்பாக நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் நாப்கினிலும் உள்ள சூப்பர் பாலிமரால், உடலுக்குள் நாள்பட்ட பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டாகுமா என்ற ஆய்வை, எந்த ஒரு தனி நிறுவனமும் நடத்தியதாகத் தெரியவில்லை. `அய்யோ ரொம்ப சௌகரியம்... ரொம்பப் பாதுகாப்பு’ எனும் அத்தனை ஆய்வு முடிவுகளும், அந்தந்த நிறுவனத்தின் ‘பலத்த’ ஆதரவோடு நடைபெற்ற பாரபட்சம் இல்லா(?) ஆய்வுகள்.

நாப்கின்களில் உள்செருகியாகப் பயன்படுத்தப்படும் `டாம்பான்' வகை நாப்கின்களில், இதே பாலிமர்களின் பயன்பாடு இடைக்காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. கூடவே Negative ions, அதாவது Anion கொண்ட நாப்கின்கள் இப்போது மெள்ள மெள்ள இந்தியாவுக்குள் வந்துகொண்டிருக்கின்றனவாம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தால், `இதில் கதிர்வீச்சு ஆபத்து உள்ளதா?’ என உலகமே இந்த நாப்கின்களைப் பார்த்து அச்சம்கொண்டிருக்கிறது.

`பல வடிவங்களில், பிளாஸ்டிக் மற்றும் அதன் துணைக்கூறுகளின் வரவுதான் உயிர் பிழை உருவாக மிக முக்கியக் காரணமாக இருக்குமோ’ என உலகின் பல அறிஞர்கள் கவலைப்படும்போது, இந்த வணிகத்தில் பல பில்லியன் டாலர் இந்தியாவிலேயே சம்பாதிக்கும் நிறுவனங்கள், ஏன் வீதிக்கு வீதி இன்சினரேட்டரை அவர்கள் செலவில் நிறுவக் கூடாது... அதை அரசும் ஏன் நிர்பந்திக்கக் கூடாது?
நம் உடலுக்கு இயற்கையாக ஏற்படும் ஆபத்து ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் `இப்படி தினமும் டன் டன்னாகக் குவியும் டயாப்பரும் நாப்கினும் மண்ணுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை உருவாக்குமோ?' என்பது மிகப் பெரிய கேள்வி.

ஒவ்வொரு முறையும் தனி இல்லங்களிலும் நிறுவனங்களிலும் சாலையின் கழிவுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதற்குக் காரணம், சில புத்திசாலி நபர்கள் டயாப்பரையும் நாப்கினையும் கழிவறையிலேயே போடுவது தான். எவ்வளவு வளர்ந்தாலும் தன் கழிவறையைத் தானே சுத்தம் செய்யாமல், அதற்கு என பரம்பரை யாக இன்னொரு மனிதனை அடிமைப்படுத்தும் கொடூர மனம்கொண்ட சுயநலக் கூட்டம் நாம். விஷ நீரை ஒவ்வொரு நாளும் உறிஞ்சும் பாலிமரை கைகளால் அள்ளி அகற்றிவிட்டு, கூடுதலாக 50-100 ரூபாய்க்குக் குத்தவைத்திருக்கும் அந்தச் சக பயணிக்கு நாம் அளிக்கும் கொடை, சத்தம் இல்லாத `உயிர் பிழை’ என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

`இந்தியர்களில் 88 சதவிகிதம் பேர், இன்னும் கூட நாப்கினை உபயோகிக்கவில்லை. விற்பனை உத்தியைக் கூட்டுங்கள்’ என உலக அரங்கில் ஒரு பக்கம் கூச்சல் இருக்க, சூழலுக்கு இசைவாக அவர்களின் பயன்பாடு நன்றாகத்தான் இருந்தது. `இந்த டயாப்பரும் நாப்கினும், `வசதி’ `சுத்தம்’ எனச் சொல்லி பெரும் வணிக வலைக்குள்ளும் சூழல் கதவுகளுக்குள்ளும் இந்தியரைத் தள்ளிவிடுவதைத் தவிர, பெரிதாக ஏதும் செய்து விடவில்லை’ என ஒரு கூட்டம் தொடர்ந்து வாதிட்டுக்கொண்டே இருக்கிறது.

எப்படி இருந்தாலும் நாப்கினும் டயாப்பரும், நம் சமூகப் பிணக்குகளில் இருந்து நம் ஊர் பெண்களைக் காப்பாற்றியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. மறுபடியும் துணிக் காலத்துக்கே திரும்புவது சாத்தியமும் இல்லை. உலகெங்கும் வளர்ந்த நாடுகளில் பல, மீண்டும் துணியால் செய்த இந்த பாலிமர் உறிஞ்சிகள் இல்லாத நாப்கின்களுக்கு மாறிக்கொண்டி ருக்கின்றன. எல்லா இந்திய மகளிரும் பயன் படுத்தும்படியான சகாய விலையில், அதன் தயாரிப்பு மட்டுமே நம்மையும் நம் பூமியையும் காப்பாற்றும். நாப்கினும் டயாப்பரும் நமக்கான சௌகரியம்தான். நம் பூமித்தாய்க்கு அந்தச் சௌகரியம் தேவை இல்லை. தினமும் பிரசவித்துக்கொண்டும் பாலூட்டிக்கொண்டும் இருக்கும் பூமித்தாய், நமக்கு மட்டும் அல்ல... சின்னச்சின்னப் பூச்சி முதல் நாம் அண்ணாந்து பார்க்கும் மரம், மலை வரை அவள்தான் பாலூட்டிக்கொண்டிருக் கிறாள். இதை உணர்ந்து எச்சரிக்கையாக இல்லாவிட்டால், குருதியை வேகமாக உறிஞ்சும் பாலிமர்களைக் கொட்டித் தள்ளுவதால் கொஞ்ச நாளில் அவள்கூட மலடாகக்கூடும்.

- உயிர்ப்போம்...

உயிர் பிழை - 25

`அழுக்கு... அவமானம்... சுகாதாரம்’ போன்ற விளக்கங்களோடு நுழையும் வணிகம் ஏராளம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் கிரண்கந்தே எனும் இசைக்கலைஞர் `மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணின் இயல்பான ரத்தப்போக்கு. இதை ஏன் அவமானமாக, அழுக்காகப் பார்க்க வேண்டும்?’ என்ற கேள்வியுடன் நாப்கின் இல்லாமல், மாதவிடாய் நாளில் லண்டனைச் சுற்றி மாரத்தான் (26.2 மைல்கள்) ஓடி, ஒரு பெரும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார்.

பெண்களின் மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நிதி திரட்ட அவர் முயற்சி எடுத்து, மாரத்தான் ஓடும் நாளில் அவருக்கு மாதவிடாய் வந்துவிட... ``அதனால் என்ன, நாப்கினோடு நான் ஓடுவதில் சிரமம் இருக்கலாம். இந்தச் செய்தி என் ஓட்டத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்’' என இயல்பாக ஓடி முடித்தது `வசதியா... வணிகமா?’ என்ற சர்ச்சைக்கு இன்னொரு பார்வையைக் கொடுத்தது.