Published:Updated:

உலகை உலுக்கும் ஸிகா!

உலகை உலுக்கும் ஸிகா!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகை உலுக்கும் ஸிகா!

அதிஷா

 `எங்கெல்லாம் டெங்கு இருக்கிறதோ, எங்கெல்லாம் கொசுக்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் `ஸிகா' பாதிப்பை உண்டாக்கும். அமெரிக்காவில் மட்டும் அல்ல... உலகம் எங்கிலும் தன் கைவரிசையைக் காட்டும்' என பீதியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.

`ஸிகா வைரஸ் இருக்கும் நாடுகளுக்குப் போகவே போகாதீர்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால், அதைப் பற்றி யோசிக்கக்கூட வேண்டாம்' எனப் பதறுகிறார்கள்.

`கொசுக்கள் இப்போது பேரழிவு ஆயுதங்களாக உருமாறிவருகின்றன. தயவுசெய்து கொசுக்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என அச்சத்தோடு அறிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தைப் பதறவைத்த சிக்குன்குனியா போல, பறவைக் காய்ச்சல் போல, கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிர்களைக் காவுவாங்கிய எபோலா போல... இப்போது தென்அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் புதிய சொல், `ஸிகா வைரஸ்’ (Zika virus). இப்போது வட அமெரிக்க நாடுகளுக்கும் படையெடுக்க ஆரம்பித்திருக்கும் இந்த வைரஸ், ஈகுவடார், பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா என 13 லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிவேக மாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஆறே மாதங்களில் 14 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் அதிகம் பேர் குழந்தைகள். இதுவரை 4,180 பச்சிளம் குழந்தைகள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில ஐரோப்பிய நாடுகளிலும் `ஸிகா வைரஸ்’ அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 

உலகை உலுக்கும் ஸிகா!

ஸிகா வைரஸ் தாக்கினால், டெங்குவைப் போல முதலில் காய்ச்சல் வரும். அதுவும் ஐந்தில் ஒருவருக்குத்தான் வரும். மற்றவர்களுக்கு உள்ளே வைரஸ் இருக்கும்; வெளியே அறிகுறியே தெரியாது. இதனாலேயே ஸிகா வைரஸ் தாக்கிய ஒருவர் சராசரி வாழ்வின் அத்தனை பணிகளையும் செய்வார். அதன் மூலம் மற்றவர்களுக்கு சுலபமாக வைரஸ் பரவும்.  காய்ச்சல், உடம்பில் நமைச்சல், மூட்டு களில் வலி, தசை வலி, தலை வலி ஆகியவை ஸிகா வைரஸ் தாக்குதலின் பொதுவான அறிகுறிகள். இந்தத் தொந்தரவுகள் ஒரு நாளில் இருந்து ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழப்பு எதுவும் நிகழவில்லை. ஆனால், அதைவிடவும்  மிக மோசமான பாதிப்புகள் உருவாகின்றன.

இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப் படுவது கர்ப்பிணிப் பெண்கள்தான். ஸிகா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் `மைக்ரோசிபாலி' (microcephaly) என்ற பிறப்புக் குறைபாட்டுக்கு உள்ளாகிறார்கள். இந்தப் பாதிப்பால் குழந்தைகளின் தலை சிறுத்துப்போயும், மூளை வளர்ச்சியில் குறைபாடும் ஏற்படும். கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே பிரேசிலில் 4,000 குழந்தைகள் மைக்ரோசிபாலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடவே வாதநோயை  உண்டாக்கக்கூடிய குணமும் இந்த வைரஸுக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது கொசுக்களால் மட்டும் அல்ல, உடலுறவின் மூலமாகவும் பரவக்கூடியது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு என பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப் படவில்லை. `இப்போதைக்கு கொசுக்களைக் கட்டுப்படுத்துவது ஒன்றுதான் தீர்வு’ என்கிறது அமெரிக்காவின் CDC (The Centers for Disease Control and Prevention) அமைப்பு.

இன்னும் ஆறு மாதங்களில் உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் நடக்கவுள்ள நிலையில், இந்த ஸிகா வைரஸ் தாக்குதலால் உருக்குலைந்து போயிருக்கிறது தேசம். பிரேசிலின் சுகாதாரத் துறை அமைச்சர், `கொசுக்களுடனான போரில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம்' என அச்சத்துடன் அறிவிக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதா... வேண்டாமா என பல நாடுகள் யோசிக்கத் தொடங்கி விட்டன. எப்படியாவது கொசுக்களை ஒழித்துவிட வேண்டும் என, நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் ராணுவத்தை இறக்கிவிட்டு கொசுவேட்டை ஆடிக்கொண்டிருக்கிறது பிரேசில் அரசு.

உலகையே அச்சுறுத்தும் இந்த புதிய எமனுக்கு பூர்விகம், உகாண்டா. 1947-ம் ஆண்டில் உகாண்டாவின் ஸிகா காடுகளில் குரங்குகளிடம் இந்த வைரஸ் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் அந்தக் காட்டின் பெயரையே வைத்துவிட்டார்கள். சிக்குன் குனியாவையும் டெங்குவையும் பரப்புகிற அதே கொசுக் குடும்பத்தின் இன்னொரு வாரிசுதான் ஸிகாவையும் பரப்புகிறது.

`கொசுக்கள், காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அவை மனிதர்களை எந்நேரமும் கடித்துக்கொண்டிருப்பது இல்லை. இரவில் மனிதர்கள் தூங்கும்போதுதான் காத்திருந்து கடிக்கின்றன. சில வகை கொசுக்கள் தங்களுடைய எச்சிலை மனிதத் தோலில் செலுத்திவிட்டுக் கடிப்பதால், கடிபடுபவருக்கு வலியே இருக்காது. டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் நல்ல நீரில் வளர்கின்றன. இவை பகலில் கடிக்கின்றன' எனக் கொசுக்களின் கேரக்டரை விவரிக்கிறது பிரேசிலைச் சேர்ந்த சாவோ பாவ்லோ பல்கலைக்கழக ஆய்வு.

கண்டுபிடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் மிகச் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்த ஸிகா வைரஸ், திடீரென பெரிய அளவில் பரவுவதற்கு என்ன காரணம்?
`பருவநிலை மாற்றமாக இருக்கலாம்' என்கிறார்கள் சூழலியலாளர்கள். குறிப்பாக, `எல் நினோ' (El nino) பாதிப்பு அதிகம் உள்ள பசிபிக் பகுதிகள், இந்த வகை வைரஸ் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர். பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாறுபாடு இந்தக் கொசுக்கள், வளர்வதற்கு ஏற்ற மிதவெப்பச் சூழலை உருவாக்குகிறது. அத்துடன், பிரேசிலில் கடந்த ஆண்டு உண்டான மிக அதிக மழையும் அதைத் தொடர்ந்து உருவான மிதமான வெப்ப நிலையும் இந்த வகை கொசுக்கள் வளர உதவுகின்றன. அதே நேரம், பருவநிலை மாற்றமும் தண்ணீர் பஞ்சமும் மட்டுமே இந்தப் புதுப்புது வைரஸ்களின் வரவுக்கு காரணம் அல்ல. இதன் பின்னணியில் சமூக - பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன. மக்கள்தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், வறுமை முதலான சமூகக் காரணிகளை மறந்துவிடக் கூடாது.

இந்த வகை கொசுக்களும், அவை உருவாவதற்கு ஏற்ற அனைத்து சமூகக் காரணிகளும் மலிந்து கிடக்கும் நாடு, இந்தியா. எனவே, ஸிகா வைரஸ் தாக்குதல் இந்தியாவுக்கு வந்தால், அதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். விமான நிலையங்களில் சோதனைகளைக் கடுமையாக்குவது மட்டுமே இப்போதைக்கு செய்யக்கூடியது என்றாலும், அதையும்கூட இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் இன்னும் செய்யவில்லை. போதிய முன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதும், பாதிப்பு வந்ததும் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு, நிவாரணம் வழங்கி, அதை வாக்குகளாக மாற்றுவதும் தான் இந்திய ஆளும் வர்க்கத்துக்குத் தெரிந்த ஒரே நோய்த் தடுப்பு முறை. ஸிகா வைரஸைவிட கொடிய வைரஸ், அதிகார வர்க்கத்தின் இந்த மக்கள் விரோத மனப் போக்குத்தான்.  

ஸிகா - கவனிக்கவேண்டிய ஆறு விஷயங்கள்!

• கொசுக்களால் பரவக்கூடியது. டெங்கு, சிக்குன்குனியாவை உருவாக்கும் அதே ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்களால் இது உருவாகிறது.

• இப்போதைக்கு பிரேசிலையும் அதைச் சுற்றியுள்ள 13 நாடுகளையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

• சிகிச்சை எதுவும் கிடையாது - தடுப்பு மருந்தும் இல்லை.

• அறிகுறிகள் - லேசான காய்ச்சல், தோலில் தடிப்பு, கண்கள் சிவந்துபோவது, மூட்டுவலி.

• கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகப் பாதிப்பை உண்டாக்கக்கூடியது.

•   கொசுக்கடியில் இருந்து தற்காத்துக்கொள்வதுதான் ஒரே வழி.

``பயம் வேண்டாம்!''

உலகை உலுக்கும் ஸிகா!

``இப்போதைக்கு இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லை. ஆனால் இந்தியாவில் கொசுக்கள் அதிகம் இருப்பதால், இங்கும் பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலக அளவில் யாரும் மரணம் அடையவில்லை. சிக்குன்குனியா மாதிரியான இன்னொரு வைரஸ்தான் இது. இதைக் கண்டு நாம் பீதியடைய தேவை இல்லை. `கர்ப்பிணிகளுக்கு ஆபத்து இருக்கும்' எனச் சொல்லப்படுவதுகூட இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. `மைக்ரோசிபாலி'க்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ என சந்தேகிக்கின்றனர். பயணிகள், இந்த நோய்த் தாக்குதல் உள்ள நாடுகளுக்கு போவதைத் தவிர்க்கலாம்'' என்கிறார் மருத்துவர் முருகேஷ் பாபு.

ஸிகா வைரஸ்

உலகை உலுக்கும் ஸிகா!

40 லட்சம் பேர் - இதுவரை பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.

4,180 பேர் - `மைக்ரோசிபாலி'யால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்.

2,20,000 - ஸிகா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரேசில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை.