Published:Updated:

விவசாயி பிரகாஷ்ராஜை சந்திக்க வேண்டுமா?! திருச்சிக்கு வாங்க...

விவசாயி பிரகாஷ்ராஜை சந்திக்க வேண்டுமா?!  திருச்சிக்கு வாங்க...
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயி பிரகாஷ்ராஜை சந்திக்க வேண்டுமா?! திருச்சிக்கு வாங்க...

ஆர்.குமரேசன், படம்: எஸ்.சந்திரமௌலி

‘ஹாய் செல்லம்' பிரகாஷ்ராஜை ஒரு நடிகராக, தயாரிப்பாளராக நமக்குத் தெரியும். ஆனால், இப்போது அவர் ஒரு விவசாயியும்கூட. தனது பரபர வேலைகளுக்கு இடையில் விரும்பிச் செய்வது விவசாயம். அதுவும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்!

‘‘நான் ஒண்ணும் பாரம்பர்யமான விவசாயி இல்லை. என் அப்பா - அம்மா ரெண்டு பேருமே நகரவாசிகள். நான் கஷ்டப்பட்டு நடிகனாகி ஒரு இடத்தைப் பிடிச்ச கொஞ்ச நாள்லயே வாழ்க்கை ரொம்பப் பரபரப்பா ஆகிருச்சு. விமானப் பயணம், அடுக்குமாடிக் கட்டட வாழ்க்கை... என எனக்கும் பூமிக்கும் இடைவெளி அதிகமாகிருச்சு. ஒருமுறை சென்னை டு பெங்களூருவுக்கு கார்ல போனேன். அப்ப சாலையோரங்கள்ல பார்த்த, மலைகள், வயல்கள், மரங்களும் `இதுதான்டா இயற்கை’னு என் நெத்தியில் அடிச்சு சொன்ன மாதிரி இருந்தது. அப்போதான் விவசாயம் பண்ற ஆசை வந்தது. உடனடியா அதைச் செயல்படுத்த ஆரம்பிச்சிட்டேன். நான் விரும்பி நடுறது மா, தென்னை, பனை மரங்கள்தான். இவை தவிர, எல்லா காய்கறிகளும் பழங்களும்  பயிர் செய்றேன்’’ எனச் சொல்லும் பிரகாஷ்ராஜ் இன்னும் பல தகவல்களை, உங்களுடன் நேரில் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

ஆம்... பிப்ரவரி மாதம் 12-ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் பசுமை விகடன் நடத்தும் மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்க வருகை தரும் பிரகாஷ்ராஜ், தனது வேளாண் அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்துகொள்கிறார்.

அவருடன் இந்தியாவின் முன்னோடி இயற்கை விவசாயிகளும், தங்கள் அனுபவங்களைப் பகிரவிருக்கிறார்கள்.

விவசாயி பிரகாஷ்ராஜை சந்திக்க வேண்டுமா?!  திருச்சிக்கு வாங்க...

``நாடு எங்கும் நடந்த விவசாயிகளின் தற்கொலைகள், என்னை நிலைகுலையச் செய்தன. `அடுத்து என்ன செய்வது?' என்ற நிலையில் இருந்த நான், சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் யதேச்சையாகக் கலந்துகொண்டேன். அந்தப் பயிற்சி, என் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை ரசாயனங்களைக் கொட்டி கடன்களை வளர்த்துக்கொண்டிருந்த நான், அதன் பிறகு நாட்டு மாடுகளின் சாணம், சிறுநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாயம்செய்ய ஆரம்பித்தேன். அடுத்த ஒரே ஆண்டில் ஆச்சர்ய மாற்றங்கள் என் நிலத்தில் அரங்கேறின. தற்போது, மூன்று ஏக்கர் நிலத்தில் இருந்து ஆண்டுக்கு ஆறு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இப்போது என் பண்ணை, இந்தியாவின் முக்கிய ஜீரோ பட்ஜெட் மாதிரி பண்ணை. இந்தியா முழுவதும் இருந்து, தினமும் என் பண்ணையைப் பார்க்க விவசாயிகள் வருகிறார்கள். இந்த மாற்றத்துக்குக் காரணம் இயற்கை விவசாயம்’’ என்கிறார் கர்நாடக மாநில முன்னோடி இயற்கை விவசாயி கிருஷ்ணப்பா.

``கரடுமுரடான, 12 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 17 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனது விவசாய முறைகளைக் கண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி ஆகியோர் பாராட்டியுள்ளனர்’’ என்கிறார் தெலங்கானா மாநில முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு.

இவர்கள் அனைவரும் திருச்சி வேளாண் கண்காட்சிக் கருத்தரங்கில் தங்கள் அனுபவத்தைப் பகிரவிருக்கிறார்கள்.
 
தைவான் நாட்டின், உலகக் காய்கறி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின், பூச்சிகள் தொடர்பான ஆராய்ச்சி குழுத் தலைவர் முனைவர் சீனிவாசன் ராமசாமியும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மலேசியா - பினாங்கு பயனீட்டாளர் சங்க, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயக் கல்வி அதிகாரி என்.சுப்பா ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இவர், மலேசியாவின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நடைமுறைகள், வெற்றிபெற்ற விவசாயிகளின் சாகுபடி முறைகள் பற்றி உரையாற்ற இருக்கிறார்.

இவர்களுடன் தமிழ்நாட்டின் முன்னோடி விவசாய விஞ்ஞானிகள், விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், கால்நடை வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு உரையாற்றும் கருத்தரங்கு, நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

விவசாயி பிரகாஷ்ராஜை சந்திக்க வேண்டுமா?!  திருச்சிக்கு வாங்க...

பண்ணைக் கருவிகள், இயற்கை இடுபொருட்கள், சிறுதானிய விதைகள், உணவுகள் உள்ளிட்ட வேளாண் சார்ந்த தகவல்கள், அரங்குகள் அனைத்தும் ஓர் குடையின்கீழ் கிடைக்கும் வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை நடத்தியது பசுமை விகடன்.

அதன் தொடர்ச்சியாக, வருகிற பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி 15-ம் வரை திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளது.

`கடந்த முறை பங்கேற்க முடியவில்லையே' என வருத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக, திருச்சி கண்காட்சி அமைந்துள்ளது. இது விவசாயக் குடும்பங்களின் திருவிழா... குடும்பத்தோடு வாருங்கள்!