Published:Updated:

மனநோயின் பிடியில் சிறைவாசிகள்!

மனநோயின் பிடியில் சிறைவாசிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனநோயின் பிடியில் சிறைவாசிகள்!

ஆ.விஜயானந்த்

டலூர் மத்தியச் சிறை வளாகம். 2009-ம் ஆண்டு, பாலு என்கிற ஆயுள் தண்டனைக் கைதி சிறைவாசியாக அடைக்கப் பட்டிருந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரை, கல்லால் தாக்கிக் கொன்றதாக அவர் மீது வழக்கு. சிறையில் இருந்த பாலுவின் செயல்பாடுகள், வார்டன்களை அதிரவைத்தன. கையை அடிக்கடி அறுத்துக் கொள்வது, சக கைதிகளைத் தாக்குவது... என அவரது தொல்லைகள் அதிகரித்தன. அவரை மனநோயாளிகளுக்கான பிளாக்கில் அடைத்து வைத்தனர். ஒருநாள், யாரும் எதிர்பாராத வகையில் டாய்லெட் கழுவும் பினாயிலைக் குடித்து உயிரை விட்டிருந்தார்.

* அதே கடலூர் சிறையில், 2011-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட அய்யனார் மற்றும் கந்தவேல் ஆகிய இரு கைதிகளுக்கு, மருத்துவர்கள் தொடர்சிகிச்சை அளித்தனர். ‘இவர்கள் இருவரும் குணமடைந்துவிட்டார்கள்’ என முடிவுக்குவந்த சிறை நிர்வாகம், இருவரையும் ஒரே பிளாக்கில் அடைத்துவைத்தது. மறுநாள் காலையில், சாப்பாட்டுத் தட்டால் அடித்ததில் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரை விட்டிருந்தார் கந்தவேல். அவரைக் கொன்ற அய்யனார், இரவு முழுவதும் பிணத்தின் அருகில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

* புழல் சிறை. 2012-ம் ஆண்டு. சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கில் அடைபட்டிருந்த செங்கல்பட்டைச் சேர்ந்த விசாரணை சிறைவாசி ஒருவர், சக கைதிகளால் துன்புறுத்தப்பட்டார். சில நாட்களில் அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறைச்சாலையின் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தவர், ஒருநாள் சாப்பாட்டை மூடிவைக்கும் துணியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

- இவை எல்லாம் தமிழ்நாட்டுச் சிறைகளில் தாங்கமுடியாத மனஅழுத்த நோயால் பாதிக்கப் பட்டு முடிவைத் தேடிக்கொண்ட சில கைதிகளின் கதைகள். இன்னும் வெளியில் தெரியாமல் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைக்குள் மனநோயாளிகளாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 9 மத்தியச் சிறைகள், 95 துணைச் சிறைகள் உள்பட, 136 சிறைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் 22,100 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இதில், பெண்கள் மட்டும் 2,323 பேர். `ஒவ்வொரு சிறையிலும் மனநோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் ஏராளமாக இருக்கிறார்கள்' என்கிறார்கள் சிறைத் துறையினர். மனநோயால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும், சிறுவர்-சிறுமியர் பாலியல் குற்ற வழக்கில் கைதுசெய்யப்படுபவர்கள், பெற்றோர், மனைவியைக் கொன்றவர்கள் போன்றோர்தான்.

மனநோயின் பிடியில் சிறைவாசிகள்!

“தமிழ்நாட்டின் அனைத்து மத்தியச் சிறை களிலும் `மனநல நோயாளிகள் பிளாக்' எனத் தனியாக வைத்துள்ளனர். எங்கள் கணக்குப்படி தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மனநோயாளிக் கைதிகள் உள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளின் கணக்கு தனி. சிறையில், இந்தக் கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. ஆயுள்தண்டனை பெற்று நீண்ட காலம் உள்ளே இருக்கும் சிறைவாசிகள்தான், அதிகப்படியான மனநலப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், குடும்ப உறுப்பினர்கள் வந்து பார்க்காதது, பரோல் கிடைக்காதது போன்றவைதான். ஒரு கட்டத்தில், தங்களைத் தாங்களே அறுத்துக் கொள்வது, தூக்கு மாட்டிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என வேதனை யுடன் சொல்கிறார் சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர், வழக்குரைஞர் புகழேந்தி.

“பொதுவாக, மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு அன்பான, அனுசரணையான சிகிச்சை தேவை. அப்படி சிகிச்சை அளிக்கக்கூடிய மனநல மருத்துவர்கள் சிறையில் இல்லை. பொதுமருத்துவர் மட்டும்தான் இருப்பார். அவரும் எப்போது வருவார் எனத் தெரியாது. ஒருவர் எதற்காக மனநோயாளி ஆனார் என்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். குடும்பத்தினர் வந்து பார்க்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினரைப் பார்க்கவைக்கச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து, அந்தக் கைதியை விடுவிக்க முடியும் அல்லது அந்தக் கைதியை ஒரு மாத பரோலில் அனுப்பிவைத்து குடும்பத்தோடு தங்கவைக்க முயற்சி எடுக்கலாம். இவை எதையும் சிறை நிர்வாகம் செய்வது இல்லை.

சிறைக் கைதிகள் மனநோயாளிகளாக மாறுவதற்கு இதைவிட முக்கியக் காரணம் உள்ளது. ஒரு குற்றவாளி, ‘இந்த நாளில்தான் விடுதலை ஆவோம்’ என்ற நம்பிக்கையில் இருப்பார். அதற்கு ஏற்ப அவர் தயார் மனநிலையில் இருப்பார். ஆனால், இப்போது 15 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என ஆயுள் தண்டனையை நிறைவுசெய்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். விடுதலை என்பது சாத்தியம் இல்லை என உணர்ந்த கைதிகள், ‘நாம் சிறையிலேயே செத்துவிடுவோமோ?!’ என அஞ்சுகின்றனர். உறவுகளைப் பார்க்க முடியாத பரிதவிப்புக்கு ஆளாகிறார்கள்.  இதுதான் மனநோயின் தொடக்கம்.
மேலும், ஒரு கைதியைச் சீர்திருத்து வதற்காக, சிறை வளாகத்துக்குள் அவர்களுக்குப் பல தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. உண்மையில், இந்தப் பெயரில் கைதிகளின் உழைப்பைச் சுரண்டும் வேலைதான் நடக்கிறது. யாருக்கும் எட்டு மணி நேர வேலை இல்லை. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, இரவு 10 மணி வரை வேலைபார்க்க வேண்டும். சரியான உறக்கம் இல்லை. அந்த உழைப்புக்கு உரிய கூலியும் தரப்படுவது இல்லை.

சிகிச்சை, தொழில்வாய்ப்புகள் என்பதைவிடவும், அவர்களுக்கு விடுதலைக்கு உண்டான வாய்ப்பையும் அரசு வழங்க வேண்டும். நம்முடைய அமைப்பே, `குற்றவாளிகளைச் சீர்திருத்தி, மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்பதுதான். ஆனால், இங்கு ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், கூடுதலாக மனநலம் பாதிக்கப்படுவதற்கான வேலையைத் தான் அரசு செய்கிறது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடைகளைக் களைந்து ஜட்டியோடு தனி அறையில் அடைக்கிறார்கள். இந்த நோயாளியை, வார்டன்கள் தங்கள் விருப்பத்துக்கு அடிக்கிறார்கள். இதனால் நோயாளி, மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.

ஒவ்வோர் ஆயுள் தண்டனைக் கைதிக்கும், ஆண்டுக்கு 15 நாட்கள் விடுமுறை உண்டு. சஞ்சய் தத், நினைத்தால் சிறைக்குப் போகிறார்; நினைத்தால் வீட்டுக்கு வருகிறார். ஆனால், இந்த 15 நாட்கள் விடுமுறையைக்கூட ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு, தமிழ்நாடு சிறைத் துறை வழங்குவது இல்லை. ஒரே ஒருநாள்கூட பரோல் விடுப்பில் போகாத கைதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்'' என்கிறார் புகழேந்தி.

“பல ஆண்டுகள் ஒருவர் சிறையில் இருக்கிறார் என்றால், அந்தக் கைதியை சிறை நிர்வாகம் நம்ப வேண்டும்; அந்தக் கைதிக்கு உரிய வசதிகளைச் செய்துதர வேண்டும். சிறைத் துறைத் தலைவராக நட்ராஜ் இருந்தபோது வாரத்தின் முதல் நாள் மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் கைதிகளின் உறவினர்கள் சிறைக்குள்ளேயே சென்று கைதிகளைப் பார்க்க முடியும். இதனால் கைதிகள் மன உளைச்சலில் இருந்து விடுபட்டார்கள். இந்த நடைமுறைகள் இப்போது இல்லை.

திருச்சி உள்ளிட்ட சிறைகளில், முகம் மட்டும் பார்த்துப் பேசும் அளவுக்கு, தடுப்பை ஏற்படுத்தி விட்டார்கள். ஓர் அப்பா, தன் குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட சிறை நிர்வாகம் அனுமதிப்பது இல்லை. இதுபோன்ற காரணங்களால்தான் கைதிகள் மனநோயாளிகளாக மாறுகிறார்கள். இவர்களை மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், சிறைக்குள்ளேயே வைத்து சித்ரவதை செய்கின்றனர்'' என ஆதங்கப்படுகிறார் சிறைவாசி ஒருவரின் உறவினர்.

சிறைத் துறை தொடர்பான வழக்குகளை நடத்திவரும் வழக்குரைஞர் கண்ணதாசனிடம் பேசியபோது, “மனஅழுத்த நோய்க்கு ஆளாகிறவர்கள், பெரும்பாலும் மனைவி, பெற்றோர், குழந்தைகளைக் கொல்பவர்கள், பாலியல் வழக்குகளில் சிக்குபவர்கள்தான். இவர்கள், சக கைதிகளால் வெறுக்கப்படுகிறார்கள்; அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். மனநலம் பாதித்த கைதிகள், மற்ற கைதிகளிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வார்கள். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவது பலமுறை நடந்துவிட்டது. ஆனால், இது எதையும் சிறை நிர்வாகமும் கண்டுகொள்வது இல்லை.
 
இப்போது தண்டனை சிறைவாசிகளிடம் மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. `முன் விடுதலை' என்ற ஒன்றையே அரசு மறந்துவிட்டது. முன்னர் எல்லாம் தலைவர்கள் பிறந்த நாளில் விடுதலை நடக்கும். இப்போது அடியோடு அந்த முறை இல்லை. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் `முன்விடுதலை' செய்யப் படுகிறது. தமிழ்நாடு அரசு மட்டும் பிடிவாதமாக இருக்கிறது. ஆயுள் கைதிகளை விடுதலைசெய்வது குறித்து முடிவு எடுக்கவேண்டிய அறிவுரைக் கழகமோ, செயலற்று முடங்கிக்கிடக்கிறது. ‘நன்னடத்தை அடிப்படையில் விடுதலை ஆவோம்’ என்ற நம்பிக்கையோடு இருப்பவர்கள், ‘ஒருகட்டத்தில் நமக்கு சாவே இங்குதான்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்'' என்கிறார்.

மனநோயின் பிடியில் சிறைவாசிகள்!

மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும் பாலானோர் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மதுரை, பாளையங் கோட்டை சிறையில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் இந்த வகையில் உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், தெருவில் அலைந்துதிரியும் மனநோயாளிகளை,  கைதிகளாக மாற்றிவிடுவதுதான் என்கின்றனர். `கேட்க ஆள் இல்லை என்பதால், குற்றவாளிகள் சிக்காத, விரைவில் முடிக்கவேண்டிய வழக்குகளில் தெருவில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்துவந்து, `குற்றவாளிகள்' என கோர்ட்டில் கணக்குக்காட்டி சிறையில் அடைத்துவிடுகின்றனர்' என அதிர்ச்சியான தகவல்களும் சொல்லப்படுகின்றன. ஆனால், `இவர்களை எப்படித் தண்டிக்க முடியும்?' என்ற கேள்வி இயல்பாக வருகிறது.

``இந்த விவகாரத்தில் சட்டத்தின் பார்வை வித்தியாசமானது, `குற்றம் செய்தது குறித்த அறிவு இருந்தால்போதும்' என்கிறது. ஒருநபர் தன் தாயையோ, தந்தையோ கொன்றுவிடுகிறார் என்றால், இதைச் சாதாரண மனிதன் செய்வது இல்லை. நீதிபதி கேள்வி கேட்கும்போது ‘நீ யாரைக் கொன்றாய்?’, ‘எங்க அம்மாவை’ ‘எதற்குக் கொன்றாய்?’ ‘சோறு போடவில்லை’ எனப் பதில் சொன்னால், அவர் சரியான மனநிலையில் இருப்பவர் என நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. இவர்கள் சிறைக்குள் வரும்போதுதான் மற்ற கைதிகளைத் தாக்குவதும், தன்னைத்தானே அறுத்துக்கொள்வதும் நடக்கின்றன. இந்தக் கைதிகளை `மார்ஜினலி டீவியேட்டட் டிஸ்ஆர்டர்' என மனநல மருத்துவம் சொல்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்துகொண்டால், எதிர்கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம்’' என்கிறார் சிறைத் துறையில் பணியாற்றும் மனநல மருத்துவர் ஒருவர்.

`சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏதோ ஒரு குற்றத்தைச் செய்ததற்காகத் தண்டிக்கப் பட்டவர்கள். அவர்கள் அனுபவிக்கும் வேதனை என்பது, அவர்கள் இழைத்த குற்றத்துக்கான தண்டனை. எல்லா வகையிலும் சொகுசாக இருப்பதற்காக அவர்கள் சிறையில் அடைக்கப் படவில்லை. இதை இந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டும்' என சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது அப்படி அல்ல;

`தண்டனை என்பது, ஒரு மனிதனைத் திருத்துவதற்காகவே' என்பதுதான் உலகளாவிய பார்வை. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நோக்கமும் அதுதான். அந்த வகையில், கைதிகளின் மனித உரிமைகளும் சுயமரியாதையும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மனமாற்றம் பெறுவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். முக்கியமாக, கைதிகளின் செயல்பாடு களைத் தொடர்ந்து கண்காணித்து, நன்னடத்தை உள்ளவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அது சிறைக்கூடம்தானே தவிர, கொலைக்கூடம் அல்ல!

சிறை விதி சொல்வது என்ன?

தமிழ்நாடு சிறை நடைமுறை விதிகள் எண் 971-988 வரை மனநலக் கைதிகள் பற்றி பேசுகின்றன. விதி 974, மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்கிறது. விதி 975, விசாரணைக் கைதியாக இருந்தால் சிறைத் துறை எப்படி நடத்த வேண்டும் என்பதை விளக்குகிறது. இவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 328-ன்படி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். சட்டப் பிரிவு 330-ன்படி மனநலக் காப்பகத்துக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிடவும் இந்தப் பிரிவு வழி சொல்கிறது. சிறை நடைமுறை விதி 982-ன்படி, அவர்களை இரவு-பகலாகப் பாதுகாக்க வேண்டும்; ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களை அனுமதிக்கக் கூடாது என வரையறுக்கிறது.