Published:Updated:

மனிதாபிமானம் விற்பனைக்கு!

மனிதாபிமானம் விற்பனைக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
மனிதாபிமானம் விற்பனைக்கு!

மருதன்

ளம் பெண்களைச் செக்கச்செவேல் என சிவக்கவைப்பதையே தன் ஒரே லட்சியமாகக்கொண்டு இயங்கிவரும் உன்னத சமூகப் போராளி அமைப்பு, `லோரியல்'. இதன் பார்வையில், இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் ஆறு.

வயதாவது, கண்களுக்குக் கீழே கருவளையம் தோன்றுவது, கரும்புள்ளிகள் முகத்தில் பரவிக்கிடப்பது, தோல் உலர்ந்துபோயிருப்பது, சுருக்கம் அல்லது கோடுகள், தொங்கும் சதை... இந்த அபாயகரமான (?) பிரச்னைகளை எதிர்கொள்ள ஐ க்ரீம், ஃபேஸ் சீரம், ஃபேஷியல் கிளென்சிங், ஃபேஷியல் ஆயில், ஃபேஷியல் மாய்ச்சரைசர், மேக்கப் ரிமூவர், ஸ்கின் சன்ஸ்கிரீன், ஃபேஸ் சன்ஸ்கிரீன், நைட் க்ரீம், செல்ஃப் டேனர்... எனப் பல வண்ணங்களில், பல குப்பிகளில், பல நறுமணங்களில் வழங்கிவருகிறது. இவை தவிரவும் கணக்கற்ற புராடெக்டுகள் உள்ளன.

ஒருநாள் இந்த லோரியல் என்ன செய்தது தெரியுமா? `எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தினால் முகப்பருக்களை உருவாக்கும் 99.9 சதவிகிதக் கிருமிகள் ஒழிந்துபோகும்' என ஆர்ப்பாட்டமாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. விளம்பரங்களை முறைப்படுத்தும் தன்னார்வ இந்திய அமைப்பான ஏ.எஸ்.சி.ஐ (அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா),    இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது.

கடந்த ஜூன் மாதம் ஏ.எஸ்.சி.ஐ., லோரியலின் விளம்பரத்தைத் தடைசெய்தது. லோரியல் மட்டும் அல்ல, மொத்தம் 82 நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன. வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 148 விளம்பரங்களைப் பார்வையிட்டு, அவற்றில் 82 போலியான விளம்பரங்கள் கண்டறியப்பட்டன.   இவற்றில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அவை பெரும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை.

மனிதாபிமானம் விற்பனைக்கு!

இனிமேல் இந்த நிலைமை மாறக்கூடும். ஏனெனில், விளம்பர நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை முற்றிலும் வேறுவிதமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன. தங்களது பொருட்களின் பெருமையைப் பேசுவது, `இதைப் பூசினால், ஒன்பது நாட்களில் முகம் பொலிவடையும்' என வாக்குறுதி தருவது எல்லாம் பழைய மாடல் விளம்பரம். இப்போது, `ஒவ்வொரு முறை எங்கள் பவுடரைப் பூசும்போதும் ஓர் ஏழைக் குழந்தையின் கல்விக்கு உதவுகிறீர்கள்' என்கிறார்கள். மனித மனங்களில் உறைந்திருக்கும் மனிதாபிமானம்தான் இப்போது விற்பனைச் சரக்கு.
 
உங்களுக்குப் பிடித்த நட்சத்திர ஹோட்டலில் சென்று இனி நீங்கள் விருப்பம்போல் உண்ணலாம். நீங்கள் செலுத்தும் தொகையின் ஒரு பகுதி உணவு இல்லாத ஏழை மக்களுக்குச் சென்று சேரும். ஆன்லைனில் உங்களுக்குப் பிடித்த சில பன்னாட்டு வீட்டு உபயோக பிராண்டுகளை ஆர்டர்செய்தால், எத்தியோப்பியாவில் உள்ள பெண்கள் பலனடைவார்கள். உல்லாச விடுதியில் தங்குவதற்கு வருடந்தோறும் பணம் செலுத்தினால், ருவாண்டாவில் உள்ள குழந்தைத் தொழிலாளிகளை நீங்கள் மீட்டெடுக்க முடியும்.

`எங்கள் ஆஃப்டர் ஷேவைப் பயன்படுத்தினால் எல்லா பெண்களும் உங்கள் பின்னால் ஓடி வருவார்கள்' என விளம்பரம்செய்து  எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியது இல்லை. `எங்களிடம் நீங்கள் ஆஃப்டர் ஷேவ் வாங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய செடியை நாங்கள்  பூமியில் நடுகிறோம்' எனச் சொல்லிவிட்டால் போதும். வாடிக்கையாளர்களுடைய இதயத்தையும் பர்ஸையும் ஒரே நேரத்தில் வருடிவிடலாம்.

குறிப்பிட்ட ஒரு பிராண்ட் சட்டையைத் தேடி வாங்குவதன் மூலம் புவிச் சூடேற்றத்துக்கு எதிரான போராளியாக நீங்கள் மாற முடியும். `காளான்போல் பெருகியிருக்கும் நகைக் கடைகளில் எதைத் தேர்வுசெய்வது?' என இனி மயங்க வேண்டாம். ஒழுகும் பள்ளியின் கூரையைச் சீராக்கிக்கொடுக்கும் நகைக் கடையை நீங்கள் தாராளமாக நாடிச் செல்லலாம். அங்கே நீங்கள் வாங்கும் ஒவ்வொரு குண்டுமணித் தங்கமும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பாவப் பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கும் செங்கல்லாக உருமாறும்.

உண்மையில் அந்த நகைக்கடைக்கும் பள்ளிக்கும் தொடர்பு இருக்கிறதா? அந்த பிராண்டட் சட்டையை அணிந்தால் எத்தியோப்பியா பொலிவுபெறுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இங்கேதான் புதிய விளம்பர உத்்தி வெற்றிபெற ஆரம்பிக்கிறது. அதே நகை, அதே கோலா பானம், அதே சட்டை, அதே சிவப்பழகு க்ரீம். ஆனால், பேக்கேஜிங் மட்டும் புதிது. இங்கே டார்கெட், உங்கள் உடல் அல்ல; இதயமும் மூளையும்தான்.

நான் `டயட் கோலா குடிக்கிறேன் தெரியுமா?' என பீற்றிக்கொள்வதன் மூலம், `எனக்கு கலோரி பற்றியும் சுகர் பற்றியும் உடல்நலம் பற்றியும் உன்னைவிட அதிகம் தெரியும்' என்னும் தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.  சாதா காபி பிரியர்களுக்கு மத்தியில் நீங்கள் கஃபேன் ஃப்ரீ காபியாளர். சாதா சட்டை போடுபவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு மனிதாபிமானச் சட்டையாளர்.

இன்றைய கார்ப்பரேட், முதலாளித்துவ உலகத்தின் புதிய சாதனை இதுதான். ஒரு சாதாரண வாடிக்கையாளராக இருந்த உங்களை ஒரு மனித உரிமைப் போராளியாக எண்ண வைக்கிறார்கள். `இதைத் தடவிப்பாருங்கள், உங்கள் முகச்சிவப்பு லேயர் லேயராகக் கூடும்' என்று அவர்கள் சொன்னபோது எப்படி நம்பினீர்களோ, அப்படியே இப்போதும் நம்பத் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் செலுத்தும் அந்தக் கூடுதல் தொகை, இந்த உணர்வை உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இது நீங்கள் பெறும் லாபம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடையும் ஆதாயமோ மிக மிக அதிகம்.

மனிதாபிமானம் விற்பனைக்கு!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஒரு குளிர்பான நிறுவனம், 10 பள்ளி மாணவர்களுக்கு இலவசத் தண்ணீர் பாட்டில்களை அளிப்பதன் மூலம் பாரி, ஓரி, காரி போன்ற வள்ளல்கள் வரிசையில் சேர்ந்துவிடுகிறது. ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்து கொழுத்துப் போயிருக்கும் ஒரு கம்பெனி தன் பிராண்ட் வேல்யூவை வளர்த்துக்கொள்ள, தன் பகாசுர லாபத்தில் இருந்து பரோபகாரத்துக்கு ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து வீசுகிறது.

லோரியல் இணையதளத்தை இப்போது சென்றுபாருங்கள். `பால் வெள்ளை நிறத்தில் ஒரு மாடல் காட்சியளிப்பார்' என நினைத்தால் ஏமாந்துபோவீர்கள். கறுப்பான ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் படம்தான் உங்களை வரவேற்கும். அழகு என்றால், `வெள்ளை' என யார் சொன்னது? கருமையும் ஒரு நிறம்தான் அல்லவா?

உங்கள் கண்கள் இப்போது நனைந்திருந்தால், அநேகமாக நீங்கள் லோரியலின் வாடிக்கையாளராகிவிட்டீர்கள் என அர்த்தம்.