Published:Updated:

ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!

ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!
News
ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!

பா.ஜான்ஸன்

க்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி தெரியும்... அதில் ஒவ்வோர் ஆண்டும் புத்தம்புதிய வார்த்தைகள் சேர்க்கப்படுவது தெரியுமா? அந்தந்த ஆண்டில் உலகம் முழுக்க ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைச் சேகரித்து, ‘வேர்டு ஆஃப் தி இயர்’ என ஒரு சொல்லைத் தேர்வுசெய்கிறார்கள். அதனுடன் வேறு சில சொற்களையும் தேர்வுசெய்து டிக்‌ஷனரியில் சேர்க்கிறார்கள். அப்படி 2015-ம் ஆண்டில் `வேர்டு ஆஃப் தி இயர்' ஆகத் தேர்வான சொல், `எமோஜி' (Emoji). கடந்த சில ஆண்டுகளில் இப்படித் தேர்வுசெய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் இங்கே...

எமோஜி (Emoji)

சிரிப்பு, அழுகை, வருத்தம்... என நவரச உணர்வுகளை வெளிப்படுத்த, செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தும் ஸ்மைலியின் பெயர்தான் `எமோஜி'.  பல வார்த்தைகளில் விவரிக்கவேண்டிய விஷயங்களை, ஒரே ஸ்மைலியில் உணர்த்தும் மேஜிக்தான் `எமோஜி'. கடந்த வருடம் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான்

ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!

.

போவ்வெர்ட் (bovvered)

`தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க!', `என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?' போல வைரலான வார்த்தைதான் இந்த போவ்வெர்ட். `தி கேத்தரின் டேட் ஷோ' என்பது பிரிட்டனில் மிகவும் பிரபலமான காமெடி தொடர். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் லாரன். இவர் `Am i bothered?' என சொல்வதற்கு th-க்கு பதில் vv-யைச் சேர்த்து bovvered என உச்சரித்துவிட, அதை வைரலாக்கிக் கலாய்த்தது சோஷியல் மீடியா. இந்த வார்த்தை ட்ரெண்டிங் ஆகி உலகம் முழுக்கப் பரவ, ஆக்ஸ்ஃபோர்டும் அகராதியில் இணைத்துவிட்டது. Bother-க்கு வரும் அர்த்தத்தையே இந்த வார்த்தைக்கும் வழங்கிவிட்டார்கள்.

ஒரு வார்த்தை... ஒரு வருஷம்!

பாட்காஸ்ட் (Podcast)

IPod மற்றும் Broadcast என்ற வார்த்தைகளின் கலப்படம்தான் Podcast. ஐபாடில் பாடலைச் சேமித்துவைத்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதுதான் `பாட்காஸ்ட்'. ஐபாட் பிரபலமாக ஆரம்பித்த நேரத்தில் இந்த வார்த்தையை இணைத்துக்கொண்டது ஆக்ஸ்ஃபோர்டு.

லோகவோர் (locavore)

`உள்ளூர் உணவு' உண்பவரைக் குறிக்கும் 4ஜி தலைமுறையின் வார்த்தை இது. ஹெர்பிவோர், கார்னிவோர் போல லோக்கல் உணவுகளை உண்பவரை லோக்கல்வோர் என்று சொல்ல ஆரம்பித்து அது `லோகவோர்' ஆனது. உள்ளூர் உணவுகள் அழிந்துவரும் நிலையில் அவற்றை ஊக்கப்படுத்த உருவான இந்த வார்த்தை, இப்போது உலகம் முழுக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 வேப் (Vape)

சிகரெட்டுக்கு மாற்றாக வந்த இ-சிகரெட்டை குறிக்கும் சொல் இது. Vapour அல்லது Vaporize என்ற வார்த்தையைத் தழுவி வந்தது. `சிகரெட் பிடித்து வெளியிடுவது புகை; இ-சிகரெட் பிடித்து வெளியிடுவது ஆவி (Vape)' என்கிறார்கள். இ-சிகரெட் எல்லா இடங்களிலும் பரவலாக உபயோகிக்கப்பட, ஸ்மோக்கிங் ரூம்கள்போல `வேப்பிங் ரூம்கள்'கூட உருவாக ஆரம்பித்தன.

செல்ஃபி (Selfie)

இந்த வார்த்தைக்கு விளக்கம் சொல்லத் தேவை இல்லை. `1839-ம் ஆண்டு ராபர்ட் கொர்னிலியஸ் எடுத்ததுதான் முதல் செல்ஃபி’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு அப்போது `செல்ஃபி' எனப் பெயர் வைக்கப்படவில்லை. இப்போது, `செல்ஃப் போர்ட்ரைட்' என்ற அர்த்தத்துடன் அகராதியில் பதிந்திருக்கிறது செல்ஃபி.

ஜிஃப் (GIF)

`கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மெட்' (Graphic Interchange Format) என்பதன் சுருக்கமே GIF. புகைப்படத்துக்கும் வீடியோவுக்கும் இடையிலான ஒரு நிலை. ஒரு வீடியோ காட்சியில் சில நொடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு லூப்போல திரும்பத் திரும்ப ஓடவிடுவதுதான் ஜிஃப் செயல்படும் விதம். இப்போது ஜிஃப்-பிலேயே மீம்ஸ் எல்லாம் வந்துவிட்டன.

ஸ்க்வீஸ்டு மிடில் (Squeezed middle)
 
சமூகத்தின் ஒரு பகுதியினரை மட்டும், அதாவது நடுத்தர வர்க்கத்தினரைத் தாக்கும் வரி விதிப்பைக் குறிக்கும் சொல் இது. வருமானம் உயரும் வேகத்தைவிட, செலவுகள் அதிகம் ஆகும். 2011-ம் ஆண்டு உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதாரத் தள்ளாட்டத்தைச் சந்தித்தபோது, அதை எதிர்கொள்ள வரி விதிப்பை அதிகரித்தன. அப்போது உருவான இந்தச் சொல்,
உலகம் எங்கும் ஏராளமானோரால் பயன்படுத்தப்பட்டது.

ரெஃப்யூடியேட் (Refudiate)

சாரா பாலின் என்பவர், தன் ட்வீட் ஒன்றில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். Refute, Repudiate என்ற இரு வார்த்தைகளின் பொருளும் `மறுப்பது' என்பதுதான். அவர் இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து `Refudiate' எனப் பயன்படுத்த, பலரும் `இப்படி ஒரு வார்த்தையே இல்லையே?' எனக் கேள்வி கேட்டனர். புதிய சொல்லின் ஈர்ப்பு காரணமாக இணையத்தில் பலரும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்து, கடைசியில் டிக்‌ஷனரியிலும் இடம்பிடித்துவிட்டது.