Published:Updated:

“'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

 “'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”
பிரீமியம் ஸ்டோரி
News
“'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

நா.சிபிச்சக்கரவர்த்தி

``ஜி... ஜி... கொஞ்சம் ஈஸியா கேளுங்கஜி. நான் நியூஸ்ல கொஞ்சம் வீக்...’’ என்று லாஸ்ட் பெஞ்ச் லாலிபாப்பாக ஆரம்பித்தார் ராய் லட்சுமி.

``அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணன்கூட இருக்கோம். இதைச் சமாளிக்க மாட்டோமா? என்னா ஏதுன்னு கேள்விக்கணைகளை வீசுங்கண்ணே...’’ என்று வேட்டியை ஏத்திக்கட்டித் தயாரானார் மன்னன்.

``இப்பதான் பாரிஸ் ரோடுல இருந்த ஃப்ளெக்ஸ் பேனர்கள் எல்லாம் கிழிச்சேன். எத்தனை தடவை சொன்னாலும் இந்தக் கட்சிக்காரங்க மரமண்டைகளுக்கு ஏறவே மாட்டேங்குது. நீங்க சொல்லுங்க... என்ன தெரிஞ்சுக்கணும்?’’ என்று சூட்டைக் கூட்டினார் டிராஃபிக் ராமசாமி.

``தம்பி... ஐ நோ ஆல் டீட்டெய்ல்ஸ். இந்த டெஸ்ட்டுக்கு சிலபஸ் விகடன்தானே? வாராவாரம் விடாமப் படிச்சுவெச்சு இருக்கேன். எப்படி பதிலைப் புட்டுப் புட்டு வெச்சு ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறேன்னு பாருங்க’’ என்றார்  சிங்கம் புலி. 

 “'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

“நடிகர் ரஜினிகாந்த்-க்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விருதின் பெயர் என்ன?”

விடை: பத்ம விபூஷண்.


ராய் லட்சுமி: “பத்ம பூஷண்... கரெக்ட்? ரஜினி சார் கிரேட். நான் அவர்கூட நடிக்கப் பிரியப்படறேன்னு அவர்கிட்டயே சொல்லியிருக்கேன். டைம் வந்தா கண்டிப்பா ரஜினி சார்கூட ஆக்ட் பண்ணுவேன். ஒன் மார்க் கன்ஃபார்மா?”

மன்னன்: “நான் தீவிரமான ரஜினி ரசிகர்ங்க. மதுரையில ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்புகள் எல்லாம் வந்தது. சின்ன வயசுல இருந்து தி.மு.க-வில்  இருந்ததால் `வேண்டாம்’னு சொல்லிட்டேன். சூப்பர்ஸ்டாருக்கு பத்ம விபூஷண் கொடுத்திருக்காங்க. எப்பூடி மதுரக்காரய்ங்க கிட்டயேவா?”

டிராஃபிக் ராமசாமி: “பத்ம பூஷணோ பத்ம விபூஷணோ கொடுத்தாங்க. ரஜினி, சமூகத்துக்கு என்ன செஞ்சார்னு தெரியலை.” 

சிங்கம் புலி:
“ஐ... என்னப்பா இவ்வளவு ஈஸியா கேட்டுப்புட்ட! ரஜினிக்கு பத்ம விபூஷண் கொடுத்தாங்க. (நம்மிடம் ஒரு ஹைஃபை போடுகிறார்). ரஜினி சார் கூடத்தான் என் சினிமாவே தொடங்குச்சு. ‘அருணாச்சலம்’ படத்துலதான் முதன்முதல்ல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைபார்த்தேன். அப்ப ரஜினி, தன் எதிரிகளுக்கு கடிதம் எழுதுவார். அந்தக் கடிதம் என் கையெழுத்துலதான் இருக்கும். அதைப் பார்த்துட்டு `இந்தக் கையெழுத்து யாரோடது?’னு என்னைக் கூப்பிட்டுப் பாராட்டி `உங்க பேர் என்ன?’னு கேட்டார். ‘சிங்கம் புலி’னு சொன்னேன். ‘சூப்பர் ஒரு படத்துக்கே தலைப்பு வைக்கலாம்’னு சொல்லிச் சிரிச்சாரு தலைவரு.”

“ ‘ஸோம்பி’ என்பதன் பொருள் என்ன?”

விடை: மனிதர்களைத் தின்பவர்கள்.

 “'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

ராய் லட்சுமி: “செத்துப்போன மனுஷங்களைச் சாப்பிடுவாங்களே... அவங்கதானே? ஸோம்பிகள் உயிரோடு இருந்தாலும் செத்துப்போனவங்கதான்.”

மன்னன்: “சோபியாவா? ஏதாவது ஹீரோயின் பேரா தம்பி? அய்யோ... இருங்க. இன்னொரு முறை கேள்வியைக் கேளுங்க. என்னாது... ஸோம்பியா? என்னய்யா வார்த்தை இது? ஏதாவது ஜப்பான் வார்த்தையா? தெரியலைய்யா. நமக்குத் தகுந்த மாதிரி சுலபமா கேள்வி கேளுப்பா.”

டிராஃபிக் ராமசாமி: “ஸோம்பிக்கு அர்த்தம் சோம்பேறித்தனமாக இருக்கிறது. என் வாழ்க்கையில நான் எப்போதுமே சோம்பேறித்தனமாக இருந்தது இல்லை.”
 
சிங்கம் புலி: “தோனி, செரீனா வில்லியம்ஸ்ல தொடங்கி அகநாநூறு, புறநானூறு வரைக்கும் படிச்சுவெச்சிருந்தேன். இந்த ஸோம்பியை எங்க விட்டேன்னு தெரியலையேப்பா. தம்பி நீங்களே பதில் சொல்லிடுங்க. ஒரு மார்க்கு போச்சே” - பதிலைக் கேட்டதும். “அட, ஆமாய்யா... நம்ம ஜெயம் ரவி நடிக்கிற ஒரு படத்தின் கதையே இதைவெச்சுத்தான... எப்படி மறந்தேன்?”
 
“மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை?”

விடை: 4 கட்சிகள். 


ராய் லட்சுமி: ஷாக் ஆகிறார். “அய்யோ... பாலிட்டிக்ஸ்... ஜி எனக்கு அதெல்லாம் பிடிக்காது. தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்ல ரெண்டு பேரு தெரியும். ஒண்ணு சி.எம் ஜெயலலிதா, இன்னொருத்தர் விஜயகாந்த்” (கருணாநிதி தெரியாதா... ட்விட்டர்ல பொங்கப்போறார்...)

மன்னன்:
“எத்தனை கட்சிகள் வந்தாலும் எங்களை யாரும் அசைக்க முடியாதுல்ல. அஞ்சா நெஞ்சன் அண்ணன் இருக்கும் வரை அவர்தான் எங்கள் தலைவர். (சார், பதிலுக்குச் சம்பந்தமே இல்லாமப் பேசுறீங்க...) அண்ணன் இந்தப் பிறந்த நாளை அமைதியாகக் கொண்டாடச் சொல்லிட்டாரு  இல்லைன்னா அமர்க்களப்படுத்திருப்போம். (சார், பதிலைச் சொல்லுங்க) அட... இருப்பா சொல்வோம்ல... அண்ணனைப் பத்தி ரெண்டு வார்த்தை சொல்லவிட மாட்டேங்கிறியே. அவங்க கூட்டணியில  நாலு கட்சிகள் இருக்காங்க. (உஸ்ஸ்ஸ்...)”

டிராஃபிக் ராமசாமி:
“அஞ்சு கட்சிக் கூட்டணி வெச்சிருக்காங்க. நீங்க வேணும்னா பாருங்க. தேர்தல் நெருங்கும்போது இந்தக் கூட்டணி உடைஞ்சுரும். நாங்க 234 தொகுதிகள்லயும் போட்டியிடப்போறோம்.

 “'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

நான் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துட்டு இருக்கேன். விரைவில் அறிவிப்பேன்.”

சிங்கம் புலி: “ரெண்டு கம்யூனிஸ்ட்கள், வைகோ, திருமாவளவன், ஒரு முஸ்லிம் கட்சி மற்றும் இன்ன பிற கட்சிகளும் இருக்காங்க. சரியா தம்பி?” (ஆக மொத்தம் ஒரு எட்டு போட்டுக்கலாமா!)

“நடிகர் அஜித்தின் குழந்தைகள் பெயர் என்ன?”

விடை: ஆத்விக், அனோஷ்கா


ராய் லட்சுமி: “சன் ஆத்விக், பொண்ணு அனுஷ்கா. நாங்க ஒண்ணா ஒரே ஃப்ளைட்ல நிறைய டைம் டிராவல் பண்ணியிருக்கோம். அப்ப நிறையப் பேசுவார். ஃப்ளைட் டேக்ஆஃப் ஆச்சுன்னா இறங்குற வரைக்கும் பேசிச் சிரிச்சுட்டே இருப்போம். அஜித் இஸ் எ ஜென்டில்மேன்.”

 மன்னன்: “அவருக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்காங்க... யோசிக்கிறேன். ஆங்... பிடிச்சுட்டேன். பையன் பேரு ஆத்விக், பொண்ணு அனுஷ்கா. சரியா? எப்படி டக்குனு பதில் சொல்லிட்டேனா? ஹா... ஹா... எனக்குப் பின்னால இருந்த தம்பிங்க சொல்லிக்குடுத்தாங்க. ஆனா, நானே சொன்ன மாதிரி எழுதிப்புடணும்... சரியா?’’

டிராஃபிக் ராமசாமி:
“அஜித் தானே. இப்பகூட படம் ரீலிஸ் ஆனப்ப ரோடு முழுக்க பேனர்வெச்சு அட்டூழியம் பண்ணாங்க. சினிமாக்காரங்களால்தான் நாடு கெட்டுப்போகுது.”

சிங்கம் புலி: “அஜித்தைவைத்து `ரெட்’ படம் எடுக்கும்போது எங்க அம்மா மீனாட்சி ‘சீக்கிரம் குழந்தை பெத்துக்கோங்க’னு ஷாலினிகிட்ட சொல்லிட்டே இருப்பாங்க. இப்ப அஜித்குமாருக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆத்விக், அனோஷ்கா.”

“சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாகப் புகாரில் சிக்கிய முதலமைச்சர் யார்?”

விடை: கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி.


ராய் லட்சுமி:
``திரும்பத் திரும்ப பாலிட்டிக்ஸ்... திரும்பத் திரும்ப... போங்க பிரதர்... இது போங்காட்டம்.'' (செல்லமாக அடிக்க வருகிறார்)

 “'ஸோம்பி’னா சோம்பேறிதானே?”

மன்னன்: எங்ககிட்டயே வா? பதில் உம்மன் சாண்டி. கூடிய சீக்கிரம் இங்கேயும் ஒருத்தர் சிக்குவார்.  ‘அண்ணன்’ எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லிட்டேன்ல. சரி, எப்போ பரிசு அனுப்புவீங்க? என்னாது... பரிசு எல்லாம் கிடையாதா... என்னப்பா சொல்றே? (அதிர்ச்சியாகிறார்) கஷ்டப்பட்டு, ஆள்வெச்சு பிட் எல்லாம் அடிச்சு பதில் சொன்னேன்யா. அம்புட்டும் வேஸ்ட்டா..?”

டிராஃபிக் ராமசாமி:
“உம்மன் சாண்டிதானே? ஜெயலலிதாவும் சீக்கிரம் சிக்குவார் பாருங்க. என்ன அராஜகம் பண்றாங்க இங்க. இவங்க செய்யறது எல்லாம் அட்டூழியம். பாவம்... மக்களுக்குத்தான் எதுவுமே தெரிய மாட்டேங்குது.’’

சிங்கம் புலி: “கேரளாவைச் சேர்ந்த சாண்டி... உம்மன் சாண்டி. சரியா? ஐ... நான் அஞ்சு கேள்வியில நாலு கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டேன். ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்!”