Published:Updated:

அதிமுக அணியில் ம.ம.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

விகடன் விமர்சனக்குழு

சென்னை, பிப்.21,2011

சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.##~~##

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று மாலை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ்.ஆரூன்ரஷீது மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக பொருளாளர் ரஹ்மத்துல்லா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது. இந்த நிகழ்வின்போது, அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கான ஒப்பந்தத்தில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க.வுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சிக்கு மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அ.தி.முக. கூட்டணியில், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சி மற்றும் டாக்டர் ந.சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.