ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

'' ஆயிரமாயிரம் நவீன வகை ஆடைகள் நாள்தோறும் அறிமுகமாகிக் கொண்டிருந்தாலும், என்றைக்கும் பட்டொளி வீசி, பார்ப்பவர்களின் மனத்தைத் தொட்டு இழுக்கும் நிரந்தர சக்திவாய்ந்தது பாரம்பர்யமான நமது காஞ்சிப் பட்டு!’

##~##
-இது காஞ்சிப் பட்டின் மகத்துவம் பேசும் வெறும் வார்த்தை அலங்காரம் அல்ல; ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் ஆதார தத்துவமாகவே இந்த வைர வரிகளைப் பார்க்கிறேன்!'' -சிலிர்த்துப் பேசுகிறார் 'நல்லி’ குப்புசாமி செட்டியார்!

பத்மஸ்ரீ, கலைமாமணி, சமூக சேவகர், எழுத்தாளர், தொழிலதிபர்.... என்று பல முகங்கள் கொண்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்! பரபரப்பான ஜவுளி விற்பனைக்கு இடையிலும் நிதானமாக நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்.

''ஜிம் போகிறேன், டயட் இருக்கிறேன், கொழுப்பைக் குறைக்க ட்ரீட்மென்ட் எடுக்கிறேன்.... என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி பயிற்சிகள் செய்தும், பட்டினி கிடந்தும்தான் ஆரோக்கியம் பேண வேண்டுமா என்ன? இல்லையே! நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்தாலே ஆரோக்கிய வாழ்வுக்கான உறுதியான அடித்தளமும் தானாகவே அமைந்துவிடும்.

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

பிறப்பால் தமிழனாக இருக்கிறோமே தவிர உணவு, உடை, படிப்பு... என்று ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் அந்நியமாகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, குனிந்து வீடு பெருக்குவது, முதுகு வளைந்து துணி துவைப்பது.... என்று எல்லாவற்றையும் மறந்து, கழிப்பறைக்கும்கூட மேல்நாட்டு பாணியைத்தான் கடைப் பிடிக்கிறோம். உரல், உலக்கை, ஈஸிசேரை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டோம்! அன்றாட வீட்டு வேலைகளை உடலுழைப்பாகச் செய்துவந்தனர் அந்தக்காலப் பெண்கள். அதனால், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றார்போல், இயற்கையாகவே அவர்களது இடுப்பு எலும்பு நன்றாக விரிவடைந்து, சர்வ சாதாரணமாக வீட்டிலேயே சுகப் பிரசவம் கண்டார்கள். ஆனால், காலச் சக்கரம் இன்றைக்கு எல்லாவற்றையும் எந்திரமயமாக மாற்றிவிட்டது; ஆரோக்கியத்தையும் அடியோடு அழித்துவிட்டது.

'ஐம்பது வயதைக் கடந்தவர்கள் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்ததும் குறைந்தது 20 நிமிடங்களாவது ஈஸிசேரில் படுத்து ஓய்வு எடுத்தால் செரிமானத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தக் காலங்களில் வீடுகள்தோறும் ஈஸி சேர் இருக்கும். ஆனால், 'ஈஸிசேர் எப்படி இருக்கும்?’ என்பதே இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை'' என்று கலாசார சீரழிவு குறித்து வருத்தப்படும் குப்புசாமி செட்டியாரின் மனம் 'காஞ்சி பட்டை’விட மென்மை! அடுத்ததாக ஆன்மிகத் தத்துவங்கள் கூறும் வாழ்க்கை நெறி முறைகளுக்குள் லயிக்க ஆரம்பித்தவர்,

''எப்போதுமே எதிர்பார்ப்புகள் அதிகமாகும்போது, கிடைக்கும் ஏமாற்றங்களும் தாங்க முடியாத ரணமாக இருக்கும். அதனால்தான் 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்று மனத்தைப் பக்குவப்படுத்தச் சொல்லித் தருகிறது கீதை! 'விறுப்பு வெறுப்பற்ற மனநிலையோடு இலக்கு நோக்கிப் பயணப்படுவதுதான் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரே வழி’ என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் 'தோற்றுப் போய்விட்டோமே’ என்று வருத்தப்படுவதும் கிடையாது; நம்மை ஜெயிக்க யாரும் இங்கில்லை என்ற இறுமாப்பும் எனக்கில்லை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது இங்கே யாருக்கும் தெரியாது. அதனால், எனக்குள் எந்தவிதத் திட்டமிடலும் கிடையாது. நடப்பது எல்லாம் அவன் செயல்!

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

ஆண்டவனால், நமக்கு அளிக்கப்பட்ட சூழலில் விதிக்கப்பட்ட விதியின்படி கர்ம பலன்களை அனுபவிப்பதுதான் இந்த மனித வாழ்க்கை. எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் அதனைச் சரிவர செய்துவந்தால் போதும் என்று நினைப்பவன். அந்த வகையில்தான் இந்தத் துணிக்கடை வியாபாரத்தையும் நூறு சதவிகித உழைப்பும் உண்மையுமாகச் செய்துவருகிறேன். அதனால்தான் படுக்கையில் படுத்த அடுத்த நொடியிலேயே என்னால் தூங்கிவிட முடிகிறது.

''எதிர் பார்ப்பைக் குறைத்தால் எல்லாம் கிடைக்கும்!''

பொதுவாக 'பிசினஸ் செய்பவர்களின் மனதில் நிம்மதியே இருக்காது. எப்போதும் வியாபாரச் சிந்தனைகளிலேயே சிடுசிடுவென இருப்பதால், தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள்’ என்ற பரவலான கருத்து உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. செய்யும் தொழிலை ஆர்வத்தோடும் சிரத்தையோடும் செய்ய ஆரம்பித்தால், நிம்மதியான தூக்கமும் வரும்; கூடவே திடகாத்திரமான ஆரோக்கியமும் தேடி வரும்!

சிறுவயதில், பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து அன்றைய வீட்டுப் பாடங்களை விறுவிறுவெனச் செய்துமுடித்துவிட்டு துணிக்கடைக்கு ஓடி வந்துவிடுவேன். காரணம் கடையில், ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை நடந்தால், ஊழியர்கள் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார் என் தந்தை. அதனாலேயே எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அனைத்தையும் உடனுக்குடன் செய்து முடித்துவிட்டு கடைக்குச் செல்லும் சுறுசுறுப்பும் என்னுள் ஊறிப்போனது. ஆக, ஆரம்ப நாட்களில், ஐஸ்க்ரீமில் தொடங்கிய ஆர்வம் பின்னாட்களில், இந்தத் தொழில் மீதான தீரா ஆர்வத்தையும் வளர்த்துவிட்டது.  

ஒருமுறை, நண்பர் ஒருவர் என்னிடம் 'எப்போதும் பரபரப்பாக தொழிலிலேயே மூழ்கி இருக்கிறீர் களே.... ஓய்வு நேரத்தை எப்போது, எங்கே, எப்படிக் கழிக்கிறீர்கள்?’ என்றார். நான் சொன்னேன் 'கடை யில் பரபரப்பாக ஓடியாடி வேலை செய்வதுதான் எனக்கான ஓய்வு. செய்யும் தொழிலை சுமையாக நினைப்பவனுக்குத்தானே ஓய்வு தேவை!

தினம் தினம் புதுப்புது மாதிரி களை வடிவமைத்துக் கொண்டு உளப்பூர்வமாக உழைத்து வரு கிறேன். ஆர்வமும் திருப்தியுமாகச் செய்துவரும் இந்தத் தொழிலைத் தவிர, எனக்கான ஓய்வைத் தரும் சூழ்நிலை வேறு இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், 'செய்யும் தொழிலே தெய்வம்!’ அதனால்தானோ என்னவோ தனியாக நேரம் ஒதுக்கி என் இஷ்ட தெய்வம் முருகனுக்கு பூஜை செய்யவும் கும்பிட்டுத் தொழவும்கூட எனக்கு நேரம் இல்லை. ஆனாலும்கூட எல்லாச் சூழ்நிலையிலும் எல்லோருக்குமான துணையாகவே இருக்கிறான் எம்பெருமான் திருத்தணி முருகன்!'' கண்களை மூடித் தியானிக்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார்!

- த.கதிரவன்