Published:Updated:

ஆங்ரி சின்னம்மா, தெறி பி.ஜே.பி., தியாகச்செம்மல் ஓ.பன்னீர்செல்வம்! தியான நாள் சிறப்புப் பதிவு #OneYearOfDharmayutham

ஆங்ரி சின்னம்மா, தெறி பி.ஜே.பி., தியாகச்செம்மல் ஓ.பன்னீர்செல்வம்! தியான நாள் சிறப்புப் பதிவு #OneYearOfDharmayutham
ஆங்ரி சின்னம்மா, தெறி பி.ஜே.பி., தியாகச்செம்மல் ஓ.பன்னீர்செல்வம்! தியான நாள் சிறப்புப் பதிவு #OneYearOfDharmayutham

சரியாக ஓர் ஆண்டுக்கு முன் நிகழ்ந்தது அந்தச் சரித்திர சம்பவம். அதிகாரப் பங்கீடு பிடிக்காமல், 'உங்களோட கா' என விரல் சொடக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் மெரினா கரையில் காற்றுவாங்கியது போன வருடம் இதே தேதியில்தான். மொத்த இந்தியாவுமே 'வாவ்' என வாயைப் பிளந்த அந்த நவீனப் போராட்டத்தின் வழியே நாம் கற்றுக்கொண்ட உண்மைகள் என்னென்ன? இதோ...

* * ராமாயணப் போரை பார்த்ததில்லை. குருஷேத்திரப் போரைக் காணும் வாய்ப்புக் கிட்டியதில்லை. 'அதனாலென்ன, இதோ பாருங்கள் தர்மயுத்தத்தை' என இந்த நூற்றாண்டின் மாபெரும் போராட்டத்தை லைவ் ரிலேயாக மக்களுக்குக் காட்டினார் ஓ.பி.எஸ். 'மகேந்ந்ந்த்ந்திர பன்னீர்பலி....' என அவர் கொடுத்த பில்டப்பை நம்பி சிலர் சிலிர்த்துப்போய் சில்லறைகளை எல்லாம் விட்டெறிந்தார்கள். அந்தக் காசை எல்லாம் பொறுக்கியெடுத்தால் சொந்தமாக நான்கு மணல் குவாரிகளே நடத்தலாம்.

* தமிழகத்தில் பா.ஜ.க என்ற கட்சிக்குக் கிளை இருப்பதே 2014-ல்தான் தெரிய வந்தது. அதில் தொண்டர்கள் நான்கு பேரும், தலைவர்கள் நாற்பது பேரும் இருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வந்தது இந்தத் தியாகச்சுடர் செய்த தியானத்திற்குப் பின்தான். முக்கியமாக அவர்கள் அனைவருக்கும் பேசவும் வரும் என்பதையும் தமிழக மக்கள் கற்றறிந்தார்கள். சென்ற ஆண்டு இதே நேரம் ஆற்ற ஆரம்பித்த அவர்களின் சொற்பொழிவை ஆயிரம் குட்டுகள் வாங்கியபின்னும் நிறுத்தியபாடில்லை.

* பேச்சு வன்மை மட்டுமல்ல, பா.ஜ.க விசுவாசிகளுக்கு ஹியூமர் சென்ஸும் அதிகம் என்பதையும் இந்தத் தியானத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. எஸ்.வி சேகர், படங்களில்கூட இவ்வளவு காமெடிகள் செய்ததில்லை. காலாவதியாகிப்போன வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை எல்லாம் உண்மை என நம்பி முஷ்டி முறுக்குகிறார். இன்னொரு பக்கம் ராமசுப்ரமணியனோ தசாவதாரத்தையும் தாண்டி அரைசத அவதாரங்கள் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

* அதுநாள் வரையில் சின்னம்மாவை சாந்தசொரூபியாக அமைதியோ அமைதியின் மறு உருவமாகத்தான் பார்த்துவந்தார்கள் தமிழர்கள். ஆனால், தியானத்தின் பின் சின்னம்மா எடுத்ததோ க்ளாசிக்கல் டான்ஸர் அவதாரம். 'பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்' எக்ஸ்பிரஷனை ஐ.நா சபையில் ஐஸ்வர்யா தனுஷ்கூட கொடுக்க முடியவில்லை. சிறை செல்லும் முன் சமாதியில் செய்த அந்த சத்தியத்தின் வீரியம் தாங்காமல் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையே உருவானதாக செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

* 'ஸ்டாலினை ஏன் தலைவராக்காமல் தாமதப்படுத்துகிறார்கள்?' - ஓட்டுப்போடும் எல்லாருமே மனதுக்குள் ஓட்டிப்பார்க்கும் கேள்வி இது. அதற்கான பதிலையும் இந்தத் தியானமே சொல்லியது. ஃபர்பார்ம் பண்ண ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் கடைசி ஓவரில் இறங்கும் டெயில் என்டர்போல காற்றில் பேட்டை வீசி மிஸ் செய்துகொண்டேயிருக்கிறார். ஒவ்வொரு பிரச்னையின்போதும், 'இந்தா இப்ப ஏதாவது செய்வாரு... செய்வாரு' என எதிர்பார்த்து பார்த்து ஏமாறுகிறான் தமிழன். அவர் இன்னமும் பொறுங்க தம்பி, ' பாயின்ட் வரட்டும் ' மோடிலேயே இருக்கிறார்.

* தமிழ் சினிமாவில் இரண்டே ப்ரேம்களில் அவுட் ஆஃப் போகஸில் வந்துபோன துணை நடிகருக்குக்கூட முதல்வராகும் ஆசை இருக்கிறது என்பதையும் இந்தத் தியானம்தான் வெளிச்சம்போட்டுக் காட்டியது. சீமான், கருணாஸ் என ஏற்கெனவே கிச்சுகிச்சு மூட்டுபவர்கள் பத்தாதென இப்போது விஷால், உதயநிதி வரை களமிறங்கி 'கலக்கப் போவது யாரு' நடத்துகிறார்கள். அடுத்த தேர்தலுக்கு வாக்குச்சாவடிக்குப் போகும் தமிழன் ஓட்டிங் மெஷினில் இருக்கும் பெயர்களைப் பார்த்து 'ஒருவேளை நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தப்பா வந்துட்டோமோ?' எனக் குழம்புவதற்கான வாய்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.