Published:Updated:

பார்வதி அம்மாள் மறைவு: தலைவர்கள் இரங்கல்

பார்வதி அம்மாள் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை, பிப்.21,2011

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கு வைகோ,  ராமதாஸ், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"2000-ம் ஆண்டில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பார்வதி அம்மையார் முசிறில் சிகிச்சை பெற்றபோது அவரையும், வேலுப்பிள்ளையையும் மூன்று முறை சந்தித்தேன். ஓயாது அந்த வீரத்தாயின் நெஞ்சில் மோதிய துன்ப அலைகள் இப்போதும் ஓய்ந்து விட்டன.

பெண்குலத்தின் பெருமை தரும் உயிர்ச்சுடர் அணைந்துவிட்டது. ஆனால் எங்கள் அன்னை பார்வதி அம்மையாரின் பெயர் இந்த உலகம் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும். தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத வீரத்தின் அடையாளமாய் புகழோடு வாழும்.

பார்வதி அம்மையாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு பார்வதி அம்மையாரின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து, இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறு வேண்டுகிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

"ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சொந்த மண்ணில் சம உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழவும், போராடிய போராளி பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார் என்ற துயரசெய்தி ஈழத் தமிழர்களை மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:

"பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து உற்ற துணைவரை இழந்து தாளமுடியாத துக்கத்தில் விழுந்து தனிமையில் வாடிய தாய் பார்வதி அம்மாள் பத்துகோடி தமிழர்களுக்கும் தாய் என்னும் பெருமையைப் பெற்றிருந்தாலும் அவர்களின் கடைசிபொழுதுகளில் உடனிருக்க ஒருவருமே இல்லை எனும் அவலத்துக்கு ஆளான நிலையை எண்ணி விம்முவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பேரிழப்பு ஆகும். அவரது இழப்பால் உள்ளம் வருத்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.

அந்த வகையில் தமிழகம் எங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில், வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதி அம்மாள் இறுதி அடக்க நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நான் (தொல்.திருமாவளவன்) கலந்துகொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:

"பார்வதி அம்மாளின் மறைவுக்காக உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவுக்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார்.

புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி:

"ஈழ விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட உலக தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகிற மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது," என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:

"எமது அன்னையும், தேசிய தலைவரின் தாயாருமான பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்னும் துயரச்செய்தி வந்துள்ளது. அன்னைக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டு கிடக்கிறது. அவரது நினைவை போற்றும் வகையில் பழ நெடுமாறன் நடத்தும் அமைதி பேரணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறேன்," என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு