Published:Updated:

திரையிடல் பிரச்னை, தயாரிப்பாளர்களின் அறியாமை, முறைகேடுகள், வருமான பாதிப்பு..." - தென்னிந்திய சினிமா ஸ்டிரைக்கின் முழு பின்னணி

அலாவுதின் ஹுசைன்
திரையிடல் பிரச்னை, தயாரிப்பாளர்களின் அறியாமை, முறைகேடுகள், வருமான பாதிப்பு..." - தென்னிந்திய சினிமா ஸ்டிரைக்கின் முழு பின்னணி
திரையிடல் பிரச்னை, தயாரிப்பாளர்களின் அறியாமை, முறைகேடுகள், வருமான பாதிப்பு..." - தென்னிந்திய சினிமா ஸ்டிரைக்கின் முழு பின்னணி

தமிழ் சினிமாவில் 'நாளுக்கு நாள்', 'வெவ்வேறு', 'புதிது புதிதாய்' பல சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது, டிஜிட்டல் சினிமா சேவை வழங்கும் 'கியூப்', 'யூ.எஃப்.ஓ' உள்ளிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு படத்தையும் தியேட்டர்களில் திரையிட வசூலிக்கும் அதிகமான கட்டணத்தை எதிர்த்து, 'ஸ்ட்ரைக்' நடத்தும் முடிவை எடுத்திருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள். 

பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 'திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதில்லை' என்ற முடிவை எடுத்திருக்கிறது, தயாரிப்பாளர்கள் சங்கம். அதிகக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை டிஜிட்டல் சேவையை வழங்கும் நிறுவனங்கள் நீக்கும்வரை, எந்தத் திரைப்படத்தையும் வெளியிடமாட்டார்கள். 

இது தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், இந்தப் பிரச்னையின் பின்னணியைப் பற்றி விளக்கும்போது, "டிஜிட்டல் சினிமாவின் ஆரம்பக்காலத்துல சாதாரண ஒரு சிறு புள்ளியா ஆரம்பிச்சதுதான், டிஜிட்டல் சினிமா சேவை. முதலில் தங்கள் ப்ரொஜெக்டர்களைத் தியேட்டர்காரர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, 'நாங்களே இதற்கான இன்வெஸ்மென்டை ஏற்றுக்கொள்கிறோம். விளம்பரங்களில் இருந்துவரும் வருவாயை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்' என்று கூறி, திரையரங்க உரிமையாளர்களிடம் 7 வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டனர். 7 வருடங்கள் முடிந்தபிறகு, 'நாங்கள் 2K ப்ரொஜெக்டர்களைத் தருகிறோம், 'டால்பி அட்மாஸ்' சவுண்டும் போட்டுத் தருகிறோம்' என்று இனிப்பாய்ப் பேசினார்கள். அது மட்டுமில்லாமல் வரும் விளம்பரங்களில் 40 முதல் 50 சதவிகித வருவாயையும் தருவதாகக் கூறி, அந்தத் திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்கள். காலம் காலமாய் சினிமாவில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களும் அந்த நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து எங்களை வஞ்சிப்பதுதான், இதுவரை நடந்துகொண்டிருக்கும் கொடுமை. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் இன்ஸ்டால் செய்யும் ப்ரொஜெக்டர்களுக்கான பணத்தை எல்லாம் சிறுகச் சிறுக தயாரிப்பாளர்களின் பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கான முழு இன்ஸ்டால்மென்ட் முடிந்தபிறகு அந்த ப்ரொஜெக்டர்கள் எல்லாம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியும் எழுகிறது" என்றவர், தொடர்ந்தார்.

"கிட்டத்தட்ட ஒரு படத்தைத் திரையிட ஒரு ஸ்கிரீனுக்கு 'பிரின்ட் காஸ்ட்' எனக் கூறப்படும் கட்டணம் 20,000 ரூபாய். ஆங்கிலப் படங்களுக்கோ, இந்திப் படங்களுக்கோ இந்தச் செலவு கிடையாது. தமிழகத்தில் உள்ள 1200 தியேட்டர்களில் ஏறத்தாழ 800 தியேட்டர்களில் க்யூப் மற்றும் யூஃஎப் ஓ நிறுவனங்கள் டிஜிட்டல் சேவையை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களது நிர்வாகச் செலவீனங்களையும் தாண்டி தயாரிப்பாளர்களைக் கஷ்டப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகமான கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். 

தோராயமாக, தமிழ்த் திரைப்படங்களிலிருந்து மட்டும் இந்த நிறுவனத்திற்கு 40 முதல் 60 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், சென்ற வருடம் நான்கு படங்களை எனது நிறுவனத்தின் மூலம் 800 திரைகளில் வெளியிட்டுள்ளேன். ஒரு ஸ்கிரீனுக்கு 20,000 ரூபாய் வீதம் கணக்கிட்டால் 1 கோடியே 60 லட்சம் வருகின்றது. வெறும் Key (கே.டி.எம்) மற்றும் டிரான்ஸ்மிஷன் தொகையாக ஒரு ஸ்கிரீனுக்கு 2,500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வைத்துக்கொண்டால்,  நான்கு படங்களுக்கும் வெறும் 20 லட்சம்தான் செலவாகும். மிச்சம் இருக்கும் பணத்தில் 'அருவி' மாதிரி ஒரு படமே எடுக்கலாம்.  இந்நிலையில், யாருக்காகச் செலவிட்டோம் என்றே தெரியாமல் தயாரிப்பாளார்கள் ஏமாந்துகொண்டிருக்கிறோம். இவர்கள் தங்களின் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளவதாகச் சொல்லியே இந்தக் கட்டணத்தை வசூலிப்பதாகக் கூறிவருகிறார்கள். அப்படிப் பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லையென்று, நாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டோம்.

இவர்கள் சொல்லும் பல லட்சம் மதிப்பிலான செலவு, 'டி-சினிமா' எனப்படும் டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பத்திற்கே ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் 1200 திரையரங்குகளில் சரிபாதி திரையரங்குகள், 'இ-சினிமா' எனப்படும் குறைந்தவிலை திரையிடல் அமைப்புகளையே கொண்டுள்ளது. இதற்கும் இவர்கள், நிர்மானிக்கும் செலவு பல லட்சங்கள் ஆகும் என்று கூறி, திரையரங்க உரிமையாளர்களை ஏமாற்றிவருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாயிலேயே முடித்துவிடலாம் என்பதுதான் உண்மை. டிஜிட்டல் ஒளிபரப்புக் கருவிகளுக்கான டீலர்ஷிப் இவர்களிடமே இருப்பதன் காரணமாக, விலையை நிர்ணயிப்பதிலும் முறைகேடு நடந்துகொண்டிருக்கிறது. 

ஆரம்பக்காலத்தில் தமிழ்சினிமா தயாரிப்பாளர்களின் அறியாமையையும், தேவையையும் பயன்படுத்திக்கொண்ட இந்த நிறுவனங்கள், நாளடைவில் வெள்ளைக்காரகள் 'ஈஸ்ட் இந்தியா' கம்பெனியைக் கொண்டு எப்படி இந்தியாவைச் சுருட்டினார்களோ, அந்த மாதிரி இவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள். 2018-க்குப் பிறகு, பிரின்ட் கட்டணமே இருக்காது என சர்வதேச சினிமா தயாரிப்பு அமைப்புகள் கூறிவரும் நிலையில், கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக இந்த நிறுவனங்கள் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி வருகின்றன.

இந்தப் போக்கை மாற்ற, மிக அதிகப்படியான கட்டணத்தினைக் குறைக்க முன்வராத டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு எதிராகத் தென்னிந்திய திரையுலகினைச் சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அனைவரும் முதன்முறையாக ஒன்றிணைந்து, வரும் மார்ச்1-ம் தேதி முதல் எந்தத் திரைப்படங்களையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவை ஒருமனதாக எடுத்திருக்கிறோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும்வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும். மேலும், இந்த நிறுவனங்களுக்குப் பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது." என்கிறார், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, 'கியூப்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில் அழைப்பு விடுத்ததை சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்திருக்கிறது. ''இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைந்த விலையில் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறோம்'' என்றும் தெரிவித்திருக்கிறார், செந்தில்.

இந்தப் பிரச்னை எதில்சென்று முடியும் என்பது, சில நாள்களுக்குப் பிறகு தெரியலாம்!