Published:Updated:

உயிர் பிழை - 26

உயிர் பிழை - 26
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை - 26

மருத்துவர் கு.சிவராமன்

`டீச்சர், `இ' எழுதும்போது விரல்கள் வலிக்குது. `8' எழுத கையைத் திருப்ப முடியலை' என அந்த எட்டு வயது குழந்தை வகுப்பில் அழுதபோது, டீச்சருக்குப் பயங்கரக் கோபம். மருந்துக்குக்கூட அன்பாக அந்தக் குழந்தையிடம் அவர் கரிசனம் காட்டவில்லை. ஆனால், அந்தக் குழந்தையின் தொடர்ச்சியான குற்றச்சாட்டில் பெற்றோர், `எதுக்கும் ஒரு எட்டுபோய் டாக்டரிடம் விசாரிப்போமே' எனப் போனதில், முதலில் பார்த்த குழந்தை டாக்டர், கொஞ்சம் வலி மாத்திரைகளையும் ஒரு சாக்லேட்டையும் மட்டுமே கொடுத்து அனுப்பினார். கூடவே `குழந்தையை படி, படின்னுத் திட்டாதீங்க’ என்ற அறிவுரையையும். அதன் பிறகும் வலி தொடரவே, எக்ஸ்ரே உள்ளிட்ட சில சோதனைகளைச் செய்தபோதுதான் தெரிந்தது... அந்தக் குழந்தையின் பிஞ்சு விரலில் வலி தந்தது, தசைப்பிடிப்பு அல்ல; `ஆஸ்டியோசார்கோமா' எனும் எலும்பைத் துளைத்துக் குடியேறியிருந்த புற்று அரக்கன்.

`மாசத்துல மூணு தடவையாவது டாக்டர் வீட்டுக்கு ஓடவேண்டியிருக்கு. எப்பப் பார்த்தாலும் காய்ச்சல்...’ என வருத்தப்பட்ட தாயோடு வந்த குழந்தைக்கு, அதிகபட்சம் இரண்டு வயதுதான் இருக்கும். `வேறு எதுவும் கிருமித்தொற்றோ, குறிப்பாக அதிகம் தவறவிடப்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் எனும் இளங்காசமாக இருக்குமா?' என அடிப்படை ரத்தப்பரிசோதனை செய்துபார்த்தபோது சிவப்பணுக்கள் மிகக் குறைந்தும், ரத்தத் தட்டுக்கள் சொற்பமாகவும், அணுக்களின் வடிவம் சிதைவுற்றும் இருந்தன. படிப்படியான சோதனை முடிவுகள், அந்தக் குழந்தைக்கு இருப்பது `Acute Lymphoid Lymphoma' எனும் ரத்தப் புற்று என்பது உறுதியானது.

`எப்படி எம் பிள்ளைக்கு..?’ என பெற்றோர் கதறி அழுதாலும், `சரி, அடுத்து என்ன செய்யலாம்... கீமோவா, எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சையா?' என வேகமாக நகர்ந்து, தன் குழந்தையைக் கவ்விப்பிடித்த நோயை அகற்ற, மனபலத்துடனும் பணபலத்துடனும் நகர்வோர் இப்போது மிகவும் குறைவு.

உயிர் பிழை - 26

`அவன் நஞ்சுக்கொடி சுத்திப் பிறக்கும்போதே நினைச்சேன். ஆட்டையாம்பட்டி ஜோசியர் அப்பவே சொன்னார், அவனுக்கு எட்டுல ராகுனு. அவ ஓர்ப்பிடியோட அத்தைக்கும் உண்டாம்ல’ என விஷ அனுமானங்களை விதைப்பவரே சமூகத்தில் நிறைய.

`23 ஜோடி மரபணுக்களில் இரண்டு வில்லங்கமா ஒட்டிப்போச்சு. அதனால்தான் இப்படி. ரத்த மஜ்ஜைக்குள் உள்ள ஸ்டெம் செல்கள் அழகா, படிப்படியாப் பிரிஞ்சு `வெள்ளை அணு, சிவப்பணுத் தட்டுக்கள்' என உருவாகாமல், அரைகுறை ரத்த அணுக்களாகிவிட்டன. `பிலடெல்பியா குரோமோசோம்' என அதற்குப் பெயர்' என மருத்துவர்கள் விளக்கம் அளிப்பார்கள்.

`என்ன சொன்னாலும் எழுதினாலும் நான் வளையம் வளையமா புகைவிடுவேன்; சனிக்கிழமை ராத்திரி குடிச்சாத்தான் என் குலசாமி கோவிக்காது' என, `இ.எம்.ஐ கட்டியேனும் எனக்கு நானே சூனியம் வெச்சுப்பேன்' எனச் சொல்லும் தற்கொலைப் பிரியர்களை விட்டுவிடுவோம். `ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது; கிச்சுக் கிச்சு தாம்பாளம்... கியான் கியான் தாம்பாளம்' – என விளையாடவேண்டிய வயதில் வாயின் திரையை விலக்கி, `அங்கிள், ஹாஃப் இயர்லி லீவுல சாக்லேட் சாப்பிடலாமா?' எனக் கேட்கும்போது, அடிவயிறு பற்றிக்கொண்டு அழுகை பீறிடத்தான் செய்கிறது. யார் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் எலும்புக்குள் சார்கோமாவையும் எலும்பு மஜ்ஜைக்குள் ரத்தப்புற்றையும் செருகிச் சென்றது, என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்?

சுற்றிச் சுற்றி யோசித்தாலும் சூழலில் நாம் செய்யும் கேடுகள்தாம் முதல் காரணமாக முன்வருகிறது. `பிளாஸ்டிக் சொகுசும் உரமும் பூச்சிக்கொல்லியும் களைக்கொல்லியும் வளர்த்த ரசாயன உணவும்தான் முக்கியக் காரணங்களோ?' எனத் தோன்றுகிறது.
 
`அன்றாடத் தேவைக்கு, அவரவர்கள் மாடித்தோட்டம் போட்டுக்கொள்வோம்யா... அப்படியாச்சும் ரசாயன அரக்கனை வாய்க்கு வராமல் தடுப்போம்’ என, சூழல் ஆர்வலர்கள் பேச ஆரம்பித்தார்கள். ரோஜா தொட்டியும் துளசிமாடமும் மட்டுமே குடியிருந்த பால்கனிகளில், ஆங்காங்கே வெண்டைக்காய் செடியும் கொத்தமல்லிக் கீரையும் தலைகாட்ட ஆரம்பித்திருந்தன. அங்கேயும் இப்போது யூரியா உரம், வீரிய ஒட்டுரக விதைகள் அரசாங்கம் வழியாக சகாய விலையில் நுழைகின்றன. இன்னும் கொஞ்ச நாளில் மொட்டைமாடியில் பாயை விரிக்க, பிற பூச்சிக்கொல்லி ரசாயன வஸ்துக்களும் நுழைந்தால் ஆச்சர்யம் இல்லை. `வீட்டு உணவுக் கழிவுகளைப் பிரதானமாக வைத்து வளர்க்கவேண்டிய மாடித்தோட்டம், மறுபடியும் ரசாயன உரங்களுக்குள் சிக்குவதும் சிக்கவைக்கப்படுவதும் வீழ்ச்சியா... சூழ்ச்சியா?' என்பது இன்னும் சில நாட்கள் கழித்துதான் தெரியும்.

ஜெய்ப்பூரில் உலகின் பெருவணிக  நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் பிரதீக் திவாரி. தன் நிறுவனத்துக்காக வெண்டைக்காய் வாங்க ராஜஸ்தானில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தபோது வெண்டைக்காயைக் கிரயம் செய்துவிட்டு, அருகில் உள்ள தாபாவுக்குச் சென்றார். அப்போது உடன் வந்த வெண்டைக்காய் வியாபாரி, தாபா ஊழியரிடம் `பெண்டி ஃப்ரை (அது வெண்டைக்காய் பொரியலேதான்) தவிர, வேற எதனாச்சும் கொடுப்பா' எனக் கேட்க, `என்னங்க நீங்க, வெண்டைக்காயவெச்சு இவ்ளோ வியாபாரம் பண்றோம். அதை வேணாங்கிறீங்களே?’ எனக் கேட்டார் திவாரி. அதற்கு, `சார்... என் வீட்டுல உரம், பூச்சிக்கொல்லி இல்லாமப் போடுற வெண்டைக்காய் மட்டும்தான் நான் சாப்பிடுவேன். இங்க மார்க்கெட்டில் விக்கிறது எல்லாம் கெமிக்கல் கலந்தது. இதனால, எங்க நிலத்துலயே பல பன்றி, நாய் எல்லாம் செத்திருக்கு’ எனச் சொன்னார்.

`வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு வரும்' எனப் பொய்க்கணக்குப் போட்டாவது பிள்ளைகளை உடல் உறுதியோடு வளர்த்தவர்கள் நாம். அத்தனை காய்கறிகளிலும் அள்ளித் தெளிக்கும் இந்த ரசாயனங்களைப் பார்க்கும்போது மரபுக்கணக்கையே மாற்றிவிடும் என்ற அச்சம்தான் அவருக்கு அன்று மேலோங்கியது.  

அன்றைக்கு வால்மார்ட்டின் அந்த உயர்வேலையை உதறிவிட்டு மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்க்கும் நிறுவனத்தை இந்தியாவில் முதலாவதாகத் தொடங்கி, இதுவரை ஜெய்ப்பூரில் மட்டும் 135 மாடித்தோட்ட உரிமையாளர்களை உருவாக்கியிருக்கிறார். State Of India’s Environment- 2016 எனும் Centre For Science and Environment சூழலியல் அறிக்கையில் இந்தப் பேட்டி வெளியாகியுள்ளது.

உணவில் உள்ள நச்சுக்களால் மட்டும், வருஷத்துக்கு இரண்டு கோடி மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. கிட்டத்தட்ட 200 வகையான வியாதிகள் (வயிற்றுப்போக்கில் இருந்து புற்றுநோய் வரை) உணவு நச்சினால் மட்டுமே வருகின்றன.

உயிர் பிழை - 26

`சி ஃபார் கேரட். கேரட், கண்ணுக்கு நல்லது' எனக் குழந்தையை கேரட் சாப்பிடச் சொல்லாத நவீன அம்மாவைப் பார்க்க முடியாது. நீலகிரியில் இருந்து அவ்வளவு சுவையுடனும் அழகுடனும் வரும் அந்தக் கேரட்டுக்குள் ஒளிந்திருக்கும் கேட்மியம் அளவைப் பார்த்தால், `அது கண்களுக்கு ஒளி தருமா அல்லது வேறு ஏதேனும் தருமா?' எனும் பயமே மிஞ்சுகிறது. கேரட்டிலும் காலிஃபிளவரிலும் ஒளிந்திருக்கும் ரசாயனங் களைப் பார்க்கும்போது, அவை `தொழிற்சாலைக் கழிவில் இருந்து இங்கு குடியேறியவையா... உரம், பூச்சிக்கொல்லியில் இருந்து வந்து குத்தவைத்தவையா?' எனத் தெரியாது. நிச்சயம் அவை சும்மாயிராது என்று  மட்டும் தெரியும்.

`நம்மால் முடியும்... என்னால் முடியும்' என்ற சூளுரைதான் இந்த ஆண்டு உலகப் புற்றுநோய் தின முழக்கம். உண்மையில் ஒரே வழி, நமக்கான உணவை நாமே தயாரிப்பது மட்டும்தான் நம்மை இனி காப்பாற்றும். `சொந்தமா பிளாட் வாங்கணும்; சொந்தமா கார் வாங்கணும்' என எல்லா சாமானியனும் நினைப்பதுபோல், `சொந்தமா மாடித்தோட்டம் போட்டுக்கணும்; சொந்தமா ஒரு காணி நிலம் வெச்சுக்கணும்; சொந்தமா சொந்தக்காரங்கக்கூட சேர்ந்து நாத்து நடணும்; செக்குல எண்ணெய் ஆட்டிப் பகிர்ந்துக்கணும்' என்ற நினைப்பும் முனைப்பும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும். `எந்த மாற்றம் வேண்டும் என நினைக்கிறாயோ, அந்த மாற்றத்தை உன்னிடம் இருந்து தொடங்கு' என்ற காந்தியத்தின் வழியில் மாற்றத்தை நிகழ்த்தியே ஆக வேண்டும். அன்று அவரது அறைகூவல் வெள்ளையனுக்கு எதிராக... இன்று வெள்ளைக்கார கம்பெனிக்கு எதிராக. வித்தியாசம் அவ்வளவுதான்.

 `ஆஸ்டியோசார்கோமா' போன்ற புற்றுநோய் நகர்ப்புறச் செல்வந்தன் வீட்டுக் குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் இயல்புக்குத் திரும்புவதோ, குறைந்தபட்சம் சில வலிகள் இல்லாமல் இருப்பதோகூட சாத்தியம். ஆனால், கிராமங்களில் இந்த நோய் வந்தால்,  `மெட்ராஸுக்குத்தான் போகணும்'னாங்க... என்ன பஸ்ஸு... எம்புட்டு காசு? அதான் தம்பி, விட்டுட்டோம்' - என மரணத்தை முதுகில் சுமக்கத் தயாராகும் கூட்டம்தான் அதிகம்.

மொத்த இந்தியாவிலேயே 1,600 புற்றுநோய் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனராம். அதுவும், பெருவாரியானோர் பெருநகர்ப்புறங்களிலும் பெரு மருத்துவமனைகளிலும் மட்டுமே இருக்க முடியும். 2015-ம் ஆண்டில் உலகில் நடந்த வாழ்வியல் நோய் மரணங்களில் கிட்டத்தட்ட 36 சதவிகிதம் இந்தியாவில் மட்டும் (ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு) நிகழ்ந்தனவாம். வாழ்வியல் நோய்களில் நீரிழிவு, மாரடைப்புக்கு அடுத்து நிற்பது புற்றுநோய். நிலைமை இப்படி இருக்க சந்துக்கு இரண்டு டாஸ்மாக் திறந்து துட்டு பார்க்க நினைக்கும் கூட்டத்துக்கு எப்படித் தெரியும் இந்த வலியும் வேதனையும்?

உலக உணவு நிறுவனமும் உணவு வணிகமும், வேறு மாதிரி கணக்கு போட்டுக்கொண்டிருக் கின்றன. `2050-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 910 கோடியைத் தாண்டிவிடும். அதற்கு
70 சதவிகிதம் உணவு உற்பத்தியைக் கூட்ட வேண்டும்' எனக் கணக்கிடுகிறார்கள். அவர்களின் இந்த முடிவு, ஏழு ஆப்பிரிக்க நாடுகள் ஒரு வருடம் சாப்பிடுவதை, ஒரே வேளை பஃபேயில் சாப்பிடும் அமெரிக்க - ஐரோப்பிய அண்ணன்கள் சாப்பிட்ட தட்டுக்களை வைத்துக் கணக்கிட்டது. அறமற்ற அந்த வணிக நோக்கக் கணக்கில் `கடைசியில் மரபணு மாற்றம் மட்டும்தான் வழி' என்ற முடிவு மட்டுமே எட்டப்படும்.

இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவேளை மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு நம் ஊரில் களப்பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்திருக்கக்கூடும். இந்த மாதிரி மரபணுப் பயிர்களின் வருகையால், அயல் மகரந்தச்சேர்க்கையை நடத்திவந்த பட்டாம்பூச்சி, தும்பி, தேனீ போன்ற சில வகைகள் என, இந்த உலகில் கொஞ்சப் பேரை இப்போது காணோமாம். `தும்பி, தேனீ ' என மட்டும் இது நின்றுவிடாது; `தம்பி, நான், நீ' என நாமும்கூட இந்தப் பூமியில் இருந்து சீக்கிரமே காணாமல்போகலாம் அல்லது குறைந்தபட்சம் அயல் மகரந்தச்சேர்க்கை நடக்காமல் செய்வதன் மூலம், `விதைகளை நான் மட்டுமே தருவேன்' என்ற வணிக வன்முறையில் நாம்கூட மகரந்தச்சேர்க்கையை அயலிலோ - சொந்தத்திலோகூட செய்ய முடியாமல் காணாமல்போகலாம்!

- உயிர்ப்போம்...

** `எக்ஸ்ரே' - தன்னைத்தானே செல்போனில் செல்ஃபி எடுத்து சிரித்துக்கொள்ளும் `அறிவாளிகள்' சிலர், எடுத்ததற்கு எல்லாம் `எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டு டாக்டர்கிட்ட போகலாம்' என, சுளுக்கியதுக்கும் தும்மலுக்கும் படம் எடுத்துக்கொண்டு வருவது உண்டு. தொடர்ச்சியான தேவையற்ற எக்ஸ்ரே உள்ளே உறங்கிக் கிடக்கும் உயிர் பிழையை உசுப்பி விடக்கூடும்.

உயிர் பிழை - 26

** ஒரு எக்ஸ்ரேயில் 0.1-0.2mSv-யும், சி.டி ஸ்கேனில் 7 முதல் 8 mSv-யும், PET CT ஸ்கேனில் 30 mSv-யும் கதிர்வீச்சு நிகழக்கூடும். இவை எல்லாமே பாதுகாப்பான அளவுதான் என்றாலும், `எத்தனை முறை எங்கே, யாருக்கு, எந்த மரபு உள்ளோருக்கு, எந்தவிதமான தரமான ஆய்வகத்தில் கதிர்வீச்சு தரப்படுகிறது' என்பதைப் பொறுத்துதான் பாதுகாப்பு.

** சி.டி ஸ்கேன் – அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தாலே போதும் எனும் பட்சத்தில் `எதுக்கும் தெளிவா ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துரலாமே' எனும் நிகழ்வு, பயமுறுத்தலிலோ பண உறுத்தலிலோ  நடக்கக்கூடும். அவசியம் இல்லாமலும் அடிக்கடியும் நடக்கையில் (குறிப்பாக குழந்தைகளுக்கு) பிரச்னைக்கு வழிவகுக்கும். அதிலும் வயிற்றுக்கு எடுக்கப்படும் சி.டி ஸ்கேனில் பொதுவாக அதிகக் கதிர்வீச்சு உள்ளது.

**  `புற்றுநோய் உள்ள நபருக்கு சிகிச்சைக்காகத் தரப்படும் கதிர்வீச்சிலும், நோயை அறிய அடிக்கடி எடுக்கப்படும் PET CT ஸ்கேனின் மூலம் பெறப்படும் கதிர்வீச்சிலும்கூட புற்று வேறு எங்குமோ அல்லது மீண்டும் வரும் வாய்ப்போ உண்டு' என மருத்துவ உலகம் சொல்கிறது. அதற்காக, சிகிச்சையில் இந்த இரண்டையும் தவிர்க்க முடியாது என்பதால், அறம் சார்ந்து அந்த மருத்துவர்கள் இதைக் கையாண்டாக வேண்டும்.