Published:Updated:

குரங்குகளைக் கார்ட்டூன் பார்க்க வைத்து என்ன செய்தது ஃபோக்ஸ்வாகன்?!

குரங்குகளைக் கார்ட்டூன் பார்க்க வைத்து என்ன செய்தது ஃபோக்ஸ்வாகன்?!
குரங்குகளைக் கார்ட்டூன் பார்க்க வைத்து என்ன செய்தது ஃபோக்ஸ்வாகன்?!

குரங்குகளைக் கார்ட்டூன் பார்க்க வைத்து என்ன செய்தது ஃபோக்ஸ்வாகன்?!

மொத்தம் 10 குரங்குகள். எதற்காக அந்த அறையில் இருக்கிறோம் என்பது அவற்றுக்குத் தெரியவில்லை. சாப்பிட நிறைய உணவுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பத்தில் ஒன்று கூட அமைதியாக இருந்தபாடில்லை. அதன் இயல்பே அதுதான் என்பது மிக சிலருக்கு மட்டுமே புரியும். இந்தக் குரங்கு இனத்திற்கு "Cynomolgus Macaque Monkey" என்று பெயர். தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் இருக்கும். ஆனால், தற்போது அது அடைபட்டிருக்கும் அந்த அறை இருப்பது நியூ மெக்ஸிகோவின் ஆல்புகுர்க்கி (Albuquerque) நகரத்தில். மனிதர்களோடு மிக நீண்ட கால உறவைக் கொண்டவை இந்த வகை குரங்குகள். ஆனால், இந்தக் குரங்குகளோடு எந்த உயிரினமும் ஒத்திசைந்து வாழ்வது சற்று கடினமான விஷயம். அதன் இயல்பே அப்படித்தான். தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இந்தக் குரங்குகளை மிகவும் புனிதமானதாக மதிக்கிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இவை "ஆராய்ச்சிக் குரங்குகள்" அல்லது "சோதனைக் குரங்குகள்" . 

இப்போது இந்த அறையில் அவை அடைக்கப்பட்டுக் கிடப்பதும் ஒரு சோதனைக்காகத்தான். இந்தக் கதைகள் நடப்பது 2014 ம் ஆண்டு. குரங்குகள் அடங்கவே இல்லை. அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சோதனைத் தொடங்கப்போகிறது. இனி என்ன வேண்டுமானாலும் அந்தக் குரங்குகளுக்கு நடக்கலாம். குரங்குகளைச் சற்று சாந்தப்படுத்த வேண்டும். அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் உடற்கூறில்...குறிப்பாக அதன் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களை மிகக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். ஒரு பெரிய தொலைக்காட்சி அங்கு வைக்கப்படுகிறது. அதில் கார்ட்டூன் படம் போடப்படுகிறது. குரங்குகள் ஆச்சர்யமாக அதைப் பார்க்கத் தொடங்குகிறது. அதே சமயம் அங்கு...அந்தக் கார் ஸ்டார்ட் செய்யப்படுகிறது. அதில் வரும் புகை, குழாய் வழியே குரங்குகள் இருக்கும் அறைக்குள் அனுப்பப்படுகிறது.

அந்தக் காரை கொஞ்சம் நெருங்கி, உற்றுப்பார்த்தால் அது ஃபோக்ஸ்வாகன் பீட்டல் (Volkswagen - Beetle) வகையைச் சேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியும். உலகப் புகழ்பெற்ற ஒரு கார் அது. குறிப்பாக,  உலகளவில் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்த கார். சரி... இந்த சோதனை எதற்கானது?

டீசல் கார்களிலிருந்து வரும் புகை மனிதர்களுக்கு எந்தளவிற்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான் இந்த ஆராய்ச்சி. உலகின் மிக பிரபலமான கார் நிறுவனங்களான ஃபோக்ஸ்வாகன், டெய்ம்லர் (பென்ஸ்), பிஎம்டபிள்யூ மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான "பாஷ்" ஆகியவை இணைந்து "The European Research Group on Enviroment and Health in Transport Sector" (EUGT) எனும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்தக் குழுவினர், மெக்ஸிகோவிலிருக்கும் "Lovelace Respiratory Research Institute" ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டது. இது மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 2015 ம் ஆண்டு அமெரிக்காவில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய கார்களில் "காற்று மாசுபாடு அளவீட்டுக் கருவியில்" சில தகிடுதனங்களைச் செய்தது நிரூபணம் ஆனது. அதற்காகப் பல கோடி ரூபாய் அபராதம் கட்டியதோடு மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்டது. அந்தச் சமயங்களில் கூட இந்த ஆராய்ச்சி விவகாரம் வெளிவரவில்லை. ஆனால், கடந்த வாரம் "தி நியூயார்க் டைம்ஸ்" செய்தி நிறுவனம் குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியினை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். 

பழைய டீசல் வாகனங்களில் புகையின் அளவு அதிகமாக இருக்கிறது, ஆனால், புதிதாக வரும் டீசல் வாகனங்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால், அதில் கேடு விளைவிக்கும் புகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று வாதாடின பல முன்னணி கார் நிறுவனங்கள். அதற்காக அவை பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டன. ஃபோக்ஸ்வாகனும் அப்படித்தான் சொல்லியது. ஆனால், கடந்த 2015 ல் அதன் சாயம் வெளுத்தது. அது கொடுத்த ஆராய்ச்சி முடிவுகள் அத்தனையும் பெரும் பொய் என்பது நிரூபணம் ஆனது. அதேபோல், குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியும் ஒரு பொய்யை நிரூபிப்பதற்காகத்தான்.

டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் கேன்சர் ஏற்படுத்தும்  "கார்சினோஜென்" (Carcinogen) அளவு அதிகமாக இருக்கிறது என்று பல சூழலியலாளர்கள் முன்வைத்த கருத்துகளைப் பொய்யாக்கும் நோக்கிலேதான் இந்த ஆராய்ச்சியும் நடந்துள்ளது. ஆனால், இதன் முடிவுகள் கடைசி வரை வெளியிடப்படவில்லை. இந்தக் கார் நிறுவனங்கள் இணைந்து ஆரம்பித்த "EUGT" எனும் அமைப்பு ஜூன் மாதம் 2017 ம் ஆண்டு கலைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக இந்த மூன்று கார் நிறுவனங்களுமே இதற்கான பொறுப்பை ஏற்க மறுக்கின்றன. ஃபோக்ஸ்வாகனும், பென்ஸ் நிறுவனமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கின்றனர். பிஎம்டபிள்யூ இது குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை. ஒரு பக்கம் இந்தப் பெரு நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளுக்குக் கண்டனம் குவிந்துகொண்டிருக்கிறது. மற்றொரு புறம், இப்படிக் குரங்குகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முற்றிலுமாக சட்ட விரோதமானது என்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள், மிருக ஆர்வலர்கள். 

எதுவாக இருந்தாலும், இந்தப் பெரு நிறுவனங்கள் அரசாங்கத்தையும், மக்களையும் ஏமாற்றி இயற்கை விரோத வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அடுத்த கட்டுரைக்கு