Published:Updated:

எங்கே எனது கழிப்பறை?

எங்கே எனது கழிப்பறை?
News
எங்கே எனது கழிப்பறை?

#WhereisMyToilet

ரோகிணிக்கு, ஒரு வழக்கம் உண்டு. எந்த ஊருக்குப் பயணம் கிளம்புவதாக இருந்தாலும்

எங்கே எனது கழிப்பறை?

கிளம்புவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பே தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவார். சாப்பிட்டாலும் ஒரு மடக்கு தண்ணீர்தான். இதற்குக் காரணம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், வெளியூருக்கு பேருந்தில் தனியாகப் பயணமானார் ரோகிணி. ஒன்பது மணிக்கு பஸ் கிளம்ப, மெதுவாகக் கண்ணயர்ந்து உறங்க ஆரம்பித்தார். நள்ளிரவு ஒரு மணி வாக்கில் தடதடவென பஸ்ஸின் வெளியில் இருந்து யாரோ தட்டும் சத்தம். அதிர்ந்து எழுந்தால், `பஸ், 10 நிமிஷம் நிக்கும். டீ, டிபன், யூரின் போறவங்க போயிட்டு வந்திருங்க' என்ற குரல் ஓங்கி ஒலித்தது. பஸ் நின்று இருந்த இடம், ஒரு நெடுஞ்சாலையோர மோட்டல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அர்த்தராத்திரியில் விழித்துவிட்டதால் சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்பந்தம். இறங்கி, மோட்டலின் கழிப்பறைக்குச் செல்கிறார். ஐந்து ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால், குடலைப் புரட்டும் துர்நாற்றம். அப்படியே வெளியே ஓடிவந்து, ‘`என்னங்க இப்படி வெச்சிருக்கீங்க? க்ளீன் பண்ண மாட்டீங்களா?’’ எனச் சத்தம் போட்டார். சிலர் வந்து ரோகிணியை மிரட்ட, பேருந்து நடத்துனர்கள் சமாதானம்செய்து பஸ்ஸில் ஏற்றியிருக்கிறார்கள். அடுத்த ஆறு மணி நேரம், ஒவ்வொரு நொடியாக எண்ணியபடி நரக வேதனையில் அவர் சிறுநீர் கழிக்க முடியாமல் பஸ்ஸில் அமர்ந்திருந்தார். ஊர் வந்து சேர்ந்த பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுக்கழிப்பறையைத் தேடி ஓட, அங்கும் அதே நிலை. அதற்குப் பிறகு, ரோகிணி வெளியூர் பயணங்களில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தார். அது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் எனத் தெரிந்தும் இப்போதும் அதையே பின்பற்றுகிறார்.

இது, ஒரு ரோகிணியின் கதை அல்ல; ஓராயிரம் ரோகிணிகளின் உண்மை நிலை. இது, பெண்களுக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் சிக்கல். நம் பொதுக்கழிப்பிடங்களை, குழந்தைகளால் பயன்படுத்தவே முடியாது. மீறி அவர்களை உள்ளே அனுப்புவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு வைக்கும் வேட்டு. மாற்றுத்திறனாளிகள் இந்தக் கழிப்பிடங்களில் நுழையக்கூட முடியாது. பயணங்களில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில், சுற்றுலா தளங்களில், முக்கியச் சாலைகளில் என, தமிழ்நாட்டில் பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கையும் அவற்றின் நிலையும் மிக, மிக, மிக மோசம்.

எங்கே எனது கழிப்பறை?

ன்னையின் அண்ணாசாலை, தமிழ்நாட்டின் இதயப் பகுதி. ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் இந்தச் சாலையை, ஒரு மணி நேரத்தில் 28 ஆயிரம் பேர் வெவ்வேறு விதங்களில் கடக்கிறார்கள். இவ்வளவு பரபரப்பான சாலையில் இருக்கும் பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கை, வெறும் 1 (ஒன்று மட்டும்). தேனாம்பேட்டையில் இருக்கும் அந்தக் கழிப்பறையிலும் உள்ளே நுழைந்து வெளியே வருவது என்பது ஒரு சாகசத்துக்கு ஒப்பானது. முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என மாநிலத்தின் சர்வ வல்லமை பொருந்தியோர் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சாலையின் நிலையே இதுதான் என்றால், தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளின் நிலவரம் எப்படி இருக்கும்?

`தமிழ்நாட்டை, 2015-ம் ஆண்டுக்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்’ என 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வரும்போது சொன்னார் முதலமைச்சர் ஜெயலலிதா. எதுவும் நடக்கவில்லை. உலக மக்கள்தொகையில் ஆறில் ஒருவர் (நூறு கோடி பேர்) பொது இடங்களையே கழிப்பறையாகப் பயன்படுத்துவது என, கடந்த ஆண்டு ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 100 கோடி பேரில் சுமார் 82 கோடிப் பேர் இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிலும் இந்தியாதான் நம்பர் 1. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க, 60 கோடிப் பேர் திறந்தவெளியை நாடுகின்றனர். சென்னையின் நிலைமையோ பரிதாபத்துக்கு உரியது.

சென்னை மக்கள்தொகையில் (65 லட்சம்) 40 சதவிகிதத்தினர் திறந்தவெளிக் கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் பிரதமரின் `தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் ஒரு கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மொத்த கழிப்பறைகளின் எண்ணிக்கை 4,200. இவற்றில் 70 சதவிகிதக் கழிப்பறைகள் (2,940) பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்தும் பழுதடைந்தும் உள்ளன. `சென்னை மாதிரியான மிகப் பெரிய நகரத்துக்கு 21 ஆயிரம் கழிப்பறைகள் வேண்டும்' என்கிறது அந்த ஆய்வு. (சென்னையைவிட,
35 லட்சம் அதிக மக்கள்தொகை கொண்ட மும்பை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை 80 ஆயிரம்.)

சென்னை மேயராகப் பொறுப்பேற்ற சைதை துரைசாமி, தன் முதல் பட்ஜெட்டில் `முக்கிய இடங்களில் நவீனக் கழிப்பறைகள் கட்டுவோம்' எனவும், `ஐந்தாயிரம் பிளாஸ்டிக் கழிப்பறைகள் வரப்போகின்றன' எனவும் பில்டப் கொடுத்தார். ஆனால், இதுவரை வந்திருப்பது வெறும் 348 கழிப்பறைகள்தான். சென்னையின் பல முக்கிய இடங்களில் சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமேயான சிறிய அளவிலான திறந்தவெளிக் கழிப்பறைகள் 35 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட்டுள்ளன. (அதுகூட ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை). ஆனால், அவையும் மிகச் சில இடங்களே தவிர, பெரும்பாலான இடங்களில் போதிய பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கிடக்கின்றன. வெறும் ஆறே மாதங்களில் அவ்வளவு பணமும் வீண்.

`` The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Act 2013 or M.S. Act 2013 என்ற மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடுக்கும் சட்டத்தின்படி, `மாநிலம் முழுக்க முழுமையான, சுகாதாரமான மற்றும் தூய்மையான கழிப்பறைகளை உருவாக்க வேண்டும்’ என, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், இதுவரை இது எங்குமே நடைமுறைப்படுத்தப்படவில்லை’’ என்கிறார் சமூக ஆர்வலர் `பாடம்' நாராயணன்.

சென்னைக்கு வந்து இறங்கும் பலரும் ரயில் நிலையத்தின் எதிரே இருக்கும் அரசு மருத்துவமனை கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும், அந்தப் பகுதியின் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதும் தொடர்கின்றன. முப்பது ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பொதுக் கழிப்பறைகளை நிர்வகித்து வந்த `சுலப்' தொண்டு நிறுவனத்திடம் பேசினோம்.

எங்கே எனது கழிப்பறை?

‘`ஒருவர் அவசரத்துக்குக் கழிப்பறையைத் தேடும்போது, அது உடனே கண்ணில் படும்படி அருகில் இருக்க வேண்டும். அது சுத்தமாகவும் தண்ணீர் வசதியோடும் இருக்க வேண்டும். தண்ணீர் இல்லாவிட்டால் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்து வருபவர் இன்னும் கொஞ்சம் வெளியே பயன்படுத்துவார். அடுத்தடுத்து வருபவர்கள் வாசல் வரை நாசம் செய்துவிடுவார்கள்'' என்கிறார் `சுலப்' அமைப்பைச் சேர்ந்த ஜே.கே.ஜா.

சுற்றுலா தளங்களின் நிலை இன்னும் மோசம். ஊட்டி, தமிழ்நாட்டின் நம்பர் 1 சுற்றுலா தளம். இங்கு இருப்பது, வெறும் 20 பொதுக் கழிப்பிடங்கள்தான். இவற்றில், ஆயிரம் கடைக்களுக்கும்மேல் இருக்கும் மார்க்கெட் பகுதியில் இருப்பது ஐந்தே ஐந்து கழிப்பிடங்கள்தான். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் இந்த இடம், கழிப்பறை பற்றாக்குறையால் எங்கு பார்த்தாலும் சிறுநீர் மணக்கிறது. மூணாரில் இருப்பது மொத்தமாக இரண்டே இரண்டு  பொதுக் கழிப்பிடங்கள்தான். இதனால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் மறைவிடங்களைத் தேடி அலைகின்றனர்.

குற்றாலத்திலும் வசதி குறைவுதான். ஐயப்ப பக்தர்கள் அலைமோதும் சீஸன் நேரத்திலாவது வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம். அதுவும் இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துபோகின்றனர். ஆனால், கோயிலைச் சுற்றி இருக்கும் கழிப்பறைகளின் பராமரிப்பைப் பார்த்தால் யாருக்கும் கண் கூசும். ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசம் வந்துவிட்டால் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாமே திறந்தவெளிக் கழிப்பறைகளாக மாறிவிடும். கிரிவலத்தின்போது திருவண்ணாமலையின் நிலையும் இதுதான்.

``இருக்கும் கழிப்பறைகளும் அரசியல் தலையீடு, தண்ணீர் பற்றாகுறை, கதவு இல்லாமை மாதிரியான காரணங்களால் பயன்படுத்த முடியாமல் கிடக்கின்றன’’ என்கிறார் `கிராமாலயா' அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன். இந்த அமைப்பு, திருச்சியில் 69 சமூகக் கழிப்பறைகளைக் கட்டித் தந்து பராமரிக்கிறது. இவை வெளி ஆட்களால் நிர்வகிக்கப்படுவது இல்லை. அந்தந்தப் பகுதி பெண்களாலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களாலும் கண்காணிக்கப்பட்டு குறைந்த அளவில் கட்டணம் வசூலித்து கழிப்பறைகளின் தூய்மையைக் காக்கின்றனர். ``கழிப்பறைகள், பெண்களுக்குத்தான் மிகவும் அவசியமானவை. அவர்களால்தான் அதன் தேவையை உணர முடியும் என்பதால் இது சாத்தியமாகிறது'' என்கிறார் இளங்கோவன்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பறைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். மதுரை திருமங்கலத்தில் 25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை ஒன்று இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. நெல்லை மாவட்டம் பணகுடியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 36 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்த மூன்று பொதுக் கழிப்பறை மற்றும் குளியலறை இன்னும் பயன்படுத்த முடியாத நிலையில் கிடக்கின்றன. இவை உதாரணங்கள்தான். உங்கள் பகுதியில் ஒரு ரவுண்டு வந்தால் இப்படி பலவற்றைப் பார்க்கலாம்.

எங்கே எனது கழிப்பறை?

இத்தகைய காரணங்களால், மக்கள் மலம் கழிக்க ரயில் தண்டவாளப் பாதைகளைத் தேடிச் செல்கின்றனர். இப்படிச் செல்லும் பெண்களில், 30 சதவிகிதம் பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக மும்பையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள்கூட தண்டவாளங்களை நாடுவதற்கான முக்கியக் காரணம், நம் பொதுக் கழிப்பிடங்களைப்போல ஆபத்தான இடங்களைப் பார்க்கவே முடியாது என்பதுதான். சமூகவிரோதச் செயல்கள் அனைத்தும் நடக்கும் இடமாக அவை இருக்கின்றன. மேலும், மிக அசுத்தமான அந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது காலரா, வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு எனப் பல நோய்களுக்கும் மாதவிடாய்க் காலங்களில் எளிதில் நோய்த்தொற்றுக்கும் ஆளாகிறார்கள்.

``சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரான என் தோழியிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், `இவ்வளவு பேசுகிறோம். ஆனால், உயர் நீதிமன்றத்தில்கூட பெண்களுக்குப் போதுமான கழிப்பிட வசதி இல்லை' என்று. இதுதான் இங்கு உண்மை. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இன்னுமொரு மருத்துவத் தோழி, அங்கு உள்ள கழிப்பறைகளின் அவல நிலையையும், அவரால்கூட அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையையும் கூறி அழுதிருக்கிறார்'' என்கிறார் எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி.

இது ஒரு சின்னஞ்சிறு பிரச்னை அல்ல. கழிப்பறைகள் பற்றாக்குறையும் பராமரிப்பின்மையும் மக்களின் ஆரோக்கியமான மனநிலையைச் சிதைக்கிறது. நோய்களைப் பரப்பி ஆரோக்கியமான உடல்நிலையைக் கெடுக்கிறது. இதை மீட்டு எடுக்க, ஏற்கெனவே இருக்கும் கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பது, கட்டப்பட்ட கழிப்பறைகளை உடனடியாகத் திறப்பது, மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கழிப்பறைகளைக் கட்டுவது, அனைத்து கழிப்பறைகளின் சுகாதாரத்தையும் கண்காணிப்பது, கழிவுகளை அகற்றுவதற்கு உரிய கருவிகளை கொள்முதல் செய்வது என, செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. விழாக்களில், பொருட்காட்சிகளில் மொபைல் டாய்லெட்கள் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். வெகுமக்கள் தேர்ந்தெடுத்த அரசு என்ற வகையில், வேறு எதையும்விட அரசு இதற்கு முக்கியத்துவத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.

கவாயா கமி

`கடவுள், கழிப்பறைகளில் வாழ்கிறார்’ என்பது ஜப்பான் மக்களின் நம்பிக்கை. ‘கவாயா கமி’ என்ற தெய்வம், கழிப்பறையில் வாழ்ந்து மக்களைக் காப்பதாக பல கதைகள் உண்டு. அதனாலேயே அவர்கள் தங்கள் கழிப்பறைகளை மிகவும் புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். அந்த இடத்தை ஆலயத்தைப்போல பராமரிக்கிறார்கள். அங்கு இருந்து வெளியேறும் கழிவுகளை உரமாக மாற்றி, மண்ணுக்கே அளிக்கிறார்கள். பொதுக் கழிப்பறைகளும் மிக சுத்தமாகவும் நவீன முறையிலும் பராமரிக்கப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவற்றைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். கழிப்பறை பராமரிப்பில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது ஜப்பான்.

உப்பளங்களில் கழிப்பறை!

மகாராஷ்டிராவில் பிறந்த சோனம் டாம்ப்ரேவுக்கு, வயது 24. வேதாரண்யம் சென்றிருந்தபோது, அங்கே இருந்த உப்பளங்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, கழிப்பறைகள் இல்லை என்பதை அறிந்து வேதனைக்கு ஆளானார். இதனால் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இங்கே கழிப்பறைகள் அமைக்க முயன்றார். ஆனால், இந்த உப்பளங்களில் ஐந்து அடி தோண்டினாலே உப்புத் தண்ணீர் வந்துவிடும் என்பதால், கட்டுவதில் சிக்கல் எழுந்தது. இதைத் தொடர்ந்து, இதுபோன்ற இடங்களுக்கு என்றே பிரத்யேகமாக நீரின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு கழிப்பறையை அவர் உருவாக்கி யிருக்கிறார். இதன்மூலம் இன்று அங்கே பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

கழிப்பறையில் மலம் கழித்தால் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ்!

ஐ.சி.டபிள்யூ.ஓ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், சென்ற ஆண்டு சென்னையில் உள்ள இடுகாடு ஒன்றில் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ‘கழிப்பறையைப் பயன்படுத்தினால் பரிசு’ என அறிவிப்புப் பலகை வைத்தனர். அதன்பிறகு மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலர் மறக்காமல் பரிசையும் கேட்டு வாங்கினார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு `பேனா' பரிசாகக் கொடுக்கப்பட்டது. விழிப்புஉணர்வு காரணமாக, பரிசு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இப்போது குலுக்கல் முறையில் தேர்வுசெய்து, 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றுகூட இல்லை!

பிரதமரின் `தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கியதில் இருந்து (அக்டோபர் 2014) வீடுகளில் 1,26,795 கழிப்பறைகள் கட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை வெறும் 280 கழிப்பறைகள்தான் கட்டப்பட்டுள்ளன. 12,865 சமூகக் கழிப்பிடங்கள் கட்ட தீர்மானித்து, கடைசியில் கட்டப்பட்டது வெறும் 2,048தான். இவை தவிர, இந்தத் திட்டத்தின்கீழ் 500 பொதுக் கழிப்பிடங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதுவரை ஒன்றுகூட கட்டப்படவில்லை.

எங்கே எனது கழிப்பறை?