Published:Updated:

இந்திய வானம் - 25

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

காதல் என்பது எதுவரை?

வாழ்க்கை மிகவும் வியப்பானது. சிலரது துயரங்கள் ஒருபோதும் தீர்க்கமுடியாதவை. ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் அமைதிகொள்ள முடியாத வேதனைகளும் இருக்கத்தானே செய்கின்றன.
பூரணா இறந்தபோது அவளுக்கு வயது 24. காதல், பூரணாவுக்கு அளவு இல்லாத சந்தோஷத்தையும் சகித்துக்கொள்ள முடியாத வேதனையையும் ஒன்றாகத் தந்தது. கண்ணீரும் காதலும் பிரிக்க முடியாதவை.

ஒரு காதல் எப்படித் தொடங்குகிறது? இதுவரை அதைக் கணிக்க முடிந்தவர் எவரும் இல்லை. யார் யாரை எப்போது காதலிக்கத் தொடங்கு வார்கள், காதல் அவர்களை என்ன செய்யும், காதலித்தவர்கள் ஒன்று சேர்வார்களா... பிரிந்துவிடுவார்களா, திருமணத்தோடு காதல் முடிந்து விடுமா... இல்லை பேரன்-பேத்திகள் பெற்று வாழும்நாள் முழுக்க காதலும் நீடிக்குமா..? இந்தக் கேள்விகள் எதற்கும் யாராலும் பதில் தந்துவிட முடியாது.

நாஜிக்களின் யூதப் படுகொலை முகாமில் 70 வயதான ஒரு பெண், தான் எப்போது கொல்லப்படுவோம் எனத் தெரியாத பயமும் நடுக்கமும் கொண்டிருந்தாள். அவள் ஒவ்வோர் இரவும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஒரு காகிதத்தைப் பிரித்து, மௌனமாகப் படித்து கண்ணீர்விடுவாள். அப்படி என்ன படிக்கிறாள், அந்தக் காகிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என ஒருவருக்கும் தெரியாது.
ஒருநாள், விஷவாயு செலுத்திக் கொல்லப்படும் பட்டியலில் அவள் பெயரும் இருந்தது. அவளை நிர்வாணமாக்கி, குளிக்கவைத்து விஷவாயு செலுத்தப்படும் இடத்துக்கு அழைத்துப்போனார்கள். அப்போதும் அவள் உள்ளங்கையில் அந்தக் காகிதத்தைச் சுருட்டி வைத்திருந்தாள்.

விஷவாயு செலுத்தப்பட்டு, அவள் இறந்து உடல் விறைத்துக் கிடந்தபோது, அவள் கையில் இருந்த கடிதத்தை ஒரு ராணுவ வீரன் பிடுங்கி படித்துப் பார்த்தான்.

அது அந்தப் பெண்ணுக்கு எழுதப்பட்ட காதல் கடிதம். ஆம்... காதலன் அவளுக்கு அளித்த முதல் கடிதம். அந்தக் கடிதத்தைப் படித்த ராணுவ வீரனுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சாகும் நிமிடம் வரை ஒரு பெண் தனது காதல் கடிதத்தைப் படித்துக் கொண்டே இருந்திருக்கிறாள். அது ஒரு நிறைவேறாத காதல். தான் இளமையில் காதலிக்கப்பட்டிருக்கிறோம்; தனக்காக ஒருவன் எதையும் செய்யத் தயாராக இருந்திருக்கிறான்; நாம் புரிந்துகொள்ளாமல் அதைப் புறக்கணித்துவிட்டோம் என அந்த முதியவள் சாகும் நாள் வரை அழுதிருக்கிறாள். காதல் என்பது வாலிபத்தோடு தீர்ந்துவிடுவது இல்லைதானா?

இந்திய வானம் - 25

ஆயிரமாயிரம் காதல் கதைகள், நிகழ்வுகள் காதலைக் கொண்டாடுகின்றன. அதற்கு இணையாகவோ, அதிகமாகவோ காதலால் வீழ்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டவர்களும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மணமுறிவு பெற்றவர்களின் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

காதலிக்கும் ஆசை பதின்வயதில் தொடங்கிவிடுகிறது; எந்த வயதில் முடிவடைகிறது... காதலுக்கு வயதுக்கும் தொடர்பு இல்லைதானா? காற்றைப்போலத்தான் காதலும் நுழையாத இடமே இல்லை.
பூரணாவுக்கும் அப்படித்தான் காதல் தொடங்கியது. டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிக்காக தனது கோச் உடன் சென்னை வந்திருந்தாள். அப்போது அவளுக்கு வயது 18. தனக்குத் தெரிந்த பேராசிரியர் செபாஸ்டியன் வீட்டில் தங்கலாம் என கோச் சொன்னதை பூரணா ஏற்றுக்கொண்டாள். அது அண்ணா நகரில் இருந்த பெரிய வீடு. பேராசிரியரும் அவரது மனைவியும் மட்டும் இருந்தார்கள்.
அவரது பையன் கான்பூர் ஐ.ஐ.டி-யில் படித்துக்கொண்டிருந்தான். பேராசிரியர் தனது மகன் ஸ்டீபன் அறையை பூரணா உபயோகித்துக் கொள்ளலாம் என மாடிக்குப் போகச்சொன்னார்.

மாடி அறையின் சுவரில் பாப் மார்லேயின் பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேஜையில் பெரிய மியூஸிக் சிஸ்டம், கம்ப்யூட்டர் இருந்தன. சுழலும் புத்தக அலமாரி, அழகான படுக்கை, கண்ணாடி அலமாரி முழுவதும் வெற்றிக் கோப்பைகள்; பரிசுப்பொருட்கள். அங்கு இருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள் பூரணா.

நூற்றுக்கணக்கான மியூஸிக் சி.டி-க்களைப் பார்த்துவிட்டு, `இவ்வளவு தீவிரமாக மியூஸிக் கேட்பவனா?!' என ஆச்சர்யம் அடைந்தாள். அந்த அறையில் ஸ்டீபனின் புகைப்படம் ஒன்றுகூட இல்லை. ஸ்டீபன் எப்படி இருப்பான் எனக் காண ஆசையாக இருந்தது. மேசையில், பரிசுக் கோப்பைகளில் அவனது புகைப்படம் எங்காவது உள்ளதா எனத் தேடி சலித்துப்போனாள். எதிலும் அவனது புகைப்படம் இல்லை.

தன் அறையில் இப்படி ஒரு பெண் வந்து தங்கியிருப்பாள் என ஸ்டீபன் ஒருநாளும் நினைத் திருக்க மாட்டான் என நினைத்தபோது பூரணாவுக்குச் சிரிப்பாக வந்தது.

இரவு அவனது படுக்கையில் உறங்கி, அவனது துண்டில் தலைதுவட்டி, அவனது கண்ணாடியில் முகம்பார்த்து விளையாட்டுப் போட்டிக்காகக் கிளம்பிச் சென்றாள்.

போவதற்கு முன்பாக ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்து, அறையில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரில் `நைஸ் ரூம், ஐ லைக் இட்’ என எழுதிவிட்டு, கீழே `பூரணா' என கையெழுத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக சென்னை வந்த ஸ்டீபன், ஒருநாள் தற்செயலாக காலண்டரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஆரஞ்சு நிற ஸ்கெட்ச் பென்னால் எழுதப்பட்ட பாராட்டையும் பெண் பெயரையும் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

`யார் பூரணா, அவள் எப்படி தன் அறைக்கு வந்து தங்கினாள், இதைப் பற்றி அம்மாவிடம் எப்படிக் கேட்பது?' - அவனுக்குள் ஆசை உருவானது. அவன் டிபன் சாப்பிடும் நேரம் `யாரும்மா பூரணா?’ எனக் கேட்டான்.

ஸ்டீபன் அம்மாவுக்கு `பூரணா யார்?’ எனத் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பாவோடு டென்னிஸ் விளையாடப் போனபோது `உங்க ஃப்ரெண்ட் யாராவது வந்து என் ரூம்ல தங்கியிருந்தாங்களா?’ என எதுவும் தெரியாதவன் போலக் கேட்டான்.

இந்திய வானம் - 25

`அந்தப் பொண்ணு பெங்களூரு செயின்ட் ஜோசப் காலேஜ்ல படிக்கிறா. டேபிள் டென்னிஸ் சேம்பியன். என் ஃப்ரெண்ட் அழைச்சிக்கிட்டு வந்திருந்தா. அவதான் உன் ரூம்ல தங்கியிருந்தா. ஏதாவது பொருளைக் காணோமா?’ எனக் கேட்டார் அப்பா.

`அப்படி ஒன்றும் இல்லை...’ எனச் சமாளித்த படியே பூரணாவைப் பற்றி கனவு காணத் தொடங்கினான் ஸ்டீபன்.

அடுத்த நாளே அவளைக் காண்பதற்காக ஸ்டீபன் பெங்களூரு கிளம்பிப்போனான். அவளிடம் போய் என்ன பேசுவது, `என் அறையில் வந்து தங்கியதற்கு நன்றி’ எனச் சொல்வதா, இல்லை `உங்கள் பாராட்டுக் குரிய ஸ்டீபன் நான்தான்’ என அறிமுகம் செய்து கொள்வதா... அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

கல்லூரியில் போய் விசாரித்து, அவளை எளிதாக அடையாளம் கண்டுவிட்டான். அவன் மனதில் நினைத்ததைவிடவும் பூரணா உயரம் அதிகம்; அழகாக இருந்தாள். அவள் கடந்துபோவதை மௌனமாகப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டு, ஒரு வார்த்தைகூட அவளிடம் பேசாமல் சென்னைக்குத் திரும்பிவிட்டான்.

விடுமுறை முடிந்து கான்பூர் போகவேண்டிய நாள் வந்தது. அதற்குள் இன்னொரு முறை அவளைப் பார்த்துவர வேண்டும் என அவசரமாக பெங்களூரு சென்றான். இந்த முறை அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். ஏதாவது அவளுக்குக் கொடுக்க வேண்டும் என ஒரு புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டான்.

அன்றைக்கு அவள் கல்லூரிக்கே வரவில்லை. அவளது முகவரி தேடிக் கண்டுபிடித்து, அவள் அப்பார்ட்மென்ட்டுக்கே போய்விட்டான். ஆனால், வீட்டுக் கதவைத் தட்டி அவளை அழைத்துப் பேச மனம் வரவில்லை. `நம் அதிர்ஷடம் அவ்வளவு தான்' என அந்தப் புத்தகத்தோடு சென்னை திரும்பி, மறுநாள் கான்பூர் போய்விட்டான்.

கான்பூருக்குப் போன பிறகும் அவனால் பூரணாவின் நினைவில் இருந்து விடுபட முடியவில்லை. திடீரென ஒருநாள் கிளம்பி பெங்களூ ருக்குச் சென்றான். இந்த முறை தயக்கத்தைத் தாண்டி அவளிடம் பேசிவிட்டான். அவளால் நம்பவே முடியவில்லை, `இவன்தான் ஸ்டீபனா... இவன் அறையில்தான் தங்கியிருந்தோமா, இப்போது எதற்காக தன்னைத் தேடி வந்திருக்கிறான்?'

அவர்கள் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். அவளுக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகச் சொன்னான் ஸ்டீபன். அவளும் `உங்கள் அறை மிக நன்றாக உள்ளது. நிறைய மியூஸிக் கேட்பீர்கள்போல் இருக்கிறது’ எனப் பாராட்டிப் பேசினாள். அப்போது அவளிடம் `உன்னைப் பார்க்க இதற்கு முன்னர் இரண்டு முறை வந்திருக்கிறேன்’ எனச் சொல்லிக்கொள்ளவில்லை.
அவளிடம் தனது தொலைபேசி எண்ணைத் தந்துவிட்டு, அன்று மாலை பெங்களூரைவிட்டுப் புறப்பட்டபோது மனம் மகிழ்ச்சியால் ததும்பியது. விமானத்தில் காதல் பாடல்களாகவே கேட்டுக் கொண்டு வந்தான்.

ஆனால், அவன் நினைத்ததுபோல அவள் போனில்  அழைக்கவில்லை; அவன் அழைத்தபோது பதில் அளிக்கவில்லை. ஒருமுறை அவளுக்குக் கோபமாக மெசேஜ் அனுப்பியபோது அவள், `என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என பதில் அனுப்பினாள். வேதனை அடைந்த ஸ்டீபன், அதன் பிறகு அவளைத் தொடர்புகொள்ளவே இல்லை.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு திடீரென அவளிடம் இருந்து போன் வந்தது. எதற்காக தன்னை அழைக்கிறாள் என வியந்தபடி பேசினான். `பிறந்த நாள் வாழ்த்துகள்' என்றாள்.
`உனக்கு எப்படித் தெரியும்?’ எனக் கேட்டான்.

`உன் அறைக்கு வந்தபோது அங்கே இருந்த ஒரு பரிசுப்பொருளில் உனது பிறந்த தேதி இருந்தது. அதை மனதிலே வைத்திருந்தேன்.’

` `தொந்தரவு செய்யாதே’ எனச் சொன்ன நீ, எதற்காக என் பிறந்த நாளை மனதில் வைத்திருக்கிறாய்?’ எனக் கேட்டான்.

`நேரில் வா சொல்கிறேன்’ என்றாள் பூரணா.

அப்படித்தான் அவர்கள் காதல் தொடங்கியது. கான்பூரில் இருந்து அடிக்கடி ஸ்டீபன் பெங்களூரு வந்தான். விளையாட்டுப் போட்டி எனப் பொய் சொல்லி, பூரணா கான்பூர் சென்றாள். இருவரும், சந்தோஷமாகக் காதலைக் கொண்டாடினார்கள்; உடல் இன்பத்தை அனுபவித்தார்கள். நிறையப் புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள், பயணங்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள்...

படித்து முடிக்கும் வரை இருவரும் காதலித்தார்கள். பூரணாவின் வீட்டுக்கு விஷயம் தெரியவந்தது. அவர்கள் நேரடியாக ஸ்டீபன் வீட்டுக்குப் போய் சண்டைபோட்டார்கள். ஸ்டீபன் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டான். ஆனால் `இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு வந்து, திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றான்.

அதை, பூரணா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை.

`என்னால் இப்போது உடனே திருமணம் செய்து கொள்ள முடியாது’ என ஸ்டீபன் கடுமையாகச் சொல்லிவிட்டான். இது பூரணாவுக்கும் ஸ்டீபனுக்கும் இடையில் பிரச்னை ஆனது. ஒரு வருஷம் காத்திருப்பதாகச் சொன்னாள் பூரணா. ஸ்டீபன் கிளம்பி அமெரிக்கா போய்விட்டான். இடையில் அவளுடன் போனில்கூடப் பேசவில்லை.

ஓர் ஆண்டு முடிந்த பிறகும் ஸ்டீபன் குடும்பத்தில் இருந்து பதில் வரவே இல்லை. அவர்களைத் தேடி பூரணா சென்னைக்கு வந்தாள். அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அவர்களும் அமெரிக்கா போய்விட்ட செய்தி கேள்விப்பட்டதும் நொறுங்கிப்போனாள். தன்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என நினைத்து அவள் தந்தையிடம் முறையிடவே, போலீஸில் புகார் கொடுத்துவிட்டார்கள்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகு ஸ்டீபன் பெற்றோர் சென்னை திரும்பினார்கள். ஊர் வந்து சேர்ந்தவுடன் அவர்களை விசாரணைக்காக அழைத்துப்போனது போலீஸ். இதை அறிந்த ஸ்டீபன், அவசரமாக சென்னை வந்து சேர்ந்தான்.

`என் மீது போலீஸில் புகார் கொடுத்த பூரணாவைத் திருமணம் செய்துகொள்ள முடியாது’ எனக் கத்தி சண்டையிட்டான்.

முடிவில் பேசி சமாதானம் செய்து பூரணாவுக்கும் ஸ்டீபனுக்கும் திருமணம் நடந்தது. இரண்டு வாரங்கள் ஹனிமூன் போய்வந்தான். பெங்களூ ருக்கே வேலையை மாற்றிக்கொண்டு வந்து விடுவதாகச் சொல்லி அமெரிக்கா சென்றான். அதுபோலவே பெங்களூருக்குத் திரும்பிவந்து வேலைபார்க்கத் தொடங்கினான். ஆனால், அவனது சுபாவம் முற்றிலும் மாறியிருந்தது.

அவளை அடித்து உதைத்து, சூடுவைத்து எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்டப் படுத்தினான். அவளும் ஸ்டீபனின் அலுவலகக் காகிதங்களைக் கிழித்து எரித்து, உணவை அவன் மீது வீசி அடித்து, மோசமாகத் திட்டி சண்டை யிட்டு ஆர்ப்பாட்டம் செய்தாள். மணவாழ்க்கை நரகம் ஆனது.

இனி ஸ்டீபனுடன் வாழ முடியாது என அவள் பிரிந்துபோக முயன்றபோது, தன் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டு எங்கே ஓடுகிறாய் என சண்டை யிட்டு அவள் கையை உடைத்துவிட்டான்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்தாள். அப்போது ஒருநாள் அதிகம் குடித்துவிட்டு வந்து அவளுடன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டான் ஸ்டீபன். அதில் அவள் கர்ப்பம் ஆனாள். அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் கலைத்துவிடப்போகிறேன் என பூரணா சண்டைபோட்டாள். அதில் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. `உயிரோடு இருந்தால்தானே நீ சொல்வதை நான் கேட்க வேண்டும்' என, முடிவாக ஒருநாள் அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துவிட்டாள். அப்போது அவள் வயது 24.

இந்திய வானம் - 25

வேகவேகமாக சந்தோஷங்களை அனுபவித்து, வேகவேகமாக வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டாள் பூரணா. இப்போது ஸ்டீபன் மீண்டும் அமெரிக்கா போய்விட்டான்.

ஒருவேளை அவர்கள் காதலிக்காமல் போயிருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதோ, இல்லை... அவர்கள் செய்தது காதல் இல்லையா? காதலிக்கும் போது இல்லாத ஈகோவும் வேறுபாடுகளும் திருமணத்துக்குப் பின்னர் ஏன் உருவாகின்றன? பரஸ்பரப் புரிதல் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா என்ன... இதுபோன்ற கேள்விகள் எல்லாம் வயதானவர்களின் வெற்றுப் புலம்பல்களா?
காதலை அங்கீகரிக்காத சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் பயந்ததுபோலவேதான், காதலை அங்கீரிக்கும் இந்தத் தலைமுறைப் பெற்றோர்களும் காதலைக் கண்டு பயப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ள ஒரே கேள்வி `எதிர்காலம் என்னவாகும்?' என்பதே. இதற்கான விடை யாருக்கும் தெரியாது.

காதல், எதிர்காலம் பற்றி கவலைப்படுவது இல்லை; பயம்கொள்வது இல்லை. காதலின் பலமும் அதுதான்... பலவீனமும் அதுதான்.

- சிறகடிக்கலாம்...