Published:Updated:

அதிமுக 10 இடங்களை ஒதுக்கவேண்டும்: கார்த்திக்

மதுரை, பிப்.21,2011

அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு தென் மாவட்டத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். ##~~##

மதுரையை அடுத்த கிழக்குயில்குடியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ உள்ளிட்ட மெகா ஊழலை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாடாளும் மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான கார்த்திக் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

முன்னதாக நிருபர்களிடம் கார்த்திக் கூறுகையில், "மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நியாயமான இந்த கோரிக்கையை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நிறைவேற்ற வேண்டும். அனைத்து சமூகத்திலும் 70 முதல் 80 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் என்னை அழைத்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதாக இருந்தது. அந்த கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியது இருப்பதால் எங்களுக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்து விட்டது. ஆகவே எங்களுக்கு தென் மாவட்டத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். நியாயமான இந்த கோரிக்கையை அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார் கார்த்திக்.